மகா சாவதானம்

மகா சாவதானம்

மொழியின் ஒரு முனையை நுணுகி நுணுகி, அதனை மேலுமொரு சிற்றளவு கூட்டும் பணியனெக் கவிதையைக் கருதுவதுண்டு. ஒன்றே துருவித் துருவித் தொடை குடையும் வண்டென கவிஞர்களுள் நுழைவதுண்டு. அசைய முடியாமல் மடியில் படுத்திருக்கும் கவிதைக்குத் தெரியாமல் அவ்வண்டு அக்கவிஞரின் குருதியைப் பீறிட வைக்கும். நகுலனில் துளைத்த நான் எனும் வண்டு அதன் பல்வேறு ரூபங்களில் அவரது கவிதைகளுள் நுழைந்து இன்னொரு புறத்தால் வெளியேறுகின்றன. அந்த இரத்தப் பெருக்கு அக்கவிதைகளுக்குள் மீள மீளப் பெருகுவது அந்த சாராம்சமான கேள்விகளின் தனிமையினால்.

நகுலனின் கவிதைகள் மொழிக்குள் தத்துவார்த்தமான ஆன்மீகத்தின் அடிப்படைக் கேள்விகளை நேரடியாகவே கவிதைகளில் எதிர்கொண்டவை. அவை இன்னொரு சொற்கிளையிலிருந்து எழுந்து பறப்பவை அல்ல. நேரடியானவை. அக்கவிதைகள் செல்லும் அடைவுகளும் கூட நேரடியாக உணரக் கூடியவை. பல்வேறு வகைகளில் புழங்கி வந்த கருத்துகள். ஆனால் நவீன கவிதையில் தத்துவார்த்த வரிகளினைக் கவிதைக்குள் வைத்து திரும்பத் திரும்ப தன் சொந்த பொம்மையை உருச்சிதைத்து அதற்காகக் கண்ணீர் விட்டு மரணச் சடங்கு நடத்தி மீளவும் தன் தோளில் போட்டு விளையாடும் குழந்தையென இருப்பின் ஆதரக் கேள்விகளை நகுலன் கவிதைகள் உருவாக்குகின்றன.

அவரின் கவிதைகளுக்குள் மரபின் மென்னிசை ஒலிக்கிறது. சொற்களில் சேரும் இணைவுகள் லயம் கொள்கின்றன. நவீன தமிழின் தத்துவார்த்தமான சில அடிப்படையான தொடக்கங்கள் நகுலனிலும் நிகழ்கின்றன.

(நகுலன்)

*

எனக்கு
யாருமில்லை
நான்
கூட.

*

களத்துமேட்டில்
வாளுருவி
மீசைதிருகி
நிற்கிறான் ஒரு மாவீரன்
போகும் பறவைகளனைத்தும்
அவன் தலை மீது
எச்சமிட்டன
அவன் மீசையை
எறும்புக்கூட்டங்கள்
அரித்தன
ஆனால் அவன் முகத்திலோ
ஒரு மகா சாவதானம்.

*

சுருதி

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

*

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
”யார்”
என்று கேட்டேன்
”நான் தான்
சுசீலா
கதவைத் திற “என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

*

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.

*

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்

*

அலைகள்

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

*

அம்மாவுக்கு எண்பது வயதாகிவிட்டது

அம்மாவுக்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
ஒலிக்கிறது
”நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?”

*

ஒரு மரம்

அதற்குப்
பல கிளைகள்
ஒரு சொல் தொடர்
அதில் / அதனுள்
பல வளைவுகள்
சில நேர்த்திகள்
ஆழங்கள்
நுணுக்கங்கள்
சப்த விசேஷங்கள்
நிசப்த நிலைகள்
நேரஞ் சென்றது அறியாமல்
அதனுள் நான்.

*

ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை.

நகுலனின் நூல்கள்:

நகுலன் : தேர்ந்தெடுத்த கவிதைகள் – காலச்சுவடு பதிப்பகம்

நகுலன் கவிதைகள் – காவ்யா பதிப்பகம்

கண்ணாடியாகும் கண்கள் – காவ்யா பதிப்பகம்

TAGS
Share This