ஈழமா? தமிழீழமா? : ஒரு கடிதம்

ஈழமா? தமிழீழமா? : ஒரு கடிதம்

“தும்பி” சிறுவர் இதழ் குறித்த உங்கள் சமீபத்திய பதிவு ஒன்று அவ்விதழ் ஈழத் தமிழர்களுக்கு ஏன் முக்கியம் என்பதாக ஆரம்பிக்கிறது. இந்த ஈழத்தமிழர் என்கிற பிரயோகம், முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மைச் சமூகங்களைப் பொருட்படுத்தாத ஒன்றாக அமைகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உங்கள் பதிவை குறித்து எழுந்திருக்கிறது. இது குறித்து உங்கள் பார்வை என்ன?

வேனிலினி

*

வணக்கம் வேனிலினி,

நான் ஓர் ஈழத் தமிழ் எழுத்தாளராகவே பண்பாட்டு வெளியில் என்னை முன்வைக்கிறேன். நீங்கள் தமிழ் எழுத்தாளரில்லையா? ஏன் ஈழத்தமிழ் அடையாளம் தேவையாகிறது என்றொரு சாரார் நினைக்கலாம். அதில் ஏதும் பண்பாட்டு / இலக்கிய கோட்டா / சலுகைகள் இருக்கிறதா எனவும் சந்தேகிக்கலாம்.

மொழிக்கு நிலமும் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியும் முக்கியமானது. ஒரே மொழி பேசினாலும் பண்பாட்டிலும் வரலாற்றிலும் ஈழத்தமிழர்கள் தமிழகத் தமிழர்களிடமிருந்து வேறானாவர்கள். பெரும்பாலான தமிழகத் தமிழ் எழுத்தாளர்களிடம் ஒரு ‘பெரியண்ணன் பாவனை'( இது ஈழத்து இலக்கியச் சூழலில் தமிழக எழுத்தாளர்கள் குறித்து இருக்கும் ஒரு வழக்குச் சொல்) இருக்கிறது. சிலரிடம் இரக்கமும் கோட்டா வழங்கும் பாவனையும் உள்ளது. ஈழத் தமிழ் எழுத்தாளர்களை சமானமாக மதிக்கும் எழுத்தாளர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவகையில் பெரும்பாலான ஈழத்து எழுத்தாளர்களிடமும் தாழ்வுணர்ச்சியும் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற விலகலும் உண்டு. ஈழத்து எழுத்தாளர்களின் கலை மதிப்பீடு தமிழகத்துடன் ஒப்பிட எப்பொழுதும் பின் தங்கியே நிற்கிறது என்ற பார்வையும் இருக்கிறது. எனக்கும் ஈழத் தமிழ் இலக்கியங்கள் தொடர்பில் மிகை மதிப்பீடுகளில் உடன்பாடில்லை. தமிழக இலக்கியம் அடைந்துள்ள பல அடைவுகள் மகத்தான சாதனைகளே.

உதாரணத்திற்கு ஒரு சமூகப் பிரச்சினையோ இலக்கிய விவாதமோ இடம்பெறும் பொழுது அங்குள்ள எழுத்தாளர்கள் முன்வைக்கும் பார்வைக்கோணங்கள் எத்தனை, எவ்வளவு மாற்றுப் பார்வைகள், விரிவான அலசல்கள். ஈழத்தில் என்ன நடக்கும்? பெரும்பாலான எழுத்தாளர்கள் ‘பங்கருக்குள்’ நிலையெடுப்பார்கள். ஒருசிலர் சில பார்வைக் கோணங்களை முன்வைப்பார்கள், அதை ஒரு பெருங் கும்பல் வசைபாடும், திரிக்கும், ஒற்றை வரிகளைப் பிடித்துக் கொண்டு சமூகவலைத்தளங்களில் தொங்கும், கேலி செய்யும்.. இப்படியாக உரையாடல், கலகம் என்னும் பெயரில் இவர்கள் அடிக்கும் முஸ்ப்பாத்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இங்குள்ள இலக்கிய அறிவுச் சூழல் மிகக் குறைவான தைரியமான குரல்களைக் கொண்டது. தமிழகத்தை ஒப்பிடுகையில் இது ஒரு பின்னடைவு தான்.

இரண்டாவது உதாரணம், இலக்கிய மதிப்பீடு தொடர்பானது. முப்பதாண்டு யுத்த காலத்தில் ஈழத்தின் இலக்கியப் போக்கின் மைய விசையாக போரும் விடுதலை பற்றிய உரையாடல்களுமே இருந்தன. நவீன அகத்துறையும் புறத்துறையும் உருவாகியது. எதற்கும் பின்சீலையாய் யுத்தம் தொங்கிக் கொண்டிருந்தது. இக் காலத்தில் கூட யுத்ததின் நிழல் விழாத வாழ்வும் ஓரளவு எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஈழத்தின் இலக்கியப் பண்பாட்டுப் பங்களிப்பு நிலத்திற்கு வெளியிலும் ஒரே மொழி பேசிய மக்களுக்கே கூட விரிவாக அறிமுகப்படுத்தவோ பின்னணி விளக்கப்படவோ இல்லை. அல்லது அதற்காகப் பயன்படுத்தப்பட்ட மொழி அரசியல் துண்டுபிரசுர மொழி. இலக்கியப் பங்களிப்பென்னும் பெயரில் கலகம் செய்கிறேன் பேர்வழி என்று அதையே இலக்கியம் என்று சொல்பவர்களையும் நாம் இலக்கியத் தர மதிப்பீட்டிற்கு வெளியில் தான் வைக்க முடிகிறது.

ஓர் உரையாடலில் எழுத்தாளர் தர்மு பிரசாத் சொன்ன கதை சுவாரசியமானது. ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னாராம், அவரது அணுக்க நண்பர் ஒருவர் ஜெயகாந்தன் போல் விஸ்கி குடிக்க ஆசைப்பட்டாராம். அதைச் சென்று தனது அம்மாவிடம் அந்த நண்பர் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நண்பரின் தாயோ போய் பால் வாங்கி வா என்று சொல்லி பாலில் கலந்து விஸ்கியைக் கொடுத்திருக்கிறார். குடித்த கதையை ஜெயகாந்தனிடம் சொன்ன போது ஜெயகாந்தன் சொல்லியிருக்கிறார், நீ பாலையும் கெடுத்து விஸ்க்கியையும் கெடுத்து விட்டாய் என்று. ஈழத்துக் கலக இலக்கியப் பேர்வழிகளின் லட்சணம் அந்த வகையானது. கலகத்தையும் கெடுத்து இலக்கியத்தையும் கெடுத்து… சரி விடுங்கள்.

எனக்கு தமிழோ வேறு எந்த மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் முன் எந்தத் தாழ்வுணர்ச்சியும் இல்லை. யாரும் பொருட்படுத்த வேண்டும் அல்லது மதிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கோரிக்கையும் உள்விருப்பமும் இல்லை. எனக்குப் பிடித்தவர்கள் யாராயிருந்தாலும் வாசிப்பேன். மதிப்பிடுவேன். அதையே போல் நான் என் எழுத்தை மதிக்கிறேன். அதன் தரத்தை ஒரு வாசகராக நான் கணிக்கிறேன்.

தமிழில் இன்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எந்த என் தலைமுறை எழுத்தாளர்களினதும் பண்பாட்டுப் பங்களிப்பளவுக்கு நிகராக, நான் பங்களிப்பாற்றியிருக்கிறேன். ஈழத்து இளம் தலைமுறை இலக்கியவாதிகளில் நானே தலைமகன். அது தானாக யாரும் தூக்கிக் கொடுத்த இடம் அல்ல. வாசித்து, பயின்று, உழைத்து, ஆக்கி நானே உருவாக்கிய இடம்.

இந்த இடத்தில் நான் உணரக் கூடிய ஈழத் தமிழ் எழுத்தாளர் என்ற உணர்வு சலுகைகளுக்கானதோ இரங்கலுக்கானதோ அல்ல. நான் இலக்கியத்தில் பண்பாட்டில் முன்வைக்கும் விவாதங்களை என் பண்பாட்டின் வேரிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறேன். அதுவே என் பண்பாட்டுப் புழங்கு வெளி. நான் அதன் முதன்மையான கவிஞன். எழுத்தாளர். இந்தத் தன்னுணர்வு எளிதிலேயே பிறரை எரிச்சலடைய வைக்கக் கூடியது என்பதை அறிந்த பின்புமே கூட நான் அதையே முன்வைப்பேன். அது என் மதிப்பீடு. இல்லை என்பவர்கள் அதை மறுத்து என் பண்பாட்டு, இலக்கியப் பங்களிப்பின் எல்லைகளையோ அல்லது எனக்கு சமாந்தரமோகவோ அல்லது அதிகமாகவோ பங்களிப்பாற்றியவர்களை முன்வைக்கலாம். அதில் எந்த மாற்றும் குறையில்லை.

தும்பி விசயத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளராகிய நான் எனது பண்பாட்டின் மனிதர்களுக்கு ஒரு தமிழக இதழுக்கு நாம் ஏன் பங்களிக்க வேண்டும். அதன் இடம் என்ன என்பதை வரையறுப்பதே என் நோக்கம். மொத்தத் தமிழினமே உலக உயிரினமே பிரபஞ்சமே என்றும் அடையாளமற்ற வெளிகளை நோக்கி நான் அக்கோரிக்கையைக் கோரியிருக்கலாம். ஆனால் நான் எனது பண்பாட்டுடனேயே எனது பிரதான வினைபுரிதலை உண்டாக்க விரும்புகிறேன். ஈழத்தில் ஒரு வாசகர் தரப்பை விரிவாகப் பண்படுத்த வேண்டும். அதை நாம் உரையாடி, விவாதித்துப் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது. அது ஓர் இணை கற்றல் செயல். ஆகவே நான் அவர்களையே என் முதன்மையான வாசகர்களாக பண்பாட்டு வெளியைப் பகிர்பவர்களாகக் கொண்டிருக்கிறேன்.

அந்த ஈழத்தமிழரில் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், பேகர்கள்.. போன்ற தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்களை பிரித்தா இணைத்தா பார்க்கிறேன் என்பதே இங்கு எழுந்திருக்கும் பிரதான வினா. அரசியல் அடையாளங்களையும் பண்பாட்டு அடையாளங்களையும் நான் பிரித்தே அணுகுகிறேன். முதலில் ஈழம் வேறு. தமிழீழம் வேறு என்பதைச் சொல்லிவிடுகிறேன்.

முத்தொள்ளாயிரத்தில் உள்ள பிரபலமான பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

“கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு”

இப்பாடலில் யானை காலை வைத்த அந்த ஈழத்திலேயே என் வேர் உள்ளது. அரசியல் நெருக்கடிகளால் பிளவுபட்டுள்ள மக்கள் தொகுதியின் பண்பாட்டு வெளியை ஈழம் என்றே கொள்வது நல்லது என்பது எனது தரப்பு. பிறருக்கு மாற்றுப் பார்வைகள் இருக்கலாம். தேர்தல் அரசியலுக்காகவும் வாக்குகளைப் பிரித்துக் குவிப்பதற்காகவும் கட்சிகள் முன்வைக்கும் இத்தகைய அடையாளங்களையும் அதற்கென உள்ள அரசியல் நலன்களையும் நாம் வேறுபிரிக்க வேண்டும். இலக்கியமும் பண்பாடும் வேறு தளத்திலானவை. யானையை உதாரணமாகச் சொல்கிறாயே நீ என்ன யு என் பியா என்று கேட்கும் குரல்களுக்கு நான் இவற்றைச் சொல்லவில்லை. பண்பாடாக நமது பயில்வுகளை ஈழம் என்ற அடையாளத்துடன் நாம் உருவாக்குவது, வளங்களையும் பரஸ்பரப் பகிர்வுகளையும் இந்தத் தீவுக்குள் விரிவாக்க முடியும். ஒரு குட்டித் தீவில் தான் எத்தனை பிரிவுகள் நாம். இலக்கியம் பிரிவினால் அல்ல இணைவினாலேயே வாழ்வை இழைப்பது என்பது என் நம்பிக்கை. ஒருவரோ அல்லது பெரும்பான்மையான மக்களோ நான் ஒரு முஸ்லிம் நான் ஒரு தமிழீழத் தமிழர் நான் ஒரு மலையகத் தமிழர் என்றோ உணரவும் செயலாற்றவும் வேண்டிய களங்கள் உண்டு. ஆனால் நாம் பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டு வெளி ஈழம் எனும் பண்பாட்டு நிலப்பகுதி. நம் பண்பாட்டு அடையாளமென்பது ஈழத்தமிழர் என்பதாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பு. என் பரிந்துரை.

*

குறிப்பு:

இந்த உரையாடல்களில் உள்ள இன்னபிற அடையாளங்களாகிய மானத் தமிழன் / தமிழிச்சி, வீரத் தமிழன் / தமிழிச்சி, சங்கத் தமிழன் / தமிழிச்சி, புரட்சித் தமிழன் / தமிழிச்சி, செந் தமிழன் / தமிழிச்சி, மறத் தமிழன் / தமிழிச்சி, சூரத் தமிழன் / தமிழிச்சி, அன்புத் தமிழன் / தமிழிச்சி, இன்பத் தமிழன், வம்புத் தமிழன், பறத் தமிழன், பனங்கொட்டைத் தமிழன், மண்டியிடாத தமிழன், புலம் பெயர்ந்த தமிழர், துரோகத் தமிழர், தியாகத் தமிழர், கிழக்குத் தமிழர்( மட்டக்களப்புத் தமிழர், அம்பாறைத் தமிழர்…) வடக்குத் தமிழர்( யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர்…) கொழும்புத் தமிழர், அகதித் தமிழர், அமெரிக்காத் தமிழர், தங்கத் தமிழர், சங்கித் தமிழர், சிங்கத் தமிழர், சிங்கப்பூர் தமிழர், லண்டன் தமிழர், லாச்சப்பல் தமிழர், இடதுசாரித் தமிழர், வலதுசாரித் தமிழர், நடுநிலைத் தமிழர், படித்த தமிழர், படிக்காத தமிழர், நல்ல தமிழர், கெட்ட தமிழர், சாதியத் தமிழர், பகுத்தறிவுத் தமிழர், மேற்தட்டுத் தமிழர், நடுத்தட்டுத் தமிழர், கீழ்த் தட்டுத் தமிழர் போன்ற இன்னும் பல தமிழர்கள் கணக்கெடுப்படாமலேயே மேற்சொன்ன ஈழத் தமிழர் என்ற என் அடையாளம் பற்றி எழுதியிருக்கிறேன்.

TAGS
Share This