அலைமுறியும் கடற்காற்றில்

அலைமுறியும் கடற்காற்றில்

தமிழ்க் கவிதைகளுக்குள் ஈழத்தின் நிலவுருவையும் பண்பாட்டு மனங்களில் ஒரு பகுதியையும் பிரதிநிதித்துவம் செய்தவை நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள். அவரது கூர்மையான கவிதை வரிகள் மெளனமான மொழிவீதியில் ரயர் ஊரிக்கல்லில் எழுப்பும் சன்னமான ஒற்றை ஒலியைப் போல தனித்துவமானவை.

நட்சத்திரனின் கவிமனம் 90 களின் பின்னணியில் உள்ள வாழ்க்கைச் சூழலில் இருந்து எழுந்தது. அக்காலகட்ட ஈழத்து வாழ்வின் துல்லியமான சித்திரங்களில் சிலவற்றை நட்சத்திரன் ஆக்கியளித்துள்ளார். அவரது கவிதைகளின் சங்கீதம் குளத்து நீரின் மேல் எறியும் தவளைக் கல் போல வழுக்கிச் செல்லும் இயல்பு கொண்டவை.

90 களது ஈழத்து வாழ்வின் அன்றாடச் சித்தரிப்புகளும் பதின்ம வயது கடப்பவர்கள் எதிர்கொண்ட மனநிலைகளும் யாழ்ப்பாணத்து வேலிக் கிடுகுகள் போல் அவரின் கவிதைகளில் முடையப்பட்டுள்ளது. கவிதை இந்த சித்தரிப்புகளின் மிதிபலகையில் நின்று ஒரு மொழித் தாவலாக நிகழ்வது நட்சத்திரனின் கவிதைகளின் கூருணர்வு மிக்க அம்சம்.

தமிழ்க் கவிதைகளின் மொழிக்குள் நுட்பமான அடுக்கைத் திறந்த ஒரு தொடுகை நட்சத்திரன் செவ்விந்தியனுடையது.

(நட்சத்திரன் செவ்விந்தியன்)

*

இந்த வசந்தம்

அன்றைக்கு மாலை
நானும் ரூபனும் கடலுக்குச் சென்றோம்
அவன் வீடு ப்க்கும்
குறுக்கு வழியில் அவனைச் சந்தித்தேன்
யுத்தம் நடந்துகொண்டிருக்கிற காலம்

வீதியை விட்டு மணலுக்குள் புகுந்து
எருக்கலையருகில்
கடலைப்பார்த்திருந்தோம்
கனத்த உப்பங்காற்று வீசுகிறது
என் முகமெல்லாம்
நெஞ்சுரப்பான மசமசப்பூட்டுகிறது.

சோதினை நடக்கவில்லை
ஒரு பருவகாலம் முழுவதுமே Mood குழம்பிக்கொண்டிருக்கிறது
கன நண்பர்கள் இயக்கத்துக்குப் போய்விட்டார்கள்
அவர்களின் போகுதலின் முன்
இந்தக் கடற்கரையில் இப்போ நாங்கள் முகருகின்ற சோகத்தை
முகர்ந்துகொண்டுதான் போனார்கள்
பரந்த கடலில் நமது சோகம் ஒரு அலையேனும் ஆகாவிட்டாலும்
இப்படிச் சொல்லச் சிரமமாயிருந்தாலும்
‘யுத்தத்தில் நாங்கள் வெல்லத்தானே வேணும்’

மனச்சாட்சி உறுத்துகிறது
அலைமுறியும் கடற்காற்றில்
பருத்த மணல்கள் கால்களில் விழுகிறது.

(1991)

*

அமுங்கின மாலை

மாலை வெய்யில் மங்கிக்கொண்டு போகிறது
என்னை இனிய சோகம் தழுவுகிறது
மனிதர்களைத் தொலைத்த வீதிகளில்
இன்றுதான் அறிமுகமான
பெண்களின் பின்னால் சைக்கிளில் செல்கிறேன்
புதர்கள் கப்பிய ஒற்றையடிப்பாதை
முன்னே சைக்கிள் சென்ற தடம் இருக்கிறது
பல ஆண்டுகளுக்கு முன்
நான் தொலைத்த நம்பிக்கையும் முனைப்பும்
மன அமுங்கலும் உருகலும்
இன்று பெற்றேன்
மனிதர்களை இழந்த மௌனமான
சாலையில்
ரயர், ஊரிக்கல்லில் எழுப்பும் ஒலி கேட்கிறது.

(1991)

*

பிரிந்து போனவர்கள்

1

நமக்கான காலம்
போய்விட்டதைப்போலுள்ளது
யுத்தம் வந்து
ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுகளையும் புகவிட்டு
வாரியடித்துக்கொண்டு போயிருக்கிறது.

2

போன ஆண்டிலும் முன்பனிக்காலத்தில்
யுத்தம் வந்து போனது
கடந்த காலத்திற்காக
பத்தாம் வகுப்பு பள்ளிக்கூடத்திற்காக
அறுவடைசெய்த
வயல்வெளிகளுக்காக
அது ஏங்கவைக்கவில்லை.

3

நான்
இனி நெடுகலும் தனித்துத்தான் போனேன்
வயல்காட்டு எல்லைப் பூவரச மரங்களுக்கு
தெரியும்
நிலம் இருண்ட பிறகு
கருங்கல் துருத்தும் தார் றோட்டில்
உழவு முடிந்த கடா மாடுகளைச்
சாய்த்துக் கொண்டு போனான் ஒருதன்
தனித்த பட்டமரத்தில்
அது மேலும் வாழ விரும்பி
இறப்புக்காக முதிய அனுபவங்களுடன் நின்ற
பட்ட மரத்தில்
கொட்டுக்காகம் உச்சிக் கிளையில் வந்திருந்தது
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்களுடன்
இயக்கத்துக்குப் போனவர்களில்
ஆனையிறவிலும் மணலாற்றிலும் செத்துப்போக
நான் மட்டும்
ஒரு வலிய சாவுக்காகக் காத்திருக்கிறேன்.

(1991)

*

கடக்கப்படாத எல்லை

நம்பிக்கை குலைகிறது
ஒரு காலத்தில் அப்படியொரு காட்டுப்பாதை
இருந்தது எனச் சொல்கிறார்கள்
ஒரு மாதத்திற்கு முன்னால் கடந்தவர்களும் இருக்கிறார்கள்

செக்கரில். தோல்வியில்
வீட்டு நினைவுகள் துழாவுகின்றன
எல்லாவற்றையும் எழுத முடிகிறதா என்ன

இன்றைய காலை விழிப்பில்
அதிகமாய் அமுங்கிப் போனேன்
இருபது நாட்களாக இங்கு தங்கியிருந்தேன்
ஒரு ஒற்றையடிப் பாதையைத் தானும்
கண்டடையவில்லை

ஊருக்குத் திரும்பி என்னத்தைச் சொல்வேன்
அங்கே எனக்கு
கல்லறை கட்டி எழுதியும் விட்டிருப்பார்கள்
இந்நாளில் அதில் பட்டி மரங்களும் மண்டி
பாசி பிடித்தும்
எழுத்துக்கள் அழிந்து சிதிலமடைந்தும்…

“காட்டு வழியாய் எல்லையைக் கடந்தவன்;
இந்நேரம் தூரதேசத்தில்
படித்துக் கொண்டிருப்பான்;
கெட்டிக்காரன்; இனி தேசத்துரோகி”

இன்னமும்
ஆபத்தான எல்லையைப் பற்றியே
இரவில் கவலைப்படுகிறேன்

மிதிவெடிகளுக்கும்
ஆட்காட்டிக் குருவிகளின் சிடுசிடுப்புக்களுக்காகவும்
தேசத்துரோகிகளுக்கு விழும் அடிகளுக்காகவும்
என் ஜீவனே இரவில் பயப்படுகிறது

பகலில்,
ஒரு பீடி இழுக்கிறதைப் போல
எல்லாம் செய்யலாம் போலுள்ளது

எல்லையோரக் காடுகளில்
கரிகொண்டு,
பல்துலக்கி நாள் கழிகிறது
சாவும் போரும் நகர்கிறது.

(1991)

*

காடு

நடுக்காட்டுக் கோவிலிலிருந்து
பறை அழைத்தது
ஆடுகுத்துகிற மீசைக்காரக் கறுவல்
தன்முகம் சோகத்தோடு நீண்டு அடிக்கிறான்
பறை ஓய்வுக்குப் பின்னாலும்
நெடுநேரம் அவன் முகத்திலிருந்து
கடந்தகாலம் துயரத்துடன் இசைந்தது
இனி அனைத்தையும் கழுவிக் கொண்டுபோக
சத்தமில்லாத மழை
நீண்ட நேரம் அமர்ந்தமர்ந்து தூறியது
மருதமரங்கள், காயா, வஞ்சூரன், பனிச்சமரங்கள், கொய்யா
இவற்றில் வெண்மை படிந்தது
பழங்காலக் கோவில் மணியும்
சனங்களுக்காகவும் கனகாலம் இருந்த தனிமைக்காகவும்
சிணுங்கியது

தோளிலிருந்து பறையை இறக்கி
கொஞ்சம் புக்கைக்காக பறையன் இருந்துவிட்டு
பறையை எடுத்துக்கொண்டு குனிந்து போனான்
கிறவல் பாதையில்
மண்ணில் புதைந்து வந்தேன் நான்
இக்கங்குல்காலத்தில்
ஈனஸ்வரத்தில் பூனை அழுகிறமாதிரி
மயில்கள் அகவுகின்றன.

(1991)

*

Nostalgia

ஒரு மாரிப்பனிக்கால
விடியலில் நான் எழும்புகிறேன்
அப்படியொரு, யாழ்ப்பாணத்தில் படுத்த நினைவு
முருங்கைமர இலைகளும் பூக்களும்
கிளைகளுக்குத் தாவுகிற அணில்களும்
புல் நுனிகளில் பனித்துளி
நான் இரைச்சல் சத்தம்வர புல்லில் சலம் அடித்தேன்

ச்சா ச்சா ச்தோ
அது என்ன காலமப்பா
வீடுமுழுக்க பூவரசமரம் நிற்கிறது
எங்கள் வீட்டுப் பின்பக்கத்துக் குளம்
இப்போது அது ஒரு நதி
செத்துப்போன அப்பா. வெளிநாடுகளில் இருக்கிற மாமாக்கள்
எல்லாம் நதியில் ஒருக்கா படகோட்டிவிட்டு
வந்து இறங்குகிறார்கள்
நதியோரம் நமது வீடு
படகுகூட ஒரு பூவரசில் கட்டி வருகிறார்கள்
வெய்யில் ஏறுகிறது; அவர்கள் தங்களுக்குள்
கனக்கக் கதைத்து கள்ளுக் குடித்தார்கள்

பறந்துவிட்ட வசந்த காலங்கள்
நிலாமுன்றில் கால்கழுவி
ஒழுங்கையால் போன சைக்கிளையும் மனிதனையும் பார்த்து
பனங்காய் விழுகிற சத்தம் கேட்டு
துயிலுக்குப் போனோம்.

(1993)

நட்சத்திரன் செவ்விந்தியனின் நூல்: வசந்தம் 91 – நான்காவது பரிமாணம்

நட்சத்திரனின் கவிதைத் தொகுப்பு: https://www.noolaham.net/project/02/105/105.htm

TAGS
Share This