பனித்திணைப் பாணன்
ஒரு நிலம் மனதிலூன்றியவர்கள் நிலம்கடக்கும் போது பெயர்ந்த இன்னொரு நிலம் மொழியில் முளைக்கும். தமிழின் ஆறாம் திணையாய் பனியும் பனிசார்ந்த நிலங்களும் புலப்பெயர்வின் பின் விரிவாக மொழிக்குள் ஊன்றப்படுகிறது. புகைக்கூண்டுக்குள் தணற்கட்டைகளென அகநிலம் உள்ளெரிய பனிக்காலங்களை அச்சூட்டில் கடந்த முதற்தலைமுறையினரின் குரல்களில் கி.பி. அரவிந்தன் முதன்மையானவர்.
கணப்பின் சூட்டில் வாழும் கவிதைகள் கி.பி. அரவிந்தனுடையது. அதன் அகவுலகு நீறு பூத்து பின்னர் தழன்று கொண்டேயிருப்பது. நிலத்துடன் மரபின் பண் பிணைக்கப்பட்டிருக்கிறது. அது மொழி வழியாக மனதுள் குதித்துக் கொண்டிருக்கும் தாளமென உறைவது. கி.பியின் கவிதைகளுக்குள் அத்தாளம் உறையவும் பின்னது உடைந்து பெருகவும் கூடியதாய் இருந்தது.
அரசியலும் ஆன்மீகமும் உறைந்தும் உடைந்தும் ஓடிய பனிநதி அவரது கவிதைகள். கி.பி அரவிந்தனின் கவிதைகளுக்குள் மரபின் சங்கீதம் உறைபனியின் பனிப்பாளங்களுக்குக் கீழ் கடுங்குளிர் நீரென ஓடிக்கொண்டிருக்கிறது.
பனிப்பாலையில் மனம் ஒன்றாத முதற்தலைமுறையின் ஆற்றாமையினதும் கோபங்களினதும் நிலம்பெயராத நினைவுகளினதும் கவியுலகு கி.பி. அரவிந்தனுடையது.
*
*
திசைகள்
காலைச் சூரியனுக்கு
முகம் காட்டி நின்றால்
புறமுதுகில் மேற்கிருக்கும்.
இடக்கைப் பக்கம் வடக்கு
வாடைக்காற்று தழுவும்.
வலக்கைப் பக்கம் தெற்கு
சோழகம் பெயரும்.
வாடை, சோழகம்
கச்சான், கொண்டல் என்றே
திசைகள் உணர்த்தும்
காற்றின் பெயர்கள்.
அன்றைக்கு அம்மா சொல்லிடும்
எளிமையில்
திசைகள் துலக்கமாய் இருக்கும்.
இப்போவெல்லாம் திசைகள்
எனக்கு துலக்கமாயில்லை.
பெயர் சொல்லும்படியான
காற்றுகளும் ஏதுமில்லை
வீசுவது புயலெனத் தொ¢யும்
புயலுக்குண்டா திசை?
அதனிடை நான் இல்லாததால்
வெளியில் நின்றபடி
திசைகளைத் துலக்கும்
ஓரோர் தடவையும்
முயற்சியில் தோற்கிறேன்.
அவை தொலைந்திருக்குமோ?
ஏன் இந்த சந்தேகம்
வடக்கிருந்து புறப்பட்டவன் நான்
என் நினைவு சொல்கிறது.
தெற்கிருந்து வருகிறாய் நீ
குளிர் வலையத்தில்
எதிர்கொள்பவர் சொல்கின்றனர்.
எங்கிருந்து வந்தேன்
எத் திசையில் செல்கிறேன்?
என் விந்தணுவில் முளைத்தவையும்
குரலெழுப்புகின்றன
எத்திசையை முகங்கொள்வது?
எனக்குச் சொல்லித்தர
அம்மாவுக்கு இலகாயிருந்தது
என் குழந்தைகளுக்குச் சொல்லித்தர
எனக்கோ முடியவில்லை.
அம்மாவின் எளிமை எனக்கில்லை.
ஒரேவொரு தடவை
எழுவான் திசையை
யாரேனும் சுட்டுவீராயின்
சுடரும் விடியல் சூ¡¢யனுக்கு
முகம் காட்டி நிற்பேன்.
திசைகளைக் கண்டு கொள்வேன்.
குழந்தைகளுக்கும் அறிவிப்பேன்.
*
மழை
நகரம் குறண்டிப்போய்
எரிவிளக்கும் நனைந்தபடி
ஒனியுறிஞ்சும் புகாரில்
போர்வையாகும் நீர்மை.
உசும்பும் காற்றில்
இலையுதிர்க்கும் மரங்கள்
பரிதவிக்கும் எனைப்போல்.
வானம் பூமியுடன்
புணரும் தருணம் போலும்
விந்தென கசிந்து வழிந்து
பொழிகின்றது மழையாய்.
நனையாத ஆடையுள்
மறைந்து திரியும் மனிதருள்
இந்த மழையை
ஏன்தான் நான் நோக்குகிறேன்.
கானல் நீர் தேடி
பாலையாகிறவன் நான்
அழகுறுமோ மழைநாள்
எனக்கு.
அடிபிய்ந்த என் சப்பாத்துள்
சளசளப்பாய்
நாசமாய்ப் போன மழை.
குதித்தோடும்
மழைநாள் ஊரில்
வெறுங்கால் வெறும்மேல்
சில்லிடப் பூக்கும்
நிலம்.
அந்த மழை எப்போது விடும்
என்னை..?
*
சமநிலை
காற்றும் கடலுமாய்
திசையற்ற வெளி
அலையினில் புரள்கின்றது
ஒரு சிறு படகு
எதிர்வின்றி இசைவாயும்
சாய்ந்தோடி அலையேறியும்
பயணம்.
சாயும் பக்கம் சாய்ந்தபடி
அல்லோலகல்லோலமாய்
பயணிகள் தத்தளிப்பில்
சாவின் வீச்சு அலையில்
சுழித்து வரும் காற்றில்
திடமற்ற மனதில்
ஒரேபக்கமாய்ச் சாயாதீர்கள்
கூவுகிறான் தண்டேல்
சுக்கானைப் பிடித்தபடி.
*
வராது போயிற்று காண்
ஆட்காட்டி குருவிகளும் அறியாமல்
என்புகளும் நசிந்த அந்த
ஆதங்க இறுக்கத்தின் போது
ஒளியிழந்ததே அந்த பிறைநிலவு.
பனங்கூடலின் இருட்டொதுக்கில்
உன்னிதழ்கள் என்னில் பதிகையில்
வெள்ளிகள் உலர்த்தி கிடந்ததே
ஓலை நீக்கலிடை ஒரு துண்டு வானம்
கொடிப்பந்தலிட்ட முற்றத்தில்
ஊரடங்கிய சாமத்தில்
நாம் அணைந்தொ¢ந்த தாபத்தில்
பிய்ந்துதிர்ந்ததே அந்த மல்லிகை இதழ்
மற்றவர் கண்கட்டி விரல் முகர்ந்து
விழியுள் பிணைந்த இளஞ்சூட்டில்
நீ பருகத் தந்த தேநீர் கரைசலிடை
தேயிலையுடன் நசிந்த அக்கிண்ணம்
வராத நாளில், வந்து சேரும் மடல்களில்,
மையாய் கசிந்து நீ நெகிழ்கையில்
என் முத்த எச்சில் படிந்ததே
அக்காதல் தாளின் கிழிசலொன்று
இப்படி
ஒரு பிறை நிலவு
ஒது துண்டு வானம்
ஒரு பிய்ந்த இதழ்
ஒரு நசிந்த கிண்ணம்
ஒரு கிழிசல் தாள்
கறள் கட்டியும் உருக்குலைந்தும்
இறைபடும் சேற்றிடை துரத்தியபடி
இதையெல்லாம் பொறுக்கியெடுக்கவும்
அடையாளம் கண்டு அசைபோடவும்
எனக்கு இலகுவாய் வாய்க்கையில்
வராது போயிற்று காண்
புள்ளியாய் நெருடிய உந்தன் முகம்
புள்ளிகள் தேடி அவிந்து போன நீ.
*
காணாமல் போனோர் பற்றி
மகனே மகளே
என் உதிரத்துதித்தோரே
எங்கே தான் சென்றீர்
என்னையேன் மறந்தீர்
என்ன குற்றம் செய்தேன்
எனதரும் பிள்ளைகாள்
நெல்மணிக் கதிர்களாய்
குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேனே
கறுத்தக் கொழும்பான்
மாம்பழமாய்
நினைக்க நினைக்க இனித்தேனே
பரவைக் கடல்தனில்
நீர் எறிந்த வலைகளில்
மீன்பாடாய் இருந்தேனே
கடலடித்தள மேடைகளில்
வண்டல் படிவுகளில்
வளங்களாய்த் திரண்டேனே
வரளும் நெஞ்சாங்குழிக்கு
வருடும் சுருட்டுப் புகையானேனே
பனையாய் தென்னையாய்
கற்பகதருவெனவாய் நிமிர்ந்தேனே
முற்றத்து நிலவின் தண்மையாய்
வேப்பங்காற்றின் இதமாய்
சித்திரை வெயிலில் நிழல் தோப்பாய்
மழைதூறிக் கிளம்பும்
புழுதி மண் மணமாய்
மக்காள்….
தஞ்சம் கேட்டுப் போனீரோ
என்னில்தான் குற்றமென்று
பஞ்சம் பிழைக்கப் போனீரோ
எட்டுத்திக்கும் சென்றோரே
மகிமைகளைக் கைகழுவி
அழுக்குகளைக் காவினீரோ
சொல்லுங்கள்
தோற்றுத்தான் போயிற்றோ
தமிழ் இன்பத்தேனென பாய்ந்த
நும்காதும்
தந்தையர் நாடென்ற பேச்சில்
சக்தி பிறந்த நும் மூச்சும்
நும் தொப்புள் கொடியின்
விருத்திகளில் படிந்த
எந்தன் முகச்சாயலும்
எல்லாமும் எல்லாமும்
போயிற்றா உங்களிடம்
கவலைதான் மக்காள்
காணாமல் போனவை பற்றியே
கவனம் எவர்க்கும் மிகுமாப்போல
பெருங்கவலைதான் எனக்கும்
சென்றவர்கள் வந்தடைவீரென்றே
பொறுத்திருக்குமோ
எந்தன் அடிவயிற்றுக் கனம்
காயங்களெல்லாம்
கருமையங்களாகி நாளாயிற்று
மக்காள்
ஒளிப்பிழம்பை பிரசவிப்பேன்
உங்களைக் காணாமலே
என்ன செய்ப் போகிறீர்கள்
இனி!
*
வளரும் கனாக்கள் துயிலாத நான்
முதலாம் கனா
இறந்துபடும் சூரியன்
அலையடங்கும் தொலைகடலில்
வெளிறிவரும் ஆழ்நீலம்
தேங்கிய குட்டையில் பாசிப்பச்சையாய்
நிரைகுலைந்து இரையும் அலை
அறுபட்டசேவலின் செட்டையடிப்பென
கரைநக்கும் நுரையின் நுனியில் குருதி
குருதிக்குள் துருத்தும் முலைக்காம்பு
மிதக்கும் துடுப்பைப் பற்றிய பாதிக்கை
எரிந்த பாய்மரத்தண்டில் கருகியமயிர்
இறுக்கிக் கவ்வும் சிவப்பாடையில் சடலம்
கடலூதிப்பருந்த முண்டத்தில் வடியும் ஊனம்
பிளவுபட்ட கபாலத்துள் வட்டெழுத்துக்கள்
நரம்புப்பின்னலில் அதோர் சாதிப்பெயர்
மாமிசத்தை உண்டு செரிக்கிறது அரசமரம்
ஒடிந்த கிளையிலும் வெட்டுப்பல்
தந்தப்பிடியிட்ட வாள்தனைச் சுழற்றிடும்
சிங்கமுதுகில் மதயானையின் சவாரி
மனிதம் மேவாத விலங்கின ஆடலில்
வெளிக்கோட்டில் ஆடுபுலி ஆட்டம்
கதைகதையாம் காரணமாம் என
நாட்டுவளப்பம் கூறும் கிணற்றுத் தவளைகள்
பாம்பின் நாக்கென முன்முனை ஆட
மீன் வாலுடன் நீச்சலடிக்கும் பேனா
கள்ளியும் நாகதாளியும் காற்றாழையும்
மடல் விரித்துப் பரப்பும் நிழலில்….
சிறு நண்டு மணல் மீது
படமொன்று கீறும்”
எழுவான் கரையில்
தனியனாய் நான்.
இரண்டாம் கனா
விழுந்து கிடக்கும் வானம்
புல்வெளி மடங்கும் மலையிடையில்
மங்கிவருகின்றது பயிர்ப்பச்சை
காய்ந்த கதிரின் செம்மஞ்சளாய்
தேவதச்சர்கள் தேவதைகளுடன் புணர்ந்துலவ
கொட்டிக்கிடக்கும் கடவுளரின் கடைக்கண்கள்
தங்கத்தால் வார்த்ததெருக்களிலிடையே
பிளாட்டின தூண்களில் தூங்கும் தாரகைகள்
காவித்துகில் போர்த்தபடி அலையும் உரு
மயிர்த்திரையுள் முகம் புதையும் ஜீசஸ்
நேரகாலம் அழிந்தழிந்து கொழிக்கும் பணம்
உருகி ஒழுகும் கடிகாரம்
வளர்கின்ற கட்டிடங்களில் முளைத்த கால்
கணுக்கால் எலும்பில் பொறித்திருக்கும் பூர்வீகம்
பொழியும் அமில மழையுள் கரையும் இயற்கை
மொட்டைக் கொப்புடன் மூளியாய் மரங்கள்
அச்சில் பதிந்துவரும் பத்துவீதக் கறுப்பாய்
வெண்பனிப் பரப்பில் படரும் குருட்டுநிலவு
ஒலிவ் கிளைக்காவி நோவாவுக்கு அமைதிசொன்ன புறா
பனிப்பரப்பில் தலைக்குப்புற குண்டடிக் காயத்துடன்
ஓலிவ் இலைக்காம்புகள் ஒவ்வொன்றிடையும் சீறும் அணு
ஓலிவ் இலைக்காம்பிடையும் சீறும்
கந்தகப்புகையில் உயிரினச் சுத்திகரிப்பு
அகோரப்பசியில் அலைகின்றன டைனோசர்கள்
அவை சப்பித்துப்பிய எச்சங்கள் புளித்தகாடியுள்
வகைதொகையற்று மொய்க்கின்றன எறும்புகள்
எறும்புகளின் ஆவியை அரிந்துண்ணும் இனிப்பு
மெல்லெனக்கசியும் குளிர்காற்றிலும் கரையும் பாடல்
நசிபட்ட சிற்றெறும்பொன்றின் ஈனக்குரல்
ஊரான ஊர் இழந்தேன்
ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்…!
உறையும் பனியில்
உருகி ஒழுகும் நான்.
அரக்கப் பரக்க எழாத எந்தக் காலையிலும் கூட
கிளர்த்தும் ஆழ்மனம்,
அம்மாவும் சொல்வதுண்டு
விடிகாலைக் கனவுகள் பலிக்குமாம்
கலையும் துயில்.
*
கி.பி. அரவிந்தனின் நூல்கள் :
இனி ஒரு வைகறை – பொன்னி வெளியீடு
கனவின் மீதி – பொன்னி வெளியீடு
முகம் கொள் – கீதாஞ்சலி வெளியீடு
மிச்சமென்ன சொல்லுங்கப்பா – ஒளி வெளியீடு
நூலகம்: