அதிகாலையை எழுப்பியது குற்றம்

அதிகாலையை எழுப்பியது குற்றம்

பழந்தமிழ் இலக்கியங்களை அவற்றின் சொல்லிணைவுகளின் வடிவிற்காக சிறுவயதில் வாசித்திருக்கிறேன். இரண்டு சொற்கள் இணையும் போது உண்டாகும் இழைவு பொன்னணியில் வைரச் சுட்டிகை போற் துலங்கும். இன்னொரு பருவத்தில் அதன் இசைக்காக வாசித்திருக்கிறேன், சொல்லும் போது தோன்றும் தாளம், மனம் குதூகலித்து அடையும் மனக்கால்களின் ஒலியெழ கூச்சலெனத் திரண்டு மெளனமென ஆகும் வரை அச்சொற்களின் இசை கேட்டு ஆடியிருக்கிறேன்.

பின்னர் அவற்றின் உள்ளுள்ள காட்சியினதும் கதையினதும் இணைவினால் உண்டாகும் வேறொரு வாசிப்பினை ஜெயமோகனின் எழுத்துக்களாலும் காணொலிகளாலும் பெற்றேன். சங்க இலக்கியமெனும் கூண்டை புதுக்கிளி திறந்து கொள்ளத் தலை மோதுவது போல அலைபட்டேன். சில கவிதைகளைத் திறந்த போது, வெளியிலிருந்து கூண்டுக்குள் சென்றமர்ந்து கொண்ட அர்த்தங்களிலிருந்து வெளியின் கிளைகளுக்கு மிதந்து திரியும் வாசிப்பின் பரவசத்தை அறிந்தேன்.

அதிகாலைக்கென்றொரு முகூர்த்தமிருக்கிறது. புலர்வும் இனிமையும் எல்லாக் காலங்களிலும் அதிகாலைக்கு உண்டு. அதனாற் தான் அதைத் தியானமும் ஆக்க வேலைகளும் செய்ய மனதிற்கு உகந்ததெனக் கொள்வர். இதில் உக்கிரமானது புலன்கள் விழிகளென முழுதிறந்து கிடக்கும் அவ்வேளையின் காமம். அதிகாலைக் காமம் ஓர் அற்புதமான அனுபவம். புலன்களும் உடலும் அதிகாலையின் குளிர்கலத்தில் விடைத்து எழும், சுனையில் தொடங்கி பேரருவி வரை வீழ்ந்து எழக் கூடிய வாய்ப்புள்ள பொழுது. மயக்கின் பிடியிலிருந்து பொற்கணம் புகுந்தது போல் குருதி மின்னாகும் கணங்கள் வாய்க்கும்.

மதுரைக் கண்ணனார் எனும் கவிஞர் குறுந்தொகையில் எழுதியிருக்கும் ஒரு கவிதையில் தலைவி தன் காலையைக் கலைத்து எழுப்பும் சேவலைச் சபிக்கும் பாடலொன்றை வாசித்த போது கண்ணனாரின் உள்ளத்துத் துயரை அறிந்தேன். காமம் பெருகப் பிற எந்தப் பொழுதையும் விட உகந்த அதிகாலையை உசுப்பி உலகை எழ வைக்கும் சேவலை அதன் கூட்டத்தை இளங் காட்டுப் பூனையே மெல்ல மெல்ல உண்டுவிடு எனச் சாபமிடும் கவிமனத்தை உள்ளூரத் தொட்டுணர்ந்தேன். அதிகாலைகள் கண்ணனார் காலம் முதல் ஸ்மார்ட் போன் காலம் வரை அப்படியே மலர்கிறதல்லவா. அத்தகையதொரு அதிகாலையில் கவிதை மொக்கழ்விந்திருக்கிறது.

குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந்நெற்றிக் கணங் கொள் சேவல்
நள் இருள் யாமத்தில் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகிக்
கடு நவைப் படீஇயரோ நீயே,
நெடு நீர்
யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே.

குவிந்த, கொத்தான காந்தள் மலரைப் போன்ற சிவப்புக் கொண்டையை உடைய, கூட்டத்தோடு வாழும் சேவலே! ஆழமான நீரை உடைய பணம் மிகுந்த ஊரினனோடு நான் மிக இனிய துயிலில் இருந்த பொழுது, நீ என்னை எழுப்பி விட்டாய். இருண்ட இரவில், எலியைத் தேடும் இளம் காட்டுப் பூனை, கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் உணவாக ஆகி, நீ மிகுந்த துன்பத்தை அடைவாயாக! இது இக்கவிதைக்கென வழங்கப்பட்ட நூல் வழிப் பொருளுரைகளில் ஒன்று.

ஆனால் கவிதையாக அதன் அர்த்தங்களை வேறுதிசைகளில் பார்க்க முடிந்தால் ஏம இன் துயில் என்ற சொல்லிருந்து செல்லக் கூடிய தூரமென்பது அதிகம். துயில் என்பதை ஆழ்ந்த அசைவில்லாத நிலை எனக் கொள்வதும் உண்டு, அந்த நிலையிலிருந்து விழிக்கும் தலைவி, நிறைவின் பரிவிலிருந்து ஒரு அதிகாலைக்கு மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளாள். அதிகாலைக் காமம் அளவுக்கு கொடுமையான வேட்கை கொண்டது எதுவுமில்லை. அந்த நிலையில் அவளை உசுப்பிவிட்ட சேவலை, அதுவும் ஒரு சேவல் அல்ல கூட்டத்துடன் நிற்கும் சேவல். மற்றவையும் சேர்ந்து கூவிக் கூவி இரவைப் புலர்த்தும். உறங்க விடாது. விழித்த காமத்திலிருக்கும் ஒருத்தியே அச் சேவலை இருட்டில் எலியைத் தேடும் இளங் காட்டுப் பூனையால் சாதாரணமாக ஒரே பாய்ச்சலில் அல்ல, தான் இரங்கித் தவிப்பது போல் மெல்ல மெல்லக் கொல்லப்பட வேண்டும் எனச் சபிக்க முடியும். என்ன மன நிலையில் சிறுகச் சிறுகக் கொல் என ஒன்றைச் சபிக்க முடியும்! கொல்லும் காமத்தின் தீ நுனிக்கே அந்த உச்சம் உண்டு.

சில சொல்லிணைவுகள் வடிவாய் அவிழ்ந்திருந்தன, குவி இணர்த் தோன்றி, பிள்ளை அருகிற்கு, கடு நவை, ஏம இன் துயில் போன்ற சொல்லிணைவுகள் சேவற்கொண்டையின் தடிப்பென சிவந்து சதையூறியிருந்தன. கவிதையை வாசிக்கும் போது மனதோடு இசையும் சொற்தாளமும் கவிதையை இன்னும் நெருக்கமாகி கொத்தி நிமிர்ந்து மீண்டும் கொத்திக் குறுகுறுக்கிறது.

சேவல் என்றதும் நம்மூர் கண்ணனார் ஒருவரை மெக்கானிக் செட்டில் அண்மையில் பார்த்துக் கதைத்தது நினைவு வந்தது. எங்களது வீட்டின் ஒரே வாகனமென ஒரு பிளெசர் மோட்டார் சைக்கிள் இருக்கிறது. சாகும் தறுவாயில் உள்ள அதை ஏதேனும் செய்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர்வாழ வைக்க அவ்வப்போது மெக்கானிக் செட்டிற்குக் கொண்டு செல்வதுண்டு. ஒரு நாள் மோட்டார் சைக்கிளின் பின்பக்கமுள்ள சிவப்பு விளக்கிற்கு உடைந்து விட்டது. அதை மாற்றுவதற்காக செட்டிற்குப் போனேன். மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓடி அதில் வேறு என்ன பிரச்சினை என்று ஆராய்ந்து கொண்டிருந்தார். நானும் மெக்கானிக்கும் நின்று பார்த்துக் கொண்டிருக்க, “பிளசரப் பின் லைட்டில்லாமல் பார்க்கேக்க வாலில்லாத சேவலப் பார்க்கிற மாதிரி அந்தரமா இருக்கல்லே, வடிவாப் பாருங்கோ, வாலில்லாத சேவல் மாதிரியல்லே கிடக்கு” என்றார் அந்த யாழ்ப்பாண மெக்கனாதனார். ஒரு கணம் சேவலும் மோட்டார் சைக்கிளும் இணைந்த அந்தக் கற்பனையைப் போன்ற பல இழைவுகள் நம் அன்றாடத்தில் எங்குமிருப்பது. அட, ஒரு குறுந்தொகைக் கவிக்கு மெக்கானிக் செட்டில் என்ன வேலை!

ஒன்றை இன்னொன்றினூடாகக் காண்தல் ஏன் மானுடருக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது. அந்தத் தன்மை எப்படி நினைவுக்கும் கலைக்குமிடையில் தொடர்பு கொண்டிருக்கிறது. படிமங்கள், உருவகங்கள், உவமைகள் எல்லாம் ஒன்றை இன்னொன்றினூடகப் பார்த்துக் கொள்பவை தானே.

ஒரு பழங்காலக் கண்ணாடியின் முன் நின்று தன் பிரதிபலிப்பைப் பார்ப்பதற்கும், பாதரசம் அரைகுறையாகக் கழன்ற கண்ணாடிக்கும், திருவிழாவில் தொங்கும் பலபத்துக் கண்ணாடிகளில் தெரியும் தோற்றங்களுக்கும் நீரில் தெரியும் பிரதிபலிப்பிற்கும் எவ்வளவு மாறுதல்கள் உடைந்து தோற்றங் கொள்கின்றன. உவமைகள் அப்படியாக ஒரு உணர்வை அல்லது தோற்றத்தை இன்னொன்றில் தம்மை பிம்பப்படுத்திக் கொள்பவை. அது ஒரு பார்த்தல். அது நுண்மையாகுந் தோறும் கவிதை காலங்களைக் கடந்தும் நமதிந்த நாளைத் தொட்டுலுப்பியபடியே கூவும்.

ஆயிரந் தான் இருந்தாலும் அந்தச் சேவல் அதிகாலையை எழுப்பியது குற்றந் தான் இல்லையா.

TAGS
Share This