காட்டருவியின் சுனை
ஒரு மொழியின் பிரக்ஞைக்குள் முதற்குரல்கள் உருவாகும்போது அவை சீற்றமும் அலைவும் கொண்டவையாகவே எழும். எந்தவொரு முதற்குரல்களும் மொழியில் நுழையும் தன்மை அதுவே. நவீன பெண் தன்னிலை தனது அரசியலை வெளிப்படுத்திய முதற்குரல்களில் ஒருவர் செல்வி.
இன்று வாசிக்கக்கிடைக்கும் செல்வியின் கவிதைகள் அளவில் மிகக் குறைவானவை. ஆனால் அதன் இயல்பில் துல்லியமும் ஒருங்கிணைவும் கூடியவை. சீற்றமும் அலைவும் அக்கவிதைகளின் உடல். மொழிக்குள் மெளனம் திறந்து பேசும் காட்டருவியின் சுனையொன்று செல்வியின் மனதிற்குள் இருந்திருக்கிறது.
அத்தகைய காட்டருவியின் பெருகிச் சுழிக்கும் வேகம் அவரது மொழியில் நுரைக்கிறது. அதன் பாடல் ஒலித்தபடியே கவிதைகளில் ததும்புகிறது. அதுவே செல்வியின் கவிதைகளின் இசை.
படுகொலை செய்யப்பட்டு இல்லாமல் போகாதிருந்திருந்தால் இன்று நம் கவிதைகளின் மகத்தான தன்னிலைகளில் ஒருவராகும் குரல் வாய்க்கப்பெற்றவர்.
*
மீளாத பொழுதுகள்
அமைதியான காலைப் பொழுது
காலைச் செம்மை கண்களைக் கவரும்
காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்
நீண்டு பரந்த தோட்ட வெளிகளில்
தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவும்
எங்கும் அமைதி! எதிலும் இனிமை!
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.
பொழுது புலராக் கருமை வேளையில்
தட தடத்துறுமின வண்டிகள்
அவலக் குரல்கள்: “ஐயோ! அம்மா!”
தோட்டவெளிகள் அதிர்ந்து நடுங்கின
அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்…
ஆட்கள் வெருண்டனர்
அள்ளி ஏற்றிய இளைஞர்கள்
மூச்சுத் திணறினர்.
தாய்மையின் அழுகையும்
தங்கையின் விம்மலும்
பொழுது புலர்தலில்
அவலமாய்க் கேட்டன.
காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது.
மெல்லிய ஒலிகளும் பயத்தையே தூண்டின
எங்கும் அச்சம்; எதிலும் அமைதி.
தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை
காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்…..
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.
*
விடைபெற்ற நண்பனுக்கு
மின் குமிழ்கள் ஒளியுமிழ
நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில்
விரைவில் வருவதாய்
உனது நண்பனுடன் விடைபெற்றாய்.
உன்னிடம் பகிர
எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன
முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்ப.
செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து
வசந்தம் பாடிய குயில்களும்
நீயும் நானும் பார்த்து இரசித்த
கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது
தலையை அசைத்தும்
எனது செய்தியை உனக்குச் செல்லும்.
பருந்தும், வல்லூறும் வானவெளியை மறைப்பதாக
இறக்கையை வலிந்து விரித்தன நண்பா
கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன;
கூடவே சில கோழிகளும்…
இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க
எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன.
நடந்து நடந்து வலித்துப் போகும்
கால்களின் மீது படியும் என்
மண்ணின் புழுதியை
முகர்ந்து
வீதியிலன்றி வீட்டினுள்ளும்
முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி
குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு
இரையைத் தேட,
இறக்கையைக் கிழிக்க-
வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த
கொடுமைகட்கெதிராய்க் கோபம் மிகுந்து
குமுறும் உனது குரலுடன்
குழந்தைச் சிரிப்புடன் விரைந்துவா
நண்பா!
*
கோடை
அந்திவானம்
செம்மையை விழுங்கும்
அலைகள் பெரிதாய்
கரையைத் தழுவும்
குளத்தோரத்துப் புற்களின்
கருகிய நுனி
நடக்கையில்… காலை நெருடும்
மேற்கே விரிந்த
வயல்கள் வெறுமையாய்
வானத்தைப் பார்த்து
மௌனித்திருக்கும்
வெம்மை கலந்த
மென் காற்று
மேனியை வருடும்.
புதிதாய் பரவிய
சாலையில் செம்மண்
கண்களை உறுத்தும்
காய் நிறைந்த மாவில்
குயிலொன்று
இடையிடை குரலெழுப்பும்.
வீதியில் கிடந்த கல்லை
கால் தட்டிச் செல்ல
அதன் கூரிய நுனி
குருதியின் சுவையறியும்.
ஒதுங்கிப் போன கல்
ஏளனமாய் இனிக்கும்.
இதயத்தின் நினைவுகள் விரிந்து
சர்ரென்று வலியெடுக்கும்
வாடைக்காற்றின் சிலிர்ப்பும்
வரப்போரத்தில் நெடி துயர்ந்த
கூழாமரத்தின் பசுமையும்
நிறைந்த குளத்தின் மதகினூடு
திமிறிப்பாயும் நீரினழகுமாய்
ஒதுங்கிப்போன இனிய பொழுதுகள்
ஊமையாய் மனதுள் அழுத்தும்.
*
எனக்குள்ளே…
வெம்மையுடன் புழுதியையும் கொண்டு வரும் சோளகம்
எரிச்சலைத் தோற்றுவிக்கும் ; ஓர் மாலைப் பொழுதில்
அம்மா என்னை அறைக்குள் இருத்தினாள்
குறுக்கும் நெடுக்குமாய் முறைப்புடன் உலாவினார்
அப்பா;
கதவிடை வெளியால் சின்னத் தங்கை எட்டிப்பார்த்து
“விளையாட வருகிறாயா அக்கா?” என்றாள்.
வானவெளிக்கு, அதற்கப்பாலும்
நீண்டு நீண்டு விரிந்ததென் கனவுகள்
அன்றே ஒடுங்கின
யன்னல் கம்பியும் வீட்டு மதிலும்
எனது இருப்பை வரையறை செய்தன.
பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென
எனது மனமும் கொதிக்கும்; குமுறும்
பார்; நீ – ஒரு நாள்
வாமனன் நானென நினைக்கும் உமது
எண்ணங்கள் யாவையும் பொடிப் பொடியாக்குவேன்.
வானமெங்கும் அதற்கப்பாலும்
நீண்டு நீண்டு விரிக்கும் என் கைகள்
பாதாளத்துக்கும் அதற்கும் ஆழமாய்
எனது கால்கள் அழுந்திப் புதையும்
பூமிக்குள் குழம்பெனக் கொதிக்கும் தழல்போல்
சீறியெழுந்து எரிமலையாவேன்.
அன்றேயுமது சாத்திரம் தகரும்;
அன்றேயுங்கள் சடங்குகள் மாளும்
இன்னதின்னதாய் இருப்பீரென நீர்
எழுதிய இலக்கியம் நெருப்பினில் கருகும்.
வானம் பொழியும்; எரிமலைக் குழம்பிலே
ஆறுபாயும்-
அதில் நான் நீந்துவேன்-
சமவெளிகள், காடுகள், மலைகள் எங்கும்
தனித்தே சுற்றுவேன்
இனிய மாலை, எழில் மிகு காலை – எல்லாம்
எனது மூச்சிலே உயிர்க்கும்.
*
இராமனே இராவணனாய்
நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.
என்னை யாரும் கேள்வி கேட்டுத்
தொந்தரவு செய்யாதீர்கள்
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது எனது இதயம்.
எந்த நேரமும்
விழுந்து வெடித்து விடக்கூடும்.
அசோகவனங்கள் அழிந்து போய்விடவில்லை.
இந்த வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.
ஆனால்
சிறைப்பிடித்தது இராவணனல்ல, இராமனே தான்.
இராமனே இராவணனாய்
தனது அரசிருக்கையின் முதுகுப்புறமாய்
முக மூடிகளை மாற்றிக் கொண்டதை
பார்க்க நேர்ந்த கணங்கள்..
இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.
இந்தச் சீதையைச் சிறை மீள வருவது யார்?
அசோக வனங்கள்
இன்னும்
எத்தனை காலத்திற்கு?
*
அர்த்தமற்ற நாள்களில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
அவலத்திலும் அச்சத்திலும்
உறைந்து போன நாள்கள்…..
காலைப் பொழுதுகளில்
பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட
பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்
தொட்டாற் சிறுணுங்கியில்
கண்கள் மொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன்
இதனைக் காணாது போனான்?
கேள்வியில் கனக்கும் மனது.
‘
விரிவுரைக்காய் வகுப்பறைக்குப் போனால்
அவிழ்க்கப்படும் பொய்கள்
விசிறிகளில் தொங்கிச் சுழல்கின்றன
அவை என் மீது விழுந்து விடும் பயத்தில்
அடிக்கடி மேலே பார்த்துக் கொள்கின்றேன்
மின்சாரம் அடிக்கடி நின்று போவதும்
நன்மைக்குத் தான்
செவிப்பறைமென் சவ்வுகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கின்றன.
‘
திட்டங்களில் புதைந்து போன மூளைகள்
திட்டமிட்டுத் திட்டமிட்டே
களைத்த மூளைகள்
முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன…
மூச்சுத் திணறும் இரத்தவாடை பற்றிய
சிந்தனையில்லாதது.
‘
நான் களைத்துப் போனேன்
புகை படிந்த முகத்துடன்
வாழும் நாள்கள் இது.