அழுதுகொண்டே மலையேறும் சிறுவன்

அழுதுகொண்டே மலையேறும் சிறுவன்

சபரிநாதனின் ‘தூஆ’ என்ற கவிதைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பண்டிகை நாளின் விடியலில் முழுகித் தலை இழுத்துப் புத்தாடை அணிந்த பின் ஐந்து நிமிடத்திற்கொருமுறை தன்னழகை வியக்கும் சிறுவனைப் போலத் தொகுப்பை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கவிதைகள் மொழியில் நிகழ்வது, நாமே நம்மின் அழகை ஆடியில் பார்க்கும் ஒரு தருணமல்லவா. தூஆ தமிழிற்கு அத்தகையதொரு வரவு. தொகுப்பைப் பற்றிப் பின்னர் விரிவாக எழுதுவேன்.

நான்கு நாட்களாகக் காய்ச்சலும் சளியும் மெல்ல மெல்ல உடலிலும் உள்ளத்திலும் பரவிவிட்டிருக்கிறது. முதலிரு நாளும் எழுதுவது மனதிற்கு ஓரளவு மகிழ்ச்சியளித்தது. கடந்த இரண்டு நாட்களும் சொற்களுக்குள்ளும் காய்ச்சலடிக்கத் தொடங்கிவிட்டது. வந்து மூக்கைச் சிந்திக்கொண்டு நிற்கின்றன. இன்று, தொண்டை நோ சற்று அதிகரித்திருக்கிறது. ஆனால் காலைமுதல் சபரியின் இந்தக் கவிதை நினைவிலிருந்து எழுந்தெழுந்து படுக்கையிலிருந்தபடியே இருமும் உடல்போல மனதைத் துடித்துத் துடித்து எழ வைக்கிறது.

எனக்குள் உள்ள பிறந்த ஊர், என் நினைவின் படிமங்கள் உருவான ஊர் திருநெல்வேலி, ஆனால் இன்று நான் அந்தத் தெருக்களுத் திரும்ப விரும்புவதில்லை. அதை நான் அந்நியமென உணர ஆரம்பித்தது அம்மாவின் மரணத்தின் பின். அந்தத் தெருக்களினதும் வீடுகளினதும் ஒவ்வொரு நினைவும் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன என்ற பிரேமை மனதில் நிழலெனப் படிந்துவிட்டது. எவ்வளவு முயன்று பார்த்தும் ஞாபகங்களை அசட்டை செய்து பார்த்தும் அதன் நிழலை விரட்ட முடியவில்லை. ஏதாவதொரு நாள் இந்தக் கவிதையின் சிறுவனைப் போல் அவ்வூருக்குத் திரும்புவேன் என்று தோன்றுகிறது. அப்போது அந்த ஊரே இல்லாமல் இருக்கலாம். எல்லாம் இன்னொன்றாக மாறியிருக்கலாம். எதுவொன்றினாலும் எதுவாகவும் ஆகிவிடாத நினைவுகள் எதிலிருந்தும் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளும். கோயில் கிணற்றின் பாதாளத்தில் உள்ள நாகம் போல, அதுவொரு கனவு மட்டுமே.

*

அழைப்பு

எங்கள் ஊரின் எளிய பழங்குன்று அழைத்தது.
ரகசியங்கள் உலவும் கொடுமுடிகள் அழைத்தன.
விடியல் தரையிறங்கும் பனிவரையடுக்கம் அழைத்தது.
அர்த்தமும் உணர்ச்சியும் இன்றி ஓர் அகவல்: அசரீரி.
எனது தெய்வங்கள் மலைகளில் இருந்தன.
நான் ஓர் ஈயைப் போல
பறந்தமர்ந்து
பறந்தமர்ந்து
பலப்பல பிறவிகளாய்
உயிர் சுமந்திருப்பதை
அவை உச்சியிலிருந்து பார்த்திருந்தன.
ஒவ்வொரு நாளும் தன் மைந்தன்
விழுந்தெழுந்து புண்ணடைந்து
தன்னைத் தான் குத்தி கலங்கி புலம்புவதைக்
கேளாது தேற்றுமொழி கூறாது
தன்மயத்தில் லயித்திருக்கும் தந்தையைப் போல
அவை மௌனித்திருக்கின்றன
ஒவ்வோர் இரவும்
வீடு திரும்பாத பிள்ளைக்காக உணவெடுத்துவைத்து
விளக்கணைக்காது உறங்கும் அம்மையைப் போல
காத்திருக்கின்றன
கொட்டும் மழையிரவில்
கும்மிருட்டில் ஒருநாள்
அழுதுகொண்டே நான்
மலையேறி வருவேனென.

சபரிநாதன்

TAGS
Share This