யட்சி வதியும் சரக்கொன்றை

யட்சி வதியும் சரக்கொன்றை

தலம்: புவி
தரு: சரக்கொன்றை
பாடலருளியவர்: பெருந்தேவி

எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமிடையில் ஆடும் பொன் ஊஞ்சலென மொழியில் நிகழ்ந்தவை பெருந்தேவியின் கவிதைகள். பெண் தன்னிலைகளின் உன்மத்தமும் சீற்றங்களும் கசப்புகளும் பெருந்தேவி கவிதைகளில் ஆடுகின்றன. சொற்களவ் ஊஞ்சலில் குழந்தைகளைப் போல் வந்தமர்கின்றன. மெல்லக் கால் ஊன்றிப் பிற்காலத்திற்கும் எதிர்ப்படும் காலத்திற்குள்ளும் தலையும் காலும் நுழைக்கும் கவிதைகள். அவரது கவிதைகளில் உள்ள வாழ்க்கைகள் கடந்ததும் இன்றையதும் எதிர்ப்படுவதுமென முக்கால விருட்சத்தின் கிளையில் தொங்குபவை. இந்தத் தன்மை தமிழில் அரிதானது. பெண் கவிகளில் அறிவார்ந்த தன்மையையும் சொல்லெழிலையும் பின்னலென ஆக்கியபடி விரையும் மொழிக்கரங்கள் வாய்த்தவர்.

பழந்தமிழிலக்கியத்தில் வேர் நீண்ட சுனைத்தெய்வமென சரக்கொன்றை மரத்தின் கீழ் அமர்பவர். அவரது கவியுலகின் தொடுகைகள் மானுட அகத்தின் புதிய களங்களை நுண்ணசைவால் தொட்டு உசுப்புபவை. பொலபொலவென அவை உதிரச் சிரிக்கும் தேவியென அவரது கவிதைகள் வீற்றிருக்கின்றன.

பெருந்தேவியின் கவிதைகளுக்குள் ஓடும் சங்கீதம் சொல்லிணைவின் தித்திப்பும் வியப்பின் கூர்கணங்களாலும் ஒலிகொள்பவை. தாழ்ந்தும் உயரும் அருட்கரங்களால் இசைக்கப்படுபவை.

(பெருந்தேவி)

*

வராத செய்தி

ஆழ்கடலில் அல்லாதவற்றுக்காய் காத்திருக்கும் முத்துக்கொத்தோ
போகாத செவ்வரளிப் பூப்பாதையில் கலந்துவிட்ட தங்கச் சாவியோ
சுற்றி வருபவர்களில் ஒருவராய் மாறிவிட்ட குருட்டு வேதாளமோ
மறைத்த திரையை அவிழ்க்காமல் காத்து இரட்சிக்கும் அருட்கரமோ
யானறியேன்
வராவிட்டாலும் வராதே இருக்கட்டும் வராத செய்தி.

*

தேர்வு : இடம் பொருள் காலம்

முலையில் வாய் வைத்த ரோபாட் நான்கு எண்களில்
ஒன்றை அழுத்தச் சொன்னது
முலையோடு விளையாட சப்ப எண் ஒன்றை அழுத்து
மேற்சொன்னதை பேசிக்கொண்டே விரைவாகச் செய்ய
எண் இரண்டை அழுத்து
மேற்சொன்னதை வசவுச் சொற்களோடு விரைவாகச் செய்ய
எண் மூன்றை அழுத்து
இதுவரை அனுபவிக்காத பரவசத்தில் நீ கண்ணீரைச்
சிந்தும்போது அதை நான் துடைத்து விட எண்
நான்கைச் சேர்த்து அழுத்து.

*

உடல் பருத்த பெண்

நான் உடல் பருத்த பெண்
நடக்கும்போது மூச்சு வாங்குகிறது
நரைகளைப் பற்றி கவலையில்லை
பொடி எழுத்துகளைப் படிக்க கண்ணாடி தேவைப்படுகிறது
ஆனால் படிக்க முடியாது
எனக்கு சுகமாக நித்திரை வருகிறது
எந்தக் கனவுக் கோளாறுமில்லை
இரவில் படுக்கையில் படுத்தபடி
ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்
ஒரே நட்சத்திரக் கோலாகலம்
இப்படி நிரூபிப்பதெல்லாம்
அவசியமில்லையேயென்று
எப்போது புரியப் போகிறது
முட்டாள் கடவுளுக்கு.

*

ஒரு நினைவூட்டலின் விலை

நீண்ட உறவுக்குப் பின்
நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது
சென்றுவிடும் ஒரு காதலன் எனக்கிருந்தான்
அதில் பிரச்சினையில்லை ஆனால்
ஒவ்வொரு முறையும்
அவன் சென்றபின்
அவன் விட்டுச் சென்ற condom
என் பாதத்தில் இடறும்
தூக்கம் கலைந்துவிடும்
தூக்கத்தின் முன்பான அமிழ்தம்
கசந்து போய்விடும்
ஒருமுறை அவனிடம்
தயங்கியபடி சொன்னேன்
“அதை மறக்காமல் எடுத்துப்போட்டுவிடு”
“எதை?”
அவனுக்கு உண்மையில் புரியவில்லை
கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு
பதில் சொன்னேன்
என் கூச்சத்தை மறைத்துக்கொள்ள
அது ஒரு வழி அதன்பின்
அந்த அறைக்குள்
எந்த அறைக்குள்ளும்
நாங்கள் பார்த்துக்கொள்ளவில்லை
ஒரு நினைவூட்டலில்
வற்றிவிட்ட காதல் நீரூற்றுக்காக
பல இரவுகள் பல பகல்கள்
மோட்டுவளையைப் பார்த்தேன்
அவன் நல்ல காதலன்
மற்றபடி என்னைத் தன் கையில் வைத்துத்
தாங்கிக்கொண்டிருந்தான்
அதன்பின் நான் காதலித்தவர்களுக்கு
நினைவூட்டத் தேவை இருந்ததில்லை
ஆனால் அவர்கள் கைகளில்
பெண்கள் கூட்டங்கள்
நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்ததால்
நான் இறங்கிவிட நேர்ந்தது.

*

மற்றதெல்லாம் விஷயமேயில்லை

கவிதை எழுத எனக்கு
நாள் நட்சத்திரம் வேண்டாம்
நேரம் காலம் வேண்டாம்
எனக்கே எனக்கான அறை
மேலதிக வசதிதான்
ஏன், பத்திரிகை வேண்டாம்
பேஸ்புக் போதும்
பூசலார் நாயனார் மனதுக்குள்ளேயே
கட்டிக் காட்டியிருக்கிறார்
விமானத்தையும் சிகரத்தையும்
மதிலையும் திருக்குளத்தையும்
கவிதையின் கோயில்
அவ்வாறே அமைகிறது
ஒரு கவிஞருக்கு வேண்டியதெல்லாம்
உள்ளே
அப்பாலான
கோபுரத்திலிருந்து
அழைக்கப்படும்போது
எங்கே பறந்துகொண்டிருந்தாலும்
திரும்பத் தயாராக இருப்பது மாத்திரமே
ஆனால் அதற்கு நீ
முதலில் ஒரு புறாவாக இருக்கவேண்டும்.

*

எப்படிக் கவிதை
எழுதுகிறீர்கள்?

சந்தைக்குப் புதிதாக வந்திருக்கிற
வசீகரமான டில்டோக்களைப் போல
பார்த்துத் தேர்ந்தெடுத்த சொற்கள்
வழுக்கிக் கொண்டு செல்ல வேண்டும்
திட்டமென்னவோ உங்களுக்கு உதவியாக இருப்பதுதான்
ஆனால் சொற்களுக்கு நடுவில்
சில பாம்புகள் புகுந்துவிட்டன
வாயை வேறு திறந்து வைத்திருக்கின்றன
நீங்கள் விழுந்து விடுகிறீர்கள் அவற்றுள்
ஆனால் இந்தப் பாம்புகளை நான் விடவில்லை
நம்புங்கள் நான் அத்தனை மோசமில்லை
ஆனால் உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை
இந்தப் பாம்புகளுக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறேன்
விழுங்கித் துப்பி விழுங்குகின்றன
மாணிக்கமாக முடியாத
சாதாரணத்தை…

*

நவம்பர்

சாத்தானின் ஆன்மா உறைந்து போய்விட்டது
வகுப்பறையிலிருந்து அலுவலகத்துக்கு நூறு அடிகள்
சாவின் போர்வை போல
வெள்ளை நிலத்தில்
சில தலைகள் நட்டுவைக்கப்பட்டிருக்கின்றன
கண்களாலேயே புத்தகங்களை அவை புரட்டுகின்றன
அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகள்
அவற்றுக்கும்
வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை
அவள் தன் குதிகால்களைக் கவனமாகப் பதித்து நடக்கிறாள்
சறுக்கிவிடாதபடிக்கு
அவளுக்கும் இந்த நிலத்துக்கும்
எந்தச் சம்பந்தமுமில்லை
துருவப் பனி வேக வேகமாக
ஓடி வருகிறது கடலுக்கு
யாரோ ஒருவர்
அவசர அவசரமாக ஸ்டாப் என்கிறார்
துருவப் பனிக்கும் கீழ்ப்படிதலுக்கும்
எந்தச் சம்பந்தமுமில்லை
அவள் ஜன்னல் வழியே பார்க்கிறாள்
பார்க்க ஒன்றுமில்லை
கடவுளின் அருட்கைகள்
ஆளில்லா ரயில்வே கேட்களில்
உயர்ந்து தாழப் பழகிக்கொள்கின்றன.

*

எல்லோருடைய நாட்களும் ஒன்றல்ல

பார்த்திருப்போம்
அவமானத்திலிருந்து தொடங்கும் பலருடைய நாட்கள்
அவமானத்திலேயே முடிகின்றன
சந்தேகத்தின் முன்னால் தூக்கம் கலைந்து
அதன் முன்னால் தூங்கச் செல்பவர்கள் உண்டு
சூரிய உதயம் அஸ்தமனம் எல்லாம்
வெகு சிலருக்கானவை
பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு
மனதிலிருந்து கூப்பிட்டாலும்
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர
ஆட்கள் இருப்பவர்களுக்கு
வசதிகள் இருப்பவர்களுக்கு
குடும்பத்தில் நம்பிக்கை என்பது ஒரு வசதி
சூரியனின் காலை, மாலைக் காட்சிகளை
குடும்பமாகப்
பெரும்பாலும் தவறாமல் கண்டுவிடலாம்
மற்றபடி
சாட்டையை எப்படிச் சொடுக்கினாலும்
உன் குதிரை
அந்தியில் வந்து நிற்கப்போவதேயில்லை.

*

சரக்கொன்றையிடம் மன்னிப்பு

வெகுநாள் கழித்து சிநேகிதி வந்திருந்தாள்
வாடிய முகம்
இருவர் தட்டிலும் சோற்றைப் பரிமாறிவிட்டு
அவளிடம் கேட்டேன்
நீ அவனைக் காதலிக்கிறாயா என்ன?
பல நூற்றாண்டுகளாக
பல உணவு வேளைகளில்
பல சிநேகிதிகள்
அச்சத்தோடு கேட்ட அதே கேள்வி

பிறகு அவளிடம் எடுத்துச் சொன்னேன்
அந்தக் காதலின் அரைக்கிறுக்குத்தனத்தை
சூனியக்கார வலையை
வானில் இல்லாத நட்சத்திரங்களா?
ஒருவனுக்குப் பின்னால் ஏன் ஒருத்தி
தன்மேல் தானே தீப்பந்தம் சுமந்து
நடந்து போக வேண்டும்?
ஒருவனுக்காக ஏன் ஒருத்தி
தன்னையே அரிந்து உப்பிட்டுத்
தின்னத் தரவேண்டும்?

ஒரு பெண்ணியவாதிக்கு இதெல்லாம் என்ன புரியும்?
ஒரு புத்தகப் புழுவோடு யார்தான்
சிநேகமாக இருப்பார்கள்?
வசந்தத்தின் முடிவில் பூக்குமே சரக்கொன்றைப் பூ
அதையாவது பார்த்திருக்கிறாயா நீ?
தட்டை விசிறிவிட்டு எழுந்து போனாள்

சரக்கொன்றை ஏன் பூக்கிறது?
வசந்தம் ஏன் முடிந்துபோகிறது?
வசந்தம் முடியும்போது பூக்கும்
இதுவரை பார்த்திராத
சரக்கொன்றையிடம்
எதற்கென்று நான்
மன்னிப்பு கேட்பது?

*

நேர்

கவிதையெனப்படுவது
யாதெனில்
உன் கண்ணை நேருக்கு நேர் பார்க்க வேண்டும்
தவிர்த்துப்
பார்வையைத்
திருப்பிக்கொண்டால்
உன் தாடையை உடைத்து
முகத்தை தன் பக்கம்
திருப்பிவிடுமோ என
அச்சம் தரும் வகையில்
வலிமையாக
அந்த வலிமை
அதன் நேர் மட்டுமே.

*

இளம் கவிஞர்களுக்கு

ஊரில் மிச்ச மீதி மரம் இருந்தால்
அதில் உங்களைக் கட்டிவைத்து அடித்தால்கூட
உறுதியாக நிற்கவேண்டும்.
‘கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம்.
வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும்
என்கிறான் மகாகவி பர்ரா’
இந்நாள் வரை
கவிதையை கவிதையைவிட
தைரியமே காப்பாற்றியிருக்கிறது
வரலாற்றில்
கடக்க ஒரு மரப் பாலமும்
பேச சில மண்டையோடுகளும் இருந்தால்
போதாதா?…

*

பெருந்தேவியின் நூல்கள்:

உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்
(உயிர்மை, 2021)

இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம் (உயிர்மை, 2020)

விளையாட வந்த எந்திர பூதம் (யாவரும், 2019)

பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் (விருட்சம், 2017)

அழுக்கு சாக்ஸ் (விருட்சம், 2016)

வாயாடிக் கவிதைகள் (விருட்சம், 2016)

உலோக ருசி (காலச்சுவடு, 2010)

இக்கடல் இச்சுவை (காலச்சுவடு, 2006)

தீயுறைத் தூக்கம் (விருட்சம்-சஹானா, 1998)

TAGS
Share This