துளித்தீகள்
ஒரு காட்சித் துண்டு கவிதையென ஆவதுண்டு. காண்பதை வேறொரு உச்சியில் அறியும் அகக் கண்கள் உள்ளவர்களே கவிஞர்கள். மடலூர் கிழாரின் கவிதையொன்றை வாசித்த பொழுது மனதுள் எழுந்த துண்டுப் பரவசம் இன்னொரு சொல்லில் எழ வைக்க முடியாதது. காட்சியின்பமாகவே ஆகும் வரிகள் அவை.
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான்மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உண்ணோய் மல்கும்,
புல்லின் மாய்வது எவன் கொல்
அன்னாய்?
தொலைவில் பரண் மீது உள்ள குறிஞ்சி நிலத்தவன் கொழுத்திய நறுமணப் புகை உடைய கொள்ளியானது ஆகாயத்தின் நட்சத்திரங்களைப் போல் திக்குத் திக்காய் எரிந்து சொரியும் மலையுடைய நாட்டைச் சேர்ந்த அவனை நினைத்தால் எனது காமம் பெருகும் அவனைக் கூடினால் அது அழியும், என்ன வியப்பு இது! என்பது பொருள்.
இருளைப் போர்வையென இழுத்துப் போர்த்தியிருக்கும் மலையில், எங்கோ ஒருவன் கொழுத்திய நறும் புகையின் சிறு நாவு தலைவியின் நாசிக்குள் நுழைகிறது. ஒரு துளி இன்பம் அது. தலைவனின் கூடல் நினைவுகளின் கடந்த காலத்திற்கும் கூடப்போகும் எதிர்கணங்களிற்கான கற்பனைகளுக்கானதுமான ஒரு புகைச் சாவி. நறுமணங்கள் கிளர்த்தியெழுப்பும் காமத்தின் திடீர் நொடிகளின் முன், நாயின் குழைவாலெனக் காமத்திடம் அகம் கெஞ்சி வளையும். கூடலுக்கான ஏக்கத்தின் தொந்தரவு இம்மையுலகை உதறியெழும் அம்பெனக் காமத்தை நோக்கியே மீள மீளத் தன்னை எய்துகொள்ளும்.
வான்மீனின் வயின்வயின் இமைக்கும் என்ற சொல்லிணைவின் காட்சியின்பம் தான் இக்கவிதையில் உச்சமானது. குறவன் கொழுத்திய கொள்ளியிலிருந்து சுடர்ந்து பரவும் துளித்தீகளை இமைக்கும் விண்மீன்களெனக் காண்பது. அதன் தோன்றலையும் மறைதலையும் இமைப்பெனக் கண்டு கொள்வது. இதுவே கவிஞரின் அகங்குவியும் இடம்.
சபரிநாதன் எழுதியுள்ள கல்புணை என்ற நெடுங் கவிதையில் வருகின்ற பகுதி இது.
கராளன் இயற்றியது:
அவள் என் மேல்
பயணித்துக்கொண்டிருந்தாள்
யாருமற்ற நீண்ட பாதையில்
நானும் இல்லை அங்கே
வழியில்
உயிர் கமழும்
சதுப்பு நிலத்தின்
ஊற்றுகள்
கானகப் புடவில் மறைந்திருக்கும்
விதான முத்தின்
நீல ஒளி
எனக்கு பிடித்தது கூடல் முன்
கூடித் தேறல் குடிப்பது
இருட்டில்
அதைவிட இருட்டான இடத்தில்
முத்தமிடுவது
அவள் பாய்கிறாள்
என்னைக் கவ்வியபடி.
நான் பார்க்கிறேன்
அவள் பின்னே
விண்மீன்கள்
உதிர்வதை.
சங்கலாத்திலிருந்த இமைக்கும் விண்மீனையும் காமத்தின் திளைப்பையும் இந்தக் காலம் வரை நீளும் ஒன்றாக ஆக்கும் கவிதையிது.
கவிதைக்குள் உண்டாக்கப்படும் கதையின் பின்னணி நெஞ்சம் இனிப்பது. கூடலுக்கு முன் கூடிக் கள் அருந்துகிறார்கள், இருட்டுக்குள் அதை விட இருள் கூர்ந்த பகுதியை முத்தமிடுகிறார்கள், ஈற்றில் அவள் தலைவனைக் கவ்வுகிறாள், அவளின் பின்னால் கொள்ளிச் சுள்ளிகள் வானத்தில் உதிர்கின்றன. என்றோ ஓர் நற்தினத்தில் இமைத்த துளித்தீகள் மீண்டும் இன்னொருவனின் அகத்தில் எழுந்தணைகின்றன. கூடலும் நெருப்பும் எரிவதாலும் அணைவதாலுமே ஒன்றென எண்ணப்படுகின்றன.
இவ்விரு கவிதையும் அளித்த காட்சியின் ஒளிர்கனவு இப்படியிருக்கிறது, மலை கொள்ளாமல் மலர்கள் பூத்துச் சொரிந்து கிடக்கிறது. இருளில் மலர்க்குழை வாசனை காட்டை வாசனையுடலாக மட்டுமே மாற்றுகிறது. உள்ளே மிருகங்களும் பறவைகளும் மெல்லிய சத்தத்துடன் துயில்கின்றன. இரவின் வேட்டைக் காரர்களான மிருகங்கள் மட்டும் தனித்துலவுகின்றன. தொலைவில் வெறும் மார்பில் காற்றை அலைய விட்டு, நறும்புகைக் கொள்ளி கொண்டு பரண்மேல் நிற்கும் தலைவன். உதிர்ந்து சொட்டும் தீயில் அவனைத் தலைவி பார்க்கிறாள். அவன் கேசம் அலையும் இருட்டுள் இருளலையென விழிகளுக்குள் அசைகிறது. கூடினால் மட்டுமே தீரும் ஏக்கம் மனதின் உச்சியின் பரணில் அமர்ந்திருக்கிறது. தேகத்தின் ஒவ்வொரு துடிப்பும் நான் நான் என அவனிடம் மோதுகிறது. அவன் இருட்டுள் எங்கோ தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அப்பார்வையை மட்டும் உணர்கிறான். அவ்விழிக்குள் சென்று விழுவதற்காகவே அவன் தீச்சூடினான்.
இருட்டின் திசைகளைத் திறந்தபடி காட்டில் இறங்கும் நதியெனப் புரவியேறிப் பரண் சேர்கிறாள் தலைவி. நறும் வாசம் கூடிய புகைப் பரணில் இருவரும் தேறல் அருந்தி இரண்டு காளைகள் ஒன்றையொன்று மோதும் உக்கிரத்துடன் உடை விசிறி, மேனியை மேனியால் முட்டி இடித்து, கைகளால் அங்கங்கள் உருவிச் சேர்ந்து, தீயிலை புகைக்கின்றனர். அவர்களிலிருந்து அதன் பொற் துகள்கள் உதிர்கின்றன. இமைப்பு ஓர் இரவென அவள் கவ்விய அவனில் துடிக்கிறது.
வாழ்க்கையை அதன் உச்சிப் பரணில் அமர்த்தவே கவிதை மானுடருக்கு அளிக்கப்படுகிறது.
முகப்பு ஓவியம்: ட்ரோஸ்கி மருது