பச்சை மொழி

பச்சை மொழி

கவிதையின் அலங்காரங்கள் பொறுக்க முடியாத ஒருவர் அதனைக் கழற்றி வீசி எறிந்து கொண்டே எழுதும் கவிதைகள் என கற்பகம் யசோதரவின் கவிதைகள் மொழியில் நிகழ்கின்றன. பைத்தியமூட்டும் நம் காலத்தினது பெண் தன்னிலையின் குரல்கள் பித்தியும் ஆங்காரியுமாக எழுவதன் ஒரு கீற்று அவரிலும் திகழ்கிறது. மொழி தன் அறிவார்ந்த பச்சைத் தன்மையால் எழுத விழைபவை அவை.

கற்பகம் யசோதரவின் கவியுலகில் யுத்தமும் அதன் அக இடுக்குகளில் மரித்த உயிர்க்கணங்களின் அலறலும் சமூக அமைப்பில் பெண் தன்னிலை எதிர்கொள்ளும் அந்நியமும் ஒருங்கே திரளுகின்றன.
தான் இதுவல்ல என்று உணரும் சுயமொன்று நீரில் நடக்க முடியாத தன் கால்களால் நீந்தக் கற்றுக் கொள்வது போல் யசோதரவின் கவிதைகள் மொழியில் நீந்துகின்றன.

உரையாடும் பாங்கினுடைய இசைத்தன்மை இவரது கவிதைகளில் நிகழ்கின்றன. கவிதைக்குள் உள்ளோடும் ஆன்மாவின் திணறலும் மூச்சுமுட்டலும் தாளமென விரவும் கவிதைகளும் உள்ளன.

*

பெயர்களைக் கொண்டலைதல்

என் முன்னால் ‘அவர்கள்’
உடல்களாக ‘இருக்க’த் தவறுகின்றனர்
மாறாய்
சுடப்பட்டபோதில்
வீட்டுக் கேற்றில் தெறித்திருந்த
இறுதியில் எழுதிய பிரதியிலிருந்து
கணணி நொறுக்கப்பட்டு
கொட்டும் குருதியாய்
எதிர்காலத்தின் வாக்குறுதிகளற்று
அவசரத்தில் கவ்விய உதடுகளென
தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதமிகு மாலைகளில்
செல்லும் தெருவுகள்
விம்மும் உதடுகளைக் கொண்ட
பெயர்களை முணுமணுக்கின்றன
நிதம்ப மேடுகளில் படியுமந்த ஏக்கம்
விளக்கினை ஏற்றி வைத்து
யாரையோ பார்த்திருக்கும் முகங்களை
பிரதிசெய்ய
கைவிட முடியாத பெயர்களுடன் வாழுதலா
சுமந்தலைதலா
ஒரு விடியலில்
பெயரறியாதவனைப் பின்தொடர்ந்து சென்று
புணர்ந்துவிட்டு வருவதா
எது இயற்றப்பட்ட விதியாதல் கூடும்?

*

காத்திருப்பை விடவும் மேலானதாகும்
தினம் கடந்து செல்கிற பாலத்தை உபயோகித்தல்
இதை நான் அணுஅணுவாய் உணருகையில்
கவிஞன் ஒருவன்
தான் அன்றைக்கே கடந்து விட்ட எவளையோ
தனக்காய் என்றைக்கும் காத்திருக்க எழுதிய
‘ஓர் உன்னதப் பிரதி’யை விரித்து
என்னை வெறுப்பேற்ற
உருக்கமாய்ப் படிப்பார்கள் யாரேனும்

இன்று:
கண்ணீரும் வலியும்
மெழுகுவர்த்திகளும்
நீயற்ற வெறுண்மையும்
மிச்சம்.
நான் செத்த பிறகு
பிள்ளைகள் படிக்கவென
கட்டுக் கட்டாய்
அறையொன்றுள் நிரப்பி வைத்த
கதைகளோ
கனதி தாங்காது
குரல் எழுப்புகின்றன
மரண ஓலம்.
வீரகாவியங்கள் சொல்லும்
கோசங்களையோ
கிடைத்திராத தேசங்களதும்
பின் தொடரும் தலைவர்களதும் அன்றி,
அன்புக்குரியவர்களின் பெயர்களையே உச்சரித்தவாறு
மடிந்து போனவர்கள்
படபடக்கும் கடதாசிகளிலிருந்து எழுந்து
சொல்கிறார்கள் – தாம் இறுதியாய் சொல்ல விரும்பியதை.
கடவுளே
அன்பே
அது ஏன் எப்போதும்
இதயத்தை நொறுக்கும் பெயர் ஒன்றாய் ஆகிறது?
யாரோ ஒரு தகப்பனின்
ஆசைக்குரிய பிள்ளையின் பெயர்
உன்னுடையதானது எங்ஙனம் நிகழ்ந்தது?
மிச்சமுள்ள மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டு
கட்டிலில் விழுகையில்
என் வீடு
நீத்தவர் பாடல்களால் நிரம்பி அழுதது
நிறுத்தவியலாத படபடப்பு
குறிப்பின் பக்கங்கள் எங்கணும்.

*

1

இக்குறிப்புகளைப் படிக்கிறபோது பலவாறுணரலாம்

வழியற்றவனின் கை அடிப்புப் போலவோ
காட்டுக்குள் நுழைவது போலவோ
இக்குறிப்புகளை படிக்கிற போது பலவாறுணரலாம்
பெண் மொழியில்
எதிர்பார்க்கப்படுகிற ஒரு அரசியலாய்
‘நீவீர் விரும்புகிற எல்லைகளுள்
என் சொற்களை
நிறுத்துகிறவளாயோ
பின்தொடருபவளாயோ – நான்
இல்லாது இருப்பதால்.
(அதற்கெல்லை போடுதல் வேலையல்ல;
சிலர் சொற்களை உபயோகிக்கிற விதம், அவ்விதம்!)

You see
I will colour them
According to ‘ma’ heart & its conscience.
Not following ‘Ur’ sick rules.
நான்
உம் விதிகளுக்கமைய வர்ணம் தீட்டேன்
என் அறிவும் இதயமும்
நீங்கள் விலக்கிக் கிழித்தெறிந்த
பக்கங்களில் இருக்க
என்னை
எந்த அடையாளத்துள் நுழைப்பீர்கள்?
உங்களைப் போலன்றி
உறவை ‘உடலால்’ விரும்புதல்
நேர்மையின் பெருமடையாளம்
தற் பிரேமங்கள்
‘இருத்தலின்’ அடையாளம்.

கோலாகலங்கள்
கேரளத்தில் ஒடுக்குதலை எதிர்த்த
மூதாதையர் spirit ஊடாய் வந்தது.
லயங்களை ஒத்த ஒற்றைத் தன்மையான
reserve சிறைகளுள் இருந்து
பூர்வீகக் குடிகள் பாடினார்கள்
ஆக்கிரமிக்கப்பட்டதான
எமது நிலத்தில் வசிப்பவளே
கற்றுக் கொள்
கற்றுக் கொள்
சஞ்சலமும் பேதலிப்புமாய் ஆன
எழுதப்படாதவொரு வரலாற்றை.

*

கவிஞர்களின் குசு

‘வெள்ளவத்தையில்
இப்படியான ஒரு மாலையில்
கடற்கரையில் நடக்கையில்’
இவ்வாறென் வாழ்வின் பாடுகளை
எழுதிச் செல்கையில்
கவிஞர்கள் ஏங்குகிறார்கள்
தாம் அதிலொரு இடையீடாய் இருக்க.
மேலும்
எமது துரதிர்ஸ்டம்
அவர்கள் நம்புகிறார்கள்
எம் பிரதிக்கு
உயரியதொரு சிறப்பை
அது வழங்கிவிடுமென.
எனது கஸ்ட காலம்
சிறுமியாய் இருந்தபோது நான்
இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த
அந்த புகையிரதத்தில் ஏறிவிட்டிருந்தேன்
நச்சியக் கதைகளுடன்
எவளுடையவோ காலத்தை வீணாக்கிவிட்டு
ஆசுவாசமாய் திரும்பிக் கொண்டிருந்தவர்கள்
தனிமையில் குசு விட்டுக் கொண்டிருந்தார்கள்
அதுவுமில்லாமல்
‘விட்டது வேறு யாரோ’ என்பது போல
பாவனையில் இருந்தார்கள்
வழியெங்கும்
விரித்துப் படிக்கும் எந்த நூலிலும்
தமது நோயுற்ற “கவிதை”களையே
கண்டு கொண்டிருந்தார்கள்
நாற்றமெடுத்த இரயில் பெட்டிக்குள்
அவர்களுடன்
நானொரு சிறுமி – இருந்தாலும்,
“இவளொரு நாள் பெரியவள் ஆவாள்
பிறகு… என்ன ஒரு இனிய கனவு!”
போகையில் எதுக்கும் இருக்கட்டுமென்று
விட்டுச் சென்றார்கள்
அவர்களது கவிதைகளை.
பரவுண்ட நாற்றம் போக்க
யன்னல்களைத் திறந்துவிட்டு – அவற்றை
நானெடுத்துப் படித்தபோது
அக் கவிதைகளில்
அவர்கள் குசு விடும் சத்தத்தைக் கேட்டேன்…
பிறகெப்போதோ
பெரும் கூட்டங்களில் அவர்கள்
‘ஒரு நல்ல கவிதை எப்படி இருக்கும்?’ என்றுகொண்டிருந்தபோது
“குசு விட்டுக் கொண்டு!” என்று சொல்லிச் சிரித்தேன்
அப்போதும் நான் சிறியவளாய்த்தான் இருந்தேன்
மிகவும்!

*

இத் தெருக்களில்

பெயரொன்றின் அலறலுடன்
யாரும் அறியாதது அல்லாதவோர் வலியுடன்
கடக்கும்
சென்னையின்
கொழும்பு ஆஸ்பத்திரிச் சாலைகளை ஒத்த
அந்த மரங்களால் ஆன பகுதியில்
உனக்கான ஏக்கம்
நானாகி அழைக்க
என்னை
கடைகளது ஆரவாரங்களடங்கிய
பரிஸின், அந்த இரவுத் தெருக்களிடம்
அழைத்துச் செல்.
அங்கும்
விழைபுறும் உடலுடன் நான் வருவேன்.
தேவாலயங்களின் குரூர அமைதியுள்
நடக்கும் பிரார்த்தனைகள்
பெயர் பெற்றிரா நதிக்கரைகள்
தரையிற் கற்கள் பதித்த தெருவுகள் எங்கும்
ஓணம் பண்டிகையின் கோலாகலங்களில்
மூழ்கி எழா மனத்துடன்
உடல் அதிர
சதைத் துண்டுகளின் கதைகளுடன்
புணர்ச்சிக்கு அழைத்தபடி
என்னைக் காண்.
சிறிய உடற் கலனுள்
அதன் எலும்புகள் சிதறியுள்ள வரலாற்றை
நாம் புணர்ந்து முடிக்க
அவாவலில்
நாயொன்றைப் போலத் தான்
மல்லாந்து பயனற்று அழைக்கும் விழைபை
இப் பேனாவால் நெஞ்சிற் குத்தி வலியெடுத்தெறிய
திமிறும் குரலை
தங்கிய பெயரை,
நெஞ்சம் வெடிக்கும் ஓர்
இனிய முத்தத்திற்கான கேவலை,
பனிப் பந்தெனச் சுருட்டி
எறிந்து கொண்டே
வருதலின்
சிறு
சந்தடி தானும் கேட்கின்றதா?

*

கற்பகம் யசோதரவின் நூல்கள்:

நீத்தார் பாடல்கள் – வடலி வெளியீடு

எனது மகள் கேள்வி கேட்பவள் – வடலி வெளியீடு

TAGS
Share This