விசும்பு ஆடு அன்னம்
சிறுவயதிலிருந்தே தேர் என்பது இருப்பதில் ஆகப்பெரிய அசையும் மரச்சிற்மென மனதில் ஆகியிருக்கிறது. குரும்பைகளை வைத்து ஈர்க்கில் கோர்த்து ஆக்கும் குரும்பட்டித் தேர் முதல் ஆயிரமாயிரங் கரங்கள் தொட்டு வடக்கயிறால் இழுக்கும் பெருந்தேர் வரை எல்லாமே காதணி பூண்டு சிற்பச் சிறகுகள் அசைத்து மண் ஊரும் பறவையென ஆடி வருவது. சங்க காலத்தில் போக்குவரத்திற்கென வாகனமாகப் பயன்படுத்தப்பட்ட தேர் எப்பறவையெனத் தோற்றங் கொள்ளுமென உலோச்சனாரை வாசிக்கும் வரையில் தெரிந்திருக்கவில்லை.
மின்னுச்செய் கருவிய பெயன்மழை
தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை
நிவந்தாங்குப்,
பொலம் படைப் பொலிந்த வெண் தேர் ஏறிக்
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப
இனிச் சென்றனனே இடு மணல்
சேர்ப்பன்,
யாங்கு அறிந்தன்று கொல் தோழி, என் தேங்கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?
மின்னல்களையும் இடிகளையும் மழையையும் உண்டாக்கும் முகில்கள் வானில் மிதக்கின்றன. கடல் நீர் அலைகளாற் கலங்குகின்றது. என்னுடைய தலைவன் தங்க அணிகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளைத் தேரைக் கடற்கரையில் செலுத்திக்கொண்டு போகின்றான்.
அவனுடைய தேர்ச் சக்கரம்
அலைகளின் நீர்த் துளிகளால்
நனைந்து மேலும் கீழும் ஆடிச் செல்லும். அப்பொழுது, அன்னப் பறவை தன் சிறகுகளை அசைத்துப் பறப்பது போன்று தோன்றும் அத் தேர்.
காற்று மணலைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் நெய்தல் நிலத்தின் தலைவன் போவதை என் தேன்மணம் கமழும் நெற்றி எவ்வாறு அறிந்து பசலைப் படர்ந்தது தோழி?
என்பது வழங்கப்படும் பொருளுரை. (வைதேகி).
ஓம். தேர் என்பது அன்னப் பறவையின் கற்பனையை ஈடு செய்த மானுடக் கைவினை. ஒவ்வொரு தேரும் அசைந்து சிறகு விரிக்கும் ஓர் அன்னப்பறவையே. இதைக் கனவுற்ற கவிமனத்தின் வாசலில் அன்னத்தின் தூவிகள் சொரிந்து கிடப்பது போல் தோன்றியது.
தொடக்க வரிகளிலிருந்தே அற்புதமான சொல்லிணைவுகளால் கவிதை தேர்க்கால்களென சொற்களின் பேருட்டலாகின்றது.
“மின்னுச்செய் கருவிய பெயன்மழை
தூங்க..” என மின்னேறிய கவிதை “தேங்கமழ் திரு நுதல்..” வரை ஒளியகலவில்லை. சொற்களின் தாளங்களுள் உள்ள காதலுற்ற மனதின் இடிமுழக்கம் நிற்கவில்லை.
இன்னொரு கவிதையில் இன்னொரு தேவியின் உள்ளம் தேர்ச்சத்தம் கேட்பது போல் எழும் பிரமையினால் துயில் துறந்து கிடந்ததை குன்றியனார் எழுதியிருக்கிறார்.
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாள் கங்குல்,
மன்றம் போழும் இன மணி நெடுந்தேர்
வாராதாயினும், வருவது போலச்
செவி முதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி, என் கண்ணே.
தோழி! முழவைப் போன்ற அடி மரத்தையுடைய வளைந்த பனை மரத்தினது வழமையான ஓலையில் சிறு குச்சிகளால் செய்த கூட்டிலுள்ள கரிய காலையுடைய அன்றிலினது விருப்பத்தையுடைய முதல் சூலினால் உண்டான நோயையுடைய பெண் பறவை தன் ஆண் பறவையை அழைக்கின்ற நடு இரவில், தனது சக்கரத்தால் ஊர் மன்றத்தைப் பிளந்து கொண்டு வரும், நிறைய மணிகளையுடைய என் தலைவனது உயர்ந்த தேர் வராவிட்டாலும் வருவதுப் போல் என் காதில் ஒலிக்கும் ஒலியினால் என்னுடைய விழிகள் துயில் நீத்தன! என்பது பொருளுரை. (வைதேகி)
எத்தகைய பொழுதில் என் துயில் நீங்கியிருக்கிறது என்பதை குன்றியனார் கூறுகிறார். பெண் அன்றில் முதற்சூல் கொண்ட காலத்தின் பாதியிரவில் அதற்குத் தன் துணையின் இருப்பு எவ்வளவு தவிப்போ அத்தகைய பரிதவித்தலை உள்ளுணரும் பெண் அவ் அகவலால் எழுந்து தன் காதலனின் தேர்ச்சக்கரங்களின் ஒலியால் பிரமை கூடி உறக்கமற்றுக் கிடக்கும் பிரிவின் அன்றாடம் மன்றம் போழும் இன மணி நெடுந்தேரில் வரும் தன் இணையை நாடிக்கொண்டிருக்கிறது.
உறவின் மிக முக்கியமான கணங்கள் பிரிவே. கூடலின் இன்பத்தைப் பெருக்குவது பிரிவின் தூரங்களே. பசலை படரும் நுதலும் வதங்கிச் சோரும் இடையும் முடிவின்றி ஏங்குவது அசைந்து வரும் தன் தலைவனின் தேரின் சிறகடிப்பையும் மணி ஒலிகளையும் தான். ஒலிகளுக்கு உள்ள ஈர்ப்பும் நினைவும் பிரிவில் பலமடங்கு இசைகூடிக் கேட்பவை. ஆசையின் நாதமென அவ்வொலிகள் உளத்தின் தோற்ற மயக்கங்களில் சிதறியெழுபவை. சிணுங்கிக் கொல்பவை.
கூடாத காலத்தின் காதலுக்கும் காமத்துக்கும் உறவை விட எடை அதிகம். பிரிவின் விஷம் என்ற கட்டுரையில் ஜெயமோகன் எழுதிய சில வரிகளை இப்பிரிவின் ஒலிகள் தொட்டு எழுப்பின. “வாழ்க்கையை வகுத்துச்சொல்லச் சொன்னால் நான் இப்படிச் சொல்வேன். உறவும் பிரிவும். அவ்வளவுதான்” என்றார் மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு முழுப்போதையில். பயங்கரமான ஒரு ஏப்பம். இமைகளை முழுமூச்சாக உந்தி மேலே தூக்கி சிவந்த விழிகளால் என்னைப்பார்த்து ”..ஆனால் என்ன விஷயம் என்றால் பிரிவுக்கு உறவை விட நூறுமடங்கு எடை அதிகம்”….”பிரிவைப்பற்றி எழுதாதவன் கவிஞன் இல்லை. மேலே உள்ள தாயோளி அதற்காக மட்டும்தான் கவிஞர்களை பூமிக்கு அனுப்புகிறான்”.
எவ்வகையில் பார்த்தாலும் இது சரியென்று தான் படுகிறது. உறவின் பெருங் கொண்டாட்டத்தைப் பற்றி எழுதப்பட்ட வரிகளை விட இழப்பின் கசப்பூறிய வரிகளே பலமடங்கு அதிகம். பூமிக்கு வந்த கவிஞர்களெல்லாம் பிரிவை வைத்தே உறவின் நீளத்தை அளந்திருக்கிறார்கள். இன்மையே இருப்பின் மதிப்பைக் கூட்டுவது. எவ்வளவு அரிதான ஒரு வாய்ப்பு வாழ்க்கை. இதை அனுபவித்துத் தீர்த்து திகட்ட வாழந்து கொள்ள முடிவில்லாத நீங்குதலை மெல்ல மெல்ல ஒவ்வொரு மிடறாக அருந்திக் கொண்டேயிருக்கிறோம். ஒரு சிற்றொலி உண்டாக்கும் நினைவின் தீவிரமே பித்தேற்றும் என்றால் இன மணிகள் குலுங்கப் பேரொலியெழுப்பும் தேரை எதற்காகக் கவிஞர்கள் தேர்ந்திருப்பார்கள்! எவ்வளவு எடையுள்ளது பிரிந்திருத்தலின் ஒலி. எவ்வளவு இனிமையானது திரும்பலில் கேட்கும் மென்பாதச் சுவட்டின் வெறும் ஒலி. விசும்பில் ஆடும் அன்னமே, என் கண்ணே.