எய்யப்படுதல்

எய்யப்படுதல்

உள்நெஞ்சின் ஊற்றிலிருந்து அன்றாட வாழ்விற்குள் தினமும் எய்யப்படுவதே வாழ்வா? உறக்கத்தை ஊற்றில் உறைதல் எனக் கொண்டால் விழிப்பு நனவிற்குள் நுழைதலா?

சபரிநாதனின் நச்சுச்சுனை கவிதையில் உள்ள எய்யப்படுதல் என்ற சொல் மொத்த வரிகளையும் அதன் அர்த்த ஒருமையிலிருந்து பிறிதொரு வெளிக்குள் எய்யப்படும் கவிதையாக மாற்றியிருக்கிறது. அபூர்வமான தன்மை என்பது கவிதையில் நாணேற்றப்படும் சொல்லிலும் அந்தக் காண்டீபத்தைப் பிடித்திருப்பவரின் பார்வை எதை எதற்கு அப்பால் பார்க்க விழைகிறது என்பதிலும் குடிகொண்டிருக்கிறது.

அந்தராத்மாவின் ஊற்றுமுகம் தெள்ளிய நறுஞ்சுனையென எதுவும் தீண்டாத மலையுச்சித் தடாகத்துண்டெனக் கிடக்கிறது. நிலவும் மேகங்களும் நட்சத்திரங்களும் அதில் விழுந்தாலும் நீரள்ளுவதில்லை. சுனையின் தடாகம் இன்னொரு திரையென விரிய அதில் ஓவியமென அவை ஆகும். ஆனால் எதிர்ப்படும் அகமோ தாகம் மிக நீரள்ளிப் பருகும் ஓர் உயிர். அது மீளவும் அன்றாடம் எனும் பெருவெளிக்குள் இலக்கற்று எய்யப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. சில கணம் பறப்பதால் அந்த அம்பு ஒரு பறவையென ஆகுதலும் நிகழும். நான் அப் பறக்கும் கணங்களைச் சூடிக்கொள்கிறேன்.

*

நச்சுச்சுனை

எவரும் அறியாதபடி எனக்குண்டு என்
பூர்வீக நிலத்தில் ஒரு நச்சுச்சுனை.
மீன்கள் நீந்தாத, கன்றுகாலிகள் நீரருந்தாத
தெள்ளிய நறுஞ்சுனை.
ஒவ்வொரு நாளும் சென்று காணும்போதும்
அந்நீர்ப்பரப்பில் என்னை வந்து வரவேற்பது யார்?
சிறங்கை நீரள்ளி பருகக்
கொடுத்து கொடுத்து எனைப் பழக்கியது எவர்?
எனக்குப் பதிலாய்
அவர் அங்கு வாழ்கிறார்
அவருக்குப் பதிலாய்
உலகிற்குள் எய்யப்படுகிறேன்
நாள்தோறும் நான்.

சபரிநாதன்

TAGS
Share This