பேரியற்கையின் குழந்தைகள்
இயற்கையின் இருப்பில் பூமி மானுடருக்கென நிகழ்ந்திருக்கும் அபூர்வம். இப்பொழுது வரை அதுவே உண்மை. நாளை பிரபஞ்சத்தின் இன்னொரு கிளையில் வேறொரு உயிரினம் நம்மிலும் ஆற்றல் மிக்கதாக இருக்கலாம். ஆனால் தற்போதைக்கு பூமியின் ஆற்றல் மிகு உயிரினம் மனிதர்களே. கோடிக்கணக்கான பிற உயிரினங்களுக்கும் வாழிடம் இப்பூமியே. அதன் கருப்பை வினோதமானது.
இயற்கையை அறிவியலாகவும் கலையாகவும் அணுகலாம். இரண்டுமே அவசியமான பார்வைகள் என்பது என் எண்ணம்.
அறிவியல் ஒரு முழுமை நோக்கில் உயிர்களின் ஆற்றலால் எவ்விதம் இப்புவி சமநிலை கொள்ள முடியும், அவற்றின் இயல்புகள் எவை, புறவுலக மாற்றங்களினாலும் மானுட செயல்களாலும் புடவி என்னவாகி வருகிறது என்பவற்றை ஆராய்கிறது. கலை, தனது கருவியான கற்பனையின் முழுமை நோக்கில் அனைத்து உயிர்களும் பிரிக்க முடியாத நேரிழையில் எவ்விதம் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டிருக்கிறது என்பதை முன்வைக்கிறது. அறிவியல் இயற்கையினைக் காக்கும் உடல் என்றால் கலைகள் அதன் ஆன்மாவைக் காப்பவை.
நஞ்சாகும் நிலம் என்ற கட்டுரைத் தொகுப்பு ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனால் எழுதப்பட்ட சூழலியல் பத்திகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர் என்ற சமூகப்பாத்திரத்தின் முழுதான பண்பை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர். ஓர் ஊடகவியலாளர் என்பவர் செய்தி சேகரிப்பவர் மட்டுமல்ல, அவர் தான் சேகரிப்பதற்கும் அப்பால் செல்ல வேண்டியவர். தான் தெரிந்து கொண்டவற்றை முறைப்படுத்தி வேறு வடிவங்களில் முன்வைக்க வேண்டியவர். ஊடகவியலாளர் ஜெரா, குமணன் ஆகியோர் இளம் தலைமுறையினரில் இவ்வகையில் முக்கியமானவர்கள். அவர்கள் செய்திகளுக்கு மேலே சென்று ஆவணப்படங்களாக, ஒளிப்படக் கண்காட்சிகளாக, நூல்களாக தங்களது அனுபவங்களைத் திரட்டி முன்வைப்பவர்கள். அதன் மூலம் சமூகத்தின் உரையாடல் வெளியில் சலனங்களை உண்டாக்குபவர்கள். தமிழ்ச்செல்வனின் பாத்திரமும் அத்தகையதே.
இக்கட்டுரைத் தொகுப்பு சில தீவிரமான சூழலியல் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவற்றின் பின்னணி எவ்விதம் அன்றாட நடைமுறையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை அணுகுகிறது. மூன்று தரப்பினருக்கு இந்த நூல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒன்று, செய்திகளுக்கு வெளியே இத்தகைய அறிவியல் நோக்கை வலியுறுத்தும் இவ்வகை எழுத்துகள் இப்பிரச்சினைகள் கவனம் கொள்ளப்படவும் பொதுமக்கள் மத்தியில் உரையாடல் தர்க்கங்களை உருவாக்கவும் உதவக்கூடியவை.
இரண்டு, பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் மொழியில் வெளிப்படுத்தப்படும் இத்தகைய கட்டுரைகள் இளம் தலைமுறையினரிடம் இப்பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும் மேலும் இத்திசை நோக்கி நகரவும் உந்துதலளிக்கும்.
மூன்று, சூழலியல் சார்ந்து செயற்பட விரும்பும் அமைப்புகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இந்த நூல் அவர்கள் கவனங் கொள்ள வேண்டிய சில முக்கிய பிரச்சினைகளை அடையாளங் காட்டி அடிப்படையான அறிமுகத்தை வழங்குகிறது. மேலதிகமாக, இத்தகைய சிக்கல்கள் தொடர்பில் அணுகப்படக் கூடிய ஊடகவியலாளராக தமிழ்ச்செல்வனையும் முன்னிலைப்படுத்துகிறது.
நூலில் சில கட்டுரைகள் உணர்வுபூர்வமான நெருக்கத்தை அளித்தன. காணமல்போன குஞ்சுக்குளம் என்ற கட்டுரையில் தீட்டப்படும் ஊர்கள் அழிவதன் இயற்கைச் சித்திரம் முக்கியமான ஒரு கட்டுரை. ஓர் ஊரின் நீர் உவர்ந்து கொண்டு வருவதால் ஒரு ஊரே மெல்ல மெல்ல எப்படி நகர்ந்து இடம்மாறி அமர்ந்து கொள்ளுகிறது என்ற மானுட அசைவின் மென்நுனியொன்றை அக்கட்டுரை தொட்டிருக்கிறது.
மண்ணகழ்வுகள், குடிநீர்ப்பிரச்சினைகள், கண்டல் தாவரங்கள் பற்றிய கட்டுரை என்று தொடப்பட்ட அனைத்துமே முக்கியமான பேசுபொருள்கள். அதனை அன்றாடச் செய்தியிலிருந்து மீட்டு வரலாற்றிலும் அறிவியலிலும் வைத்து விளங்கிக் கொள்ளும் நோக்கினை தமிழ்ச்செல்வன் வளர்த்தெடுக்கிறார். அவரின் எழுத்துகளில் இந்த அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனம் கொள்ளாத தரப்பினர் மீது கோபம் எழுகிறது. அது நூலெங்கிலும் காணப்படுகிறது. அது ஓர் ஊடகவியலாளராக அவருக்குள் உண்டாகியிருக்கும் தார்மீகமான கோபம். இன்னொரு புறம் மக்களுக்கும் அவர்களுடைய பொறுப்புகளைச் சுட்டுகிறார். இரண்டும் இணைந்தே இயற்கையைப் பாதுகாக்க முடியும். இன்னும் வளர்த்தெடுக்க இயலும் என்ற நம்பிக்கை கொண்டவையாக தமிழ்ச்செல்வனின் இந்தக் கட்டுரைகள் இருக்கின்றன.
தமிழ்ச்செல்வன் தனியே சூழலியல் சார்ந்த ஊடகவியலாளர் மட்டுமல்ல. சமூகத்தின் ஏனைய பிரச்சினைகளிலும் அவரது அக்கறை முக்கியமானது. பெரிய பரந்தன் எனும் இடத்தில் உள்ள கோயிலொன்றில் சாதி காரணமாக தேவாரம் பாட மறுக்கப்பட்ட மாணவன் தொடர்பிலான இவர் வெளியிட்ட காணொலி அந்தச் சிக்கலின் மேல் கவனத்தை உண்டாக்கியது. விதை குழுமம் சார்பில் அப்பிரச்சினை தொடர்பிலான அறிக்கையொன்றைத் தயாரிக்க தமிழ்ச்செல்வனுடன் பாதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்று அவரின் குடும்பத்தினருடன் உரையாடியிருக்கிறோம். இரண்டு அறிக்கைகளும் வெளியிட்டிருந்தோம். தமிழ்ச்செல்வன் சாதி, இனவாதம், நிர்வாக முறைகேடுகள், சூழலியல் என்று பரந்துபட்ட பிரச்சினைகளில் கவனம் கொள்பவர். ஒருவகையில் களப்போராட்டக்காரர்.
கொசிப் ஊடகங்களே முதன்னிலை வாசகத் தளங்களைக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அதற்கான செய்திகளை உருவாக்கியளிக்கும் சில்லறை ஊடகவியலாளர்களுக்கு வெளியே தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் சமூக முன்னேற்றத்தின் முன்னத்தி ஏர்கள்.
பேரியற்கையின் குழந்தைகளான இவ்வுலகின் ஒவ்வொரு உயிரினமும் அதனதன் இயல்பில் ஒன்று இன்னொன்றைச் சார்ந்தே வாழ்கின்றன. எங்கோ சூரியனிலிருந்து ஒளியில் வெளிப்படும் சக்தியின் கீற்றே இங்குள்ள தாவரங்களில் வாழ்வாக நிகழ்கிறது. அந்த உயிராற்றலே வாழும் எல்லாவற்றிற்கும் உயிரை அளிக்கிறது. ஒளியிலிருந்து உயிருக்கு நிகழும் ஆற்றலின் பரிமாற்றத்திற்கிடையில் மனிதர்கள் உண்டாக்கும் ஆக்கமும் அழிவும் பாரிய விளைவுகளை கணந்தோறும் உருவாக்கி வருகிறது. பலகோடி உயிர்களின் வாழ்வில் நாம் நமது தேவைகளின் பொருட்டுப் பாதிப்பை நிகழ்த்தியபடியிருக்கிறோம். இந்தத் தன்னுணர்வு ஒவ்வொரு மானுடருக்கும் தேவை. நமது குழந்தைகள் இயற்கையை ஆள அல்ல. பேரியற்கையின் பகுதியெனத் தம்மை உணர்ந்து கொள்ளவே நாம் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.
எளிய அறிவியல் தர்க்கங்களையும் சமூக ஊடகப் புரட்டுகளையும் விஞ்ஞானமென்று கருதாமல் மெய்யான அறிவியலை நமது மாணவர்கள் விரும்பி உணர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களே இயற்கையின் சமநிலையை மீட்டெடுக்கக் கூடியவர்கள். அறிவியலுக்கும் கலைக்குமிடையில் பாலமாக ஆகக் கூடியவர்கள். அந்தப் பாலமே மானுடருக்கும் இயற்கைக்குமிடையில் உண்டாகியிருக்கும் இடைவெளியைக் குறைத்துச் செல்லும் கருவிகளாக இருக்கும்.
நஞ்சாகும் நிலம் நூல் அதிகமும் மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட்டு உரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய நூல். தமிழ்ச்செல்வன் தொடர்ந்து இக்களத்தில் முன்செல்ல வேண்டும். அது நீண்டகாலமளவில் சூழலியல் என்ற செயல்வாதம் இம்மண்ணில் மரமெனக் கிளைகள் விரித்து காடென வளர்வதற்கான கருத்தியல் மற்றும் அறிவியல் பின்னணியை உருவாக்கும். தொடர்ந்து எழுதும் தோறும் மொழி பயின்று வரும். பிரச்சினைகள் குறித்த பார்வைகளைத் தொகுத்து முழுமை கூடிய பார்வையொன்றாக உருவாக்கியளிக்க முடியும்.
இயற்கையுடனான மனித உறவைச் சொந்த உடலின் பகுதியென மனிதர் உணர்வதினாலும், அதன் மூலம் நிகழும் இயற்கையை அறிதலின் தொடக்கமுமே சூழலியல் சார்ந்த செயல்களின் முதற்குவிவு. தமிழ்ச்செல்வனின் இத்தகைய பணிகள் கடந்த காலத்தாலோ நிகழ்காலத்தில் அவர் மீது இறைக்கப்படும் வசைகளினாலும் அவதூறுகளினாலுமோ அல்ல, அவை எதிர்காலத்தினாலேயே மதிப்பிடப்படும். நம்மை எதிர்காலத்திற்கெனத் தயார்ப்படுத்தும் இத்தகைய ஒவ்வொரு காலடிகளும் ஒரு பிரமாண்டமான அட்டையின் கோடிக் கால்களின் ஒற்றைப்பேரசைவெனெ மானுடத்தை முன்னகர்த்தும் செயல்கள்.