மாயா மற்றும் மக்தலேனா சில சிலுவையில் அறையப்பட்டவர்களின் கதைகள்

மாயா மற்றும் மக்தலேனா சில சிலுவையில் அறையப்பட்டவர்களின் கதைகள்

(குறிப்பு: ஆதி பார்த்திபன், யுத்தத்திற்குப் பின் உருவான புதிய தலைமுறைக் கவிஞர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். அவரது பெரும்பாலான புனைவுகள் மற்றும் கவிதைகள் அன்பின் தீராத அலைவை, முன் பருவக் காதலின் குழப்பங்களையும் மனநிலைகளையும் எழுதிச்செல்பவை. இது இவரது ஆரம்பகால எழுத்துகளில் ஒன்று)

கடிதம் ஒன்று

அன்புள்ள ஜீஸஸ்
இன்று உங்களைச் சிலுவையில் அறைந்து முதல் நாள், என்னால் அழாமல் இருக்கமுடியவில்லை இருந்தும், நீங்கள் புனிதமானவர் நானோ உங்களுக்குச் சற்றும் பொருத்தமில்லாதவள் என்பதால் அழுவதைப்பற்றிச் சிந்திக்கிறேன், வைன் கோப்பைகளில் கண்ணீர் எனும் அன்பின் திரவம் நிறைகிறது. இனி எந்தப் புராதனங்களிலும் அது புனிதக்கோப்பை என உங்களது ஆட்களால் எழுதப்படும்.

சற்றே பொறுங்கள் நீங்கள் இருக்கும் சிலுவை மிக வசதியானது. அது புனிதரின் சிலுவை என்று பலரால் அழைக்கப்படும் சிறப்பு பெயரைப்பெற்றுவிட்டது. நானோ உங்கள் அருகில் அறையப்பட்டிருப்பவனைப் பார்க்கிறேன். அவன் மாயாவின் காதலனாக இருப்பதைத் தவிர எந்தப் பாவமும் அறியான். நீங்களோ தீர்க்கதரிசி எனும் பாவத்தைச் சுமந்தவர். எதையும் முன்னர் அறிந்து கொள்வதால் இரண்டாம் நாளில் நீங்கள் உயிர்த்துவிடுதலைப் பற்றி அறிந்திருந்தீர்கள், அவன் எதையும் அறியாதவன் மாயாவின் நிலை பற்றி ஏக்கம் கொண்டவன், உலகிலயே காதலிக்கும் பெண்ணை தூரத்திலிருந்தபடி அவளது துன்பங்களில் கூடவே இருக்காமல் இருக்கும் அவனே பாவிகளில் பாவப்பட்டவன். அந்த சிலுவையோ மிகவும் மட்டமான மரங்களால் செய்யப்பட்டது, ஆணிகள் ஜிப்சிகளால் செய்யப்படவில்லை அவை மிகவும் துருப்பிடித்த மட்டமான ஆணிகள், அவனை நீங்கள் அறியீர்கள் இந்தத் தருணத்தில் உங்களுடன் இருந்தவர்களை விடக் குறைவானவர்களே அவனை நோக்கிக் கவலையடைந்தார்கள், மாயா எனும் பெண்ணை அவன் நேசித்திருக்கவேண்டும் என கூறிக்கொண்டார்கள்.

இந்தப்பனிகாலத்தில் அவனால் வடிக்கப்பட்ட கண்ணீர் உறைந்து அவனது காலுக்குக் கீழே சிறிய பளிங்குக் குன்றாக மாறியிருக்கிறது. அவன் சோர்வடைந்து இருக்கிறான். மாயாவை நினைத்துக் கரைந்து போயிருக்கிறது அவனது உடல், குழிவிழுந்த கன்னங்களுடன் ஒரு இருளில் அவன் தலையின் மேல் மூன்று நட்சத்திரங்கள். அவனே பாவங்களின் கர்த்தா.

மக்தலேனா

என்னைச் சிலுவையில் அறையப்பட்டதிலிருந்து எனக்கு அருகில் ஒவ்வொரு நூற்றாண்டுகளுக்கும் ஒரு முறை ஒருவன் அறையப்பட்டான், இன்றும் அப்படித்தான் அவனது தலைமுடி மிக நீண்டதாகவும் அவனது கண்களில் கருணையும் உருவானது. நான் அவனைப்பார்த்தபோது அவனைப் பலரும் புனிதர் என்றும் துரோகி என்றும் அழைத்தனர். மாயா இப்படித்தான் இரண்டு பெயர்கொண்டு ஒவ்வொரு சிலுவையில் அறையப்பட்டவர்களும் இருக்கிறார்கள். உனக்குத்தெரியுமா நான் மட்டும் ஏன் முகவரி இல்லாமல் அறையப்பட்டிருக்கிறேன். மூன்றாம் நாளில் அந்த விசித்திரமனிதன் இறந்து போனான் நான் மட்டும் ஏன் பல யுகங்களாக இறப்பில்லாமல் இருக்கிறேன் மாயா? சிலுவையில் நான் அறையப்பட்டிருப்பதை உன்னிடம் யாரும் தெரிவிக்கவில்லையா. நான் உன்னைப் பல யுகங்களாகப் பார்க்கவில்லை என்பதால் நீ என்னை மறந்திருப்பாய் என்று தோன்றுகிறது.

சரி, எனக்கருகில் இதுவரை சிலுவையில் அறையப்பட்டவர்கள் பற்றி நீ அறிவாயா? இங்கு யாரும் நிரபராதிகள் இல்லை. எல்லோரும் அன்பு எனும் குற்றத்தை அதிகமாக செய்தவர்கள். நானோ அளவுக்கதிகமாக யுகம் யுகங்களாக.
J நகரத்தில் அன்புடன் இருப்பது மரணதண்டனைக் குற்றம் என்பதை அறியாதவன் நான், நான் பிறந்தபொழுது உனது பெயரை உச்சரித்ததற்காக இங்கு அறையப்பட்டேன். இன்று மிகப்பெரிதாக வளர்ந்தும் விட்டேன். இறப்பை விட வலியைப் பொறுப்பது கடினமான ஒரு செயல், அதை விட ஒரு நொடிகூட யாருக்கும் உரிமையில்லாமல் இருப்பது. இருந்தும் எனது சந்தோசம் இந்த நிறம் மாறும் வானமும் ஒரு சில பறவைகளும் தான்.

கடந்த யுகத்தில் ஒரு பறவை வந்தது அதனிடம் உன்னைப்பற்றிய செய்திகளை விசாரித்தேன், நீ நோயிலிருந்தாய் என்றது, அன்று தான் இதயத்தில் செருகப்பட்ட ஆணி மேலும் விசித்திரமாகத் தனது கூர்மையை என்னிடம் காட்டியது, இப்படித்தான் ஒவ்வொரு பறவைகளும் உன்னைக் கண்டுவிட்டு வந்து என்னைக் காயப்படுத்துகின்றன. ஒரு பறவை மாத்திரம் என்னிடம் அடிக்கடி கேட்கும் நீ இங்கிருந்து சென்று மாயாவைப்பார்த்துவிடேன் என்று. நான் அதனிடம் ஒரு பொழுதும் கூறவில்லை நான் சிலுவையிலிருப்பதை விட மாயாவுடன் இருக்க நினைப்பது மாயாவுக்கு பிடிப்பதில்லை என,
மாயா மிகவும் விசித்திரமானவள் தான். அதனால் தான் நான் வாழவும் இல்லை. சாகவும் இல்லை.

(ஆதி பார்த்திபன்)

கதை இரண்டு

ஒரு நகரம் இறந்தவர்களால் உருவாக்கப்பட்டது. ஒரு ஆரம்ப யுகத்தில் என்னை அங்கு கொண்டு சென்று விட்டார்கள், நான் தனியாக இருந்து சலித்துவிட்டேன், மாயாவைப்பற்றிய கதைகளை இறந்தவர்களிடம் சொன்னேன், நீ ஏன் மாயாவை இவ்வளவு காதலிக்கிறாய்
மாயாவைப் போல ஒரு பறவையும் இல்லை என்றேன் , மாயாவுக்குத் தெரியாது மாயா அந்த நகரம் முழுவதும் பேசப்பட்டாள். ஒரு சிலர் சில புராதனக்கதைகளில் வரும் பெண் தெய்வமாக மாயாவை வடித்தனர், இறந்தவர்களுடன் எனது உலகம் சிருஷ்டிக்கப்பட்டது.

காதல் என்றால் என்ன? ஜீஸஸ் இன் முதலாவது கேள்விக்குக் கொஞ்சம் கலங்கிய விழிகளுடன் பார்த்தேன்
அது அறையப்படுதல்
ஏதோ ஒரு மனதில் சிலுவையில் அன்பில் ஆத்மீகத்தில் அறையப்படுதல் காதல். நான் மாயாவின் அன்பில் , நீங்கள் இந்தச் சிலுவையில்.
மாயா இப்போது எங்கே இருக்கிறாள்? கீழே பனிக்கட்டியாக உருகியிருக்கும் கண்ணீரின் பளிங்கில்
பறவை எச்சங்களும் அந்த பளிங்கிலிருப்பதை நீங்கள் அருவருப்பாய் பார்க்கிறீர்கள் தானே, வெறும் பறவைகள் அவை சதைக்காக எனது சிலுவைக்கு மேல் காத்து இருப்பன. மாயாவோ, மலைகளின் உள்ளே குறுகிய புள்ளிக்குள் இருளைச் சுவாசிக்கும் பறவை. அவளுக்கு எனது இரத்தத்தின் மேல் அக்கறை கிடையாது.

அவள் என்னைப் பார்ப்பது ஒரு பாவியைப் பார்ப்பதை போல், என்னை நேசிப்பது ஒரு அனாதையை நேசிப்பதை போல், உங்களுக்குத் தெரிகிறதா தூரத்தில் இருக்கும் அந்த மலை, அங்கிருந்து வரும் ஒவ்வொரு காலை வேளையின் மாயாவின் குரலுக்காக நான் காத்திருக்கிறேன். அந்த ஒற்றைக்கேவல் தான் என்னை வாழவைக்கிறது.

நீ ஒரு விசித்திரமானவன், அப்படியென்று மாயா சொல்வதைப் போல் நீங்கள் சொல்வீர்களானால் இன்றே நான் இறந்து விடுகிறேன்.
நல்லது எனக்குத் தூக்கம் வருகிறது, இப்போது மாயா உறங்கியிருப்பாள்.
அப்படியென்றால் காலையில் அந்தப் பளிங்கின் திணிவு இன்னும் ஒரு பருமன் அதிகரித்து விடும்.
கண்ணைமூடிக்கொண்டு அழுதிருக்கின்றீர்களா. அதுவும் இரவில்.
அதைப்போல ஒரு நிலை உங்களுக்கு கிடைத்துவிடாது. நிராகரிக்கப்பட்டவர்கள் உலகத்தைப்பார்க்கத் திராணியற்றவர்கள்,
அவர்களால் கண்களை மூடிக்கொண்டே அழமுடியும். அதனால் நிராகரிக்கப்பட்டவன் பாக்கியவான், அவனது கண்ணீர் யாருக்கும் தெரிவதில்லை.

கடிதம் இரண்டு

அன்புள்ள மாயா

இன்றைய யுகத்தின் காலைப்பொழுது நீயின்றி விடிந்தது, இரவும் நீயின்றி முடிந்தது. நாளையும் அதைப்போலவே ஒரு சிலுவையின் நாள்.

ஆதி பார்த்திபன்

(2013)

TAGS
Share This