கார்காலமில்லை

கார்காலமில்லை

தோழி! இது தலைவன் வருவேன் எனச் சொல்லிய கார்காலமில்லை. அதோ பார் பிடவம் மலர்கள் அவிழ்ந்திருக்கின்றன. முன் கார்காலத்தின் மழையிது. மேகங்கள் இனி வரப்போகின்ற மழைக்காலத்திற்காகத் தங்கள் சட்டைகளைப் பிழிந்து உதறிப் போட்டபடி ஆகாயக் கொடியில் அலைப்புறுகின்றன. வானத்தின் முழங்கும் குரல் கேட்கின்றது. உன் காதுகள் கூர்ந்து அதைக் கேட்கின்றன. எதிர்பார்த்து நின்ற ஒரு சங்கீதம் போல். வருகையின் பேரொலியன ஓங்கும் பேரிகை போல் விசும்பு இடிகொட்டுகிறது.

அம்மழையைப் பார்த்த நூற்றுக்கணக்கான மயில்கள் தோகையை விசிறிக் காற்றின் ஈரக்கூத்தில் கால்கள் தாளமிட்டு ஒயிலாக அசைகின்றன. அவற்றின் கால்விரல்கள் மண்ணில் புதைந்து கீறுகின்றன. மயில்களின் கண்கள் ஒன்றையொன்று பார்த்தபடி விண்ணெழுந்து ஆயிரம் பீலிவிழிகளாலும் முகில்களை நோக்கி மயக்குறுகின்றன. நீ இதை நம்ப வேண்டாம் தலைவி. இது உன் தலைவேன் வருவேன் என்ற கார்காலமில்லை. பொய்மழைப் பெருக்கில் பிடவம் மலர்கள் என இதயம் கோடியாய் உதிர்ந்து கிடக்காதே. உன் தலைவன் வருவான்.

(பிடவம் பூக்கள்)

*

மடவ வாழி மஞ்ஞை மா இனம்,
கால மாரி பெய்தென அதன் எதிர்
ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன,
கார் அன்று இகுளை, தீர்க நின் படரே,
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்
புது நீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.

இடைக்காடனார்

TAGS
Share This