முத்துச் சரளைகளின் அறியாத கரையில்

முத்துச் சரளைகளின் அறியாத கரையில்

தமிழின் நெடுங்கவிதை வரலாற்றில் ஆதி வாழ்வையும் காமத்தையும் எழுதிய பெண்களில் பெரும்பாலும் எஞ்சியிருப்பது பக்தியெனும் தன்னிலை. காரைக்காலம்மையார், ஒளவையார், ஆண்டாள் என்று தொடங்கும் கவிஞர்களின் சொல்லாழத்தை நவீன காலகட்ட அறிதல்கள் தன்னிலைகளை மாற்றியமைத்தன. பக்தியை உருமாற்றின. தானும் ஒரு நிகர் உயிரியெனும் ஆற்றல் எழுந்து வந்தது.

“கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற்குழி வயிற்றுப் பங்கி சிவந்திரு பற்க ணீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்” என்று காரைக்கால் அம்மையார் தன்னைப் பேயென ஆக்கிகொண்டே எழுதினார்.

நவீனத்துவம் உருவாக்கிய அறிதல்களிலிருந்தும் வாய்ப்புகளிலிருந்தும் உருவாகி வந்த குரல்கள் தன்னிருப்பை வலிமையான ஓர் இருப்பென சொல்லி எழுந்தன. அனாரின் நான் பெண் என்னும் தன்னிலை உருவாக்கம் அக் குரற் திரட்சியின் மகத்தான ஆக்கம்.

“ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக்கடல்
ஓர் அடைமழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்”

*

இந்தச் சொற்கள் உருவாகி இன்று முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டன. ஆயிரக்கணக்கான கூருணர்வு மிக்க வரிகள் இம் மொழியின் ஆழ்மனத்தை அறுவைச் சிகிச்சை செய்து வருகின்றன. மொழி கொண்டியங்கும் ஆழமான ஆண் தன்மையான அழகியல் உருவாக்கங்கள் இன்று உள்ளிணைவுகளை மாற்றியபடி முன்னேறி வருகின்றன.

(ரஜிதா)

ரஜிதாவின் கவிதைகளும் ஆண் தன்னிலையின் அம்மொழியை அறுவைச் சிகிச்சை செய்பவை. அதனாலேயே அவரது மொழி அறுவைச் சிகிச்சைக் கத்தியின் கூர் முனைகளைக் கொள்கின்றன. பட்டால் அறுத்து விடும் அலகிருந்தாலும், மீண்டும் குணமாக்கும் கருணையின் பிடியுடன் எழும் சொற்கள் அவை. அவரது மீனும் துள்ள என்ற கவிதைத் தொகுப்பு ஈழத்தமிழ்க் கவிதைக்குள் முக்கிய வரவு. கற்பகம் யசோதர, தில்லை, யாழினி, பிரியாந்தி போன்ற கவிஞர்களின் மொழியிலிருந்து இவரது கவிதைகள் தனித்த மொழியுடலை அடையும் எத்தனம் கொண்டிருக்கின்றன.

இவ் வாழ்வின் உறவும் பிரிவும் ஈடிணையற்ற விசை கொண்டவை. பெண்கள் உரையாடும் உறவும் பிரிவும் கொள்ளும் எதிர்பார்ப்பு இலக்கியத்தில் விரிவாக உரையாடப்பட வேண்டியது. மொழியின் பிரக்ஞையில் நிகழ வேண்டிய மாற்றங்களை அவை குறித்துக் கொண்டே செல்கின்றன.

இவரது கவிதைகளில் உள்ள சொற் சிக்கனமென்பது, நீண்ட மெளனத்தின் பின் ஒலிக்கும் கேவல், முறையீடு, வாயசைப்பு. அதுவே கவிதைகளை வாசிப்பவரை உள்நுழைய அனுமதித்து கரும்பாறையில் மோதித் தன் தலையைத் தானே உடைத்துக் கொள்ளும் மனங்களென வாசகரை உலைக்கின்றன. அவரது கவிதைகள் ஆண் மனங்களைக் கொத்தி மொழியலகுகளில் கவ்வி அந்தரத்தில் கைவிடுபவை.
சொல்லிணைவுகளில் உண்டாகும் சங்கீதம் மனதோடு ஒட்டிக் கொள்ளும் இனிய பாடலென ஆகக் கூடியவை. அதே நேரம் கசப்பின் நெடு வரலாற்றிலிருந்தெழும் பிலாக்கணமென நெஞ்சில் உறைபவை. இன்னொரு திசையில் முத்துக்கள் சரளைகளென வீழ்ந்து கிடக்கும் ஆற்றின் தீரத்தில் வாழ்வைப் பொறுக்குபவை.

*
உன் மௌனத்தின் தனிமை

ஏறிச்செல்லும் படிகளின்
முதற்தளம்

அமர்ந்தபடியிருக்கின்றேன்

எங்கெங்கோ தேடிச்சுவைத்த
கனிகளின் கலவையை
தோளில் பீய்ச்சிவிட்டு
ஒருகணம் உற்றுப்பார்த்து
இறக்கையைத் துடிக்கின்றது
பறவை.

காற்றில் எதிர்ச்சுழல்

உடனிருப்பதை பிழிந்தெறிந்த
பதில்களின் கோர்வை
ஓடைகளில் நீந்தியொதுங்கும்
கஞ்சல் துகள்களாய்
மீந்துபோக

நாம் நானாகிக் கொண்டிருக்க.

(சித்திரை 2022)

*

திணறி மிதக்கும் வாழ்வுக்கு
அலையும் காலம்

என் தேவைகளின் அம்மணங்களோடு
உங்கள் முன்
மண்டியிடுகிறேன்

அலைக்கழியும் உடலோடும்.

ஊசல் தீராத
பிணிதின்ற வனம்

உடலளையும் விரல்கள்

நிலையிருப்பில்
பார்க்காத கண்களும்
சிலிர்த்து உதிர்க்காத
வார்த்தைகளும்

மனம் சுரக்காத மதனம்

என்றுமற்று வற்றியே போக.

(வைகாசி 2022)

*

கண்களை மூடு
நிதானமாகு

நிரம்பிய
காதல், காமம், கண்ணீர்
என்னைக் கிளர்த்தியெழுத்த
காரணமாகிப்போன

இந்த வீடு

நான் திரும்புவதற்குச்
சாத்தியங்களற்றதாகும்.

திறந்து நுழைய விரும்பாத
நெடுங்கதவாகிப்
போகும்.

பற்றிய கொடி தளர,

தனித்துப்
பறத்தலில் மிதக்கும் வாழ்வை
அமைத்துக்கொள்வேன்.

வாழ்வின் கரைகளை
பார்,

என் சித்திரங்கள்
அத்தனையிலும்

என்றைக்கும்
எனக்கில்லாதவனாய்.

(2023)

*

எனக்காக செய்வதில்
களைத்துப்போயிருக்கிறாய்

காதலிலும்.

என்றைக்கும்
திருப்தியற்றவள்

நான்.

மிச்சம்வைப்பதற்கென்ற
நினைவுகள்

கனத்துப்போன போது

நெடுந்தூரம்
முகத்திலறைந்த
காற்றோடு கண்ணீர்

கூடு திரும்பிய பின்னும்
உன் அப்பிய சோகங்களே
மீந்திருந்தன

கன்னங்களின்
உட்செதிலாய்.

(2023)

*

நீ மணல்

உன்னைக்
கிளர்த்தவில்லை

காதல்
எதுவுமே

வெலவெலத்துப் போயிருக்கிறதென்
சுயம்

நிலை கனத்து
உறைக்க

உனக்கு
யாரோவாக

நனைத்து உடன்திரும்பும்
அலையாய்

கூசிக் குறுகி
உட்திரும்புகிறது

என் கடல்.

(2022)

*

நீயே மொத்தக் காதலும் என
பிதற்றிக்கிடந்தவர்கள்

எங்கோ மறைந்து
போனார்கள்,

நீ சலிப்புற்றவளானாய்.

தழுவிக்கிடந்த
அத்தனை வாழ் காலமும்
நிராகரிக்கப்பட்டாயிற்று.

கொண்டாட்டச் சிலிர்ப்புக்கள்
கொல் நினைவுகளின் உண்மைகள்
நிகழ் நாட்களை மோசமாக்க.

குழியாய் உள்ளிறங்கும்
மார்புச்சத்தத்தின் வேகம்

நள்ளிரவுக் கரையின்
கேறல்

நீ நிராதரவானாய்

பெருகும் காதல்
அணுவாய் தின்று
சிரிக்கட்டும்.

அலையும் கனவுகளை
கொல்

கொல்.

(2023)

*

நீங்கற் படலம்

விசமூறிய இரவுகளின்
நீள் நாட் பிரார்த்தனைகள்

நீங்க

அந்தரிப்புக்கள்
இலேசாக

சலனமற்ற மனத்துண்டு

விடுதலை

உன்னிடம் விழுந்துகிடக்கும்
நாட்களை எரித்தேன்

பின் எப்போதும்
நெருங்காதபடிக்கு

பக்குவமாய்.

(2023)

*

அந்தக் கண்களை
இனிக் காணப்போவதில்லை

சென்றாய்

பின்னெப்போதும்
ஓடிவரமுடியாத
தூரம்

தர்க்கங்கள்
செத்துப் போயின

தேடியலையும்
இந்த மீன்கள்
நெடுவழிக்கும் அலைய

நிரம்பிய நகரத்திற்குள்
உலவும்
உன் சாயல்கள்

போய் வருகிறேன்.

(ஆனி 2023)

*
கடந்தது
நிலைத்த நாட்கள்

உயிர் தனித்த
வெறுநிலமேட்டில்

நீ இருந்தாய்
வானமாய்

உன் நாச் சொல்லும்
பெருங்கூற்று

வாய்த்திருக்கவில்லை

வரமே
வாழ்வேன்

முத்துச்சரளைகள்
நிரம்பிய
வரியுதட்டுத் தடயமாய்

அறியாத கரையிலும்.

(சித்திரை 2023)

TAGS
Share This