சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும்
(குறிப்பு: எனது எழுத்துக்களுக்கான உரையாடலை இணையத்தளத்தில் மாத்திரமே செய்வேன். சமூக வலைத்தளங்கள் அவற்றைப் பகிர்வதற்கானவை மட்டுமே. வாசகர்கள் தங்கள் பார்வைகளை, கேள்விகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படி அனுப்பி வைக்கப்படாத வேறு எந்த எதிர்வினைகளுக்கும் இனி பதிலளிக்க மாட்டேன்)
வணக்கம் சிவா மாலதி,
பிரியத்துக்குரிய பெண் என்ற புனைவுக்கான கடித பதிலொன்று குறித்த உங்களது அவதானங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
அப்புனைவு எதிர் உரையாடற் தன்மை கொண்டது. அது அவ்வகையான உரையாடலை நோக்கியே எழுந்தது. எந்தவொரு கலையும் முடிவான தீர்வுகளை அளிக்கும் நோக்கம் கொண்டதல்ல. அவை வாசிப்பவரினதோ அல்லது பார்வையாளரினதோ அகத்துடன் ஏதேனுமொரு வகையில் உரையாடலை உருவாக்குபவை. அது நேர் நிலையாகவோ எதிர் நிலையாகவோ கூட இருக்கலாம். அதன் மிகுதிச் சொற்கள் வாசிப்பவரின் மனதிலிருந்து வெளிப்பட்டுத் தன்னுடைய உரையாடலை நிரப்பிக் கொள்கிறது. அது தொடர்பான கேள்வி பதில்கள், அவற்றை இன்னும் நீட்டித்துச் செல்வது. அவற்றை உரையாடலாக்குவது நமது பண்பாட்டுச் சூழலுக்கு அவசியமானது.
வாசகர் கடிதம் 02 இல் உள்ள கேள்விகள் செயற்பாட்டாளர் என்னும் அடையாளத்துடன் சமூகத்தில் இயங்குபவர்கள் சுரண்டல்களில் ஈடுபடுவதை நான் எப்படி அணுகுகிறேன் என்பதை நோக்கியே குவிமையப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், எனது நிலைப்பாடு பற்றி அதிகம் குறிப்பிடாமல் பின்னணிகள் மற்றும் மேலும் கருத்திலெடுக்கப்பட வேண்டிய காரணிகளைச் சுட்டியிருந்தேன். அது தவறான புரிதலை ஏற்படுத்தி விட்டது.
ஒருவரது முற்போக்கு, பிற்போக்கு, வேறு எந்த அடையாளங்களும் பாலியல் அல்லது வேறு எந்த ஒடுக்குமுறையிலும் கணிப்பிடுவதற்கான அளவுகோலாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. எந்தப் பிரிவிலும் எந்தவிதமான சுரண்டல்களும் நிகழ்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த அடையாளங்களை அப்பாவித்தனமாக அணுகத் தேவையில்லை என்று எனது பதிலில் சொல்லியிருக்கிறேன். இப்பிரச்சனைகளின் பின்னணிகளைத் தொகுத்துக் கொள்ள விரும்பினேன். அதுவே நான் பதிலளிக்க விரும்பும் முறை.
எந்தவொரு சமூகச் சிக்கலினதும் ஒரேயொரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் அதை விளங்கிக் கொள்ளவோ அல்லது நிலைப்பாடுகளை எடுக்கவோ கூடாது. அதன் பின்னணியிலுள்ள பாதிக்கப்பட்டவர்களின் நலன்களும் உளவமைப்பும் கருத்திலெடுக்கப்பட வேண்டியவை. எனது பதில் சுருக்கமாக இருந்தமையால் எனது பார்வைகள் குழப்பமான தோற்றத்தை அளித்திருக்கக் கூடும். அதற்காக வருந்துகிறேன். அக்கேள்விகளுக்கான நிலைப்பாட்டை இன்னும் விரிவாகவே வழங்கியிருக்கலாம்.
செயற்பாட்டாளரோ அல்லது வேறு யாருமோ சுரண்டலில் ஈடுபடும் போது அவர்களை வெளிப்படுத்துவது தேவையானது. அவர்கள் மீளவும் அவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும் அக் குற்றங்கள் பற்றிய பொது விழிப்பும் உரையாடலும் உருவாக்கப்படுவதற்கு அவர்கள் வெளிப்படுத்தப்படுவது அவசியமானது. எனது கடந்த காலச் செயற்பாடுகளில் சிலரது பாலியல் குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய போது அவை தொடர்பில் எழுதி எனது கண்டனங்களை வெளியிட்டிருக்கிறேன்.
எனது நண்பர்களும் அதே வகையான குற்றங்களைச் செய்திருக்கிறார்கள். அவற்றை வெளிப்படுத்தாமல் நான் அவர்களைக் காப்பாற்றுகிறேன் என நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். எனது ஆண் மற்றும் பெண் நண்பர்கள் பாலியல் சுரண்டல்களில் ஈடுபடுவதாக அல்லது உறவுச் சிக்கல்களில் இருப்பதாக அறியும் பொழுது இரண்டு வகையில் அவற்றைக் கையாண்டிருக்கிறேன். (ஒரு தெளிவுக்காக, சமூகத்தில் ஆண்களே அதிகமான சுரண்டல்களில் ஈடுபடுகிறார்கள். பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவு)
ஒன்று, குறித்த நபருடன் அவை தொடர்பில் விளக்கங்கள் கேட்பது, அவர் ஏற்றுக்கொள்ளும் பொழுது, அவை தவறு, மீள நிகழ்த்தப்படக் கூடாது என்பதை உறுதியாகக் கூறியிருக்கிறேன். அவர் ஏற்றுக்கொள்ளாத பட்சத்திலோ அல்லது அவற்றைத் தொடர்ந்து செய்வதை நான் அறியும் பொழுதோ, அவர்களுடனான நட்பிலிருந்து விலகுவேன். இவ்வாறாக எழும் இத்தகைய பாலியல் சுரண்டல் நிலைகளைப் பொதுவில் கொண்டுவருவேன்.
இரண்டாவது, பாலியல் ரீதியாக சுரண்டப்படும் நபருக்கு சுரண்டுபவரின் நடத்தை தொடர்பில் அறியத் தருவேன். எனது நண்பர்கள் செய்த சுரண்டலென்பது, ஒருவருடன் காதலுறவில் இருக்கும் பொழுது சம காலத்தில் வேறு பெண்களுடன் அல்லது ஆண்களுடன் தொடர்புகள் என்பதே. அதன்போது, ஏமாற்றப்படுபவரிடம் சுரண்டுபவர் பற்றி நானறிந்ததைச் சொல்லியிருக்கிறேன். பாதிக்கப்படும் பெண்கள் அல்லது ஆண்கள் அதனை எவ்விதம் கையாள விரும்புகிறார்கள் என்பதே எனது முதன்மையான கரிசனை. அவர்கள் உறவிலிருந்து விலகுவதும் அவருடன் தொடர்வதும் அவர்களின் தெரிவு. ஆனால் சுரண்டப்பட்டமை பொதுவெளியில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் விரும்புமிடத்து அதைத் தாரளமாகச் செய்யலாம் என்றே கூறியிருக்கிறேன்.
அத்தகைய நண்பர்களுடன் தொடர்ந்து நட்பில் இருப்பது அவர்களைக் காப்பாற்றுவது என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. என்னுடைய நண்பர்களில் பலரிடமும் பலவகையான குறைபாடுகள் உள்ளன. அவர்களுடனான உறவின் தன்மையில் மாற்றங்களைக் கொண்டிருக்கிறேன். ஆனால் நட்பு நீங்குவதில்லை. அவர்கள் தமது குறைகளிலிருந்து மீள வழியமைப்பதும் அதற்கென அவர்களுடன் தொடர்பிலிருப்பதும் ஒரு பண்பாட்டு விழுமியம். அவர்களைத் தொடர் குற்றவாளிகளாக நான் உணரும் போது அவர்களை வெளிப்படையாகக் கண்டிக்கத் தயங்கப்போவதில்லை. அல்லது யாரேனும் எனக்கு இவ்விதம் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று அறியத்தரும் பொழுது அதற்குண்டான தீர்வுகளைப் பெற என்னாலான உதவிகளைச் செய்யப் பின்னிற்கப் போவதில்லை. சுரண்டலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட ரீதியிலான தண்டனைகள் வழங்க வாய்ப்பிருப்பின் அவை நோக்கி நாங்கள் குரல் கொடுக்க வேண்டும். சுரண்டலினால் பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்றே நாங்கள் சுரண்டலில் ஈடுபட்டவரின் தரப்பை எதிர்கொள்ள வேண்டும். இதில் செயற்பாட்டாளர் சாதாரண மனிதர் பிரிப்பெல்லாம் தேவையில்லை.
எனது அவதானிப்பில் பாலியல் அல்லது பொருளாதரச் சுரண்டல்களில் ஈடுபடுவர்கள் எத்தகைய மனநிலைகளைக் கொண்டு இயங்குகிறார்கள், பெரும்பான்மையான ஆண் மனநிலை எப்படிப் பெண்களைச் சுரண்டும் இயல்பாக்கத்தை அடைகிறது என்பவை குறித்துத்தான் அப்புனைவிலிருந்து உரையாட விரும்பினேன். ஆனால் பாதிக்கப்பட்ட ஒருவர் முன்வந்து பேசும் பொழுது, நாம் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று தார்மீக ஆதரவுடனான செவிசாய்ப்பை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் நியாயங்களைப் பேசியாக வேண்டும். அவர்களின் நியாயமே அந்த நேரத்தில் முதன்மையாகக் கவனப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் அதே சிக்கலின் எதிர்முனையில் இருக்கும் சுரண்டல் செய்பவர்கள் எவ்விதம் உருவாகுகிறார்கள், அவர்களின் உளவமைப்பை எவ்விதம் சமூகம் உருவாக்குகிறது என்பதை உரையாடுவதற்காக புனைவின் வாசிப்புடன் அக்கேள்வியை இணைத்து பதிலளிப்பைச் செய்திருந்தேன். பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னிலையை வெளிப்படுத்தும் நேரமொன்றில் நான் அப்பதிலை எழுதியிருக்கவில்லை, ஒரு சாதாரண நேரத்திலேயே இத்தகைய சிக்கல்கள் உரையாடப்படும் போது கவனிக்கப்பட வேண்டியவை பற்றி எழுதினேன். ஒருவர் தன்னிலையை முன்வைக்கும் போது நான் இப்படி எழுதியிருந்தால் அது திசை திருப்பல் என்று தான் நானும் பொருள் கொள்வேன். அப்புனைவை எனது தளத்தில் எழுதியமை தான் மீளவும் இவ்வுரையாடலை உண்டாக்கியிருக்கிறது. நான் இவற்றை மறைக்க முயன்றிருந்தால் இலக்கியம் மட்டுமே எழுதிக்கொண்டு, இவற்றை இலகுவாகவே தவிர்த்திருக்கலாம்.
எனது பிரதியில் அதீதங்களும் பிறழ்வுகளும் எப்படி உருவாகி இயல்பாக்கம் அடைகின்றன என்ற ஆண் மையச் சிக்கலின் ஒரு பகுதி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நான் அத்தகைய உளச்சிக்கல்கள் நோக்கியே எனது உரையாடலைக் கவனப்படுத்தியிருந்தேன்.
அப்புனைவுக்கான கேள்விகள் வந்த பொழுது, எனது உரையாடல் வெளிக்குள் அக்கேள்விகளை இணைப்பதே நான் செய்ய விரும்பியது. நான் ஒரு எழுத்தாளர், எனது தளத்தில் உரையாடல் எதை நோக்கி நகர வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன். எனது பதிலில் போதாமைகள் இருப்பதாகக் கருதினால் கேள்விகளை அனுப்பியவர்கள் மேற்கொண்டு உரையாடுவார்கள். ஆகவே, அப்பதில்கள் சுரண்டலை இயல்பாக்கம் செய்வதோ, நியாயம் கற்பிப்பதென்றோ கருதுவது இலக்கிய வாசிப்பு, விவாதம் பற்றிய தொடக்க நிலை வாசகருக்குள்ள குழப்பங்கள். இலக்கியம், பண்பாடு போன்ற அறிவுத் தளங்களின் உரையாடல்களில் உள்ள சாமானியர், இலக்கிய வாசகர் என்ற பிரிவுகள், அறிவுத் தளம் சார்ந்த உரையாடல்களுக்குத் தேவையானவை. அவை எந்த அறிவுத் தளமும் கோரக்கூடிய பிரிவுகள்.
*
பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமல்ல, சுரண்டல்காரர்களும் மனிதர்களாக மீள வாழ வழியமைத்துத் தரும் பண்படுத்தலை நாங்கள் உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் அவ்விதம் சுரண்டல்காரர்கள் உருவாகாமல் இருக்க அல்லது பெண்கள் இந்த தந்திரங்கள் அல்லது நுட்பங்களை அறிந்துகொள்ள இத்தகைய உரையாடல்கள் அவசியம். அதற்கான உரையாடல்களுக்கான புத்தகங்கள் தொகுக்கப்பட வேண்டும். கலையும் இலக்கியமும் அதற்கான கருவிகளில் ஒன்று எனும் அளவில் எனது பார்வைகளைத் தொகுத்து முன்வைப்பதே எனது வழி.
வேறொருவர் வேறொரு கருவியின் மூலம் அவ்வுரையாடலை முன் கொண்டு செல்லலாம். எனக்கு சட்ட ரீதியிலான தண்டனைகளோ கவுன்சிலிங் போன்றவையோ உளத்தை எவ்வளவு குணப்படுத்த முடியும் என்பதில் இன்னமும் வலுவான சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால் உடனடியாகவும் நடைமுறையிலும் இருக்கக் கூடிய வழிகள் அவை. அவற்றுள் குறைபாடுகள் இருக்கின்றன என்பதற்காக அவை தேவையில்லையென்ற முடிவுக்கு வர இயலாது. கலையும் இலக்கியமும் பண்பாட்டுச் செயற்தளங்களும் கூட குறைபாடுகள் கொண்டவையே. அங்கும் குற்றத்திலீடுபடுபவர்கள் மனமாற்றம் அடையும் அளவு குறைவானது. ஆனால் அதுவே பண்பாட்டின் வழி. முன்னையவை நிர்வாக முறைகள், அவை புறவயமான பாதுகாப்பை அல்லது நெருக்கீட்டை ஏற்படுத்தும். அகவயமான மாற்றங்களுக்கான தொடக்கம் பண்பாட்டிலேயே நிகழ முடியும். மேம்பட்ட பண்பாட்டை உருவாக்க பண்பாட்டின் உள்ளீடுகள் உருவாகி வந்த விதத்தினைத் தொகுத்துக் கொண்டே முன்னகர முடியும்.
*
பாலியல் சுரண்டல்களுக்கு முற்போக்கோ பிற்போக்கோ, சாதாரணமானவர் செயற்பாட்டாளர் என்றோ வேறுபாடு இருப்பதில்லை என்பதே எனது அனுபவ அறிவு. இரண்டையும் வேறு தளங்களில் வைத்து உரையாட ஒருவர் விரும்புவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் நான் ஒருவர் முற்போக்காகப் பேசுகிறார், செயற்பாட்டாளர் என்கிறார் என்பதற்காக அவர் சுரண்டலற்றவராக இருப்பார் என்று எண்ணுவதில்லை. அனைவரையும் அவர்கள் நானறியாத வெளியில் வேறொன்றாக இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கும் என்று கருதியே பார்க்கிறேன். அப்படியான தனிநபர் மதிப்பீடு மிகையானது என்பதே என் கருத்து. பெண்கள் இந்தத் தோற்ற மயக்கங்களைப் பொறுத்த வரை யாரையும் அப்பாவித்தனமாக அணுகத் தேவையில்லை என எனது பதிலில் சொல்லியுமிருக்கிறேன். அப்படி அணுகத் தேவையில்லாத காலம் இதுவென்று நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். நானும் உடன்படுகிறேன்.
குற்றங்களை இழைப்பவர்களைப் பாதுகாப்பதற்காக நான் இவற்றை எழுதுகிறேன் என்பது எதிர்வினையின் சாராம்சமான நிலைப்பாடு. குற்றங்கள் எப்படி நிகழ்கின்றன, ஒருவருக்குள் குற்றங்களுக்கான மனநிலைகள் எப்படி உருவாகின்றன என்பதை எழுதுவது அவர்கள் மேல் எந்த வகையிலும் இரக்கத்தையோ பாதுகாப்பையோ அளித்துவிடாது. அது பாலியல் சுரண்டல்கள் நிறைந்து வழிகிற சமூகமாக நாங்கள் ஆகியிருக்கிறோம் என்பதைத் தொகுத்துக் கொண்டே நாங்கள் அந்த அகச்சிக்கல்கள் நீங்கி முன்னகரும் சமூகத்தை உருவாக்கும் பணியின் விரிவைக் குறிப்பதற்காக சொல்லப்பட்டிருப்பது.
பாலியல் வக்கிரங்களை உள்ளீர்த்து தமிழ்ச்சமூகம் மாற்றத்திற்குட்பட வேண்டும் என்பதாக எனது பார்வை அமைந்திருக்கிறதா என்று கேட்டிருந்தீர்கள். பாலியல் அதீதங்களோ பிறழ்வுகளோ எவ்விதம் இயல்பாக்கம் செய்யப்பட்டிருப்பது என்பதை உரையாடி அவை நீங்கி மேம்பட்ட மனிதர்களாக ஆக வேண்டியதில் உள்ள மனத்தடைகள் பற்றியும் உள நிலமைகள் பற்றியும் அவற்றை மாற்றுவது பற்றியும் நாங்கள் தொடர்ந்து உரையாட வேண்டும் என்பதே எனது பார்வை. அது எல்லாத் தரப்பிலும் நிகழ வேண்டும். அதற்கான தளத்தை நானும் கொண்டிருக்கிறேன். பலரும் தமது பார்வைகளைத் தொகுத்து முன்வைக்க வேண்டும் என்பதை அப்பதிலிலேயே சொல்லியுமிருக்கிறேன். இது ஒரு பார்வையின் முடிவல்ல. அதற்கு கூட்டுப் பார்வைகள் தேவை என்பதையும் கூறியிருக்கிறேன்.
இருவருக்கிடையிலோ பலருக்கிடையிலோ நிகழும் காதல்களோ உறவுச் சிக்கல்களோ மிக விரிவான வித்தியாசமான வாழ்வுகளின் அனுபவங்களைக் கொண்டவை. ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட அகச் சிக்கலை அது மட்டுமேயானதாக நான் சுருக்கிக் கொள்கிறேன் என்ற உங்களுடைய பார்வை தவறு. ஒரு பதிலுக்குண்டான எல்லைகள் உண்டு. ஒரு கடித பதிலில் அனைத்துப் பிரச்சினைகளையும் உரையாட இயலாது. அதில் உதாரணத்திற்கு சிலவற்றை எடுத்துக் கொண்டு பிறருடைய கருத்துகளையும் கொண்டு இவற்றை உரையாடும் ஒரு புத்தகத்தினை ஆக்கலாம். அதைக் கூட ஒரு உரையாடலுக்கான மூலக் கருவி என்னும் அளவிலேயே சொல்லியிருக்கிறேன். எங்கிருந்து இந்த உரையாடலுக்கான தளங்களை உருவாக்கலாம் என்பதற்கான எனது சில பரிந்துரைகளையே நான் முன்வைத்திருக்கிறேன்.
எல்லாவித ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள். அப்படிச் சொல்லிக் கொள்பவர்கள் எவரும் அப்படி முழுமையில் அல்லது தூய நிலையில் சகல ஒடுக்குமுறைக்குமெதிராக இருக்கிறார்களா? நாங்கள் நிகர் வாழ்வின் நிலையிலிருந்தே இலட்சியவாத உருவகங்களை நோக்கி நகர முடியும். அப்படிச் சொல்பவர்களில் எத்தனை பேர் ஏதாவதொரு வகையில் சுரண்டலற்றவர்கள் என்று நாம் கொள்ள முடியுமா? நான் ஒருபோதும் அப்படியான ஒரு முன்முடிவைப் பரிந்துரை செய்ய மாட்டேன். இலட்சியவாதம் ஓர் இறுதி இலக்கு. அதை அடையும் வழியிலுள்ள சிக்கல்களையும் உரையாட வேண்டும். அதன் இருளான பிறழ்வான பகுதிகளைச் சமூக அச்சுறுத்தலின் மூலமோ பயத்தின் மூலமோ கட்டுப்படுத்த மட்டுமே முடியுமே தவிர அவை உண்மையிலேயே மாறுதலடைந்து மனிதர்கள் குற்றங்களிலிருந்து நீங்கி வாழ முடியும் எல்லைகளை நோக்கிப் போக வேண்டுமானால், ஆணுலகின் அக அழுக்குகளும் அவற்றுக்கான காரணங்களும் பின்னணிகளும் உரையாடப்பட வேண்டும். அவை மனந்திறந்து உரையாடப்படுவதற்கான வாய்ப்புகள் நேர் வாழ்க்கையில் என்னவாக இருக்கிறது? அப்படியானவற்றை உரையாட வேண்டும் என்று சொல்லும் என்னை ஆணாதிக்கத்தின் ஏகப்பிரதிநிதியாகச் சித்தரிப்பீர்கள் என்றால், உண்மையில் பிறழ்வை உரையாடித் தன்னை மீட்டுக் கொள்ள விரும்பும் ஒருவர் எப்படித் தன்னை வெளிப்படுத்த முடியும்?
பாதிக்கப்படுபவர்கள் குறித்து நாங்கள் எப்படி நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது பற்றி ஓரளவு உரையாடல்களும் வழிமுறைகளும் உருவாகியிருக்கும் இக்காலத்தில், பாதிப்பை நிகழ்த்தக் கூடியவர்களோ அல்லது அதற்கான ஏதோவொரு மனநிலையைக் கொண்டவர்களோ அதிலிருந்து விடுபட்டு மீள்வதற்கான உரையாடலுக்கான தொடக்கங்கள் மிகக் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது.
காமம் விலங்குத் தன்மை கொண்டது என்பதுடன் அது ஓர் ஆதார உணர்ச்சிகளில் ஒன்றெனவும் சொல்லியிருக்கிறேன். பசி, தாகம், காமம் போன்ற ஆதார உணர்ச்சிகளை ஏதாவதொரு வகையில் ஒழுங்குபடுத்தியே மனித சமூகம் வளர்ந்திருக்கிறது. ஆனால் அடிப்படையில் அவை விலங்குணர்ச்சிகள். அதைக் கட்டுப்படுத்த விரும்பும் ஒவ்வொரு தடவையும் அவை மிக வலிமையாகத் தனது தேவையை நிறைவேற்றும் வழிகளைக் கண்டடையும். காதல் என்பது அடிப்படையில் காமத்தை முறைப்படுத்த வாழ்வினாலும் கலைகளினாலும் ஆக்கியளிக்கப்பட ஓர் உணர்ச்சி. அது போதாமையுடையது. காமம் என்ற விலங்குணர்ச்சிக்கும் காதல் என்ற மானுட உணர்ச்சிக்குமிடையில் உள்ள இடைவிடாத போராட்டமே பாலியல் பிறழ்வுகள் மற்றும் சுரண்டல்களுக்கான பின்னணியில் இருக்கும் உளவமைப்பு.
இரண்டு அவதானிப்புகளை எடுத்துக் கொள்வோம். முதலாவது அவதானிப்பு: பெரும்பாலான இணைத் தேர்வின் போது வெல்லப்பட முடியாத இன்னொருவரே பெரும்பாலானாவர்களை ஈர்க்கிறார்கள். அறிவோ அல்லது உடல்சார்ந்த கவர்ச்சியோ பொருளாதார மதிப்பீடுகளோ எதுவாகவும் இருக்கலாம். எதைக் கொண்டு ஒருவரில் ஈர்ப்படைகிறார்கள் என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும். உரையாடி, நட்பிலிருந்து, ஒருவரை ஒருவர் தங்கள் அக நிர்வாணத்தினை வெளிப்படுத்தியா காதல் நிகழ்கிறது, இல்லை. அதற்கான சமூகச் சூழல்கள் இருப்பதில்லை. காதலிலோ அல்லது எந்தவொரு உறவிலோ, பொது நலன் என்பது செயற்படுவதில்லை. எந்த உறவும் அடிப்படையில் ஒரு தன்னலம். அந்தத் தன்னலம் கெடுதியானது அல்ல.
காதலுக்கு ஏதாவதொரு ஈர்ப்பின் விசை செயற்பட்டாக வேண்டியிருக்கிறது. அது ஆதியிலிருந்து பெருமளவுக்கு மாறவில்லை என்றே தோன்றுகிறது. தன்னை வசீகரமாக முன் வைத்துக் கொள்ளும் ஆணோ பெண்ணோ, பலரையும் கவர்கிறார்கள். அந்தக் கவர்ச்சியான நபரை வெல்லும் போது, வெல்பவரின் தன்னகங்காரம் திருப்தியடைகிறது.
அதன் தொடக்கம் தனக்குள் இருக்கும் அகங்காரத்தை திருப்திப்படுத்தவே முனைகிறது. ஆனால் அத்தகைய கவர்ச்சி கொண்டவர்களில், குறிப்பாக ஆண்கள் தமக்கிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பாலியல் ஒழுக்கங்களை உடன்பாடுகளை அதிகமும் மீறுகிறார்கள். அது அடிப்படையான சந்தேகத்தை உறவுக்குள் நுழைக்கும். நம் அகம் அறியும் அத்தகைய ஈர்ப்புள்ளவர்கள் உருவாக்கக் கூடிய விளைவுகளை. ஆகவே முதலில் வென்று உருவாகும் அகத்திருப்தி பின்னர் சந்தேகமென வளர்ந்து நீளும். அதில் அந்த ஆணோ பெண்ணோ உறவில் பிளவுகளை உண்டாக்கிக் கொண்டு வெளியேறும் போது உண்டாகுவது, தன் ஆணவம் வீழ்ந்து அழிவதின் தொடக்கம். தன்னகங்காரம் புண்படும் ஒலி.
ஆணுக்கோ பெண்ணுக்கோ தனது இணையைத் தேர்ந்தெடுப்பதில் செல்வாக்குச் செலுத்தும் மனநிலைகள் பற்றியது இரண்டாவது அவதானிப்பு. முன்னிளமையில் இணையைத் தேர்ந்தெடுக்கும் போது மிகச்சிறு தரப்பினரே தமக்கான துணையைக் கண்டடைகிறார்கள். பலர் தோல்வியடைகிறார்கள். மீளவும் முயன்று முயன்று தோற்பவர்களும் உண்டு. அந்தத் தோல்வி, அவர்களது தேர்வு குறித்த முடிவுகளை அவர்கள் எவ்விதம் செய்கிறார்கள், அவர்களது ஆழ்மன விருப்புகள் என்னவாக இருக்கின்றன என்பதைக் கணக்கிலெடுத்தே முன்னகர வேண்டும். ஆனால் பொதுவில் அது ஆணோ பெண்ணோ எதிர் நிலையில் இருப்பவரினால் தான், எனது காதல் அல்லது இணைத்தேர்வு தோல்வியடைந்ததாகக் கருத விரும்புகிறார்கள். இது ஒரு தவறான அணுகுமுறை. அங்கு தன் விருப்பினையும் முடிவுகளையும் நோக்கியே முதலில் திரும்ப வேண்டும். அங்கு தான் அடிப்படையான சிக்கல் நிகழ்கிறது. அப்படித் திரும்பிப் பார்க்கும் துணிச்சல் சிலருக்கே வாய்க்கிறது. அந்தத் துணிச்சலும் கூட அம்மனநிலையை எதிர்கொள்ளப் போதுமானதில்லை. அங்கு தன் முடிவுகளின் மீது உண்டாகும் சுய ஏமாற்றம், பெருங்கொந்தளிப்பென புறவுலகை நோக்கித் திரும்பும். காணும் அனைத்தையும் எரிக்கும் கோபம் அங்கிருந்தே தொடங்குகிறது.
அந்த விலங்கை அகங்காரத்தை நாங்கள் எங்களுக்குள் வென்றே ஆக வேண்டும். மானுடம் பின்னோக்கிச் செல்லக் கூடாது. ஆனால் அதை ஒரு விலங்கெனக் கருதி அணுகுவதே அதனை வென்று செல்வதற்கான வழிகளைச் சிந்திக்கும் தொடக்கம். அதனை ஒரு மேலான மானுட உணர்வென மட்டும் நாங்கள் கருதத் தேவையில்லை. சுரண்டல்களும் அந்த விலங்குணர்ச்சியின் அகங்காரத்தின் உபரிகளில் ஒன்று என நாங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டே முன்செல்ல முடியும்.
*
பாலியலோ அல்லது உறவுச் சிக்கல்களோ சமூக வலைத்தளங்களில் உரையாடப்படும் போது பொதுவான கும்பல் மனநிலை அதை எப்படி எதிர் எதிர்வினையாற்றுகிறது என்பதை நான் பலதடவைகள் பார்த்திருக்கிறேன்.
பாலியல் சார்ந்த எந்த விடயத்தையும் பொது வெளியில் பேசும் பொழுது வரும் எதிர்வினைகளை ஒரு தனியனுபவமாக மட்டும் கொள்ளமுடியாது. நான் அவற்றைப் பேசும் பொழுதோ அல்லது வேறு சமயங்களிலோ கூட என் சார்ந்திருக்கும் குடும்பம் முதல் அனைவரையுமே பாதித்திருக்கிறது. வேறொரு பெண்ணின் பாலியல் சார்ந்த பிரச்சினைக்கான நீதியைப் பற்றி எழுதிய போது, எனது குடும்பத்தின் பெண்கள், எந்தப் புரிதலுமற்ற கும்பலால் எண்ணுக்கணக்கற்று வசைபாடப்பட்டிருக்கிறார்கள். கொசிப் இணையத்தளங்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் பகிரப்பட்டும் கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டுமிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு இன்னொரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்ட்டர் குண்டு வெடிப்பின் போது முஸ்லீம்களுக்கு எதிராக எழுந்த இனவெறுப்புக் கோஷங்களை எதிர்த்து முஸ்லிம்கள் எங்களது சகோதரர்கள் என்று ஒரு குறிப்புடன் ஒரு பதிவினை எழுதியிருந்தேன். அதை விகடன் இதழ், தனது முகநூல் பக்கத்தில் எனது மனைவியுடன் நானிருக்கும் ஒரு ஒளிப்படத்துடன் பகிர்ந்திருந்தது. அவ்வளவு தான். என்னையும் என் மனைவியையும் ஏராளமானவர்கள் வசைபாடினார்கள். எங்களுடைய உறவு உறவுச் சிக்கல் கொண்டதோ, பாலியல் ஒழுக்கக் கேடு கொண்டதாகவோ இருக்கவில்லை. அக்குறிப்பு முன்னிறுத்திய பிரச்சினையே வேறு. ஆனால் சமூக வலைத்தளம் பல நூறு கருத்து வித்தியாசங்கள் கொண்ட, அதற்கென ஒருவரை எந்த எல்லை வரையும் சென்று கதாப்பாத்திரப் படுகொலை செய்யக் கூடியது. இதனுள் தனிநலன்களும் செயற்படும். இதை நான் எதிர்கொள்வது பரவாயில்லை என்று வைத்துக் கொண்டாலும் எனது இணையரோ குடும்பத்தினரோ இந்த வசைகளை எதற்காக எதிர்கொள்ள வேண்டும். இப்படியான நிறைய அனுபவங்களின் பின்னரே, பாலியல் சார்ந்ததோ அல்லது உறவு நிலைகள் குறித்த தனிப்பட்ட கருத்துக்களைச் சொந்த வாழ்வுடன் இணைத்து நான் எழுதுவதில்லை. அது ஒரு விசச்சுழல்.
பாலியல் சார்ந்த விசயங்கள் குறித்து ஆக்கபூர்வமான உரையாடல்களை உண்டாக்குமளவு பாதுகாப்பான வெளியல்ல சமூக வலைத்தளங்கள். அது ஓர் ஊர்ச் சுவற்றில் போஸ்ட்டர் ஒட்டுவது போல. ஒட்டிவிட்டுப் போவது பரவாயில்லை. போவோர் வருவோருக்கெல்லாம் விளக்கம் சொல்வது இயலாது. ஒரு எல்லைக்கு மேல் அதைக் கட்டுப்படுத்த எந்த நெறிமுறையும் இல்லை. ஆகவே தான் எனது உரையாடல் தளத்தை இணையத் தளத்திற்கு மாற்றினேன். அங்கு கூட கருத்துப் பெட்டியில்லை. ஒருவர் ஒரு பிரச்சினை குறித்து மெய்யான அக்கறையுடன் உரையாட விரும்புவாராயின் அதற்கு அவர்களும் உழைப்பைச் செலுத்த வேண்டும் என்பது அறிவியக்கத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. மின்னஞ்சல் மூலம் அனுப்பும் கேள்விகளுக்கே நான் பதிலளிப்பேன் என்பதே எனது நிலைப்பாடு, அதிலும் தனிமனித அவதூறோ குற்றச்சாட்டோ வெளிப்படுத்தும் போது அந்தப் பகுதிகளை எடிட் செய்தே வெளியிடுவேன். அது என் தன்னறம்.
அதற்காக அந்த அகச்சிக்கலை, சுரண்டலை, குற்றச்சாட்டை நான் நிராகரிக்கிறேன் என்பது பொருளல்ல. சில வரையறைகளுடன் உரையாட விரும்புகிறேன் என்பது தான் என் தரப்பு. அதில் எவரையேனும் காப்பாற்றும் எண்ணமிருக்கிறது என்று பொருள் கொள்ளத் தேவையில்லை.
அதே வேளை எனது தளமோ அல்லது முகநூலோ இப்பிரச்சினைகளினை நேரடியாக விசாரணை செய்யும் வெளிகளல்ல. அவைக்கு மட்டுப்பாடுகள் தேவை. யாரும் யாரையும் குற்றம் சுமத்தி விட்டு விலகிப் போவது முறையல்ல. உதாரணத்திற்கு எதிர்வினையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் அமைப்பின் உறுப்பினர் மீதான பாலியல் குற்றச் சாட்டுகள் எழுந்து தற்போது இரண்டு வருடங்களாகின்றன. அவரது பெயரை ஏராளமான வகையில் சமூக வலைத்தளம் சித்தரித்தது. அதை ஒரு எதிர்வினையென்றால் கூட, அவருடன் சாதாரண உறவில் இருந்த பெண்களை நோக்கியும் அந்த வசைகளும் கேலிகளும் நீண்டிருந்தன. இதை ஏதாவதொரு வகையில் அவ்வமைப்போ அல்லது அப்பிரச்சினையைக் கையாண்ட எமது அமைப்பு உட்பட யாரேனும் கட்டுப்படுத்த முடிந்ததா? அவர்கள் மேலான பாலியல் உள்நோக்கம் கொண்ட வசைகளையும் அதனால் அவர்கள் எதிர்கொண்ட மன அழுத்தங்களையிட்டும் குறித்து எழுதினோமா? அல்லது ஒரு சிறு துரும்பைத் தானும் முன்னகர்த்த முடியுமா? ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற பின்னர், அவர் மேல் விசாரணை நிகழும் என்று ஒரு அறிக்கை வெளி வருகிறது. அது ஒரு நல்ல தொடக்கம், முற்போக்கு வெளிகளில் இவை உரையாடப்பட வேண்டும் என்று விதை குழுமத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
அறிக்கையை வெளியிட்ட அவ்வமைப்பு அவ் உறுப்பினரின் பெயருடன் வெளியிட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டே, அவ்வறிக்கையில் நாங்கள் அவரது பெயரைப் பயன்படுத்தினோம். அவ்வறிக்கையில் நாங்கள் அவரது பெயரைப் பயன்படுத்தியது தவறு என்பது எனது தற்போதைய நிலைப்பாடு. நீதிமன்றத்தில் கூட ஒருவர் குற்றவாளியென்று நிரூபிக்கப்படும் வரை அவர் சந்தேகத்துக்கு உரியவர் மாத்திரமே. சமூக வலைத்தளங்களுக்கு எந்த நெறிமுறையுமில்லை. அது போஸ்ட்டில் கட்டி சுட்டு விட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கும். நாங்கள் அப்படியானவற்றை எப்படிக் கையாள்வது. அவர் மட்டுமின்றி அவர் சார்ந்த பலரையும் பாதித்த இந்த விடயம் தொடர்பில் எத்தகைய விசாரணை முன்னெடுக்கப்பட்டது என்பது பற்றியோ அல்லது அவர் குற்றவாளி என்றோ ஏதாவது ஒரு அறிக்கை வெளிவந்ததா? இரண்டு வருடங்கள் இந்த விசாரணைக்குப் போதாதா? அவர் குற்றமிழைத்தாரா என்பது கூட உறுதிப்படுத்த முடியாமல், ஒரு அறிக்கையின் பெயரிலும் ஊகங்களின் அடிப்படையிலும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களுக்கு யாரேனும் பொறுப்பேற்க முடியுமா? அந்த அமைப்பு விசாரணையை முடித்துவிட்டு தமது தரப்பில் உறுதியான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இப்போது வரை அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்த முடிவான அறிக்கையும் அவ்வமைப்பு வெளியிடாமையை எவ்விதம் எடுத்துக் கொள்வது? அவராவது தன் தரப்பை முன்வைத்திருக்கலாம்.
உறுதியான பாலியல் குற்றங்கள் அல்லது ஏமாற்றல்களை செய்பவராக ஒருவரை நாங்கள் அடையாளங் காண்கிறோம் என்றால், அவரை வெளிப்படுத்துவது மட்டுமே அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியா என்பதை நிச்சயமாக மீண்டும் சமூகமாக நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவரைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவது தான் ஒரே வழி. சட்ட ரீதியிலான அல்லது அமைப்பு ரீதியிலான விசாரணையை அவர் வென்று தன்னைக் காத்துக் கொள்வார் என்றால் அவரை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது கவனம் கொள்ள வேண்டிய சில அடிப்படைகளை நாங்கள் பின்பற்றுவது நோக்கங்களை அடைய உதவக்கூடியது.
முதலாவது, அவரது பெயரும் அவர் மீது சாட்டப்படும் குற்றம் தொடர்பிலான உண்மை நிலவரங்கள் தொடர்பில் குறைந்த பட்ச ஆதாரங்களாவது இருக்க வேண்டும். உதாரணத்திற்கு வெளிப்படுத்தும் நபரே பாதிக்கப்பட்டவராயிருத்தல். அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நிதானமாக ஒருங்கிணைக்க வேண்டும். எவ்வளவு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருந்தாலும் அது பாலியல் சுரண்டலோ அல்லது உறவு நிலைச் சுரண்டலோ எதுவாகினும் அது தொகுத்து முன்வைக்கப்பட வேண்டும்.
இரண்டாவது, பாதிக்கப்பட்டவர் அன்றிப் பிறர் இதை முன்வைப்பாராயின் குறைந்த பட்ச ஆதாரங்களையாவது வெளியிட வேண்டும். அதைக்கூட அவதூறின் மொழியில் முன்வைப்பது கிடைக்க வேண்டிய ஆதரவை இழக்கச் செய்யும்.
மூன்றாவது, ஆதாரங்களை வெளியிடும் போது அது எவ்வகையான ஆதாரம், அதில் சம்பந்தப்பட்ட வேறு தனியாட்களின் பாத்திரம் என்பன அச்சிக்கலில் என்ன விளைவை உண்டாக்கின என்பது பற்றிய உறுதியான அறிதலின் பின்னரே அவை முன்வைக்கப்பட வேண்டும். சந்தேகத்தினதும் ஊகத்தின் பெயரிலும் எவருடைய பெயர்களும் வாழ்க்கையும் இக் குற்றங்களில் முடிச்சிடப்படுவது பொறுப்பற்ற செயல். உதாரணத்திற்கு ஒருவர் பெண்களைப் பாலியல் ரீதியில் சுரண்டுகிறார் என்று நாங்கள் அவரை வெளிப்படுத்தும் போது குற்றத்தின் தன்மை முன்வைக்கப்படுவது எவ்வளவு முக்கியமோ அவருடன் சாதாரண உறவில் இருக்கும் பெண்களும் அக்குற்றத்தின் பகுதிகளாகச் சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களால் எவ்விதமாகச் சித்தரிக்கப்படுவார்கள் என்பது பொறுப்புடன் அணுகப்பட வேண்டியது. அது சமூக வலைத்தளங்களில் ஒரு கேளிக்கையாகவே நிகழும்.
நான்காவது, குற்றச்சாட்டு வெளிப்படுத்தப்படும் மொழி சுய கழிவிரக்கமாகவோ அரற்றலாகவோ சீண்டலாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அது நிதானமாக பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்துவது, நியாயத்தை ஆதரிப்பவர்கள் ஒன்று திரளச் சாதகமான தளத்தை உண்டாக்கித் தரும். உதாரணத்திற்கு எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் பலரும் பேசத் தயங்கும் அறியப்பட்ட பாலியல் குற்றச் சாட்டுகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும் மொழி, அதன் மீது பொது வாசக கவனம் திரும்பும் வாய்ப்பை இல்லாமலாக்குகிறது. அவை அதிகளவில் வாசிக்கப்பட்டாலும் ஒரு தார்மீகத் தளத்தை அக்குற்றங்களை அறியாதவரும் அந்த அநீதியை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்குவதில் முன் தடைகளை ஏற்படுத்துகிறது.
இறுதியாக, எதற்காக அக்குற்றச்சாட்டுகளை அல்லது குற்றங்களைப் பொது வெளியில் முன்வைக்கிறோம் என்ற திட்டவட்டமான எங்களது நோக்கம் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் எல்லைகள் விளைவுகள் குறித்த நமது பார்வை வரையறுக்கப்பட வேண்டும். முன்வைக்கப்பட்ட பின் அது எதுவாக மாறும் என்பதைக் கொஞ்சம் நடைமுறை சார்ந்தும் சிந்தித்து அவை குறிப்பிடப்படுவது, விளைவுகளின் போக்கை நோக்கங்களுடன் இணைக்க உதவும். உதாரணத்திற்கு விதை குழுமம் துஷ்பிரயோகங்களின் சாட்சி எனும் சிறுவர் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்தும் ஒரு தொடரை இணையத்தளத்தில் வெளியிட்டது. அதில் ஒரு ஆசிரியர் எனக்கு இழைத்த துஷ்பிரயோகத்தை அவரது பெயர் குறிப்பிட்டு வெளியிட்டிருந்தேன். அக் குற்றத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்கிற்காகவோ அல்லது பழிவாங்கலாகவோ அது எழுதப்படவில்லை. சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் எவ்விதம் நிகழும் வாய்ப்புகள் உள்ளன. அவர் போன்ற பிரபலமான ஒருவர் கூட இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருந்தார். அது ஓர் அறியப்பட்ட உதாரணத்தின் மூலம் அச்சிக்கல்களை கவனம் கொள்ள வேண்டியதின் தேவையின் முக்கியத்துவத்தையும் அத்தகைய துஷ்பிரயோகங்கள் தொடர்பான கவனக்குவிப்பை உருவாக்கவுமே முன்வைக்கப்பட்டதென ஓரளவு விரிவான பின்னணியுடன் எழுதியிருந்தேன். ஒருவர் தனது சுரண்டலை அல்லது துஷ்பிரயோகத்தை பெயர் கொண்டு சுட்டுவதன் நோக்கத்தை வரையறுத்தேன். அந்த நேரத்தில் அவ்வாசிரியர் சமூக வலைத்தளங்களால் கும்பல் மனநிலையுடன் தாக்கப்படவில்லை. அது அந்தச் சிக்கல் குறித்தான தொடர் உரையாடலை உருவாக்கியது. இத்தகைய நான், பெயர் குறித்தோ அல்லது சுரண்டலையோ வெளிப்படுத்த எதிரானவனா? நான் வெளிப்படையாக எழுதியிருக்கிறேன். அதே நேரம் எனது நோக்கம் பழிவாங்கலோ அல்லது கழிவிரக்கமோ, அவரைச் சமூகம் தனிமைப்படுத்த வேண்டுமோ என்பதல்ல. அவ்வெளிப்பாடு, துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான பொது நோக்கத்தின் ஒரு சிறு பகுதி. அக்குறிப்பின் இறுதியில் இதனால், அவர் குடும்பத்திற்கு உண்டாகக் கூடிய மன உளைச்சல்கள் பற்றியும் இணைத்தே கரிசனம் கொண்டிருந்தேன்.
பாலியல் சுரண்டல்கள் அல்லது துஷ்பிரயோகங்கள் வெளிப்பாடு பற்றிக் கரிசனம் கொள்வது மட்டும் இக் காலத்திற்குப் போதுமானதல்ல. அது தொடர்பிலான இதர விசயங்களும் பொருட்படுத்தி உரையாடப்பட வேண்டும் என்பதே எனது பார்வை. ஒருவர் இதில் எதனையும் பொருட்படுத்தாமல் சுரண்டலில் ஈடுபடுபவர்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்கென எதையும் பலி கொடுக்கலாம் என்ற நிலைக்குச் செல்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக, எழுத்தாளர் போகன் சங்கர் ஒரு பதிவிட்டிருந்தார்.
“I, victim:The dark side of narcissm என்று நல்லதொரு உளவியல் கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் வார இதழில் வந்துள்ளது. நான் இதை இப்போது மேலும் மேலும் அதிகமாக நேர் வாழ்விலும் இணையத்திலும் காண்கிறேன்.
அதாவது தன் மேல் மட்டுமே ஆர்வம் உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப் பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக் கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது. தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது. ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாகத் தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது. இதை victim narcissm என்கிறார்கள். இது இப்போது பெருகி வருகிறது”.
இந்தச் சூழலை அண்மைக்கால உரையாடல்களில் பல தரப்பினரிடமும் நானும் உணர்கிறேன். ஒருவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக ஒன்று திரளக் கூடிய தரப்புக்களை, அவர்கள் அதைக் கையாளும் வழிமுறைகளிலோ வெளிப்படுத்தும் முறைகளிலோ மாற்றுக் கருத்துக்களை முன் வைத்தால், வசைகளும் முத்திரை குத்தல்களும் எழுந்து விடுகின்றன. ஒவ்வொரு தனி நபரும் தன் நாவாகவும் தன் சிந்தனையாகவுமே வெளிப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். குற்றமிழைத்தவர்கள் அவர்கள் இழைத்த குற்றங்களிலிருந்து இந்த இடைவெளிகளைப் பயன்படுத்தி அதிலிருந்து வெளியேறுகிறார்கள். அல்லது அக்குற்றங்களிலிருந்து தொடங்கும் உரையாடல் பல்வேறு முனைகளுக்கு அலையத் தொடங்கி விடுகிறது.
இவை நீங்கி, பாலியலோ பொருளாதாரமோ வர்க்கமோ சாதியோ பாலினமோ யாருக்கும் தடையேற்படுத்தாத சுரண்டலுக்கான கருவியாக ஆகாத வாழ்வை உருவாக்கிக் கொள்ளும் மிக நீண்ட பயணத்தில் எல்லோரும் இணைந்து கொள்ள வேண்டும். இதில் நபர்கள் சார்ந்த முன் முடிவுகளுடன் அணுகுவது, உரையாடலை வளர்க்காது. அதை நாம் கவனத்தில் கொண்டு தொடர்ந்து உரையாடுவது இப்பிரச்சினைகளை விரிவான தளத்திற்குக் கொண்டு செல்லும்.