சார்லி சப்ளினின் தீர்க்கதரிசனம்
நான் வைத்திருக்கும் புத்தகங்களில் இதுவரை அதிகமாக நண்பர்களால் படிக்கப்பட்டது அல்லது மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது பா .ராகவன் எழுதிய ஹிட்லரின் வாழ்கை வரலாறுதான். இயல்பாகவே ஹிட்லர் என்ற உருவத்தின் மீது அல்லது படிமத்தின் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். ஏனெனில், நன்மையை விட தீமையே கவர்ச்சியானது .ஒரு சாதாரண சிறுவன் சர்வாதிகாரியாகும் கதை எவ்வளவு தீவிரமாக படிக்கப்படுகிறது. இது ஒரு பொது மனோ நிலை. மக்கள் இயல்பாகவே சாகசங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். ஹிட்லர் ஒரு நடைமுறை உதாரணம் அவ்வளவு தான்.
20 வயது மாணவன் திருடர்களால் கொல்லப்பட்டதும், 21 வயது இளைஞன் ‘ஆவா’ குரூப்பாக இருப்பதும் 24 வயது பல்கலைக் கழக மாணவி தற்கொலை செய்வதும் என்ன மாதிரியான ஒற்றுமையைக் கொண்டிருக்க முடியும். இதுக்கெல்லாம் கொஞ்சம் அடுத்தபடியாக விஜய்க்கு கொடி பிடிக்கும் இளைஞர் கூட்டம் கே.எப்.சியின் வாசலில் நின்று புகைப்படம் எடுக்க சப்பாத்து அணிந்து கொண்டு திரியும் இன்னொரு கூட்டம்.
எனது ஒட்டு மொத்தக் கேள்வி இவ்வளவு தான்
“மேய்ப்பர் இல்லாத மந்தையாகி விட்டதா ஒரு தலைமுறை?”
யுத்தத்தின் பின் உருவாகியிருக்கும் ஒரு புதிய தலைமுறை அதிக உணர்ச்சிவசப்பட்டு குறைவாகவே சிந்திக்கும் ஒரு தலைமுறை. ஒரே நாளில் வளர்ந்துவிடும் பக்குவத்தை அளிக்கும் அனுபவங்கள் யாருக்கும் வாய்க்கவில்லை. வாய்க்கப் போவதுமில்லை. அவை அவசியமுமில்லை. ஆனால், அனுபவங்கள் மகத்தான ஆசிரியர்கள். வாழும் முறை அல்லது நெறி ஒன்றை உருவாக்கி வைத்திருக்கும் இந்த சமூக இயந்திரம், புதிதாக வாழ்கையை எதிர்கொள்ளும் ஒரு தலைமுறையை இன்னும் சரியாக சொல்வதென்றால் படித்த ஒரு தலைமுறையை குழப்பத்தில் கொண்டு சேர்க்கிறது. உலகமயமாதலின் விளைவுகளாக இன்று உருவாகியிருக்கும் கால இடைவெளி யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை உடனடியாக ஜீரணித்துக் கொள்ள முடியாதது. அது ஒரு ஒழுங்கின் கீழ் வளர நினைக்கும் சமூகம் அல்லது தனது பழமையான ஒழுங்குதான் தனது அடையாளம் என்று கருதும் சமூகமும் கூட. எனவே, இந்த மாதிரியான ஒரு சமூகத்தில் இளைய தலைமுறை எப்படி பிளவுபட்டுப் போகிறது அல்லது வன்முறையுணர்ச்சி அடைகிறது அல்லது சமூகத்தின் எதிரியாக பழமையின் விரோதியாக மாறுகிறது?
தங்களது முன்மாதிரிகளாக யாரை வரித்துக் கொண்டிருக்கிறது இந்த தலைமுறை. கார்த்திகை மாதத்தில் முகப் புத்தகத்தில் ப்ரொபைல் படத்தில் கார்த்திகை பூ போடுவதும் புலிப் படம் போடுவதும் என்று தங்களை யாராக அடையாளப்படுத்த நினைக்கிறார்கள் அல்லது தங்களது ஆதரவை எந்தமாதிரியான ஒரு அமைப்புக்கு வழங்குகிறார்கள். இவர்கள் யாரும் உண்மையானவர்கள் இல்லை என்பதை விட இவர்கள் யாவரும் அப்பாவிகள் என்றே சொல்வேன். நிச்சயமாக ஒரு வெகுளித்தனமான ஆதரவுதான், கிட்டதட்ட முகப் புத்தகத்தில் ஈழத்தை ஸ்தாபிக்கும் ஒரு குழந்தை கனவு தான் இது.
அசல் நம்பிக்கையாளன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் தனது வாழ்வின் மூலமே. காந்தியின் வார்த்தைகளில் சொன்னால் “எனது வாழ்க்கையே எனது செய்தி”. யுத்தத்தின் இறுதி நேரத்தில் சாப்பாட்டிலும் உடலிலும் கனவிலும் கூட மல வாடை ஒட்டியிருந்ததாம். அதேபோலத் தான் விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அரசியல் வாடை ஒட்டிக் கொள்கிறது. நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள் உங்களின் நிர்வாணத்தை ஒரு ஹை-டெக் நாடு எங்கிருந்தும் பார்க்கலாம். உலகம் உள்ளங்கைக்குள் தொழில்நுட்பத்திடம் பிடிபட்டுப் போயுள்ளது .இது தொழில்நுட்பத்தின் யுகம்தான்.
மறுபடியும் ஹிட்லரிடமே வருவோம், சார்லி சாப்ளின் ‘தி கிரேட் டிக்டேடர்’ திரைப்படத்தின் கடைசி அந்த 5 நிமிட பேச்சுத்தான் நினைவுக்கு வருகிறது நிஜ ஹிட்லருக்கு பதிலாக சாதாரண ஒருவர் (அதுவும் சாப்ளின்தான் ) பேசுவது போல் ஒரு வசனம், எவ்வளவு காலத்திற்கும் அது பொருந்தும். எப்படி யாருக்கு எது பொருந்துமோ அப்படி விளங்கி கொள்ளவும்.
“…என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு சக்கரவர்த்தியாக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையுமில்லை. நான் யாரையும் ஒழுங்குபடுத்தவோ கூட்டமாக்கவோ விரும்பவில்லை. நான் அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்… நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்யவே இருக்கிறோம். மனித உயிர்கள் அப்படிப்பட்டவைதான்… இந்த உலகத்தின் அறை அனைவருக்குமானது… நாங்கள் வேகத்தை வளர்த்திருக்கிறோம். ஆனால், எமது இயல்பை உள்ளே அடைத்துவிட்டோம்… எங்களுடைய அறிவு எங்களை சிடுமூஞ்சிகளாக்கி விட்டது. எங்களுடைய புத்திசாலித்தனம் கடுமையானதும் கருணையற்றதும்… அதிகமாக சிந்தித்து குறைவாகவே உணர்கிறோம்… என்னுடைய குரலைக் கேட்பவர்களுக்குச் சொல்கிறேன். மனிதர்களின் வெறுப்பு மறைந்துபோகும். சர்வாதிகாரிகள் இறந்துபோவார்கள். அவர்கள் மக்களிடம் இருந்து எடுத்த சக்தி மக்களிடமே திரும்பும்… எனது வீரர்களே உங்களுடைய உயிர்களை என்ன செய்ய வேண்டும், என்ன சிந்திக்க வேண்டும் என்று சொல்லுபவர்களுக்காக வழங்காதீர்கள்… நீங்கள் மனிதர்கள், உங்கள் இதயத்தில் காதலும் மனித நேயமும் உள்ளது. வீரர்களே அடிமைத்தனதிற்காக போராடாதீர்கள். சுதந்திரத்திற்காக போராடுங்கள். 17 அத்தியாத்தில் குறிப்பிடிருப்பதைப் போல கடவுளின் ராஜ்ஜியம் ஒரு மனிதனிடமோ அல்லது ஒரு மனித கூட்டத்திடமோ இல்லை. எல்லா மனிதருக்குள்ளும் அது இருக்கிறது. நீங்கள் மக்கள். நீங்கள் இயந்திரங்களை உருவாக்கும் சக்தியைக் கொண்டவர்கள். நீங்கள்தான் மகிழ்ச்சியை உருவாக்கும் சக்தியைக் கொண்டவர்கள். நீங்கள்தான் இந்த வாழ்கையை சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் மாற்றும் சக்தியைக் கொண்ட மக்கள்… சர்வாதிகாரிகள் தங்களை விடுதலை செய்துவிட்டு உங்களை அடிமைகளாக்கி விட்டார்கள். இப்போது அந்த வாக்குறுதியை முழுமையாக்கப் போராடுவோம், தேசிய எல்லைகளைக் கடந்து… வீரர்களே! ஜனநாயகத்தின் பேரில் அனைவரும் ஒன்றாவோம்!…”
இந்தப் பேச்சின் முழுமையும் ஒரு தீர்க்கதரிசனம். மனித குலத்தின் மொத்த வேண்டுதலும்கூட அதுதான். முதலில் உணரவேண்டும், பிறகு எல்லாம் தெளியும்.
‘ஹனா மேலே பார். நாங்கள் இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வருகிறோம். புதிய உலகத்திற்கு. மனிதனின் ஆன்மாவுக்கு சிறகு முளைத்துவிட்டது. கடைசியில் அவன் பறக்கத் தொடங்கிவிட்டான். வானவில்லின் ஊடாக நம்பிக்கையின் ஒளிக்குள், எதிர்காலதிற்குள்… அது ஒரு அற்புதமான எதிர்காலம். அது உனக்கும் எனக்கும் எல்லோருக்குமானது. மேலே பார்… ஹனா! மேலே பார். சாப்ளின் ஹிட்லரின் வேஷத்தோடு மனித குலத்திற்கு சத்தமாக சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், இன்னும் அவர்கள் நிமிர்ந்து பார்க்க கூட இல்லை. அவர்களின் காதுகளும் மந்தமானவையாகிவிட்டன.
(2014)
(www.maatram.org)