இமிழ்: அழைப்பு

இமிழ்: அழைப்பு

பிரான்சில் இடம்பெற்ற 51 ஆவது இலக்கியச் சந்திப்பில் வெளியிடப்பட்ட இமிழ்: கதைமலர்த் தொகுப்பின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழவிருக்கிறது.
நானும் நிகழ்வில் பேசுகிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ளுங்கள்.

இமிழ் என்றால் ஒலித்தல் என்று பொருள். புறநானூற்றில் இருந்து அச்சொல் இக்கதை மலருக்கு இடப்பட்டிருக்கிறது. கவிதையைத் தேடி வாசித்தேன். போரில் எதிரிகளைக் கொன்ற புலால் மணம் மாறாத தந்தங்களுடைய யானையைப் புலவனுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறான் ஒரு மன்னன். புலவன் அந்த யானையை அஞ்சி விலக, இந்த யானை போதாதென்று எண்ணுகிறாரோ என்று அதை விடப் பெரிய வேழத்தைப் பரிசாக அளிக்கக் கூடிய மன்னவன் அவன். அவனிடம் பரிசு பெறச் செல்லாதீர்கள் சுற்றத்தவரே! அவன் மிகையாகவே பரிசளிக்கக் கூடியவன் என்ற பொருளுள்ள கவிதையது.

வழமையை விடச் சற்று அதிகமான நல்ல கதைகளுள்ள தொகுப்பு இமிழ். ஆகவே தொகுப்பிற்குப் பெயர் வைத்த கவிதையின் முழுமையும் கூடப் பொருத்தமாய் இருக்கிறது. வீரஞ் செறிந்த நம் மக்களிடம் ஓடிக்கொண்டிருக்கும் புறநானூற்றுக் குருதிக்கு நியாயம் சேர்ப்பதாயும் அமைந்திருக்கிறது என்பதால் டைட்டில் டபிள் ஓகே.

சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு
மார்பின்,
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக்
கிழவோன்,
வலி துஞ்சு தடக் கை வாய் வாள்
குட்டுவன்,
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்,
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப்
புலவீர்!
யானும் இருள் நிலாக் கழிந்த பகல்
செய் வைகறை,
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப
ஒற்றி,
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த்
தந்தை
வாடா வஞ்சி பாடினேனாக,
அகம் மலி உவகையொடு அணுகல்
வேண்டி,
கொன்று சினம் தணியாப் புலவு நாறு
மருப்பின்
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆகத்,
தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி,
பிறிதும் ஓர்
பெருங் களிறு நல்கியோனே;
அதற்கொண்டு,
இரும் பேர் ஒக்கல் பெரும்
புலம்புறினும்,
‘துன் அரும் பரிசில் தரும்’ என,
என்றும் செல்லேன், அவன் குன்று
கெழு நாட்டே.

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்பவர் எழுதிய கவிதையிது.

அ. முத்துலிங்கம், அகரன், உமா வரதராஜன், ஓட்டமாவடி அறபாத், கருணாகரன், சப்னாஸ் ஹாசிம், சாதனா சகாதேவன், சித்தாந்தன், செந்தூரன் ஈஸ்வரநாதன், டானியல் ஜெயந்தன், தமயந்தி, தர்மு பிரசாத், தாட்சாயணி, திருக்கோவில் கவியுவன், தேவகாந்தன், தொ. பத்திநாதன், நவமகன், நஸிகா முகைதீன், நெற்கொழுதாசன், நோயல் நடேசன், பா.அ.ஜயகரன், யதார்த்தன், றஷ்மி, ஸர்மிளா ஸெய்யித், ஷோபாசக்தி ஆகியோரின் கதைகள் இமிழ் தொகுப்பில் வெளியாகியிருக்கின்றன.

TAGS
Share This