சுகந்தமும் வியர்வையும்
எப்பொழுதாவது பனிக்கட்டி வலுவுடன் நீர்க்கல் பெருக்கென இம்மண்ணில் மழை விழுவதுண்டு. அம்மழை எந்த இடைவெளியிலும் கோடை வெளிவரக் காத்திருக்கும் புழுக்கத்தின் மேல் குளிர்க்கால்களால் நடந்து இவ்வெளியை ஈரம் பரவவிடும்.
வெண்ணொளிச் சாளரமென வானத்தைத் திறந்து அடைக்கும் மின்னல்கள் துலங்கும். காற்று அளைந்து எடுத்து வரும் மலர்களின் சுகந்தத்தில் நிகழும் கூடலில் பெருகும் வியர்வையை விடச் சுவையானதை உடலறியுமா!
மோசிகீரனாரின் கவிதையொன்றில்
பெயர்த்தனென் முயங்க யான்
வியர்த்தனென் என்றனள்,
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே,
கழல் தொடி ஆய் மழை தவழ்
பொதியில்,
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
மீள மீளப் புணர்ச்சியின் போது தலைவன் வியர்க்கிறான் என்று சொல்லும் தலைவி வேங்கையும் காந்தாளும் மணமூட்டும் மழை தவழும் மலையில் உள்ள ஆம்பல் மலரை விடக் குளிர்ச்சியானவள். இரண்டு குளிர்களை விட. இரண்டு வெப்பங்களை விட. இரண்டு எதிர் பருவங்கள் ஒன்றுடன் ஒன்று கலைந்து கொள்வது போல் குளிரும் வெப்பமும் கலக்கும் உடல்கள் புணர்வது காமத்தின் நற்பேறு. ஆம்பல் இரவில் அவிழ்ந்து காலையில் குவியும் மலர், காமம் இரவின் மலர்.
புணர்ச்சிகளில் வழியும் வியர்வையைத் தீர்தமெனச் சுவைக்கும் நாவு காலசர்ப்பம் போல் தன் வாலைத் தானே கவ்வித் தன்னுள் தானே அமிழ்வது. எனது கவிதையொன்றில் மழைப்பெருக்கில் முயங்கும் ஈருடல்களின் வியர்வையை எழுதிய போது மோசிகீரனாரின் இந்தக் கவிதையை வாசிக்காமலேயே அவரின் கவிமனதின் தொடர்ச்சியை என்னுள் உருவாக்கியிருப்பது எது? வாழ்வின் ஒவ்வொரு நொடிக்குள்ளும் கசியும் வியர்வையின் தீர்த்தத்தை அறிவது கவிப்பணி என்பது கவிதைகளின் அடிப்படை விதிகளில் ஒன்று.
கூடற் காலம்
தாழிடா ஜன்னலில் மின்னலின் வெளிச்சம்
மயங்கும் உடல்களில் போதையின் நடனம்.
அருந்த
முத்தத்தின் முதற் தீர்த்தம்.
பேரொளியின் நிலவு வதனம்.
இம் மழையின் கரிப்பு நீ
இச் சுவையின் நாவு நான்
தானாய்க் காயவிடு இவ்விரவை.
உலரும் வியர்வையாக இந்த இரவை விட்டுவிட்டுச் சாளரமெனத் திறக்கும் மின்னலின் ஒளியில் மூச்சுத் திகைக்கும் நொடிகளில் நிலைத்து நாம் வாழ்க்கையைக் கொண்டாடிக் களிப்பதற்கு எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்ற பாரதியின் வரிகளில் ஒரு ஆம்பலை வைக்கிறேன்.