நுதம்பும் சேறிடை மனக்கேணியில்

நுதம்பும் சேறிடை மனக்கேணியில்

1980களின் பின்னர் உருவாகி வந்த பெண்ணிய அலை தமிழ் மொழியின் ஆணதிக்க அடுக்குகளை மெல்ல மெல்லக் கரைத்தபடியிருக்கிறது. அரசியல் நுண்ணுணர்வு மிக்க மொழியைப் பெண்கள் உருவாக்கியபடியே வருகிறார்கள். 1990 களின் காலகட்டத்தில் ஒளவை, சிவரமணி, ஊர்வசி, செல்வி, ஆழியாள் போன்றோர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துள் பெண்களின் பாத்திரம் உருக்குலைந்து போக, அதிலிருந்து மாற்றான நோக்குகளைக் கொண்ட உளவமைப்புகளையும் பிரச்சினைகளையும் எழுத்தில் முன் கொணர்ந்தனர். அவை பெரும்போக்கில் எழுந்த தேசிய விடுதலை என்ற இயக்கங்களின் அராஜகப் போக்குகள், உட்கொலைகள், சகோதரப்படுகொலைகள், விமர்சனமற்ற அதிகார மையங்களாக அவை ஆகி வந்தமையின் சலிப்பினதும் ஏமாற்றத்தினதும் சொற்களாக உறைந்து எங்களின் முன் நிற்கின்றன.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வெளிவந்த கற்பகம் யசோதர, யாழினி ஆகியோரின் தொகுப்புகள். விடுதலையின் பெயரில் நிகழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் மனவமைப்பு மாற்றங்களையும் உளவடுக்களின் காரணங்களையும் தீவிரமாகவும் கடுமையாகவும் விமர்சித்தன. அவர்களின் மொழி படபடவென வெடித்துச் சீறும் தன்மை மிக்கவை. தனது சொந்த மக்களுக்குள் நிகழ்ந்த வன்முறைகளைப் பச்சையான மொழியில் எதிர்கொண்டவை. யுத்தத்தை நிராகரிப்பவை. அதன் உள்ளடுக்குகளைக் குலைப்பவை. அரச வன்முறைகளின் அநியாயங்களை உரத்துப் பேசுபவை.

இதன் பின்னர் உருவாகி வந்த புதிய தலைமுறைக் கவிஞர்களில் பிரியாந்தியின் குரல், மனிதர்களின் மீதாக நடாத்தப்பட்ட படுகொலைகளினதும் வன்முறைகளினதும் சாரமெனத் திரண்டது. பா. அகிலனிடம் இருந்த உக்கிரமான சந்தம் மிக்க மொழியின் நீட்சியும் இன்னொன்றுமாக பிரியாந்தியின் மொழி உருக்கொண்டது. நிலாந்தனது கவிதைகளின் வெளிப்பாட்டுத் தன்மையும் சொற்களும் கூட இவரது பின்னைய கவிதைகளில் வெளிப்படுகிறது.

மக்கள் என்ற திரளின் குரலாக அவர் தன்னைச் சாரப்படுத்திக் கொள்கிறார். அதே நேரம் உண்மை என்றும் நம்பிக்கைகள் என்பவையும் வழங்கிய கனவுகளினால் கைவிடப்பட்ட குழந்தைகளினதும் பெண்களினதும் அந்தராத்மாவின் ஒலியாகவும் அவரது மொழி தன்னை வெளிப்படுத்தும் போது அவை உண்மையின் ஒளிகொண்ட கவிதைகளாகின்றன். பிரியாந்தியின் கவிதைகள் ஈழத்தமிழ்ச் சூழலில் உள்ள பிற கவிஞர்களின் மொழியிலிருந்து அதன் நுட்பமான சொற் தேர்வுகளாலும் நீரோடையென உணர்வுகள் அசையும் உள்ளடுக்குகளாலும் வித்தியாசப்படுபவை.

மானுட உணர்வுகளின் அகச் சிக்கல்களை அவர் குறைவாகவே எழுதியிருக்கிறார். அல்லது குறைவாகவே அச்சாகியோ வெளியிடப்பட்டோ இருக்கிறது. மயான காண்டம் – பிந்திய பதிப்பு என்ற பிரியாந்தியின் கவிதையொன்றின் தலைப்புடன் ஆகாயம் பதிப்பகம், யுத்தத்திற்குப் பின்னர் எழுத வந்த நான்கு இளம் கவிஞர்களின் கவிதைத் (பிரியாந்தி, கிரிசாந், லிங்கேஸ், கிருபா) தொகுப்பொன்றை வெளியிட்டது. அதில் பிரியாந்தியின் சில கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சில இதழ்களிலும் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. அவரது கவிதை மொழி பா. அகிலனிடமிருந்து கிளைபிரிந்து இன்னொரு வடிவத்தை அடைந்து வருகிறது. அவரது இறுதியாக வெளிவந்த கவிதைகள், உரையாடும் தன்மை வாய்ந்ததாக ஆகியிருக்கிறது. தன்னை மக்கள் கூட்டத்தின் சாரமென ஆக்கிக் கொள்ளும் அவரது சொற்களிம் மனம் அதன் கூட்டு நியாயங்களின் மாபெரும் குமைவெனெப் புகைந்து எரிகின்றது.

(பிரியாந்தி)

*

மயானகாண்டம் – பிந்திய பதிப்பு

மகனே லோகிதாஸ்!
பிணக்காட்டின் சாம்பர் வெளியெங்கும்
பொய்மையின் துகள்கள்

மரணம் கனக்கும் உனதுடலை தாங்கி நிற்கின்றேன்

மனங்கொள்ளாத் துயருடன்
என் காலடியில் முடிந்துபோன பாதையொன்றிலிருந்தே
உன்னைக் கண்டடைந்திருந்தேன்

மூன்று காசுகளையும்
வெள்ளைத்துணி ஒன்றையும் ஈயாத
அவர்களின் இறுதி இரக்கத்தையும் நிராகரித்தாயிற்று

அந்தோ!

வானிலிருந்து இறங்கி வருகிறது
உண்மையின் மெல்லிய இறகொன்று
காற்றில் அந்தரித்தலைந்து
ஈற்றில்
சிதையில் வீழ்ந்து பொசுங்கிற்று
அதுவும்

துரோகத்தின் பசிய நிழல் படர்கிறது
சலித்துப்போன கனவொன்றின்
பழுப்பேறிய பிரதி மீது

இனி
இங்கு நிற்பதில் பயனேதுமில்லை
திரும்பிவிடலாம் நாம்

வரலாற்றின் நீண்ட மௌனத்தை
முன் ஏகிக் கடக்கும் பின்னொரு நாளில்
அவர்கள் அறியட்டும்
எந்த உண்மையும் உன்னை உயிர்ப்பிக்கவில்லை என்பதை.

*

அநாமிகா!

(கடவுளால் கைவிடப்பட்டவள்)

ஒற்றைத் திவலையில் மூழ்கி மறைந்த
பெரு நகர் ஒன்றிலிருந்து
புதைந்தழிந்த யுகம் ஒன்றை
எடுத்து வந்திருந்தாள்
அநாமிகா

கறுத்தடர்ந்த காடுகளை
சவக்குழியின் பிடி மண்ணை
காயங்களின் ஆழங்களில் நிரவித் தழுவிய ஓலங்களை
சாவின் கால் பற்றி வீழ்ந்தரற்றிய துயர் மொழியை
மாண்ட மகவின் பிணங்கிடந்த துணியொன்றை
குருவிச்சங் கிளையிரண்டை
எடுத்து வந்திருந்தாள்

இரட்சிப்பின் முடிவிலியில்

நின்றாள்
நினைவுலர்ந்த உதடுகளால்
முறுவலித்தாள் வலி ஒழுக
கடந்து போகின்றாள்
தன் பாதமற்ற கால்களால்
மிச்சமிருந்த என் நம்பிக்கையை.

*

ஆயிரமாவது இரவும் அடுத்து வந்த பகலும்

அருவருப்பான புனிதங்களும் தூய காயங்களும்
நுரைத்துத் ததும்பும் மதுக்குவளை
வாழ்வு

விதானத்தில் அப்பிய சித்திரம் போல்வது
கனவு

இன்மைகளின் ஏகாந்தப் பிராந்தியத்தில்
வானமற்று விரிகிறது அகரூப வெளி

நிழலின் ரகஸ்ய இருளில்
ஆடைகளற்று அலைகின்றனர் அகலிகைகள்
பூனைகளின் சப்தமற்ற பாதங்களால்

நாகங்களின் கண்களாலான இரவில்
தவிர்க்கவியலாதபடி
மின்மினியென ஒளிர்கிறது எனது நிர்வாணம்
நுதம்பும் சேறிடை மனக்கேணியில்

ஆயிரமாவது தடவையும்
அதே பழைய சமாதானங்களின் பின்னர்
மறுபடியும்
ஒரு பகல்

கேணியெங்கும் தாமரைகள்.

*

அவர்கள் எமது நினைவிடங்களைச் சேதப்படுத்துகிறார்கள்
அவமதிக்கிறார்கள்
அல்லது
திருடுகிறார்கள்

எமது சுடர்களின் ஒளி அவர்களுக்கு அச்சமூட்டுகின்றது

தாயின் கண்ணீர் அவர்களை
நிலை குலையச் செய்கின்றது

அவயவங்களை இழந்த,
உடலெங்கும் தழும்புகள் கொண்ட எனது மனிதர்களின் முன்
அவர்களின் தலைகள் தாழ்ந்துள்ளன

பிரகடனச் சொற்கள்
அவர்களை நிம்மதியிழக்கச் செய்கின்றன

பதற்றமுற்று
அவர்கள்
அவசரஅவசரமாக எனது நாட்காட்டியின் சில தாள்களைக் கிழித்து
தடயமின்றி அழிக்கிறார்கள்

நானோ
நிதானமாக
மிக நிதானமாக
எனது குழந்தைகளின் பாத்திரங்களை
உப்பற்ற,
எந்தச் சுவையுமற்ற
கஞ்சியினால் நிரப்புகின்றேன்

முடிவுறாத தாகத்தை
அருந்தும் படிக்கு

(2021 May 18)

*

அவர்களின் அரசன்
அல்லது
நவீன துட்டகைமுனு

அவர்கள் தமது யுகபுருஷரை
நந்திக்கடல் தீரத்திலிருந்து மீட்டுவந்தனர்

எல்லாளனின் தலையை
நடுவாகப் பிளந்து
வழிந்த குருதியை பூசி
மன்னன் தனது
குடுமியை முடிந்து கொண்டதாக உடனிருந்த ‘நந்தமித்ர’ கூறினார்

அவர்களின் வரலாற்றில்…
ஒப்பற்ற வீரர்கள் எப்போதும் ‘ருகுணு’வில் இருந்தே வருவதாக
மக்களும் நம்பினர்

ஆயிரமாண்டுத் தவத்தின் பேறென மந்திர உச்சாடனங்களின் முடிவில் தோன்றிய ரட்சகன் என
மக்கள் அவரை கொண்டாடினர்

வெல்ல முடியாத போரை வென்ற புகழ்
தலையின் பின் ஒளிவட்டமானது
முகமெங்கும் வெற்றியின் தேஜஸ்

பட்டாசுகளால் நகர்களை அதிர்வித்து தோற்றவர் வாயில் பாற்சோற்றை திணித்துத் தமது வெற்றியை கொண்டாடினர் மக்கள்

மறுபடி மறுபடி
பட்டாபிஷேகம் செய்வித்து
இறும்பூதெய்தினர்

மன்னர்
பார்க்கும் இடமெங்கும் விகாரைகள் முளைத்தன
தேரர்கள் சிரசில்
கிரீடங்கள் ஒளிர்ந்தன

தசாப்தம் நீண்ட
வேந்தரின் ஆட்சியில்
மூத்தோன் இளையோன்
புதல்வர்கள் இளவல்கள் என அரசரின் குலமோ
கிளைத்துத் தழைத்தது

கஜானா காலியானது
மன்னரின் பெட்டகங்கள் நிறைந்தன

தேசத்தை அவலம் சூழ்ந்தது

மக்கள் அனைத்தின் பொருட்டும் நீண்ட வரிசைகளில் நிறுத்தப்பட்னர்

எங்கும் பசி

பசி
ஒரு நாள் அரண்மனைக் கதவை உடைத்துத் திறந்தது

மக்கள்
தம் மன்னரை
மஞ்சத்திற்கடியிலும்
நிலவறையின் இரகசிய வழிகளிலும் தேடினர்

அவரின்
அங்கவஸ்திரங்களை வீசியும்
ஸ்நானக் கேணியில் குளித்தும் தம் கையாலாகாத அரசனை பரிகசித்தனர்

தோற்றவர் தரப்பின்
பல்லாயிரம் புத்திரர்களை
காணாமலாக்கியும்
நிர்வாணமாக்கியும் கொன்ற
தன் வீரப் புதல்வனைக் காணாது
தேடத்தொடங்கினார்
விஹாரமாதேவி

ஓடி ஒழிந்து கொண்டார்
‘நவீன துஷ்டகைமுனு’

69 இலட்சம் மக்களின்
மன்னாதி மன்னர்.

(2022)

TAGS
Share This