மார்பிடைப் பெருங்குளம்
மட்டக்களப்பில் உள்ள கற்பாறைக் குன்றொன்றின் அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. சுற்றிலும் உயர்ந்து நீண்ட மரங்கள். எழுத்தாளர் இமையம் அந்த நீரகத்தைப் பார்த்தபடி நின்றுவிட்டுத் திரும்பி அவரின் இயல்பான புருவத் துள்ளலுடன் சொன்னார், “சங்கக் கவிஞன் சொல்லுறான், பெண் அழுத கண்ணீர் மார்பிடையில் கொக்குகள் மேயும் குளமென்று ஆகியதென்று, அவனுங் கவிஞன், நீயுங் கவிஞனா? அவன் எப்பிடி யோசிச்சிருக்கிறான். இன்னிக்குள்ள எவனாவது அப்பிடி எழுதுவானா?” ஒரு கணம் அக்கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் அகம் உறைந்தது. இமையம் பொதுவாக தமிழ்க்கவிஞர்களின் இன்றைய நிலை பற்றிச் சொன்னது அக்கூற்று. ஆனால் என் அகம் எனக்கான கேள்வியென அதை எதிர்கொண்டது.
இமையம் சொன்னது சரிதான். நமது காலத்தில் எவ்வளவு இயற்கையிலிருந்தும் உயர் கவித்துவத்திலிருந்தும் நீங்கி வந்தபடியே இருந்திருக்கிறோம். அது நமது பண்பாடு ஆக்கியளித்த நுண்கரங்களை அகமிழப்பது ஆகாதா? இயற்கையின் மூலம் உருவாகக் கூடிய படிம இணைவை நவீன தமிழ்க்கவிதையின் கவிதைவரிசார்ந்த முனைப்பால் நாம் இழந்து தானிருக்கிறோம். உளத்தின் முன் ஆடியென இயற்கையின் சித்திரமொன்றை அசைய வைப்பதில் நவீன கவிஞர்களின் பயிற்சியின்மை அல்லது கவனமின்மை என்ற ஒரு அம்சம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
இயற்கையின் நுண்மையான எழிலின் கோலங்களை எவ்வளவு நவீன கவிதைகள் உருத்
திரட்டியளித்திருக்கின்றன. மிக அரிதாகவே சில கவிதைகள் அப்படி நிகழ்ந்திருக்கின்றன. ஒருவகை மனவசன அமைப்பே நவீன கவிதைகள் உருவாக்கிக் கொண்டவை. நான் கூறுவது இயற்கையின் சித்தரிப்புகள் சார்ந்ததல்ல. இயற்கையின் ஒரு தருணத்தை படிமமாக்கி அகவெழுச்சியுடன் இணைக்கும் ‘பார்த்தல்’ இழக்கப்படுவதையே கவனங் குவிக்கிறேன். நமது பார்த்தல் அன்றாடம் உருவாக்கியளித்திருக்கும் நெருக்கடிகளினையும் மகிழ்ச்சிகளையும் கொஞ்சம் உணர்திறன் கூடிய வகையில் அறிதலாக முன்வைப்பதையே நவீன கவிதைகள் உருவாக்கினவோ என எண்ணத் தோன்றுகிறது. ஆனால் பழந்தமிழ் இலக்கியங்கள் ஒன்றை இன்னொன்றின் வழி சித்திரப்படுத்துதலில் மேதமையுடையனவாய் இருந்திருக்கின்றன.
நன்னாகையார் எழுதிய அக்கவிதை,
‘சேறும், சேறும்’ என்றலின் பண்டைத்
தன்
மாயச் செலவாச் செத்து ‘மருங்கு அற்று
மன்னிக் கழிக’ என்றேனே, அன்னோ,
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்
கொல்லோ?
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்று என் இடை
முலை நிறைந்தே.
“நான் செல்லுவேன்
நான் செல்லுவேன்” என்று பலமுறை
தலைவன் கூறியதால், முன்பு
சொன்னதாகிய பொய் என்று
நினைத்து, “என்னிடமிருந்து நீங்கி
நிலைபெற்றுச் செல்வாயாக
என்றேனே! ஐயோ! நமக்குப்
பற்றுக்கோடாகிய தலைவன் எங்கு
இருக்கின்றானோ? என்னுடைய
முலைகளின் இடையில் உள்ள இடம்,
அவனது பிரிவால் அழுத என்
கண்ணீரால் நிறைந்து, கரிய
காலையுடைய நாரைகள் உண்ணும்
பெரிய குளமாக ஆயிற்று.(வைதேகி)
இயற்கையை அறிய அறிய, அதன் இயல்பினால் அதுவரையில்லாத ஒளியின் கோணத்தில் கவிதை சுடருறும். வெண்குருகு என்பதைக் கொக்கு எனும் அர்த்தத்தில் வாசிக்கும் முறைமை இருக்கிறது. நாரை என வாசிக்கும் வழக்கமும் உள்ளது. ஆனால் குருகைப் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரையொன்றில் அவரது தனயனும் எழுத்தாளருமாகிய அஜிதன் தன் ஆசிரியர் தியோடர் பாஸ்கரன் சொல்லும் பார்வைப் பின்புலத்தைக் குறித்துச் சொல்கிறார். சங்கப் பாடல்களை வாசிக்க இயற்கையைக் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களெல்லாம் கற்பனையில் எழுதிவிடவில்லை. எழுதியவர்கள் விவசாயி, கொல்லன் மாதிரியான ஆட்கள். அவர்கள் கண்முன் கண்டதையே எழுதினார்கள். பொதுவாக பழங்குடிகள் நேரில் பார்த்ததையே சொல்வார்கள். சங்க இலக்கியப் பாட்டெல்லாம் அப்படித் தான் என்று தியோடர் பாஸ்கரன் சொல்கிறார். இப்படிச் சொல்லிய அஜிதன் குருகைப் பற்றிச் சொல்லிய அம்சங்களாக, சொல்லும் தகவல்கள் அலாதியானவை. குருகின் இயல்பென்பது அபூர்வமானது. அது ஆண்டு முழுவதும் வயலில் வேலை புரிபவர்களே பார்ப்பதற்கு அரிதான பறவை. மிகவும் நாணமுள்ளது. ஓடைக் கரைகளில் புதரினுள் ஒளிந்து அமர்ந்திருந்து மீன், நண்டு போன்றவற்றை பிடித்து உண்ணும். சத்தம் போடாமல் இருக்கும். சங்க காலப்பாடல்களில் அதன் இயல்புகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள்.
குருகைக் கொக்கெனவோ நாரையெனவோ அல்லது அஜிதன் சொல்வது போலோ கொண்டாலும் மூன்று வேறு அர்த்தங்களில் அவை பறப்பதை மூன்று வகையான வாசிப்புகளாக் கொண்டு வாசகர்கள் அனுபவிக்கலாம். தலைவனின் பிரிவால் தாளாத தலைவி சிந்தும் கண்ணீர் சொரிந்து சொரிந்து மார்பிடைத் தேக்கத்தில் குளமென ஆகியது என்று அதைக் காணும் ஒருவன் பிரிவை இயற்கையின் தோற்றத்துடன் இணைக்கும் இக் காண்தல் உன்னதமாக்கலை புரிகிறது.
பலூனை ஊதிக் கையில் பிடித்து வைத்திருப்பது போன்றன எளிய கவிதைகள். ஒரு கவிஞர் தன் உள்ளுணரும் உணர்வெழுச்சியால் கவிதையில் உன்னதமாக்கல் திகழும் பொழுது அக்கவிதை ஒரு ராட்சத பரசூட் என விண்ணெழுந்து மிதக்கக் கூடியதாய் ஆகிறது.
தா அம் சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ?
ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.
இதுவும் நன்னாகையாரின் கவிதையே. இதற்கான பொருளுரை தோழி! வலிமையையுடைய அழகிய சிறகையும், மென்மையாகப் பறக்கும் இயல்பையும் உடைய வௌவால்கள், பழுத்த மரங்களை நோக்கிச் செல்லும், தனியாக இருப்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நாம் தனியாக இருக்கும்படி, இங்கு எம்மைவிட்டுப் பிரிந்த தலைவர், தாம் தனிமையாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பாரோ? ஏழு ஊரில் உள்ளவர்களுக்குப் பொதுவாகப் பயன்படும்படி, ஓர் ஊரில் அமைத்த, கொல்லன் உலையில் பொருத்திய துருத்தியைப் போல, எல்லையில்லாத் துன்பத்தை அடைந்து என் நெஞ்சு வருந்துகிறது.(வைதேகி).
ஏழு ஊர்களுக்குப் பொதுவாக இருக்கும் கொல்லன்களத்தினைத் தலைவனைப் பிரிந்தவளின் நெஞ்சுக்கு உவமித்திருக்கிறார். முலைக்கும் நெஞ்சுக்கும் உள்ள இருவேறு தன்மைகளைப் பிரிவின் நிலைக்கு எப்படிப் பார்த்திருக்கிறது அவரின் அகம். ஒன்று புறவயமான உடல் அவயமான முலையிடை வெட்டில் சேரும் நீரகம். மற்றையது நெருப்பில் தகிக்கும் உலை வாங்கு மிதிதோல்.
இரண்டாவது கவிதையின் படிமம் ஓர் உலை வாங்கு மிதிதோல். நவீன கவிதைக்குள் வந்தமரக்கூடிய அன்றாடத்தின் படிமமாக ஆகுவது. ஆனால் அக்கவிதையின் தொடக்க வரிகளில் வரும் வெளவால், ஒலியெழுப்பித் திசையறிந்து பயணிக்கும் உயிரெனக் கவிதைக்குள் இயற்கையை அழைத்து வருகிறது. இயற்கையினையும் அன்றாடத்தையும் ஒன்றென அறியும் பயில்வின் விளைகனிகள் இக்கவிதைகள்.
மருங்கு அற்று மன்னிக் கழிக,
பழுமரம் படரும் பையுள் மாலை, ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
போன்ற சொல்கூர்தல்களின் இணைவுகளை நாம் நவீன கவிதைக்குள் எத்தனை வரிகளாகப் பொறுக்கியெடுக்க முடியும்! இசையும் இயற்கையும் உணர்வும் உன்மத்தமும் அளைந்து எழும் கவிதைகளின் ஒருகாலம் நம்மில் இருந்தது என அறிவது, இன்றும் நம்முள் ஓடுங் குருதியில் என்றோ நம் முன்னோர் ஆக்கியளித்த கனவின் திகைப்பொலி கேட்பதை அறிவதன் தொடக்கமன்றோ.