கல்லெழும் விதை: ஒரு உரை

கல்லெழும் விதை: ஒரு உரை

தும்பி இதழின் நிறுத்தம் பற்றிய செய்தி இரவு முழுவதும் மனதிற்குச் சோர்வளித்துக் கொண்டேயிருந்தது. இச்சோர்வு எனக்கு அவசியமற்றது போல் தோன்றினாலும் உள்ளத்தின் சக்கரங்கள் உருளவில்லை. அவை திரும்பத் திரும்ப ஒரே பூவில் சுற்றும் தும்பியென வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இச்சோர்வை உதறியாக வேண்டும். எவ்வகையிலும் மனம் ஏதாவதொரு இழப்பை, துயரை பெரிதென ஆக்கிக் கொண்டு சோர்வை விழையக் கூடும். இவ்வகைச் சுழல்களுக்குள் நான் பலதடவைகள் சிக்கியிருக்கிறேன். ஒரு உந்தல் கிளர்ந்தால் போதுமான உதைப்புத் தான் தேவை. குக்கூவின் செயல்களின் ஒளிப்படங்களை அதில் மகிழ்ந்திருக்கும் மனித முகங்களை வேடிக்கைகளைப் பார்த்தபடியிருந்தேன். அது மனதை மழை நிரப்பிய குளமென ஆக்கியது.

பிறகு, கல்லெழும் விதை என்ற ஜெயமோகன் குக்கூவில் நிகழ்த்திய உரையை மீளக் கேட்டேன். நேற்று ஜெயமோகனின் பிறந்த தினம். ஆசிரியரைப் போலவே மாணவனாகிய எனக்கும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஆர்வமில்லை. ஒவ்வொரு நாளும் கேட்கும் சொல்லென்றாலும் நேற்றுக் கேட்டபோது அந்தச் சொற்கள் முன்னில்லாத இளமையுடனும் நடைமுறையுடனும் இணைந்து திகழ்ந்ததை உணர முடிந்தது.

நிறைவுணர்வு மட்டுமே எஞ்சப் பெருஞ்செயல்களைப் புரிபவர்களின் வாழ்க்கைகள் நம் காலத்தில் எவற்றைக் கடந்தாக வேண்டும் என விரிவாக விளக்கும் உரை. தோழர்கள் பற்றி வரும் பகுதியெல்லாம் அட்டகாசமான நேர்த்தி. கல்லெழும் விதை என்ற தலைப்பே எவ்வளவு கவிதை என்று நினைக்க வைத்தது. ஒரு கூழாங் கல் வேர்கொண்டு மரமென ஆகும் கனவு அதில் ஈரத்துடன் இருக்கிறது.

சிவராஜ் அண்ணன் ஆசிரியர்களின் துணையுடன் மீண்டு விடுவார். தும்பி உருவாக்கிய கனவுகள் மீள மீள வசந்தங்களெனப் பூத்தபடி மட்டுமே இருக்க முடியும். இயற்கையில் எதற்கும் எல்லைகள் உண்டு. பருவங்களைப் போல. அதேவேளை அவை முடிவுறாத சுழல்வுகளும் தான். இலைகள் உதிரும், இன்னொரு தருணத்தில் துளிர்க்கும், வசந்தம் வரும். பறவைகள் கிளைகளுக்குத் திரும்பும்.

எல்லாம் செயல் கூடும்!

TAGS
Share This