மணி மருள் பூ

மணி மருள் பூ

காத்திருப்பின் மென்னொலிக்கு அதிராத காதலுள்ளங்கள் உண்டா!
கொல்லன் அழிசியின் இக்கவிதையில் கருநொச்சி விழும் ஓசை கேட்குமளவுக்கு உள்ளம் தன் அனைத்துப் புலன்களையும் காதுகளக்கிக் கொண்டு விழித்திருக்கும் தவிப்பில் எழுவது எது!

கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே,
எம் இல் அயலது, ஏழில் உம்பர்
மயிலடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

இப்பெரும் ஊரில் யாவரும் உறங்கினாலும் எமக்குத் துயில் விழவில்லை. நள்ளிரவில் மயிலின் கால்விரல்களைப் போன்ற இலைகளைக் கொண்ட கரு நொச்சிப் பூங்கொத்துகள் உள்ளன. நீலமணியின் நிறத்தை ஒத்த நொச்சி மலர்கள், மென்மையான கிளைகளில் இருந்து உதிர்வதைக் கேட்டபடியே
படுத்திருந்தோம்.

தலைவனின் வருகைக்காய் காத்திருக்கும் பொழுதில் அகம் துயில் பிடிக்காமல் கரு நொச்சி மலர்கள் உதிர்வதைக் கேட்டபடியிருப்பதாய் வரும் வரிகள் அவ்வுணர்வை மேலும் நுண்மையாக்குபவை. கருநொச்சி மலர்கள் கடுநீல நிறங் கொண்டவை. கொத்துகளாக மலரும். அவற்றின் தோற்றம் அல்குல்லென விரியக்கூடியது. மெல்லிய சிறிய அல்குல்களின் குலை என நீளும் கொத்துகள். கரு நொச்சி மரங்கள் ஆயிரம் அல்குல்களின் பெருவிரிவென எழுந்து நிற்பவை. கருநொச்சியைப் பார்த்த பின் இக்கவிதையை வாசிக்கும் பொழுது அதன் கவித்துவ நுழைவாசலால் திறந்து மூடும் பகுதிகள் வாசிப்பை நனிசுவையாக்குபவை.

(கருநொச்சி மலர்கள்)

கருநொச்சியின் இலைகள் மயிற்கால்களென தோற்றங் கொள்பவை. கவிதையின் இறுதி மூன்று வரிகளிலும் உண்டாகும் காதல் மயக்கின் தாளம் காத்திருக்கும் உள்ளத்தின் காதுகளுக்குள் விழ வேண்டிய ஒரு சொல்லை ஒரு ஒலியை கூர்ந்து கேட்டிருக்கும் பித்தில் விளைவது. காதலில் கூடல் நொடிகளின் தவிப்பே அதன் உயர்விசை. இன்றும் அன்றாடத்தில் எதிர்ப்படும் யாரோ ஒருவனோ ஒருத்தியோ யாருக்காகவோ இடைவிடாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முகத்தில் பிற காத்திருத்தல்களுக்கு இல்லாத ரேகையொன்று உள்ளது. சரக்கொன்றையின் தூங்கும் மலர்களின் கீழோ அல்லது செவ்விதழ் வாகை வேலிபோட்ட குளத்தங்கரையிலோ கடலின் கரையில் மலர்களற்ற மரத்தினடியில் தானேயொரு மலரெனவோ எங்கிலும் காத்திருக்கிறார்கள். இந்தக் காத்திருப்பின் தவித்தல் இல்லாத காதலும் இல்லை. கூடலும் இல்லை.

கூடலுக்குக் கூர்ந்திருக்கும் காதுகளில் அழகிய மெல்லிய காம்பு உதிர்க்கும் மணி மருள் பூவின் பாடு நனி கேட்டு விழித்திருக்கும் இதயங்களில் ஒரு மலர் வீழ்தலின் தொடு கணம் நிகழினும் அது எத்துணை பெரியது! சிறு கணத்தால் ஆகும் சந்திப்பில் இருவருக்குமிடையில் மின்னும் நான்கு விழிகளும் நீல ஒளி கொண்ட கரு நொச்சி மலர்களென மருளாதோ!
உன்னைத் தவிக்கத் தவிக்கக் காத்திருப்பதில் காமம் ஆயிரமாயிரம் அல்குல் குலைகள் கொண்ட கருநொச்சி மரமென என்னுள் முளைக்காதோ!

TAGS
Share This