தற்பிறப்பு

தற்பிறப்பு

சிறுவயதில் வீட்டில் ஏதாவது குழப்படிகள் செய்துவிட்டால் அப்பா அடிப்பார். விதிமுறைகள் கொண்ட நியாயமான அடிகள் விழும். நான் அடிக்குப் பயந்து வீட்டைச் சுற்றி ஓடுவதுண்டு, வீடு போதவில்லையென்றால் பக்கத்து வீடுகளுக்கும் சென்று ஓடுவதுண்டு.

எங்களது வீட்டுக்குப் பக்கத்து வளவு ஒரு வாழைத் தோட்டம். சிப்பாலன் ஐயா என்பவருக்குச் சொந்தமானது. விரதகாலங்களில் தலைவாழை இலை வெட்டவும் லீவு காலங்களில் ஆமி – இயக்கம் விளையாடவும் அத்தோட்டத்தில் திரிவதுண்டு. நேர்த்தியாகச் சதுரஞ் சதுரமாக வெட்டப்பட்ட பாத்திகளும் நீரோடிய வாய்க்கால்களும் ஒவ்வொரு சிறுமரக் கூட்டத்துக்கும் காய்ந்த வாழைச் சருகுப் பசளையெனவும் போடப்பட்ட தோட்டம். தோட்டத்தின் இரண்டு பக்கத்திலும் ஒழுங்கைகள், இரண்டு ஒழுங்கைகளிலிருந்தும் உள்ளே நுழைவதற்கான வேலி ஓட்டைகள் போட்டிருந்தோம். ஒன்றில் நுழைந்து இன்னொன்றால் அடுத்த ஒழுங்கைக்கு வெளியேறி விடலாம். இது விளையாடுவதற்கும் தப்பியோட்டங்களுக்கும் உதவும்.

சண்டை நடந்து கொண்டிருந்த காலம். ஆமிக்காரர் அடிக்கடி ரோந்து போவார்கள். நாங்கள் ஏதாவதொரு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருப்போம். ஒருநாள் வீட்டில் ஏதோ குழப்படி செய்துவிட்டேன். அப்பா அடிக்கத் துரத்த ஓடிப்போய் சிப்பாலன் ஐயாவின் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன். ஒரு மணித்தியாலத்திற்கு மேல் அமர்ந்திருந்து சலித்து விட்டதால் பக்கத்தில் இருந்த சருகுகளுக்கும் சுவருக்கும் இடையில் இருந்த பகுதியில் சுவரோடு ஒட்டியபடி படுத்திருந்து தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது நித்திரையானேன் எனத் தெரியாது. விழித்த போது செக்கல் கடந்து இருளத் தொடங்கி விட்டது. அம்மா எப்பவும் செக்கலுக்க சாப்பிடக் கூடாது என்று சொல்லுவா. எனக்குப் பசிக்கத் தொடங்க, மெதுவாக எழும்பப் பார்த்தேன். பக்கத்து வீட்டு அன்ரிகள் சிலர் சுவருக்கு அந்தப் பக்கம் நின்று கதைப்பது கேட்டது. ராசன்னனின்ர மூத்த பெடி மத்தியானம் தேப்பன் அடிக்க ஓடிப்போட்டுதாம். இன்னும் வரேல்லையாம் என்று தீவிரமாகக் கதைத்தனர். ஆஹா, நான் ஓடிய நாட்களிலேயே இது தான் உருப்படியான நாள். ஒரு நாலு பேர் மினக்கெட்டு நான் ஓடியமையை ஒரு தகவலாகக் கதைக்குமளவு வளர்ந்து விட்டேன். ஆனால் அவர்கள் என்னை யாராவது ஆமிக்காரர்கள் பிடித்து விட்டார்களா என்று பயப்படுவதாகக் கதைத்த பொழுது, அருகில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கறுப்பும் மஞ்சளும் கலந்த அட்டைகளைப் போல ஒன்றும் செய்யாமல் ஒளிந்திருந்தேன்.

இன்னும் கொஞ்ச நேரம் தேடட்டும். என் அருமை தெரியட்டும் என அப்படியே படுத்திருந்தேன். வானில் நட்சத்திரங்கள் முளைக்கத் தொடங்கியிருந்தது. ஒரு அன்ரி, இவள் பிள்ளை தான் பாவம். அவன் அம்மாவ ஒருக்கா நினைச்சுப் பார்த்தானே. ஓடியிட்டான் என்று சொல்லிய போது அம்மாவை நினைக்காத பாவியாகிவிட்டேன் என்று குற்ற உணர்ச்சி உருவாகியது. ஆனால் எப்படிப் போவது, சும்மா ஏதும் செய்தாலே நியாயக் கணக்கில் அடிவிழும், இப்படி இரண்டு வீதிகளிலும் உள்ள அன்ரிகளையும் அங்கிள்களையும் அலைய விட்டால் தர்ம அடியே கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. எது வந்தாலும் வரட்டும், பார்க்கலாம் என்று, அன்ரிகள் நின்றதற்கு எதிர்ப்பக்க வேலி ஓட்டையால் வெளியேறினேன். நெஞ்சைச் சற்று நிமிர்த்தினேன் அல்லது தானாகவே தான் நிமிர்ந்தது என்று தோன்றுகிறது. எதுவும் தெரியாதது போல், அருகே விளையாடச் சென்றிருந்தேன் எனச் சாதாரணமாகச் சொல்வது எனத் திட்டமிட்டுக் கொண்டேன். வாசல் வரை போனதும் சொல்லெல்லாம் மறைந்து போனது. சாதாரணமாகச் சென்றேன். கை கால் முகம் கழுவினேன். சாமியறைக்குச் சென்று நெற்றி நீளத்திற்கு வீபூதி பூசினேன். வந்தமர்ந்து புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். யாரும் எதுவும் கேட்கவில்லை. நான் வீடு திரும்பி விட்டேன் என்ற கதை மட்டும் ஒழுங்கைகளுக்குள் குதித்து அன்ரிகளின் காதுகளுக்குச் சென்று சேர்ந்தது. வந்துவிட்டானாம் என்று அசட்டையாகச் சொல்லிவிட்டு வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். எனக்கும் ஒன்றும் நடக்காதது அதிசயம் தான். கொஞ்சம் வளர்ந்து விட்டதாகவும் அப்பாவை வென்றுவிட்டதாகவும் நினைத்துக் கொண்டேன்.

தற்பிறப்பு என்ற க. மோகனரங்கனின் கவிதைக்குள் எனது பால்யத்தின் சிறுவனைக் கண்டேன். ஆச்சரியமாய் இருந்தது. ஒரு சிறுவன் இளைஞனாகும் தருணம் அது. மீசைக்கு முன்னர் அரும்ப வேண்டியது அக்கணம் தான். தன்னைத் தானே கண்டுபிடிக்கும் கணமொன்றிலிருந்து ஒவ்வொரு சிறுவனும் உலகத்திற்கு முன்னால்
நெஞ்சைச் சற்றுத் தூக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.

*

தற்பிறப்பு

வெகுநேரமாகியும் யாரும்
தேடி வரவில்லை என்பதால்
மறைவிடத்தை விட்டு
வெளியே வந்த சிறுவன்
வெறுச்சோடி கிடக்கிற
தெருவைப் பார்க்கிறான்
இருட்டிவிட்டதால் விளையாட்டை
இடையில் நிறுத்திவிட்டு
எல்லோரும் போயிருந்தார்கள்
நில ஒளியில்
வீதியில் பாதியை மறைத்தவாறு,
வீழ்ந்துகிடக்கும்
வீடுகளின் நிழல்களை மிதித்தபடி
எந்நேரத்திலும் வந்து
எதிரே மறித்து நிற்கப்போகும்
நாய்களுக்குப் பயந்து
நடப்பவன்
அவ்விரவில்
அந்தத் தனிமையில்
அவ்வளவு
அநாதரவாக உணர்கிறான்
ஒருகணம்
உடைந்து அழப்போகிறவனைப்போல,
தடுமாறி நிற்பவன்
மறுபோது வீம்புடன்
தலையை உதறிக்கொள்கிறான்.
தன்னை யாரோ அல்ல,
தானே கண்டுபிடித்தவன் போல
தயக்கமேதுமின்றி
நேரிட்டு நிதானமாக
நடக்கத்தொடங்குகிறான்.

க. மோகனரங்கன்

TAGS
Share This