நும்மார்பிற் பாம்பு

நும்மார்பிற் பாம்பு

தமிழில் சுடுகாட்டின் நிகருலகையும் பக்தியையும் இணைத்த பெருபேய் காரைக்கால் அம்மையார். சிவன் என்ற கடவுளுருவுடன் உண்டாகும் உறவை, பக்தி நிலைப் பாவமாகக் கொள்ளும் வாசிப்பு பெருமளவு உள்ளது. ஆனால் அதன் புறவுலகைச் சாம்பலைப் போலுதிர்த்து உள்நிற்கும் மனநிலையை விரக்தியுடன் மானுட விலக்கமும் கூடிய பெண் மனதிற்கு தெய்வ நம்பிக்கையளிக்கும் அமைதியாகவும் கொள்ள இயலும்.

தன்னழகுடலைத் தானேயுருக்கி, எலும்பு தோலாகியதன் பின்னரே அவர் பக்தியின் வெளியில் நிலைகொள்ள அனுமதிக்கப்பட்டார். அவர் தன்னைப் பேயாக்கிக் கொண்டு மொழிக்குள் நுழைந்த வாழும் வேட்கை பிடுங்கப்பட்ட பெண். அவரது சொல்லிற் சிதறும் தீச்சுவாலைகளும் நிணமுருகும் சுடலையில் ஆடும் தெய்வத்தைத் தன் மனம் மோதியுடையும் சந்நிதி எனக்கொள்வதும் அவரெதிர் கொண்ட வாழ்வளித்த கொடுநினைவுகளின் புனைவுலகு.

எரியும் பிணத்தின் உடலின் விடைப்பென அவரது வரிகள் ஆகுவதும், நீறாகித் தரை தழுவிக் காற்றில் கரைவதுவும் மீள மீள நிகழ்கிறது. தன் கடவுளை இவ்வளவு விரிவுடன் அழைத்துக் கசிந்துருகிய இன்னொரு பெண் குரல் தமிழில் இல்லை. சுடுகாட்டின் கணங்களும் பூதங்களும் ஆந்தைகளும் கூகைகளும் தமருகமும் குடமுழாவும் சேர்ந்துறையும் சுடுகனவில், தணற் பாறையில் கண்ணீர் சொரிவது போல் அவரது கவிதைகள் விழுந்தெரிகின்றன.

சிவனுடனான நீண்ட உரையாடலை அவரது கவிதைகள் நிகழ்த்துகின்றன. மானுடர் எவரும் பொருள் கொள்ளாத வெளியில் சிவனும் அவரும் இருக்கின்றனர். பக்தியளிக்கும் நம்பிக்கை வாழ்க்கையை நிறைவாக்கும் என்று எண்ணும் மனம் அவருடையது. அதனால் எழும் சொற்கள் தன்னிலிருந்து எதிர்நிற்கும் தெய்வம் உண்மையென்றெண்ணி அவர் கண்டெடுக்கும் சொற்கள், பிரளய காலத்தின் மனவிளிம்பிலுள்ள உக்கிரமும் தானழியும் வேட்கையும் கொண்டவை. சொல்லுதிரச் சொல்லுதிர, தன் தலையால் தானே நடக்கும் பேயென அலைகிறார், மொழியின் கனவில்.

(From: Exoticindia.com)

*

கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்
நீள்கணைக் காலோர்பெண்பேய்
தங்கி அலறி உலறுகாட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும்வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.

*

வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப
மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே
கூகையொ டாண்டலை பாடஆந்தை
கோடதன் மேற்குதித் தோடவீசி
ஈகை படர்தொடர் கள்ளிநீழல்
ஈமம் இடுசுடு காட்டகத்தே
ஆகங் குளிர்ந்து அனல் ஆடும் எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே

*

துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம்
உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதம் துந்துபி தாளம்வீணை
மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங்
குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே. 

*

யானே தவமுடையேன்
என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான்
எண்ணினேன் – யானேயக்
கைம்மா உரிபோர்த்த
கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.

*

தானே தனிநெஞ்சந்
தன்னையுயக் கொள்வான்
தானே பெருஞ்சேமஞ்
செய்யுமால் – தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து
பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து.

(பொலநறுவை காலச் சிற்பம்)

*

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் – ஒன்றே காண்
கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது⁠.

*

எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் – எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று⁠.

*

பிறரறிய லாகாப் பெருமையரும் தாமே
பிறரறியும் பேருணர்வும் தாமே – பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து⁠.

*

காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
காண்பார்க்கும் காணலாம் காதலால் – காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
ஆதியாய் நின்ற அரன்⁠

*

ஈண்டொளி சேர்வானத் தெழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே போலாதே – பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைத்திலங்கு
கூரேறு கானேனக் கொம்பு⁠.

*

பண்புணர மாட்டேன் நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைகண்டா- பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவது
எவ்வுருவோ நின்னுருவ மேல்⁠.

*

மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில விடங்கொண்ட வாறோ – மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங்கரிதாலோ
பைத்தாடு நும்மார்பிற் பாம்பு⁠.

(Cosmic dance of Shiva: Uma Bardhan)

*

என்னை உடையானும் ஏகமாய் நின்றானும்
தன்னை அறியாத தன்மையனும் – பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்கு
அருளாகம் வைத்த அவன்⁠.

TAGS
Share This