பரா லைட்: வாசகர் கடிதம்

பரா லைட்: வாசகர் கடிதம்

காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன இது கவிதை என்பது வாசகன் வாசிப்பதுதானே, கவிதை வாசகனையும் வாசிக்குமா என நீங்கள் வினவுகையில் இதற்கான விடைகள் இவ்வாறு அமைகின்றன.

அதுதான் கவிதை தரும் மாய அனுபவம்.

  • இவ்வாறான அனுபவத்தை தருகின்ற தொகுதியாக கவிஞர் கிரிசாந் அவர்களின் “வாழ்க்கைக்குத் திரும்புதல்” அமைகின்றது.

இருளை அதன் பாரம்பரிய வரைவிலக்கணத்துக்குள் வைத்துக்கொண்டு ஒளியினை உயர்த்துகையில் ஆரம்பிக்கின்ற தேடுதலில் அல்லது கள்ளன்-பொலிஸ் விளையாட்டில் நான் அல்லது எனது சுயம் இவ்வாறு அகப்பட்டுக் கொள்கிறது.

/நானே கைகளில் விலங்கிடப்பட்டவன்
நானே தெருக்களில் தனித்திழுபட்டவன்
நானே கடவுளரை மன்றாடித் தீர்த்தவன்

கைவிடப்பட்டவன்.//

கைவிடப்பட்டவனுக்கான அந்தரிப்பு அவனுக்கு ஒரு மிடறாக அமைகையில் சுற்றி இருப்பவர்கட்கோ அது தீராத பானமாக எஞ்சுகிறது. ஏனெனில் கைவிடப்பட்ட ஒரு மனிதனிடம் அதிகமாகக் கேள்விகளில்லை. அன்றாடங்களை மட்டும் கவனித்தபடி நகர்கின்ற வாழ்க்கை அவனுக்கு. ஆனால் சுற்றத்துக்கோ ஆயிரம் கேள்விகள். ஏன், எதற்கு, எவ்வாறென பதட்டங்களால் ததும்பும் பானம் அது.

நான் கைவிடப்பட்டிருக்கையில் கவிதை என்னை கவனிக்கும் என்ற எளிய நம்பிக்கைதானே அதனூடான எனது பயணம். அப்போது கவிதையினைப் பார்த்து என்னால் கூற முடியும் இப்படி.

//ஆனால்
நாம் யாத்திரைக்கு முன்னர் சந்தித்து கொள்ளும் பயணிகள்

இந்த உலகம்
நம் முன் கற்களால் எழும்புகிறது

அதனாலென்ன
ஆழக்கிணற்றின் அடியாழத்தில் நமக்குள்
எந்த கதவுகளும் இல்லை//

கவிதையும் வாசகனும் ஒருபோதும் பிரிவதில்லை என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும். சுவாரசியம் என்னவென்றால் கைவிடப்பட்ட ஒருவனைத் தேடி எழுந்த ஒளியும் ஆழக்கிணற்றின் இருளுக்குள் வந்து விடுவதுதான். அதனாலென்ன இந்த உலகமோ அல்லது வாழ்வோ தீர்வதில்லைதானே. ஏனெனில் “இருள் என்பது குறைந்த வெளிச்சம்” என பயிற்றுவித்திருப்பதன்றோ நம் தொன்மம்.

இப்போது முகிழ்ந்திருக்கும் இந்த உறவுக்கு நான் நிச்சயமாக இடும் பெயர் “காதல்” என்பதாகிறது.

//உனது குளிர் நிறைந்த கண்களுக்கு முன் உனக்காக எப்போதும் அழாதவன் காத்திருக்கிறான்//

//அன்பே
எனது எல்லையோடு தொடங்குகிறது
உனது காடு//

கவிதைக்கும் வாசகனுக்குமான பயணத்தில் பாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மிக இலகுவாகக் கூறுவதாயின் காதலுற்ற ஒரு பெண்ணின் மனநிலைகள் மாதிரி அது மாறிக்கொண்டே இருப்பது. கவிதையை எப்படி பெண் என்பாய் என்கிற கேள்வியை இவ்வாறு எதிர்கொள்கிறேன்.

//கடல்களிடமும் அதன் உறக்கத்திலிருக்கும் புயல்களிடமும் இருந்து உன் போன்ற ஒருத்தி
உருவாகிறாள்//

என்னளவில் கவிதையின் உருவாக்கம் இவ்வாறு நிகழ்வதால் கவிதையை பெண்ணாக்கித் தொடர்கிறேன். இப்போது காடென இருக்கிறது கவிதையாகிய பெண்.
காடென்பதும் மனதில் உருவாக்கும் பச்சையத்துக்குள் பதுங்கி கிடக்கின்றன செந்நிற குருதியாறுகள். ஏனெனில் காடு என்ற படிமம் என்னுள் பதித்திருக்கும் தொன்மம் வேட்டை என்கிறேன். நான் இந்த காட்டினுள் இறங்கி வேட்டை கொள்கையில் அதனுள் பதுங்கியிருக்கும் மொழியாகிய விலங்குகள் எனக்கிரையாகின்றன. ஆனாலும் இங்கேயும் சில இடங்களில் நான் தோற்றுவிடுகிறேன். ஏனெனில்

//ஆபத்தான கணங்களில்
ஊடுருவும் விழிகளில் பதுங்கியிருக்கும்
என் மிருகத்தை ஒரு வளர்ப்பு நாயைப்போல தடவிக்கொடுப்பவளிடம்//

ஆனாலும் அவளின் இந்த சாகசம் நிலைக்கவில்லை.

//பற்றி விறாண்டி ,கடித்து, உண்டு, கொன்று என்மேல் ஏறி இறங்கும் பெருவிலங்கொன்றை வேட்டையாடி உண்கிறேன். கடித்து, ரத்தம் தளும்பிய விரல்களால் உன்னை ஆரத்தழுவுகிறேன்//

நான் வேட்டை கொள்வது மொழியாகிய பெருவிலங்கினை. இப்போது பச்சையமாகிய மிஞ்சி நிற்கும் அவளை ரத்தம் தளும்பிய விரல்களால் தழுவுகிறேன்.

ஆனாலும் அவளினால் எனது மூர்க்கத்தைச் சகிக்க முடியவில்லை. மொழியகன்றபின் எனக்கும் அவளுக்குமிடையிலான சம்போகம் இவ்வாறிருந்தது.

//எஞ்சிய உடலைக் கொண்டு
என்னைப் பார்த்தாள்.

சூரியன் எங்களுக்கு முன்
எரிந்து கொண்டிருந்தது//

இத்தனையும் நிகழ்ந்த பின் எங்களுக்குள் என்ன நிகழ்ந்திருக்க வேண்டுமென்பது உங்கள் ஊகமாயின், அது இவ்வாறே நிகழ்ந்தது என்பது வெளிப்படை உண்மை.

//மீண்டும் பரிசளிக்க முடியாதபடி
பழையதாகிவிட்ட ஒரு இதயத்தைப் போல விம்முகிறது இரவு.

இந்த விளக்கினை அணைத்து விடு
இது தான் கடைசித் துயரம்//

இனி என்ன?

//ஆமைகள் முட்டையிட்ட நினைவுகளுக்குள் குஞ்சுகள்
மணல் மூடியிருக்கின்றன.

விடியும் போது வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

படகை முறித்த பின்
காட்டை எரித்த பின்//

அவளிலிருந்து வெளியேறி விடுகின்றேன். இனி எனக்கான வீட்டிற்குத் திரும்புகிறேன். எனது வீடு சமகாலத்தின் உண்மையை உங்களுடன் பகர்கிறது.

//சுவர்ப் பிளவில் அரசமரங்கள் – வேர் விடத் துடிக்கும் உன் வீடு//

இனியும் நான் இதுவரை உங்களுடன் பகர்ந்த எனது உழலை வெறுமனே புனைவென கடக்க முடியுமா?இல்லவே இல்லை. ஏனெனில்

//கவிதை, உண்மையை விட ஆழமான உண்மை.//

லலிதகோபன்

TAGS
Share This