ஒரு குட்டி நட்சத்திரம்
மொழிக்குள் அரசியல் பிரக்ஞை உள்நுழைவது கத்தியால் அதன் இதயத்தைக் கீறி அதை மீளத் தைப்பதைப் போன்றது. அதன்பின் அதுவரையான மொழியுடல் வெட்டப்பட்ட மரமொன்று மீளத்துளிர்ப்பதைப் போல, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கின்றது.
சிவரமணியின் கவிதைகள் மொழிக்குள் சீழ்பிடித்திருந்த ஆணாதிக்க சமூக ஒழுங்கைக் கத்தியால் வெட்டியகற்றும் எத்தனமும் கூர்மையும் கவித்துவ ஒருமையும் கூடியவை. பெண்ணுளம் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளை தன் கவித்துவ வீச்சால் சொக்கப்பனை கொழுத்த முன் இரண்டே வெட்டில் மூன்றாய் வெட்டும் வாழையைப் போன்று சீவுபவை. ஒன்று கேள்வியின் கூர்மை, இரண்டு கவித்துவ எழுச்சி.
பெண் என்ற தன்னிலையின் கூர் கொள் இருப்பின் குரல் நவீனத் தமிழில் சிவரமணியில் தீவிரமாக ஒலிக்கிறது. நெருக்கடிகளின் புழுதியாற்றுக்குள் மூச்சுத் திணறியவர் தன் வாழ்வை மாய்த்துக் கொள்ளாவிடின் இன்று மகத்தான ஆளுமைகளில் ஒருவராக இருந்திருப்பார்.
அவரின் கவிதைகளுக்குள் இயல்பாக நகரும் மனவமைப்பின் இசை ஒலிப்பதுண்டு, அவை மெலிந்த தீரங்களில் ஓடும் நதியை நினைவூட்டுபவை. அதேபோல் அக்கவிதைகள் உணர்வுகளின் கொந்தளிப்பில் பேராறெனப் பிரவாகித்து மனக்குருதியின் இசையைப் பீறிடுபவை.
*
அவமானப்படுத்தப்பட்டவள்
உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்
ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.
என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.
(1990)
*
முனைப்பு
பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்.
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும்.
ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரைக் கொட்ட
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.
*
புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும்
இறந்து கொண்டிருக்கிறான்…
கேள்வி கேட்பதற்கான
எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்
இருட்டின் உறுதியாக்கலில்
உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்
அவர்களுக்குப் பின்னால் எதுவுமே இல்லை
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரிகங்களைத் தவிர…
வினாக்களுக்குரிய விடைகள் யாவும்
அச்சடிக்கப்பட்டுள்ளன.
முடிவுகளின் அடிப்படையில்
வெற்றி பெற்றவர் வரிசையில்
யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?
தேசத்தின் புத்திசாலிகள் யாவரும்
சந்திக்குச் சந்தி
தெருக்களில் காத்துள்ளனர்.
வினாக்களும், விடைகளும், முடிவுகளும்
யாவருக்கும் முக்கியத்துவமற்றுப் போனது.
” மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையில் வாழ்வை மறந்தோம்” என்பது
இன்றைய எமது
கடைசிப் பிரகடனமாயுள்ளது.
(1989)
*
இடம்: யாழ் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை
நேரம்: பி. ப. 4. 30
தனித்து
பிரயாணிகள் அற்று மறக்கப்பட்ட
ஒரு சிறிய ரயில் நிலையம் போல
ஒவ்வொருக்கிடையிலும்
சிரிப்புடன் கூடவே எழும்
மதிற் சுவர்களிடையே…
ஒரு மாலை…
என்னுடைய நண்பர்களுடன் நான்
கதைத்துக் கொண்டிருக்கிறேன்.
எந்த விஷேசமுமற்ற
ஏராளமான காயங்களுக்கிடையில்
மகிழ்ச்சியாயிருக்க விரும்பும்
பொழுதுகள்
பேசுவதற்கு சொற்களற்று
மறக்கப்பட்ட பாடலுக்கு
தாளந்தட்டிய நண்பனும், விரல்களும்
நடுமேசையில் சிதறிக்கிடந்த
தேநீர்த் துளிகள்…
அவற்றைக் குடித்து அப்புறமாய்
மேலே கிடந்த ஒட்டறைகளில்
அகப்பட்டுக் கொண்ட இலையான்கள்…
தோள்கள் சிவக்க எனது நண்பி
தனக்குள் சிரித்தாள்
பகடி விட்டது யார்?
எனக்குத் தெரியாது.
கண்ணாடி ஓடுகளுக்கு மேலாய்
நகர்ந்த மேகங்கள்-
அதனுடன் கூடவே நேரமும், நிமிடமும்
முகரக்கூட சுவடுகளற்று எஞ்சிநின்ற
மேசையும் கதிரையும் –
வெற்றுக் கோப்பைகளையும் விட்டு…
கதவின் வழியாய் புகுந்த
மேற்கின் சூரியக் கதிர்கள் விரட்ட
நாங்கள் எழுந்தோம்-
உலகை மாற்ற அல்ல,
இன்னொரு இரவை நோக்கி.
(1989)
*
எனது பரம்பரையும் நானும்
எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கும்
இந்த இருட்டில்
எதுவுமே இல்லை என்பது நிச்சயமாகின்றது.
எனக்குப் பின்னால்
எல்லாப் பரம்பரைகளும்
கடந்து கொண்டிருந்த வெளியில்
நானும் விடப்பட்டுள்ளேன்.
சொர்க்கமும் நரகமும்
இல்லாதொழிக்கப்பட்ட பரப்பில்
ஆழம் காணப்படாத சேற்றில்
எனது கால்கள் புதைகின்றன.
ஒவ்வொருத்தனும்
தனக்குரிய சவப்பெட்டியைச் சுமந்தபடியே
தனது ஒவ்வொருவேளை
உணவையும் உண்கிறான்.
தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையும் கூட
இல்லா தொழிக்கப்பட்டு விட்டது.
கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்ததக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை.
எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்க்கிடையே
நான்
எனது நம்பிக்கைகளுடன்
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.
(1989)
*
என்னிடம்
ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை.
இரவு:
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்;
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவை தான்.
இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும் போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உக்காரக்கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனவு
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே.
நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்.
எனக்கு
பகலால் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாய் உள்ளது.
(1989)
*
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்
யுத்தகால
இரவொன்றின் நெருக்குதல்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.
ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்,
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்.
அதன் பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்வி கேட்காதிருக்கவும்
மெளனமாயிருக்கவும்
மந்தைகள் போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.
தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.
யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்” ஆயினர்.
(1989)