யசு, நீ மட்டும்

யசு, நீ மட்டும்

மூடப்பட்டிருக்கும் புத்தரின் இமைகளுக்குள் நித்தியமாய் உறையும் யசோதரையின் மாசற்ற துயரம் என்பது ஆணுலகு உண்டாக்கியிருக்கும் ஞானம் என்ற கருத்துருவாக்கத்தின் மீதான தத்துவ விசாரணை. இத்தனை நூற்றாண்டுகளாய் நாம் அறியும் ஞானம் என்பது பெண் வெறுப்பின் அல்லது விலகலின் பின்னே சாத்தியப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன பெரும்பாலான கதைகள். மனித வாழ்வின் இணைவுக்கு அல்லது அதன் மேன்மைக்கானதாக இருக்க வேண்டிய கருவிகளே எதுவாயிருந்தாலும். ஞானம் என்பது தனித்திருக்கும் பொறுப்பின்மையின் விளைவல்ல. அது இவ் வாழ்வின் நொடிகள் தோறும் எதிர்ப்பட வேண்டிய மகிழ்ச்சி.

கவிதை என்பது மானுட மனத்தின் கசப்பைக் கனிவாக்கும், அறிதலின் மூலம் தன்னை அச் சிக்கல்களின் பகுதியாகவும் அதனிலிருந்து விட்டு விடுதலையாக்கும் கருவியாகவும் ஆக்கிக்கொள்ளக் கூடியது. கவிதை மொழியை அதன் சிந்தனையை மாற்றுவதற்கான மொழி உற்பத்திச் சாதனமாக இயங்குவது. அதன் கண்டடைதல்களே மானுடம் தன் எல்லைகளை மறுவரையரை செய்யும் ஆதார இலக்குகள். அதனை நோக்கி நகரும் ஒவ்வொரு வரிகளுமே என்னளவில் கவிதைகள்.

*

எந்த வகை எழுத்து முயற்சிகளிலும் தொகுப்பு முயற்சிகள் கடினமான உழைப்பைக் கோரக்கூடியவை. அதே நேரம் மிகவும் அரசியல்தன்மை வாய்ந்தவை. ஈழத்துச் சூழலில் ‘மரணத்துள் வாழ்வோம்’, ‘சொல்லாத சேதிகள்’, பெயரிடாத நட்சத்திரங்கள்’, ‘ஒலிக்காத இளவேனில்’ போன்ற தொகுப்புகளையும் அவை முன்வைக்கும் அரசியலையும் உதாரணமாகக் கொள்ளலாம். இவை எதிரெதிரானவை அல்ல. ஆனால் வெவ்வேறு வித்தியாசமான ஒடுக்குமுறைகள். பேரினவாத, ஆணாதிக்க, புலப்பெயர்வுகளின் ஒடுக்குமுறைக்கெதிரானதும் வாழ்வாக்கத்திற்குமான குரல்களின் தொகுப்புகளே அவை. ஒரு தொகுப்பு என்பது தொகுப்பவர்களின் அரசியல் சார்ந்தது. அவை முன்வைக்கும் அரசியல் என்பது அவர்கள் முன்னிலைப்படுத்தும் அல்லது கவனப்படுத்தும் அரசியல்.

தமிழ் இலக்கியச் சூழல் மிகவும் ஆண் தன்மை வாய்ந்தது. அதன் மொழி, மொழியினூடாகச் சிந்திக்கப்படும் பிரச்சனைகள், அதன் வழி வந்துசேரும் சிந்தனைகள் பெரும்பாலும் ஆணுலகின் சிக்கல்களையே முதன்மைப்படுத்தி உரையாடுகிறது. மின்னலாய் அதைக் குறுக்கறுத்து விழும் பெண் குரல்களைப் பெரும்பான்மையான ஆணுலகு தங்கள் மேட்டிமைவாத / ஆணாதிக்க பார்வையிலிருந்து முக்கியமற்றவையாக பின்னுக்குத் தள்ளிவிட்டிருக்கின்றன. மைய அரசியல் உரையாடலில் பெண்ணியம் என்பது அச்சம் தரும் கருத்தியல். அதன் உள்ளடக்கம் ஆணுலகால் கையாளப்படும் விதத்தினை நாம் நாள் தோறும் பார்க்கிறோம். எங்கே தங்கள் மேன்மைமிகு சிம்மாசனங்களில் அரசிகள் வந்துவிடுவார்களோ என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலத்திலயும் எவ்வளவு தேவையோ அவ்வளவு சேர்த்துமே பெரும்போக்கு இங்கே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனை மாற்றும் உரையாடல்களும் கலை, இலக்கியக்கங்களும் எண்பதுகளின் பின்னால் உருவாகி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவை இன்னும் ‘தமிழ் இலக்கியம்’ என்ற பெரும்பரப்புக்குள் தீண்டப்படாததாகவே இருக்கின்றது.

இங்கு எதுவுமே வரவில்லையா, யாருமே ஆதரவு தரவில்லையா, பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படவில்லையா என்ற கேள்விக்கு மேலே சொன்னது போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலத்தியும் எவ்வளவு தேவையோ அவ்வளவு சேர்த்துமே இந்த உரையாடல் நகர்கிறது என்பது எனது அவதானிப்பு. சிறு தரப்பினர் இதற்கான உண்மையான பற்றுதலுடன் செயலாற்றி வருகின்றனர். இங்குள்ள ஆணாதிக்க அழகியல்வாத கருத்தியல் தமது மதிப்பீடுகளின் மூலமும் அழகியல் என்று மைய நீரோட்டப் புரிதலின் மூலமும் பெருமளவு பெண்களை எழுத்திற்குள்ளும் இலக்கியத்தின் மைய உரையாடலில் இருக்கப்பட்ட வேண்டிய விளக்கத்திற்குள்ளும் இருந்து அகற்றுகின்றனர். விலகும் பெரும்பாலான பெண்களை இரக்கத்துடன் பார்ப்பது போன்ற பார்வையுடன் தோற்றமளிக்கின்றனர். அதற்கு மிஞ்சி கொஞ்சம் சமூகத்தையும் கொஞ்சம் அவர்கள் வீட்டையும் துணையினையும் ஏசிவிட்டு கடந்து விடுகின்றனர். பெண்களின் நெருக்கடிகளை வாழ்வியல் நெருக்கடிகளாகவும் அது தவிர்க்க முடியாததாகவும் கருதும் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கான பார்வைகளை அவர்களது வாழ்வின் அன்றாடங்கள் உருவாக்குவதாகவே பார்க்கிறேன்.

(பிரேமா ரேவதி)

எனது வாசிப்பில் பெண்கள் கடந்த நாற்பது வருடங்களாக முன்வைத்துக்கொண்டிருப்பது சுயமரியாதைக்கும் சமத்துவத்திற்குமான குரல்களையே, அதைத் தான் ‘ஆதித்தாயின் பெண் மொழியில்’ கதைப்பேன் என்று ஆழியாள் முன்வைப்பதாக விளங்கி கொள்கிறேன். இந்தப் படிமம் முக்கியமானது. ஆதித்தாயின் மொழியென்பது கதறலும் ஓலமும் நூற்றாண்டுகளின் காயங்களையும் துணிவையும் கொண்டதாகவே இருக்க முடியும். அதில் மையமாக ஒளிரும் சுயமரியாதையும் சமத்துவமும் பெரும்பான்மை ஆணுலகால் அழகியலற்றதாக நம்பப்படுகிறது. அப்படியான நம்பிக்கையுள்ளவர்களிற்கான,

பதில்

என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது…’


என்று தொடங்கி,

‘அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்;
என் ஆதித்தாயின்
பெண் மொழியில்.

அதுவரை நீ காத்திரு” என்பதே.

*

சொல்லாத சேதிகள் தொகுப்பு வெளிவந்து இத்தனை ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் மாற்றங்களை நாம் விவாதிக்க வேண்டும். பெண்கள் ஓரளவு எழுத முன்வந்திருக்கின்றனர், ஆனால் இலக்கியத்தை முழுநேரமாகத் தலையில் போட்டுக் கொண்டு இருப்பவர்கள் என்று பெரும்பாலான எவரையும் சொல்ல முடியவில்லை. ஆனால் பெரும்பான்மை ஆண் எழுத்தாளர்கள் “இலக்கியம், இலக்கியம், இலக்கியம்” என்ற முன்வைப்பைப் பெரும்போக்காக இன்னும் விரித்துச் செல்வதிலும் அந்த வெளியைக் காப்பதிலும் இயங்கி வருகின்றனர். ஆணாதிக்கத்தின் பழக்கங்கள் நுட்பமானவை, அவை இயங்கும் படிநிலைகளும் விரிவானவை, அவற்றினை பெண்ணிலை நோக்குடன் அறியவும் மாற்றவும் பெண்களின் குரல்களையே நாம் முதன்மைப்படுத்த வேண்டும். அதே நேரம் பெண்ணிலைவாத நோக்கென்பது தனியே பெண்களுக்கான விடுதலைக்கான கருத்தியல் மட்டுமல்ல அது மானுட விடுதலைக்கான கருத்தியல்.

இந்தப் பின்னணிகளின் விளக்கத்துடன் ‘கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்’ என்ற தலித் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பை நாங்கள் அணுகலாம். இத் தொகுப்பு மைத்ரி பதிப்பகத்தினால் 2018 இல் வெளியாகியிருக்கிறது. இத் தொகுப்பின் முதன்மையான பணிகளை எழுத்தாளரும் செயற்பாட்டாளருமாகிய பிரேமா ரேவதி அவர்கள் மைத்ரி பதிப்பகம் சார்பில் முன்னெடுத்திருக்கிறார். தமிழின் முக்கிய பெண்ணிலைவாத செயற்பாடளர்களில் ஒருவராகிய வ. கீதா அவர்கள் இத்தொகுப்பின் பெரும்பாலான பணிகளில் உடனிருந்து பங்காற்றியிருக்கிறார். இந்தத் தொகுப்பு மட்டுமின்றி, ‘அக்கரைப் பூக்கள்’ என்ற மொழிபெயர்ப்புத் தொகுப்பிலும் இவருடைய மொழிபெயர்ப்புத் தேர்வுகள் மற்றும் மொழிபெயர்ப்பு போன்றன தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பு மாதிரிகள் என்றே மதிக்கிறேன்.( எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து மொழிபெயர்ப்பு செய்த நூல்). அக்கரைப் பூக்கள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அன்னா அக்மதோவாவின் ‘இரங்கற் பா’ என்ற நெடுங் கவிதை மிக மிக முக்கியமான ஒன்று. மேலும் கைலார்ஞ்சியின் காலத்தில் தொகுப்பில் கவிஞர் சுகுமாரனும் சில கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். ஓவியர் நடராஜன் இத் தொகுப்பிற்கான கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார். இன்னும் பலரதும் கூட்டு உழைப்பின் இணைவே இத் தொகுப்பை இந்த நேர்த்தியுடன் சாத்தியமாகியிருக்கிறது. தமிழில் வெளிவந்த மிக முக்கியமான கூட்டுக் கவிதைத் தொகுப்புகளில் ஒன்றாக இதனை மதிக்கிறேன். இவற்றில் தொகுக்கப்பட்டுள்ள கவிதைகளும் அவர்களுடைய பார்வைகளும் என்னை வெகுவாகப் பாதித்தன.

(வ.கீதா)

அதே நேரம் ஈழத்தை பொறுத்த வரையில் கவிதையில் சாதி, பெண் ஒடுக்குமுறையின் கூட்டு இணைவான கவிதைகள் எவ்வளவு வெளிவந்திருக்கின்றன என்பது பற்றிய தேடலுக்கான அழைப்பாகவும் இத் தொகுப்பை விளங்கிக் கொள்கிறேன். அதே நேரம் சாதி மட்டுமே இக் கவிதைகளின் முன்வைப்பதாக இருக்கிறது என்பதாக இக்கட்டுரையை வாசிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டாம். சாதி பிரதானமான தீர்மானிக்கும் காரணியாக இக் கவிதைகளில் இணைகிறது. ஆனால் இக் கவிதைகள் உண்டாகியிருக்கும் கண்டடைதல்களில் உள்ள தீர்க்கமும் ஓர்மமும் அளிக்கும் விளக்கம் ‘உலகை மாற்ற நடந்தே தீர வேண்டிய போராட்டம்’ என்பதாகவே விளங்கிக் கொள்கிறேன்.

பாதிப்புரையில் பிரேமா ரேவதி அவர்கள் முன்வைத்திருக்கும் இரண்டு கருத்துக்களை இக் கட்டுரையின் தேவை கருதி இங்கே குறிப்பிடுகிறேன்.

1 . அம்பேத்கரிய வரலாற்று ,அரசியல், சிந்தனைப் பின்னணியை எவ்வளவு ஆழத்தோடும் விமர்சனபூர்வமாகவும் அக்கவிஞர்கள் கையாள்கிறார்கள் என்பதை மராத்திக் கவிதைகள் தெரிவிக்கின்றன. ‘’சொல் பீமா’’, ‘’பார் பீமா’’ என அவர்கள் மிகக் கடினமான அரசியல் முரண்களைத் தமது தோழர் / தலைவர் / தந்தையான அம்பேத்கரிடம் வாஞ்சையோடு சொல்லும் தொனி நெகிழவைக்கும். அதேவேளையில் ஒரு பெருமரத்தின் நிழல் காலங்களூடாக இயங்கிவரும் பாங்கை தெரிவிக்கிறது.

2 . அரசியல் வட்டங்கள் தனித்தனியாய் பிரிந்து ஓடிக்கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் சாதி ஒழிப்பு-பெண் விடுதலை என்ற இரு கண்ணிகள் இயைந்தும் முயங்கியும் முரண்பட்டும் நிற்கும் பல தளங்களையும் சமரசமில்லாது இக் கவிதைகள் பேசுகின்றன. தலித் பெண்ணியம், சாதி எதிர்ப்பின் மிகுந்த வலிமயான குரல் எனும் அதேநேரத்தில் அது ஆணாதிக்கத்தின்-சமூகத்திலும் சரி வீட்டிலும் சரி- மீதான கடும் எதிர்ப்புக் குரலும்கூட என்பதை முன்வைக்கின்றன.

இந்த இரண்டு கருத்துகளும் இக்கவிதைகள் எப்படி தமது கருத்தியலை, அவற்றின் செயற்பாடுகளை சுயவிமர்சன நோக்குடனும் அதே நேரம் புறச் சூழலில் எப்படி இயங்குகின்றன என்பது பற்றியும் தெளிவுடன் இயங்குகின்றன என்பது பற்றி வெளிப்படுத்துகின்றன.

மேலும் இத் தொகுப்பின் முன்னுரையில் கவிஞர் சுகிர்தராணி அவர்கள் முன்வைத்திருக்கும் சில கருத்துக்கள் இத் தொகுப்பை இன்னும் விரிவாக விளங்கிக்கொள்ள உதவக் கூடியவை. முதலாவது, “தலித் அரசியல் என்பது ஒரு கூட்டுச்செயற்பாடு, கூட்டுக்கோட்பாடு, ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டு மனநிலை. இந்த செயல்பாட்டினையும் அதிலிருக்கும் உண்மைகளையும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் தலித் இயக்கம். குறிப்பாக தலித்துகளை யார் சக மனிதர்களாக நடத்தவில்லையோ, யார் மனித மாண்பை மறுக்கிறார்களோ, சமத்துவம் என்பதை யார் மதிக்கிறார்களோ அவர்களிடத்தில் தலித் இயக்கத்தை கொண்டுபோய் சேர்ப்பதுதான் அவசியம், அவசரமும்கூட. சக மனிதர்களை தாம் எப்படி நடத்திக்கொள்கிறோம் என்பதை அவர்களுக்கே காட்டும் ஒரு கண்ணாடிதான் தலித் இலக்கியம்”.

அதிலும் “இம் மக்களுள் தலித்துகளுக்குள் தலித்துகளாக இருப்பவர்கள் தான் தலித் பெண்கள். சாதிய ஒடுக்குமுறையையும், ஆணாதிக்கச் சுரண்டலையும், அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவரால்தான் சக உயிர்களிடம் அன்பு பாராட்ட முடியும். சக உயிர்களை நேசிக்க முடியும். இன்றளவும் வன்முறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருகிறார்களே தவிர வன்முறையில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. தங்கள் படைப்புகள் தவிர வன்முறையில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. தங்கள் படைப்புக்கள் வழியே நூற்றாண்டுகளின் வரலாற்றை, வலியை, போராட்டத்தை வெளிக்கொணர்பவர்களாக இருக்கிறார்கள். கிணற்றில் புல்லின் வேரையாவது பற்றி உயிர் பிழைக்கத்தேடுவதைப்போல, காலங்காலமாக அழுத்திக் கொண்டிருக்கும் சாதியச் சுமைகளிலிருந்து கவிதைகளை உயிர் பிழைக்கச் செய்யும் ஒரு கருவியாக, ஓர் ஆயுதமாகவே பார்க்கிறார்கள்.” இவை நாம் தொகுப்பு பற்றிய பருமட்டான பார்வைகளை பெற உதவும்.
கவிதை என்பது உடல் மட்டுமல்ல, அதன் இதயம் உடலளவே முக்கியமானது. ஒரு கவிதை தன்னை தனக்குள் சுருக்கிக் கொள்ளலாம், அல்லது தன்னைப் பிறராக்கி விரித்துக் கொள்ளலாம்.

(சுகிர்தராணி)

“இது பொய்யா, பீமா
உன் பெயரை நான் உச்சரித்த
அந்த தருணத்தில்
எண்ணற்ற தாமரைகள்
பளிங்கு போல்
கைகளுக்கு இழைவானவையாய்
பூத்துக் குலுங்கின
என்பது பொய்யா பீமா?

இது பொய்யா பீமா
உன் பெயரை நான் உச்சரிக்க
வரலாறு உயிர்ப்பெற்று
மாதவிடாய் போக்குபோல
பிரவாகமாக ஓடியது என்பது
பொய்யா பீமா?

உலகச் சந்தையில்
எனது பாட்டி விற்க உட்கார்ந்திருக்கிறாள்.
அரிவாள், சுத்தி,
புல் கட்டுகள்,
உளியால் செதுகப்பட்டது போன்ற நாக்கு
மொழி , கூர் ஆயுதமாக.

அவளது பசி மகத்தானது.
காலங்காலமாக அவள் தாகமுற்றிருகிறாள்.
துண்டு ரொட்டிக்காக
அவள் பரிதவித்து இருந்ததை
நான் பார்த்ததேயில்லை.

மனுஷியாக இருப்பதே அவளின் விழைவு-

ஒவ்வொரு போரிலும்
ஒவ்வொரு மோதலிலும் போதும்
ஒவ்வொரு கலவரத்திலும்
வன்மத்தில் மறைந்திருக்கும்
எதேச்சதிகாரத்திலும்
கைர்லாஞ்சியிலும்
கைர்லாஞ்சிக்குப் பிறகும்கூட

மனுஷியாக இருப்பதே அவள் விழைவு
….

யாருடைய பொருளாகவும் ஆக நான் மறுக்கிறேன்
யாரையும் பொருளாக்கவும் நான் மறுக்கிறேன்.

ஒரு பெண்ணால் சிரிக்க முடியுமா?
அறிவிலிருந்து, மனத்திலிருந்து, கருவறையிலிருந்து
சத்தமாக, சுதந்திரமாக முன்னறிந்து கொள்ளமுடியாத வகையில்?
……

எவ்வளவு தொலைவில் இருக்கிறது
சாதியை அழித்தொழிப்பதற்கான போராட்டம்
எவ்வளவு தொலைவில் நிற்கிறான்
வரிசையில் காத்திருக்கும் அந்த கடைசி மனிதன்
எவ்வளவு தொலைவில் காத்திருக்கிறாள்
வரிசையில் இன்னும் இடம் பெறாத அந்த பெண்.”

இவை கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் என்ற பிரதன்யா தயா பவார் என்பவரின் கவிதையின் சில வரிகள். இக் கவிதை பிரேமா ரேவதி சொல்வது போல் நமது தோழனாகவும் தந்தையாகவும் இருக்கும் அம்பேத்காருடனான உரையாடலாகத் தொடங்கி பின் நீண்ட அவ்வரிசையில் இன்னும் இடம் பெறாத பெண்களின் அருகில் சென்று நிற்பது வரை விரிகிறது.
இந்தக் கவிதை பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. கைர்லாஞ்சி எனும் இடத்தில் நிகழ்ந்த சாதி வெறித் தாக்குதலையும் பாலியல் வன்புணர்வு பற்றியதுமானது இக் கவிதை. ஆனால் அந்தக் கொடூர நிகழ்வின் தொடர்ச்சியாக எழும் கேள்விகளையும், அதன் பல்பரிமாண பங்குதாரர்களையும் இக் கவிதை அடையாளம் காண்கிறது. ஒரு பெண்ணால் சிரிக்க முடியுமா? என்ற கேள்வி எளிமையானது போல் தோன்றும் ஆனால் அதன் பின்னாக அடுக்கப்படும் இடங்களிலிருந்தெல்லாம் சுதந்திரமாக முடியுமா என்றால் அவற்றுக்கான பதில்கள் என்ன? எல்லாவற்றின் பின்னும் மனுஷியாக இருக்க விரும்பும் பெண் கனிவின் சாறு. இது ஒரு நெடுங் கவிதை. இக் கவிதை முன்வைக்கும் ஆதாரமான கேள்விகளுக்கான பதிலை சமூகம் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதே நேரம் கவிதையின் உடலாகவுள்ள மொழியின் கூர்மையை நாம் மொழிபெயர்ப்பிலும் உணர முடிகிறது, அதே நேரம் அதை விட முக்கியமாக கவிதை யாரின் குரலாக ஒலிக்கிறது, அவர்களின் பிரச்சினைகள் குறித்த கவிஞரின் அறிதல் போன்றவை இதை ஒரு முதன்மையான உரையாடலாக்கும் வல்லமை கொண்டவை. இக் கவிதையில் அறிவும் அறிதலும் சேரும் புள்ளிகள் பின்னிப் பிணைந்துள்ளன, அங்கிருந்து தான் “யாருடைய பொருளாகவும் ஆக நான் மறுக்கிறேன், யாரையும் பொருளாக்கவும் நான் மறுக்கிறேன்” என்ற கண்டடைதல் ஒளிர்கிறது.

எந்தவொரு ஒடுக்குமுறையையும் ஒடுக்கப்படுபவர்களின் பார்வைக்கோணத்திலிருந்து அணுகுவதே முதன்மையானது என்று திருமாவளவன் ஒரு உரையில் குறிப்பிட்டிருப்பார். ஒடுக்கப்படுபவரின் வாழ்வியல் பின்னணி, அது உண்டாகியிருக்கும் நெருக்கடிகள் இவற்றிலிருந்தே அவர்கள் மேலெழுகிறார்கள். அதுவொரு நீண்டதும் களைப்பு மிக்கதுமான பயணம். ஒவ்வொரு வெளியிலும் புறக்கணிக்கப்படுபவர்களை நாம் அறியும் போது, அவர்களுக்கான விடுதலையின் பாதையில் சேர்ந்து பயணிக்கும் போது அவர்களின் முதன்மையான சிக்கல்களே முதன்மையானவையாக இருக்க வேண்டும். எங்களுடைய அறிதல்கள் மற்றும் குறித்த பிரச்சனைகள் தொடர்பான அக்கறை என்பது எவ்வளவு முயன்றாலும் குறைபாடுடையதே என்பது எனது பார்வை. ஆகவே சக பயணிகள் அந்த விடுதலையின் பாதையை தீர்மானிக்கும் தீர்மானகர சக்திகளாக இருப்பதை விடுத்து அவர்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யும் கருவிகளாக மாறுவதே பொருத்தமாயிருக்கும். ஒடுக்கப்படுபவர்கள் பேசுவதற்கானதும் முன்வைப்பதற்கும் நூற்றாண்டுகளின் கதைகள் உள்ளன. அவற்றைக் கேட்பதற்கான பொறுமையும் நிதானமும் அவசியமானவை. இந்தக் கவிதைகள் முதலில் கேட்கப்பட வேண்டியவை, பின்னர் உரையாடப்பட வேண்டியவை, இறுதியாகவே இலக்கிய மதிப்பீடு எனும் சாதனம் தேவைப்படும். அந்த சாதனமும் பழுதுபார்க்கப்பட வேண்டியதே. பெண்களும் ஆண்களும் இணைந்து அப்பணியைச் செய்ய வேண்டும்.

“ஒ யசோதரா

கனவில் வரும் கடும் வேதனையாய்
நீ இருக்கிறாய்.
வாழ்நாள் துக்கம்
உன்னைப் பார்க்க எனக்கு துணிச்சலில்லை.

புத்தரின் ஞான ஒளி
எங்களை ஒளிரச் செய்தது
ஆனால் நீயோ இருட்டை உள்ளிழுத்துக் கொண்டாய்.
உனது வாழ்க்கை – புள்ளிகள் இட்டதாய், நீலமானதாக
கருமையாய் சிதறுண்ட வாழ்க்கை, எரிந்து போன வாழ்க்கை.

ஓ யசோதரா
கனிவான வானம் உன்னிடம் தஞ்சமடைகிறது.
உனது ஒளிர்கின்ற ஆனால் பயனற்ற வாழ்வைப் பார்த்து
வேதனையடைந்த நட்சத்திரங்கள் கண்ணீர் உகுக்கின்றன.
எனது மனம் உடைகிறது.

அந்திமாலைப் பொழுதைப் போல் மயங்கிக் கொண்டிருக்கும்
ஒப்புயர்வற்ற உன் அழகைக்கண்டு
உனது காதலனிடமிருந்து அது பிரிந்திருப்பதைக் கண்டு
உன் மொளன பெருமூச்சைக் கேட்டு
விண்ணுலகத்தில் ஆனந்தம் கிட்டுமென்ற வாக்குறுதி
பொய்யென்றே எனக்குத் தோன்றுகிறது.

ஒன்றைமட்டும் எனக்கு சொல் யசோதரா
சீறும் புயலை உனது சிறிய கரங்களில்
எவ்வாறு உள்ளடக்கினாய்?

உனது வாழ்க்கை எனும் கருத்தே பூமியை நடுங்கச் செய்கிறது
ஆர்ப்பரிக்கும் அலைகளைக்
கரை மீது மோதச் செய்கிறது.
…….

மின்னல் தாக்கியது
ஆனால் உனக்கு அது தெரியவில்லை
நீ இருந்த இடத்திலிருந்து
வெகு தொலைவிலுள்ள
ஒரு மாபெரும் அற்புதத்தை நோக்கி
அவன் சென்று கொண்டிருந்தான்…

அவன் சென்றான், வென்றான், ஒளிர்ந்தான் –
அவனது வெற்றி பற்றிய பாடல்களை கேட்டபோது
உனது பெண்மை அழுதிருக்கும்.

கணவனையும் மகனையும் இழந்த நீ
வேர் பிடுங்கப்பட்ட இள வாழைமரம் போல
உன்னை உணர்ந்திருப்பாய்.
……

ஓ யசோதரா
இந்த அநீதியைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்
ஒரு புத்த விகாரையில் கூட
உன்னைக் காண முடிவதில்லை.

உண்மையில் நீ ஒரு பொருட்டேயில்லையா?

ஆனால் பொறுத்திரு – வேதனைப்படாதே
நான் உனது அழகிய முகத்தை பார்த்திருக்கிறேன்
சித்தார்த்தனின் மூடிய கண்ணிமைகளுக்கிடையே
நீ இருக்கிறாய்
யசு, நீ மட்டும்.”

ஹிரா பான்சோடெ என்ற கவிஞர் எழுதியிருக்கும் இக் இக்கவிதை என்னளவில் புத்தரின் இதயத்திலிருந்து பார்க்கும் ஒரு கவிதை. அதுவே இவர்கள் முன்வைக்கும் ஞானத்தை ஊடறுக்கும் துயர். ஆனால் அதை எப்படி முன்வைத்திருக்கிறார் என்ற ஒழுங்கும், கவிதையின் இறுதி வரிகளில் நெருங்கும் நேசமும் அடையும் ஞானமும் பெண்கள் முன்வைக்கும் ஆணுலகின் மையமான புறக்கணிப்பின் கீற்றாகவே பார்க்கிறேன். அதே நேரம் இந்தக் கவிதையின் தத்துவார்த்த தளம் கவனிக்கப்பட வேண்டியது. பவுத்தம் அதன் மைய இழையிலிருந்து பெண்ணின் பங்களிப்பை கணிக்கத் தவறுகிறது. அவர்களின் வாழ்வு மாற்றத்திற்கான சிந்தனைகள் அங்கு உற்பத்தியாகவில்லை. ஆனாலும் புத்தரை அரவணைத்தபடி ஒரு காதலனாக, துணையாக, வாழ்வின் கேள்விகளைத் தேடத் தொடங்கியவராக அக் கவிதை மூடிய இமைகளுக்குள் இருக்கும் யசோதரையின் இருப்பை அறிதலுடன், பவுத்தத்தின் உள்ளடுக்கை விரிவுபடுத்துகிறது. அந்தப் புள்ளியை ஞானத்தின் விசாரணையாகவும் அதன் குறைபாட்டை அன்புடன் கூறும் போது, அக் கனிவே கருணையின் எல்லையை நிறைவாக்குதாகவும் ஆகிறது. மிகச் சிறந்த கவிதையாக என்னளவில் இது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கவிதையை ஒரு மானுட உரையாடலாகவும் நான் வாசிக்கிறேன். நான் எழுதிய ஒரு கவிதையை முன்வைத்து இந்தப் பிரதிகளுக்கிடையிலான வேறுபாட்டை அவதானிக்கலாம் என்று கருதுகிறேன்.

யசோதரையை நித்திரையில் எப்படிப் பிரிந்தீரோ

அப்படியே
அறையிலிருந்து வெளியேறுகிறேன்
கனகலவி கழிந்த பின்
கட்டிலிலிருந்து இறங்கினேன்

எதுவுமில்லை சகாவே –
அது ஒரு உடல்; இது ஒருஉடல்
என்பதைத்தவிர

காற்று தெருக்களைத் திறந்தது
நடந்தேன் நான்

எனது சகாவே – பூமியில் ; நோயுண்டு ; மூப்புண்டு ;
சாவுண்டு
நீரும் நானுமோ என்ன செய்வோம்

நிராதரவாய் விட்டு வந்திருக்கக்கூடாது தான்
ஆனால் அப்போது நான் பாவத்தை அறிந்தேன் பிரபு –

பாவமோ உண்மையை விட வலியதாயிருந்தது
பாவமோ என்னை விட நானறிந்ததாயிருந்தது

பிறகேன் நித்திரையின் மௌனத்தைத் திறக்க வேண்டும்.

இக் கவிதை உருவாக்கும் அறிதல் என்ன? ஒரு வகையில் பொறுப்பற்ற குரல், ஆணாதிக்கம் என்னுள் நுட்பமாக இயங்கியிருப்பதை ஒவ்வொரு சொல்லிலும் சொற்களின் இடைவெளியிலும் காண்கிறேன். இங்கு எனது பொறுப்பின்மைக்கும் ஆணுலகின் ஞானத் தேடலுக்கும் புத்தரின் வாழ்வு ஒரு நியாயமாக்கப்படுகிறது. நான் யசோதரைக்கு வெளியிலிருந்து புத்தரின் சிக்கல்களை விளங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் யசோதரையின் பார்வையிலிருக்க வேண்டிய வாழ்வு குறித்தான மதிப்பீடு ஞானத்தின் பேரிடைவெளி. அது இல்லாமல் பூரணம் இல்லை. ஒளிரும் முழுநிலவில் பெண்ணற்ற அவ்வெளிச்சம் என்னைத் துணுக்குற வைக்கிறது. மேலுள்ள ஓ யசோதரா என்ற கவிதை என்னை அழிய வைக்கிறது. எனது அற்புதங்களைக் கரைக்கிறது. சக மனிதர் மேல் புத்தர் முன்வைக்கும் கருணை, முதலில் கனிய வேண்டியது யசோதரையிலிருந்து. அது உண்டாகியிருக்கும் வெளிச்சம் புத்தரை உண்மையின் தேடலில் வழிநடத்தியிருக்கும். அந்த வழியிலிலேயே இனி நான் நடக்க விரும்புகிறேன்.

இத் தொகுப்பின் அரசியல், வாழ்வை அதன் நுணுக்கமான திசைகளுக்கும் அகன்ற போக்கிற்குமிடையிலான உரையாடலாக வார்த்திருக்கிறது. ஈழத்துச் சூழலில் இத் தொகுப்பிற்கான வாசிப்பு தேவையானதொன்றாகக் கருதி இக் குறிப்பை எழுதியிருக்கிறேன், விரிவான உரையாடலுக்கான பல புள்ளிகளைக் கொண்ட இத் தொகுப்பிலிருந்து சிறிய பகுதிகளை முன்வைத்து இவ் அறிமுகக் குறிப்பை எழுத முடிந்திருக்கிறது. பெண்ணிலை நோக்கென்பது உலகை அதன் உள்ளார்ந்த சிக்கல்களிருந்து விடுவிக்கக் கூடியது. நமது வாழ்வு பற்றிய பார்வைகளை மாற்றக் கூடியது. அதற்கு முன் நாம் செய்ய வேண்டியது இந்த ஆணாதிக்க உலகின் கொடுங் காற்றுக்குள் அலையும் இச் சுடர்களை குன்றின் மேல் ஏற்றிடல்.

TAGS
Share This