பக்கத்துக்கட்டிலின் அன்பு
கவியுலகை ஒரு வைத்தியசாலை எனக்கொண்டால் அதில் ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு துறை நிபுணர்கள். சிலர் இதயத்திற்கானவர்கள், சிலர் மனதிற்கானவர்கள், சிலர் பெண்களுக்கான விசேட நிபுணர்கள்… இப்படி வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இதில் நிபுணத்துவம் உண்டு. ஆனால் அங்கிருக்கும் நோயாளியொருவரின் மனவுலகின் அடுக்குகள் அன்றாட நுண்மைகளால் துயர்களால் வேடிக்கைகளால் நம்பிக்கைகளால் ஆனவை. ஒரு பக்கத்துக் கட்டிலில் இருப்பவரின் துயர் கேட்பதெனவும் பரிவு கொள்பவரினதும் பாவனை கொண்ட கவியுலகு ந. சத்தியபாலனுடையது.
மொழியின் மென்னுடலைக் கனிவுடன் தொடும் குழந்தையின் மனஉலுக்கல்கள் கொண்டவை அவரின் கவிதைகள். நிராசை, தனிமை, கைவிடப்படுதலின் துக்கம் என வாழ்வின் மனவிசைகள் இழுபடும் நிழலென அலையும் அவரது கவிதைகளில் அதே நேரம் வாழ்வின் மீதான வேட்கையும் கல்லின் சிறகுகளென முளைப்பவை. நம்பிக்கை சுடர்பவை.
எளிமையான கனிவு தாங்கிக் கொள்ள முடியாதது. அதன் முன் மானுடம் வேழத்தின் மண்டியிடல் எனப் பணிந்தே ஆக வேண்டியது. பக்கத்துக் கட்டில்காரன் கையுறையாய்த் தந்துவிட்டுப் போன தோடம்பழங்களின் சுவை கொண்டவை அவரின் கவிதைகள். ஒரு தடவை அப்படியான பரிவின் கணத்தைச் சத்தியபாலன் என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த அன்பை அந்தக் கனிவை ஒரு குழந்தையின் தீவிரத்துடன் எதிர்கொள்பவர் அவர்.
அவரின் கவிதைகளின் சங்கீதம் நுண்மையாக்கம் கொள்ளும் மெளனங்களால் ஆனவை. அவற்றுக்குள் ஆற்றின் உள்ளோடும் வேகமும் கேட்க முடியாத அதன் உள் ஒலியும் தாளம் குலையாமல் ஓடுபவை.
*
கூத்து
மேலும் ஒரு விளக்கு
சுடரவிந்து மெல்லிய சாம்பர் வெண்கோடாய்ப்
புகை நெளிந்தது…
சௌகர்யமாய் அமர்ந்து கொண்டது
இருள்
பணி முடிந்த திருப்தியுடன்
வெளியேறிற்று பேய்க்காற்று
பயணங்கள் திசையிழந்தன
சக்கரங்கள் மெல்லென ஓய்ந்தன
பாடல்கள் இடைநிறுத்தப்பட்டன
மேலும் மேலும் வேறு இடங்களில்
விளக்குகள் அணைந்தன
கோரப்பற்கள் துருத்திய வாயொடு
குதித்தாடத் தொடங்கியது இருள்
சாமப்பொழுதில்
தொலைவுகளில் ஓங்கியொலித்துப் பின்
ஓய்ந்தடங்கிப் போயின ஓலங்கள்
நோயொடு புலர்ந்த காலையில்
தெருக்களும் நிலங்களும்
கழுவப்பட்டிருந்தன
சுவர்கள் புதுவர்ணம் தீட்டப்பட்டிருந்தன
குளித்துப் புத்தாடை அணிந்து
போய்க்கொண்டிருந்தோரின்
கவனத்துக்குத் தப்பிய கால்விரல்
இறைகளுக்குள்
உலர்ந்து போயிருந்தது.
இரத்தம்.
*
தரிசனம்
திடீரென ஒரு நாள் இனிப்புப் பூச்சுகள்
கரைந்துபோயின
உள்ளீடு நாவைத் தொட்டுத்
சொல்லிற்று
எழுந்த குமட்டலில் .. எதிரே
நிஜத்தின் குரூரமுகம்
பழைய பசுங்கனவு சோப்பு நுரைக்
குமிழியாய்
காற்றில் மெல்ல மிதந்து போயிற்று!
*
சிறகடிப்பு
வாழ்தலுக்கான எத்தனங்களே
“வாழ்க்கை” என நம்பி
வருஷங்களை விழுங்கியாயிற்று
மனதில் விரிந்த உருவை
ஒரு சிற்பமாய்ச் செதுக்கிக் கொள்ள
முனைந்து முனைந்து
உடைந்த துண்டங்களே
கண்முன்
முழுமை செய்யும் முனைப்புடன்
மீண்டும் தொடங்குகையில்
எல்லாவற்றையும்
காலால் எற்றிப் போகும்
ஒரு விபத்து
சிதைவோடு சிதைவாய்
நொறுங்கிக் கிடப்பவனை
அனுதாபப் பார்வையால்
எரிக்கும் உலகம்
தொலைந்த ஆர்வத்தை
மீண்டும் தேடும்
தாகம் தருவதென
நிழற்றும் மேகங்களின்
நிரந்தரத்துவத்துக்கு ஏங்கும் மனசு
ஈயப் பாறைகள்
காலிற்
பிணைத்து
மெல்ல நகரும்
காலம்.
*
ஒரு புழுக்கூட்டின் கதை
கனியின் அழுகிய பாகம் உழுது
நகரும் புழு
முகூர்த்தம் பார்த்து வெளியேறி சுயரூபம்
காட்டும்
அறிந்த முகமும் அந்நியமாகும்
பூச்சுக்கள் அணிகள் கிரீடங்கள்
அனைத்தும் இழக்கும் அர்த்தம்
எதிர்ப்பட்ட கண்ணாடிகளில் சிதையும்
விம்பம்
அழுத்தம் தாளாது வெடித்துச் சிதறும்
வீட்டின் நிலைக்கண்ணாடி
எதையுமுணராது பளபளக்கும்
நிறங்களுடன்
நின்றசையும் வெறுங்கூடு…
*
வெளிகளும் மூலைகளும்
சிரிப்புத் தவழப் படியேறும் புதிய முகம்
மகிழ்ச்சி தருகிறது…’
கேளாமலேயே சிரமமுணர்ந்து உதவ
முன்வரும் கைகள்
நம்பிக்கை தருகின்றன…
துயரவதைப்பில் உயிரொடுங்கி
அமர்கையில்
பார்வையால் புரிதல் காட்டி மெளனமாய்
அருகமரும் துணை
தெம்பூட்டுகிறது…
அழுகை தொண்டையிலடைக்க
விழிபனித்துத் தணிகையில்
ஆதரவாய்க் கையை அழுத்தும் சிநேகம்
இதமாயிருக்கிறது.
உரிமையாய் மடியமர்ந்து
வெள்ளைச் சிரிப்புடன்
நாடி தொடும் பிஞ்சுக்கை
மனசை நிறைக்கிறது.
ஒரு விசேஷமான செயலூடு
அடிமனப்பிரியத்தை வெளிக்காட்டும்
இனிய உறவு
வாழ்தலில் ஆர்வம் தருகிறது…
கூடவே இருப்பினும் மனசுக்குள்
கோடிழுத்து
தனதென்றும் உனதென்றும் வகை
பிரிக்கும் உறவு மட்டும் அச்சுறுத்துகிறது
எப்போதுமே.
*
இன்னுமொரு நாள்
கண்களை இருள்கவ்விய
கணங்களுக்குள்
அது நிகழ்ந்தது
ஒரு சில
குளறலாய் எழுந்த ஓலம் வெளியிற்
கலந்து கரைந்தது
வீதியிற் சிந்திய குருதி பரவி
உறைந்தது…
எல்லாம் முடிந்ததெனக் கிளர்ந்த
எக்களிப்பின் முகத்தில்
புழுதியை வாரியள்ளிச் சொரிந்தபடி.
விரைந்தது காற்று
வரலாற்றின் பதிவேட்டில்
மேலுமொரு பக்கம்புரண்டது…
மறுநாட் காலையிலும்
கோழி கூவிற்று,
பறவைகள் இசைத்தன.
நாள் நடந்தது.
மதியம் மாலை, எனப் பொழுது முதிர்ந்து
மீண்டும் இருளாயிற்று.
*
இரண்டு பேர்
இருவர் அமரத்தக்க
இருக்கையினைத் தான்
பகிர்ந்து கொண்டோம்
நான் யன்னலோரமாகவும்
நீ என்னருகிலும் அமர நேர்ந்தமை
தற்செயலானது தான்
யன்னல் வழி வீசிய காற்றும்
காட்சி தரிசனங்களும்
திட்டமிட்டுப் பெற்றவையல்ல
நீயோ
அவற்றை என் அதிர்ஷ்டங்களென
எண்ணிக் கொண்டாய்
நின்று பயணித்தவர்களால்
நீயடைந்தசங்கடங்கள்
நெடுமூச்சுக்களானதை
உணரத்தவறிப் போனேன்
நான்
ஏதோ ஒரு கணத்தில் உன் குரலில்
தொனித்த குரோதத்தின் கந்தக நெடி
நாசியைத் துளைக்க
திடுக்குற்று நிமிர்கையில்
நீ வெகுதூரம் போயிருந்தாய்
ஒன்றாய்த் தொடங்கிய பயணம்
இடை உடைந்தது.
இறங்கி நடந்தோம்
எதிரெதிர்த் திசைகளில்
நாம் பகிர்ந்த இருக்கையில்
வந்தமர்ந்தனர்
வேறு இருவர்.
*
கனவு
முழுவதுமாய் நிரம்பிவிட வேண்டும்
என்பதே கனவு
மட்டம் சிறிது சிறிதாக
உயர்ந்து வருவதாய்
உணரப்படுகையில்
மனசு பொங்கும்
அருவிக்கு நேர்கீழாய்
அமர்ந்திருப்பதே போல்
பரவச முறும்
ஒரு சமயம்
விலகிப் போய்
வெகுதூரம் எறியுண்டு போவதாய்
ஏக்கம் கவ்வும்
மனமூலை ஒளிப்பொட்டு
சுடர்விடுகையில்
மீண்டும் துளிர்க்கும் கனவு..
முழுவதுமாய் நிரம்பி விடவேண்டும்
ஒரு நாள்!
*
ந. சத்தியபாலனின் நூல்:
இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும் – அம்பலம் வெளியீடு
நூலக இணைப்பு: