இடைநிலை வாசகர்கள்: ஒரு கடிதம்
அன்புள்ள கிரி,
உங்கள் கடிதத்துக்கு நன்றி. இன்னுமொரு கேள்வி. நல்ல வாசகர்களை அவதானித்துப் பார்க்கும் போது சிறு வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்திற்கான ஏதோ ஒரு ஊக்கி அவர்களுக்கு இருந்து இருக்கிறது. உதாரணமாக வீட்டில் யாரோ ஒருவர் வாசிப்பவராக இருக்கிறார்கள். வீட்டில் நூலகமோ புத்தக சேகரமோ இருக்கிறது இப்படியாக சில காரணங்கள் நிறைய வாசகர்களால் சொல்லப்படுகிறது. ஆனால் இடையில் வாசிப்புக்கு வந்து சேரும் நிகழ்வுகள் அபூர்வமாக இருக்கிறது. இந்த இடையில் வாசிப்பிற்கு வந்து சேரும் வாசகர்கள் அதிகப்பட வேண்டும் அல்லவா? அறிவியக்கத்தில் வாசிப்பிற்கு வந்து சேருவோரின் வாய்ப்புக்கள் எப்படி அதிகப்படுத்த முடியும்?
கீர்த்தனா
வணக்கம் கீர்த்தனா,
உங்களுடைய தொடர்ச்சியான கடிதங்கள் உற்சாகத்தை அளிக்கின்றன. ஈழத்துச் சூழல் வாசக உரையாடல் என்பதையே மிகவும் அரிதாகக் கொண்டவை என்பதே எனது பத்தாண்டு அவதானிப்பு. தயக்கமோ ஆணவமோ இன்றி தனக்கு விரும்பும் எழுத்தாளருடன் அல்லது உரையாடும் வாய்ப்புள்ளவர்களுடன் எழுத்தின் மூலம் அவர்கள் கொள்ளும் தொடர்பு முக்கியமானது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் உள்ளூர அந்த வாசக இருப்பு எழுத்தின் மீதான குன்றாத ஊக்கத்தை அளிப்பவை. தொடர்ந்து அனைத்து எழுத்தாளர்களுக்கும் அது வாய்க்க வேண்டும். இலக்கியமோ கலைகளோ ஏதேனுமொரு அறிவுச் செயற்பாடோ உரையாடல்களின்றித் தேங்கிவிடும். தனது வாசகர்களை அறியாமலே மறைந்துவிடும் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் முதன்மையாக வாசகர்களும் கூட. அதனால் அவர்கள் பிற நூல்கள் குறித்து எழுதியிமிருக்கிறார்கள். தமக்கு அவ்வெழுத்துகள் அளித்தவற்றைச் சுட்டியுமிருக்கிறார்கள்.
நான் எழுத வந்த காலம் முதல் எனது வாசிப்புகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தவன். ஆரம்பத்தில் முன்னோடிகளுடன் மூர்க்கமாகவே மோதியிருக்கிறேன். குறைகளே அதிகம் சொல்லியிருக்கிறேன். பின்னர் படிப்படியாகத் தணிந்தேன். ஆரம்பத்தில் ஏற்படும் மூர்க்கமான எதிர்வினைகள் நமது அகங்காரத்துடன் எழுவது. நான் உன்னை விட மேலானவன் என்ற தன்முனைப்பின் முளையில்லாத இளம் எழுத்தாளர்கள் அரிது. அதுவொரு வகையில் அவ் எழுத்தாளர் தன் குரலை அறிந்து சூழலை முட்டி மோதியெழும் கர்ப்ப காலம் என்றே கொள்ள வேண்டும். அவ்வேளைகளில் நிகழும் ஒவ்வொரு காலுதைப்பும் கையசைவும் வளர்ச்சியின் பொருட்டே. அதன் வழி மொழிக்குள் ஓர் இளம் எழுத்தாளரின் வருகையொலி கேட்கிறது.
வாசகர்களில் பெரும்பாலானவர்கள் புறச் சூழலினாலேயே தான் உண்டாகுவார்கள். கலையோ இலக்கியமோ அடிப்படை அறிமுகமோ பயிற்சிகளோ இன்றி வளர முடியாதவை. எனக்கு என் அம்மா சிறு வயதில் அவரது டயரியில் எழுதி வைத்த சினிமாப் பாடல்களின் கவித்துவம் நினைவிருக்கிறது. இப்போது வரிகள் நினைவில் இல்லை. ஆனால் அந்த ஈர்ப்பும் குறுகுறுப்பும் நினைவிருக்கிறது. விரத காலங்களில் அம்மா பக்திப்பாடல்களை எங்கள் வீட்டு சாமியறையில் அமர்ந்து பாடுவார். கண்கள் நீர் கோர்த்து விழ விழ சொற்களை அவர் உச்சரிப்பதைப் பார்த்திருக்கிறேன். அச் சொற்கள் எதன் பொருட்டுக் கண்ணீரைத் தூண்டுகின்றன, அம்மாவின் மனதைக் கரைக்கின்றன என்பதை அவதானித்திருக்கிறேன். திடீரென்று அவர் பாடிக்கொண்டிருக்கும் போது அறைக்குள் நுழைவது ஒருவரின் அந்தரங்கத்திற்குள் எதிர்ப்படுவது போலத் தயங்கி வெளியேறியிருக்கிறேன்.
பக்தி இலக்கியங்கள் தான் நமது சூழலில் முதலில் அறிமுகமாகும் இலக்கியங்கள். அது தேவாரங்களோ பைபிளோ அல்லது குரானோ, அவற்றின் ஒலியமைப்பும் சொற் தேர்வுகளுமே கவித்துவத்தின் முதலறிமுகங்கள். ஆனால் நமது சமூகத்தில் அவற்றைக் கவிதையாகவும் இலக்கியமாகவும் அறிமுகம் செய்வது குறைவு. குறைந்த பட்சம் பாடநூல்களும் கல்வியுமாவது அவற்றைக் கவிதைகளாக முன் வைக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவற்றை பக்திக்கான கருவிகளாக மட்டுமே கையளிக்கிறோம் அல்லது குறுக்குகிறோம்.
ஒருவர் இலக்கிய வாசகர் என்னும் தன்னிலையை உணர அவர் சிறுவயது முதல் நான் மேலே குறிப்பிட்டது போன்ற பல காரணிகள் புறவமைவுகள் இருக்கக் கூடும். அவற்றிலிருந்து அவர் மேலெழவே நமக்குப் பிற சாதனங்களின் உதவி தேவை. நூலகங்களோ இலக்கிய உரையாடல்களோ இணையமோ எதுவாகினும் ஒருவர் தொடர்ந்து ஏதேனுமொன்றைப் பின்தொடரும் தன்மை உருவாகிவர வேண்டும். நமது சமூகத்தில் இலக்கியம் குறித்து இருக்கும் பாமரப் பார்வைகளைக் கடந்து ஒருவர் தன்னை வாசகராக உணர்ந்து அதில் நிலைகொள்ள அவருக்குத் தற்துணிவு இருந்தாக வேண்டும். எல்லாவற்றிலும் நுனியைக் கடித்து விட்டு இரை மீட்கும் ஜெர்சிப் பசுக்களைப் போல் அல்லாது ஒரு நாட்டு மாடெனத் தன் தசைகளின் திறனை உணர வேண்டும். எதையுமே உழைப்பின் வழி கற்காமல் இணையம் ஆக்கியளிக்கும் தோற்றங்களின் மூலம் இலக்கியத்தை ஒருவர் கீழான அல்லது தொட அஞ்சும் பொருளாகவே பார்க்க முடியும். நமது சூழலின் லட்சணம் அப்படி!. இலக்கியம் பலநூறு குரல்களின் தொகுப்பு. அதில் மானுடரில் உள்ள எதுவும் விவாதத்துக்குரியது. மேன்மையோ கீழ்மையோ பொருட்டே இல்லை. இந்த பூமியில் மானுடர் அக நிர்வாணமாக உரையாடப்படும் ஒரே வெளி கலையும் இலக்கியமுமே.
இணைய மந்தர்களிடம் சிக்கிக் கொள்ளும் வாசகர்கள் ஒரு எழுத்தாளரின் மேல் நிகழும் வசைகளிலிருந்து அவரை நோக்கி நகர்ந்து அவர் சொல்வதை முன்முடிவுகளின்றித் தன் சொந்த நுண்ணுணர்வால் அறிய வேண்டும். ஒரு எழுத்தாளரை வாசித்தல் என்பது அவரைக் கவனித்தல் மட்டுமே. அதற்கு மேல் ஒருவர் தனது சொந்த வாழ்க்கைக்கே திரும்ப வேண்டும். அங்கு அவர் கற்றறிந்தவற்றினால் ஏதாவது பயனுண்டா எனச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒரு கவிதை ஒருநாளில் நமக்குள் விழுந்து முளைத்து விடுவதல்ல. அதன் சொற்கள் எங்கு எப்பொழுது எங்களது வாழ்வின் பார்வைகளை மாற்றியமைத்து நம்மை மிதக்க வைக்கும் என்பதை நாம் கணிக்க முடியாது. சபரிநாதனின் கவிதை வரி ஒன்றுண்டு, குழந்தை கண்ட மின்னலென என்று. அப்படியே இலக்கியம் ஒருவருள் நிகழ்கிறது.
ஒரு இடைநிலை வாசகர் தனது சொந்த உணர்கொம்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியவர். அவர் யாரொருவரையும் தொடர்ந்து பின்பற்றுவது அவசியமற்றது. இலக்கியம் என்னும் வகைமையினைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அவர் சூழலை முழுவதுமாக அறிவதே அவரை மேலும் வளர்த்துச் செல்ல உதவும். யார் யார் முக்கியமான எழுத்தாளர்கள், அவர்களுடைய ஆக்கங்கள் எவை, அவர்களுடைய பங்களிப்பு என்ன என்பவை தொடர்பில் ஒரு மனச்சித்திரத்தைத் தாமாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதிலிருந்தே தனது சொந்த வாழ்க்கையின் தன்மைக்கேற்ற எழுத்தாளர்களைக் கண்டடைய முடியும். உதாரணத்திற்கு நான் டால்ஸ்டோயையும் தஸ்தவேஸ்கியையும் வாசித்திருக்கிறேன். இருவருமே முக்கியமானவர்கள். ஆனால் தாஸ்தவேஸ்கியே எனக்குரியவர். எனது சொந்த ஆன்மாவிற்கு நெருக்கமானவர். எனது ஆழங்களுடன் உரையாடுபவர். என்னை ஆற்றுபவர்.
இடையில் ஒருவரை வாசிப்பில் தீவிரம் கொள்ள வைக்க விசேட உத்திகள் எவையும் இல்லை. கலையோ இலக்கியமோ அவை வாழ்வின் மீது தாகங் கொண்டவர்களுக்கானது. அவர்கள் சுனைகளை அவர்களே கண்டடையும் வழிகாட்டிக் குறியீடுகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமது இடைவிடாத முயற்சியினாலும் தளராத இயல்பினாலுமே அவர்கள் கலையின் சிகரத்தில் ஒரு எழுத்தாளருடன் சமமாக இருந்து தேநீர் அருந்திக் கொண்டே உரையாடிச் சிரிக்க முடியும்.