அற்பன்; எச்சில்; பிணம்
அழியாது உலையும் வேட்கையின் வெப்பக் கரங்கள் உட்தலையைக் கிளறியபடியிருக்கிறது. இன்னதென்றில்லாத ஒன்று இவ்வாழ்க்கையை வாள் வீச்சுகள் போல வெட்டிக் கொண்டே செல்கின்றது. காதலோ காமமோ அதன் தலைகீழ் உச்சத்தில் இரக்கமற்றது. எந்த நிபந்தனையுமற்ற வாழ்க்கைக்கு எல்லா நிபந்தனைகளையும் இட்டு நிரப்பிவிட்டு அச்சாடியை உடைத்து வீசிக்கொண்டிருக்கிறோம்.
ஒருவரை ஒருவர் சகித்து இடைவிடாமல் பொருதிக் கொண்டு இரண்டு கரங்களும் குத்தீட்டிகளென அலைகிறோம். அன்பின் இரத்தத்தைக் குடிக்காத நாவில்லை. அதைக் குத்திச் சீண்டாத பொழுது கடப்பதில்லை. எத்தனை எளிமையாய் இருந்தாலும் மெல்லிய காற்றிலும் பிடிகிடைப்பதாய்ச் சிலவேளைகளில் தோன்றினாலும் இதயத்தின் நடுநரம்பில் குத்தி நிலைக்க வைக்காமல் மனம் அடங்குவதில்லை. எத்தனை ஈவிரக்கமற்றிருக்கிறது பொழுது. எத்தனை வெறுப்பு மண்டிக்கிடக்கிறது இருள். இந்த இருளின் அசைவற்ற பெருங்கரம் எடையாய் அழுத்த உறங்கும் மனிதர்கள் எத்தனை.
தினமும் ரத்தப் பெருக்கெனச் சொரியும் வாழ்க்கை நமக்குக் கிடைத்திருக்கிறது. அதை ஒருவருக்கொருவர் அருந்தக் கொடுக்கும் போது இதழ் ஈரமற்று உலர்ந்திருக்கிறது. விழிகள் திறப்பதும் மூடுவதும் அறியாத நொடியில் உறைந்திருக்கிறது. மயிர் எரிந்து எழும் நாற்றம் நாசிக்குள் நிறைகிறது. வாழ்வின் ஆழக்கிணற்றுள் தனித்திருப்பவனுக்குத் துணைவழியும் இல்லை. பிடிகயிறும் இல்லை. அவனுக்கு வாய்த்தது நிலவிலிருந்து இறங்கி இடைவிடாது சொரியும் இரத்தப் பெருக்கு மட்டுமே. அதில் அவன் நித்தியமாய் இருப்பதை உணர்ந்து விட்டான். அவன் இதயம் வெட்டி எடுக்கப்பட்டு அளவான கேக் துண்டுகளாக மேசையில் பரிமாறப்படுகிறது. அவனது மூளை கொறிப்பதற்கு அருகில் வைக்கப்பட்டிருக்கிறது. அவனது இரத்தத்தை அருந்துங்கள். எல்லாம் அவ்வாறே ஆகுக. இதிலிருந்து அவன் என்றென்றைக்குமாக சீர்குலைவான். நிர்க்கதி அவனது நிழல். அவன் அதை ஊதிவிட முயன்று தோற்றுக்கொண்டேயிருக்கும் அற்பன். எச்சில். பிணம்.
வணக்கம் பிரமிள்.
*
(உன்) பெயர்
சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
“அப்பாடா“ என்று
அண்ணாந்தேன்…
சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.
*
பாலை
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
பிரமிள்