காதலின் முன் பருவம்

காதலின் முன் பருவம்

யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் அதன் சாம்பலிலும் தணலிலும் இருந்து எழுந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் எதிர்கொண்டது இரண்டு வகையான அடிப்படைகளிலான வாழ்வை, ஒன்று, அவர்களது இளமைக் காலம் யுத்தத்தின் ஏதோவொரு பகுதி நினைவைக் கொண்டது. அதே நேரம் அது நடந்து கொண்டிருந்த போது அவர்கள் இளையவர்கள். போர் உக்கிரமாக நிகழ்ந்த நிலத்திற்கு வெளியில் வேறொரு வாழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. உள்ளிருந்தவர்கள் அதன் மிகுதிகளையும் இறுதியையும் ஞாபகக் கிண்ணங்களில் ஏந்தினர். மற்றையவர்கள் வாழ்வின் ஆதார உணர்வுகளின் திசையில் முன்னேகினர்.

இரண்டாவது, அவர்களது வாசிப்பும் இலக்கிய உரையாடல்களும் இணையம் உண்டாக்கிய வாய்ப்பும் தமிழ்நாட்டு எழுத்துகளையும் மொழிபெயர்ப்புகளின் ஊடாக உலக இலக்கியங்களையும் வாசிக்க வாய்ப்பளித்தது. நானும் அத்தலைமுறையைச் சேர்ந்தவன். யுத்தத்தின் உக்கிரமல்லாத சாயைகள் விழுந்த யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவன். ஆதி பார்த்திபன் அக் காலகட்டத்தையும் சமாந்தர இளம் பருவத்தையும் கொண்டவர். இந்தக் காலம், இன்னொரு வகையான எழுத்து முறையையும் நம்பிக்கைகளையும் உரையாடித் தீவிரமாகத் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டது.

அவரும் நானும் உயர்தரம் படித்ததற்குப் பின்னர் ஒன்றாக இலக்கியமும் கவிதைகளும் கதைத்துக் கொண்டு, கூட்டங்களும் புத்தகங்களும் எனத் தீவிரம் கொண்டு அலைந்தவர்கள். அவரது இயல்பு தீவிரம் கொண்டது, மனிதர்களையும் சமூகத்தையும் அவர் அப்பாவித்தனமாக அணுகுவதில்லை. அதன் நம்பிக்கையின்மையுடன் மோதிக்கொண்டேயிருப்பார். அவற்றின் போலித்தனங்களை, வாழ்வை என்னவாக ஆக்கிக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம் என்பதில் கூருணர்வுடன் எதிர்வினையாற்றியபடி இருப்பார். நெருங்குபவர்களுடனேயே கதைப்பார். அவரது இயல்பை இங்கு அளிக்கக் காரணம், அது அவரின் கவிதையெனவும் ஆகியிருக்கிறது என்பதாற் தான். 2012 களின் பின் அவர் தீவிரம் கொண்டு இலக்கிய ஆக்கங்களில் ஈடுபட்டார். அவை புதிதான ஒரு சொல் முறையையும், இசையையும் ஈழத்தமிழ்ப்பரப்பில் உண்டாக்கியது.

அவை வாழ்வின் உணர்ச்சிகரமான காதலின் முன் பருவ உறவின் நீளத்தைப் பலநூறு வரிகளாக்கியது. ஏராளமாக எழுதித் தள்ளினார். அவரது வாழ்வும் நிலையற்று அலைந்து கொண்டேயிருந்தது, அதன் சரிவான பள்ளங்களைக் கவிதைகளை ஊன்றி நடந்து வந்தார். மனிதர்கள் மீதான அன்பும் நம்பிக்கையும், அன்பற்ற நிலையும் நம்பிக்கையின்மையும் அவரது கவிதைகளிலும் புனைவுகளிலும் ஊடாடிக் கொண்டேயிருக்கும். அவர் பின் வந்த நாட்களில் எழுதுவது குறைந்து போனது. அண்மையில் ஒரு உரையாடலில் இப்ப எழுத வருதில்லை என்று சொன்னார். அவர் தனது மொழியையும் மனதையும் தொடர்ந்து தக்க வைக்கவேண்டுமென விரும்புகிறேன்.

(ஆதி பார்த்திபன்)

அவர் பத்து வருடங்களுக்கு முன்னரே அவரது தனிக்குரலை அடையாளம் கண்டு கொண்டார். தொடர்ந்து எழுதி முன் செல்லக் கூடிய நுட்பங்கள் வாய்க்கபெற்றவர். வாழ்வை நேரிடையாக எதிர் கொள்ளும் தோறும் அது கவிதையையோ புனைவையோ உருவாக்கியளிக்கும். அதிலிருந்து வேறொன்றாக எங்களைக் கற்பனை செய்து கொள்வதும் விலகிச் செல்தலும் பல எழுத்தாளர்களின் வாழ்வில் நடந்திருப்பவை. அதே நேரம் சிறிது காலத்தின் பின் தன்னை மூடியிருக்கும் புறவுலலை உரித்துக் கொண்டு, உண்மையின் வெளிச்சத்தில் நிர்வாணமாக நிற்கும் கலையை ஆக்கியவர்களும் உண்டு.

ஆதி பார்த்திபனின் முன் பருவத்துக் கவிதைகள் இவை. அவரது எழுத்துக்கள் மீது வாசக கவனம் நிகழ்த்தப்பட வேண்டும். அவர் தொடர்ந்து தீவிரமாக வாழவும் எழுதவும் வேண்டும்.

*

கூடு திரும்புதல்

இலையுதிர்காலத்துப் பறவையைப்போல்
திரும்பினாய்
கிளைகள் கறுத்து பூமியின் தளர்ந்த நரம்பெனவே
நெளிந்தவுன் கூடு நான்
ஏதோவொரு வரலாற்றுச்சலிப்புடன்
உனைப்பார்த்தேன்
உலகின் கண்ணீரில் நனைந்த உன்னை
மீண்டும் பார்த்தேன்
உலகின் புன்னகையில் களைத்திருந்த உன்னை- மீண்டும் மீண்டும்
மஞ்சள் பழுத்து இலைகள் உதிர
வேர்கள் பிளந்த
மரம்போல யாருமே கவனிக்காதவுன்
மரத்தின் சொந்தக்கூடென இருந்தேன்
நான் உனது கூடென அறிந்து நீ
இலையுதிர் காலத்தில் திரும்பினாய்
வசந்தத்தை கொண்டாடிக்களைத்தவென்
கோடான கோடிப்பறவைகள் எனைவிட்டு விலகின
சிலமுட்டைகள் உயிர்பெற்றும்
சிலது உடைந்து சிதறுற்றும் – ஆனாலும் ஒரு கூடெனும் திமிரெனக்கு
இருந்தும்
பறவைகளின்றிய என்னை கூடென்பதில் தயக்கம் – நீ இலையுதிர்காலத்திலென் தனிமையுணர்ந்து திரும்பினாய்
கண்ணீருணர்ந்தவென்
ஆதிப்பறவையே வா
ஒரு வானம் ஒரு மரம் மிச்சமுண்டு.

*

பல்லி

நெருங்குதல் எனும் பல்லியின் மௌனம்
விலகாமல் இருக்கிறது
சுவற்றில் சுவட்டை ஒட்டியபடி
துடிக்கிறது பல்லி
விழியோ பெருங்காமம்
அன்பே என் அன்பே
விழிகள் முயங்கிக்கொள்ள
இச் இச்சென்ற குரலை அறைநெடுக
விகசிக்கிறது என் பல்லி
வேதனை பெருத்த நடையுடன்- எனது
உச்சந்தலையிலோ தோள்களிலோ
மார்பினிலோ
தொடைப்பரப்பிலே
சகுனமென விழும் பல்லி
இரவைப் பிழியும்
தீப்பொறியென உருவரியும்
அன்பே என் அன்பே
இச்செனும் குரலே நெடுங்காமம்

*

பிரியமற்ற வெளி

பிரார்தனைகளோ கருணையின் கடைசியிருப்புகளோவற்ற
கூட்டைவிட்டு எடுத்தாகிவிட்டது ஒரு முட்டையை -கோதுகழன்று பிரமாண்டமாய் வளரும்
சிறகற்ற தனிப்பறவை வெறுப்பு
அதுவதன் நம்பிக்கையின்மையை துரோகத்தை ஏமாற்றுதலைக் கொண்டு பறக்கும்
எனது பறவைகளே கூடு திரும்புங்கள்
ஒளியற்றது உறவுகளற்ற பூமி – இருந்தும்
அழியாது இவ்வுலகு
பறவைகளே! அன்பின் சிறகிருந்தும் அனாதையானது காலம்
வானம் தனிப்பது மழை
ஆறு கடல் ஆழி பிரியமற்றவெளி
கண்ணீர் பொதுத்திரவம் -வாழ்தல் என்பதோ வலிகளின் ஞானம்
நேசமற்றது என் பறவை -ஆயினும்
அன்பின் இறுதித் தானியத்தையும் எனது
வளர்ப்புப் பறவைகளுக்கே எறிகின்றேன்
கருணையின் கடைசித்தானியமுமற்றது பசி
பறவைகளே கண்ணீரே ஞானம்

*

பச்சையவிரல் தொடுகை

கடந்த முத்தங்களின் ஒவ்வொரு திசுக்களிலும் கழன்று போகின்றது
பிரபஞ்சநிழல் – பின்வரையின் மஞ்சள்நிறவொளியிலிருந்து
எச்சில் பிசுக்கை மெல்ல நகர்த்தியிறங்கும்
புழுவைப்போல மெல்ல எனது
அந்தரத்தனிமையில் இறங்குகிறது
உன் ஞாபகப்புடகம்
உன் பச்சையவிரல் தொடுகையின் பின் களைத்துப்போயிருக்கின்றது
திசுக்களின் புத்துயிர்ப்பு
உச்சந்தலையின் ஞானத்துவாரம் வழி – அல்லது
பெருவிரல்களின் நகக்கணுக்கள் வழி
ஏறிக்கொண்டிருக்கிறது
உன்னைப்பற்றிய புரை
தாடிநரையில் அல்லது அந்திமகால நோய்ச்சளியில் காய்ந்துபோயிருக்கிறது
உன் பால்யகாலத்தின் நினைவுப்பாசி…

*

உன்னை இழந்த கோடை

தனிமையின் வெப்பம் ஒரு செதில் போல
ஒட்டியுலர நீ கோடையைக் கடந்தாய்
அல்லது கோடையில் கடந்தாய்
நரம்புகளினுள் ஊசிதுளைக்கும்
ஒற்றைக்கோடை – பிரிந்தேன்
நிராகரிப்புகள் அதிகமாகி உனை கைவிட்டுப்பிரிந்தேன்
பிரியும் போதே கோடையெனைச் சுட்டது – கோடை என்பது சுடும் உண்மை
பிரிந்தேன் பிரபஞ்சமுருக
கோடையென்பதொரு அவசியான பொய் – மீண்டும் மெல்ல
அழைக்காமல் அழைத்தாய்
இருந்தும் உன் நிராகரிப்பில் சிறு திசுக்கள் எரிந்ததுண்மை – பிரிந்தேன்
வானம் அழுதும் ஓயாத கோடை
எனை முண்டி விழுங்கக் கசிந்துலர்ந்தேன்- அன்பே பிரிவு என்பது
கோடையின் தன்மை
எனை நீ மறுத்தாயெனப் பிரிந்தேன்
நீயற்றபின் எனைப் பார்த்து
யாருமே கோடையில் பிரிவதில்லை.

TAGS
Share This