குழந்தையின் திகைவிழிகள்
இயற்கையுடன் கவிஞரொருவர் நிற்கும் ஒளிப்படங்கள் எப்போதும் என்னை ஈர்ப்பது, அவரும் அவ் இயற்கையின் பகுதியென உணர்வதன் அறிதலளிக்கும் மகிழ்வு அது. மரத்தடியில் நிற்குமொருவர் அதன் பூவோ காயோ கனியோ வேரோ விழுதோ ஆகுபவர். நீர்வீழ்ச்சியின் அருகில் நிற்பவர் அதன் பெரும் வீழ்வோ உறையும் கற்பாறைகளோ கரையில் எழுந்து நிற்கும் சிறுபுல்லோ ஆகுபவர். கடலுக்கு முன் நிற்கும் கவிஞர் கடலின் அலையெனவோ மினுங்கும் நீலமெனவோ சூரியன் ஒளிந்து கொள்ளும் விரிதடாகமெனவோ ஆகுபவர். இப்படி எத்தனையெத்தனை எழில்களின் முடிவில்லாத உடல்களில் அதன் கனிவின் பகுதியென அவரை எண்ணிக் கொள்வேன்.
வீரான் குட்டி என்ற மலையாளக் கவிஞரைப் பற்றி ஜெயமோகனின் இணையத்தளத்தில் வாசித்திருக்கிறேன். ஒரு கவிஞர் மொழிபெயர்ப்பில் வாசகரிடத்தில் நெருங்கித் தன்னைத் திறந்து அவிழ்க்க முடியுமெனில் இரண்டு விடயங்கள் அதிலுண்டு. ஒன்று, அவர் முதன்மையாகத் தன் மொழியில் நிகழ்த்தியிருக்கும் அபூர்வமென்ன?, இரண்டு, அது ஏன் அண்டமளக்கும் கிளிகள் காவியே ஆக வேண்டிய கவிதையென ஆகியது என்ற வியப்பு.
அக்கிளிகளின் மொழிபெயர்ப்பில் அக்கவிதை இன்னொரு மொழியில் என்னவாகப் பொருள் கொள்ளும் வாய்ப்பை அவை அளிக்கின்றன என்ற கிளிகளின் பரிவின் மீதான கவனம்.
வருகை
வெயில்
நீரில் போல
நீ என்னில் புகுந்தாய்.
பனி
இலையிலிருந்து போல
போகவும் போனாய்
எனினும்
நன்றியுடையேன் உனக்கு.
இந்தத் தேங்கலை
கொஞ்சநேரம்
படிகம் என்று
எண்ணச் செய்தாய்.
இந்தக் கவிதையை ஜெயமோகன் மொழிபெயர்த்திருந்தார். இதை வீரான் குட்டியின் தமிழ் வருகையாகவே நான் உணர்ந்தேன். தெய்வீகம் என்பதைத் தற்செயல் தருணங்களின் பேரழகென்று சிறுவயதிலேயே உணர்ந்துள்ளேன். அம்மாவுடன் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள சிவன் – அம்மன் கோயிலுக்குச் சிறு வயதில் செல்வேன். அங்கு ஒரு முதிய பூசகர் இருந்தார். அவரது மேனி வெண்மை கலந்த மென்மஞ்சள் நிறம். அவரது தலைமுடி முழுவதும் வெண்மை. உறுதி சற்று மெருகும் உடல். கண்களில் மென் கனிவு.
கோயிலின் தளமொன்றில் அவரிடம் அழைத்துச் சென்று அம்மா பலன் கேட்பார். அவர் ஆசியூறிய நாக்கொண்டவர் போல் எப்போதும் நன்மையே சொல்வார். அவன் கெட்டிக்காரன். நல்லாப் படிப்பான். கவலைப்பட வேண்டாம் என்று சொல்வார். அம்மா அந்த நற்சொற்களால் மகிழ்வார். ஒரு நாள் அவர் ஒரு கட்டில் இருந்தபடி அம்மாவிடமும் என்னிடமும் கதைத்துக் கொண்டிருந்தார். மாலையொளி கோயிலுக்குள் மெல்ல நுழைந்து சரிந்து கிடந்தது, மென்மஞ்சளளொளி அவருடலின் ஒரு பரப்பில் வீசியது. சில கணங்கள் தெய்வ அழகு கொண்டார். அந்த அழகை உண்டாக்கிய இயற்கையின் விசையென்ன? அம்மா இறந்து பலகாலம் கழித்து, அக்கோயிலின் முன்னிருக்கும் குளம் ஆயிரக்கணகான சிறு செந்தாமரைகள் விரிந்திருக்க, மழை பொழிந்து கொண்டிருந்தது. அதன் அகன்ற கரைக்கட்டில் நிற்பது போல் கனவொன்றைக் கண்டேன். விழித்த போது அவரின் அத்தோற்றம் குளத்தின் புன்னகையென மனதில் நின்றது.
சில கணங்கள் படிகமென மின்னும் தெய்வீகங்கள் அனைவரிடமும் உண்டல்லவா? அதைக் காண்பது காண்பவரின் கண்களா? உணர்பவரின் அகமா?
கலம்
நள்ளிரவில் உம்மா
நீரூற்றிக் கழுவி வைத்த
பச்சை மண்கலத்தில்
காலையில்
ஒரு செடி முளைத்திருக்கிறது
கலமாக ஆவதற்கு முன்பிருந்த
மண்ணின் மென்மையில்
யாரும் காணாமல் அந்த
விதையும் இருந்திருக்குமோ?
முளைக்கவேண்டும் என்னும் விருப்பம்
ஒரு தொடுகை
உம்மாவிலிருந்து
அன்றிரவு
அதற்கு வந்திருக்கலாம்
உம்மாவுக்குள்
நானும் இருந்திருப்பேன்
தொன்மையான ஒரு காத்திருப்பாக
பூமியின் எந்த விருப்பம்
உம்மாவில்
எழுப்பியது என்னை?
இந்தக் கவிதையையும் ஜெயமோகன் மொழிபெயர்ப்பில் வாசித்தேன். இக்கவிதை கொள்ளும் அறியாமையின் வியப்பும் ஆழத்தில் உறையும் திகைப்பும் என்னை இவர் எனக்கான கவிஞரும் கூட என்பதை உணர்த்திய திறப்பின் கணங்கள்.
*
எனது கவிதைத்தொகுப்பின் வடிவமைப்பு மற்றும் அச்சு வேலைகளைத் தன்னறம் நண்பர்களே ஆற்றினர். தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்த போது தன்னறம் வெளியீடான சில கவிதை நூல்களையும் அனுப்பியிருந்தனர். அதிலொன்று வீரான்குட்டியின் கவிதைகளின் நூல்.
சிங்கப்பூரில் உள்ள சுஜா என்ற எழுத்தாளர் மொழிபெயர்ப்பினைச் செய்திருக்கிறார். மலையாளம் சுஜாவின் தாய்மொழி. ஆனால் தமிழில் தான் அவர் இலக்கிய வாசிப்பையும் நெருக்கத்தையும் கொண்டிருக்கிறார். தனது மொழிபெயர்ப்புப் பற்றியொரு சித்திரத்தை முற்குறிப்பில் எழுதியிருக்கிறார். மலையாளம், தமிழ், ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளின் அகராதிகளும் மேசையில் திறந்திருக்க ஜன்னலின் வழி வானில் சொற்களைத் துழாவிக் கொண்டிருக்கும் தனது கண்கள் என்று சொல்லுமவர், வீரான்குட்டியை தமிழில் நேர்த்தியுடன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். எனக்கு மலையாளம் தெரியாது. ஆனால் கவிதை தெரியும்.
தொகுப்பில் உள்ள நிறையக் கவிதைகள் மனதுள் விசிறும் சாரலென நிகழ்கின்றன.
தொகுப்பை வாசித்த போது எளிமையின் ஒளி கொண்டவை வீரான் குட்டியினது கவிதைகள் என்ற தோற்றமெழுந்தது. சில கவிதைகள் மனதின் நீளாற்றில் புரண்டு புரண்டு வழுவழுப்பான கல்லழகென என்னுள் உருண்டு கொண்டேயிருக்கிறது.
கேள்
கல்லிடம் கேள்
எவ்வளவு காத்திருந்தது
ரத்தினமாகியதென
நீர்த்துளியிடம் விசாரி
எத்தனை காலக் காத்திருப்பு
முத்தாவதற்கென
உதடுகள் இருந்திருந்தால்
அவை சொல்லியிருக்கும்:
‘அன்புடன் ஒரு கை தொடுவதற்கு
எடுத்துக் கொள்ளும் நேரம்’ என்று.
எவ்வளவு கனிந்திருந்தால் வேர் தன் கிளையில் பூத்திருக்கும் என்றொரு வரியுண்டு. அதே வரிகளை தலைகீழாக்கிக் கொண்டு எவ்வளவு காத்திருப்பின் பின் ஒரு அன்பின் தூய கரம் நம்மைத் தொட முடியும் என்று உணரும் மனமறியும் கவிதையிது. பார்க்க அருகிருப்பது போன்ற தோற்றமளித்தாலும் அன்பு திரண்டு லேசாவாதற்கு காத்திருப்பு வேண்டியிருக்கிறது.
இன்னொரு கவிதை,
உலகத்தின் விளிம்புவரை
மொழி அதன் இறுதி மூச்சை
எடுக்கத் தொடங்கியிருந்தது
‘நான் உன்னை நேசிக்கிறேன்’
என்று யாரோ சொன்னதும்
அது மீண்டும் துடிக்கத் தொடங்கியது
உலகத்தின் விளிம்புவரை போகப்போகும் துள்ளலை
குதிகாலில் சுமந்துகொண்டு.
வாழ்வை முடிவுவரை தயங்காமல் முன்னியக்கும் விசையென்பது அன்பே. நேசத்தைப் போலொரு விசை மானுட அகத்தில் புறப்படாமல் இருந்திருந்தால் மானுடம் உண்டாக்கிய அனைத்து மகத்துவங்களும் இங்கு சாத்தியமா என்று மீள மீள இலக்கியங்கள் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. சொல்ல எளிமையாகவும் கிடைக்க அரிதாகவும் இருப்பதே அதன் புதிர். முடிவில்லாத நேசப்பெருக்கில் அலைபடும் சிறுகழிகளென்று தம்மை உணரும் வாழ்வுகளே மண்ணில் வாழ்வாங்கு வாழ்கின்றன. அவை தங்கள் எடைகளால் அப்பெருக்கை எதிர்கொள்வதில்லை. அவை தங்களை வழங்குதலின் மூலமும் அந்த நதியில் போதமழிந்து கலத்தலின் மூலமும் நகர்கின்றன.
வழங்குதல்
இரவில் நின்றுகொண்டு நீ
என்னை நோக்கி கை நீட்டினாய்
நான் அப்போது
பகலில் நின்று கொண்டிருந்தேன்
மலையுச்சியில் இருந்து
நீ கொடுத்து அனுப்பும் முத்தம்
கடற்கரையில் இருக்கும்
எனக்குக் கிடைத்ததைப் போலொரு
தருணமாக இருந்தது அது.
*
கலந்துவிட்ட வெளிச்சங்கள்
முன்பொருமுறை
நாம்
ஒருவர்க்கொருவர் பரிசளித்துக்கொண்ட
விளக்குகளில்
உன்னுடையது, என்னுடையது என
வேர்பிரித்தெடுக்கச் சாத்தியமில்லை
பிரியும்போது
எனில்
அவற்றின் ஒன்றாய்க் கலந்துவிட்ட
வெளிச்சத்தை
எப்படி வேறாக்குவது?
கொண்டுபோவது?
*
குழந்தைகளை எங்களது கல்வி முறை பயிற்றுவிக்கும் முறையில் அவர்கள் முதலாவதாக இழப்பது தங்களுள் ஆதியாதியாய்த் தொடரும் கற்பனையின் பெருவிசையை. இயல்பாய் எழ வேண்டிய கற்கும் ஆர்வம் தம்முன் எழும் அழுத்தங்களால் அவர்களிடமிருந்து மங்கி மறைவதை ஒவ்வொருநாளும் உணர்கிறேன். அவர்கள் தமக்குப் பிடித்த ஒரு வானத்தை வரைய முடியாது. கடலை மஞ்சளாக்க முடியாது, சூரியனைச் சிரிக்க வைக்கக் கூடாது, மேகங்களில் நகைச்சுவை செய்ய இயலாது. வானமென்றால் நீலம். சூரியனென்றால் செம்மஞ்சட் கரங்கள் கொண்ட ஒரு நட்சத்திரம், மேகங்களோடு என்ன விளையாட்டு வேண்டியிருக்கிறது? அது வெறும் வெள்ளையோ சாம்பலோ கொண்டலையும் வானில் தோன்றும் ஒரு பருப் பொருள். பாடலொன்றுக்கு உடல் செல்லும் திசைகளைத் திறந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிலும் கற்பனையற்ற ஒழுங்கு வேண்டும் என்று கல்வி நிர்பந்திக்கிறது. இந்த ஒழுங்கிற்குள் பயிற்றப்படும் குழந்தைகள் விரைவிலேயே ஒழுங்குகளை மீறும் தருணங்களுக்காகக் காத்திருப்பவர்கள் ஆகிறார்கள். தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டு, அடுத்த குழந்தைகளுக்கு இதுதான் உலகம். இதைத் தான் உலகம் உன்னிடம் எதிர்பார்க்கிறது. இதை நீ தாண்டவே கூடாது என்று எச்சரிக்கை செய்ய ஆரம்பிக்கின்றனர். தம் இயற்கை ஆற்றலை அழித்தே பெரும்பாலான குழந்தைகள் மெல்ல வளர்கிறார்கள்.
படிப்பு
புரியவேயில்லை
அவளுக்கு
பட்டாம்பூச்சியின்
படத்தைக் காட்டி
சித்ரசலபம் என்று
டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
முடிவில்
வருத்தத்துடன் என்றாலும்
அவளும்
சித்ரசலபம் என்று
சொல்லத் தொடங்கினாள்.
பட்டாம்பூச்சி என்பது
அதனை
அதன் வீட்டில்
அழைக்கும் பெயர்
என்று
சமாதானம் செய்து கொண்டு.
வீரான் குட்டியின் இக்கவிதையை தம்மை இழந்து கொண்டு உலகுடன் சமாதானம் செய்துகொண்டிருக்கும் குழந்தைகளின் மீதான கூர்மையான அவதானிப்பைக் கலையில் நிகழ்த்தும் அரசியல் கவிதையாகவே வாசிக்க வேண்டும். இந்தக் கவிதையின் எளிய தோற்றமென்பது ஒரு மயக்கம் மட்டுமே. அது சுட்டும் இயல்பழிவென்பது தீவிரமானது. தாமறியும் உலகின் வசீகரங்களைத் தம் கரங்களும் மனமும் ஏற்றுக்கொள்ளலாகாது. உலகின் ஒழுங்கை நாம் மீறவே முடியாது என்று கசந்து கொள்கின்றனர் குழந்தைகள். அக் குழந்தைகளே எதிர்காலத்தில் இவ்வொழுங்கை எதன்பொருட்டுக் காக்கிறோம் என்ற தன்னுணர்வழிந்த மனிதர்களாக ஆகிறார்கள்.
வீரான் குட்டியின் கவியுலகு குழந்தையின் திகைக்கும் கண்களால் வாழ்வை அறிந்து அன்போ கோபமோ கொள்கின்றன. அக்கோபம் கூட குழந்தையின் கோபத்தின் உறுதியுடனும் அழகுடனும் எழுந்து நிற்கின்றன.
தன்னறம் வெளியீடான வீரான் குட்டி கவிதைகள் என்ற இத் தொகுப்பு தமிழின் கவியுலகின் போக்குகளுக்கு இனிமை சேர்ப்பதாக அமைகிறது. சுஜாவின் மொழிபெயர்ப்புப் பணிகளும் எழுத்தூக்கமும் தொடர வேண்டும். வீரான் குட்டியின் கவிதைகள் இன்னமும் விரிவாக மொழிபெயர்க்கப்படவும் உரையாடப்படவும் அனுபவிக்கவும் வேண்டியவை.