இளங்கவிகளுக்கு சில அட்வைஸ்கள்
தமிழ்கூறும் நல்லுலகிலே புதிதாக எழுதவரும் இளங்கவிகளுக்கு சீனியர் கவிஞர்கள் அட்வைஸ்களை வழங்குவது வழமையும் கடமையும்.
சபரிநாதன், பெருந்தேவி, போகன் சங்கர் ஆகிய மூவரினதும் சில கவிதைகள் தங்களது அனுபவங்களாகவும் அட்வைஸ்களாகவும் சுவாரசியமாக இருந்தன. சில கவிதைகள் அனுபவங்களாகவும் சிலது அட்வைஸ்களாகவும் இருந்தன. அனுபவங்களை வாசிக்கும் போது பாவமாகவும் அட்வைஸ்களைக் கேட்கும் பொழுது பயமாகவும் இருந்தது. இதையெல்லாம் வாசித்த பின் என்னத்தை எழுதி என்னத்தை வாசிச்சு என்று சுய இரக்கமாகவும், இதையெல்லாம் நீ கவனிக்கவில்லயென்றால் சரஸ்வதி உன் நாவில் எழமாட்டாள் என்று பயமாகவும் இருக்கும் இளங்கவிகளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்ன தெரியுமா?
இதே போல மியூசியத்திலிருக்கும் மூத்தவர்களும் கவிதையைப் பற்றிச் சொன்னவையெல்லாம் எப்படி மறதியின் உண்டியலில் விழுந்தனவோ அவ்விதமே இவையும் கிளிங் என்ற சத்தத்துடன்…
*
கவிஞன் ஆகப்போகிற சிறுவனுக்கு
உன் கண்களில் அகாத தொலைவு. எதை அறிந்ததால்
உன் அசைவுகளில் இந்த இளஞ்சோகம்?
புல்லின் இலையை அருகில் சென்றும்
பெருநகரை வெகுதொலைவில் நின்றும் காண்பாய் நீ.
மனிதர் உன்னைப் பதற்றப்படுத்துவர்.
மரங்கள் உன்னைத் தேற்றும்.
மிக உயரமான இடங்களில் வசிக்கும் பறவைகளின் தனிமையை
மிக எளிதாகப் புரிந்துகொள்வாய். ஆனால்
ஒருபோதும் இருக்காது உன் கையில் சரியான சில்லறை.
அங்கே இருக்க முடியாது.
விலகிச் செல்லவும் முடியாது.
ரசவாதியின் அறை ஒன்றை வாடகைக்கு எடுப்பாய்.
குளிர்கால மடாலயப் பரணில் உறங்கும் மலைப்பாம்பு போல
மறைந்திருப்பாய். இரவில் துப்பறிவாளனாகவும்,
பகலில் குமாஸ்தாவகவும் வாழ்க்கை நடத்துவாய்.
கற்பனையில் ஒரு பெண்களின் தோட்டத்தைப் பராமரிப்பாய்.
காற்றில் சிலுசிலுக்கும் தன் வால் றெக்கையை
திரும்பிப் பார்க்கும் சேவலும் அதன் ரத்தக்கிரீடமும்
உன்னைப் பரவசப்படுத்தும்.
அநீதியும் போர்களும் தொடரும்
நீ சோளக்கொல்லை பொம்மையாக உணர்வாய்
கண்ணீர் உலரும், குருதி உறைந்து கறுக்கும், ஆயினும்
புதைபடிவென ஒரு சொல் விழித்திருக்கும்
என்றெல்லாம் நம்பியிருப்பாய்.
எப்போதாவது சந்தேகிப்பாய்
நான் கவிஞன் தானா?
நான் சிறுவன் தானா?
தீமைக்கு எல்லை இல்லை என்றும்
தீமை என ஒன்றில்லை என்றும் கருதுவாய்.
ஞானியரைக் காண்பாய், கூடவே
அவர்கள் உன்னை விட்டுச் செல்வதையும்.
உனது கனவுகள் – நீ படைத்தவற்றில் மகத்தானவை – அவை
அச்சேற மாட்டன.
தனிமை உன்னைக் கைவிடாது.
உன்பையில் ஒரு விலைமதிப்பற்ற முத்து
அவ்வப்போது தொட்டுப்பார்த்து ஆனந்திப்பாய்
மற்ற நேரங்களில் மறந்துவிடுவாய்.
சில நேரம்
ஒரு பறவை வந்தமரும் உன் வீட்டுக்கூரையில்
உன் சைக்கிள் பாரில்
உன் தொப்பியில்
உன் தோளில்
பிறகு பறந்துபோகும்
மீண்டும் வரும்
மீண்டும் போகும்
நீ காத்திருப்பாய் உன்
வாழ்நாள் முழுக்க.
சபரிநாதன்
*
இளம் கவிஞர்களுக்கு
ஊரில் மிச்ச மீதி மரம் இருந்தால்
அதில் உங்களைக் கட்டிவைத்து அடித்தால்கூட
உறுதியாக நிற்கவேண்டும்.
‘கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம்.
வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும்
என்கிறான் மகாகவி பர்ரா’
இந்நாள் வரை
கவிதையை கவிதையைவிட
தைரியமே காப்பாற்றியிருக்கிறது
வரலாற்றில்
கடக்க ஒரு மரப் பாலமும்
பேச சில மண்டையோடுகளும் இருந்தால்
போதாதா?…
பெருந்தேவி
*
மற்றதெல்லாம் விஷயமேயில்லை
கவிதை எழுத எனக்கு
நாள் நட்சத்திரம் வேண்டாம்
நேரம் காலம் வேண்டாம்
எனக்கே எனக்கான அறை
மேலதிக வசதிதான்
ஏன், பத்திரிகை வேண்டாம்
பேஸ்புக் போதும்
பூசலார் நாயனார் மனதுக்குள்ளேயே
கட்டிக் காட்டியிருக்கிறார்
விமானத்தையும் சிகரத்தையும்
மதிலையும் திருக்குளத்தையும்
கவிதையின் கோயில்
அவ்வாறே அமைகிறது
ஒரு கவிஞருக்கு வேண்டியதெல்லாம்
உள்ளே
அப்பாலான
கோபுரத்திலிருந்து
அழைக்கப்படும்போது
எங்கே பறந்துகொண்டிருந்தாலும்
திரும்பத் தயாராக இருப்பது மாத்திரமே
ஆனால் அதற்கு நீ
முதலில் ஒரு புறாவாக இருக்கவேண்டும்.
பெருந்தேவி
*
நான் பெரும்பாலும்
ஒரு கவிதை எழுதுவதைத் தவிர்ப்பதற்கு
என்னெல்லாம் செய்யமுடியுமோ
அதையெல்லாம் செய்கிறேன்.
ஆனால் கவிஞர்களின் நெற்றியில்
ஒரு அழிக்க முடியாத டாட்டூ உள்ளது.
ஒரு குடிகாரன் எவ்வளவு முயன்றாலும்
குட்டைக்குள் விழுவதைத் தவிர்க்க முடியாதது போல்
ஒரு கவிஞன் கவிதைக்குள் விழுந்துவிடுகிறான்.
நேற்று சாலையில்
பேருந்துக்குக் காத்திருந்த ஒருவன் தலைமேல்
மரத்திலிருந்து உதிர்ந்து
ஒரு பூ விழுவதைப் பார்த்தேன்
அவன் அது என்ன விதமான ஆசீர்வாதம்
என்று
பார்க்காமலே தட்டிவிட்டான்.
அவ்வாறு ஒரு பெண் செய்யும் வாய்ப்பு குறைவு.
ஒரு குழந்தை செய்யும் வாய்ப்பு மிகக்குறைவு.
ஒரு கவிஞனால்
அவ்வாறு செய்யவேமுடியாது.
போகன் சங்கர்
*
‘மகத்தான காரியங்களைச் செய்ய வந்தவன்
மகத்தான கவிதைகளை
எழுதவந்தவன்’
போன்ற எண்ணங்களை விட்டுவிட்டேன்.
இப்போது இந்த நகரம்
நான் செய்த அற்பத்தனமான
காரியங்களை
எழுதிய மோசமான கவிதைகளை
மறந்துவிடவேண்டும்
என்று மட்டும் விரும்புகிறேன்.
போகன் சங்கர்
*
ஒரு நீள் கவிதைக்கு
இலவச இணைப்பாய்
வந்த
குட்டிக் கவிதைதான்
கடைசியில்
புவியை ஆண்டது.
போகன் சங்கர்
(இது ஒரு சிறந்த அறிவுரையென்றே படுகிறது)