வையத்தைப் பாலித்திட
பாணர்கள், புலவர்கள், கவிஞர்கள் காலாதிகாலமாகத் தம் பொருளாதார வறுமையையும் புரவலரை அண்டி வாழும் நிலையையும் பாடியிருக்கிறார்கள். நவீன கவிஞர்கள் ஒடிந்த தேகத்துடன் ஊர் சுற்றி உழன்றதையும் உழல்வதையும் இந்தச் சமூகம் பார்த்து உள்ளூர மகிழ்ந்தபடிதான் இருக்கிறது. சோற்றுக்கு வழியில்லாத நாய். உனக்கேன் செருக்கு என வசவுகிறது. சிறுவயதிலிருந்து சோற்றுக்கு வழியற்று அலைந்த காலகட்டங்கள் எனக்கும் உண்டு. எதிர்காலத்திற்கும் எந்த உத்தரவாதங்களும் இல்லை.
மூளைக்குப் பதிலாக வயிற்றுக்கென்று உள்ள அறிதலிலிருந்து இலக்கியத்தைத் தேர்வு செய்யும் காலகட்டங்கள் இருந்தன. பதினேழு வயதில், அப்பா இரவு கொண்டு வரும் உணவுக்காக மதியத்திலிருந்து இரவு பத்து மணி வரை காத்திருப்பேன். சகோதரர்களும் உடனிருப்பர். பொழுது போக்காக எதையாவது கதைத்தபடி இருப்போம். எனக்கு அப்போது சமைக்கத் தெரியாது. தம்பி சில நேரங்களில் ரொட்டி சுடுவான். அதற்கும் மா வேண்டுமே. அப்பா வியாபாரத்திற்குச் சென்று திரும்பும் போதே உணவை வாங்கி வருவார். அது வரை பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கும் நாவல்களையோ அல்லது சுயசரிதைகளையோ வாசிப்பேன். நட்ஹம்சனின் பசி நான் முதன்மையாக வாசிக்கும் பைபிளாக இருந்தது. இரண்டாவது சேகுவேரோ எழுதிய மோட்டார் சைக்கிள் குறிப்புகள். அதில் உணவுக்காக அவர்கள் சொல்லும் பொய்களும் தந்திரங்களும் எங்கிருந்து எழுகின்றன என்பதை உருளும் நீர்நிறைந்த வயிற்றால் உணர்ந்திருக்கிறேன். தஸ்தவேஸ்கியின் நாவல்களில் உள்ள வறிய மக்களின் உலகம் வறுமையின் அக உலகத்தை உருவாக்கியளித்தது. சேவியத் ரஷ்ய இலக்கியங்களின் நிலக்கரிச்
சுரங்கங்களும் மிடிமை மண்டிய வாழ்வுகளும் புறவுலகச் சித்தரிப்பை அளித்தன. இவற்றை மானுட அறிதல்கள் என உணர வைப்பதே இலக்கியத்தின் வழிமுறை.
பலநாள் உணவிற்காகத் தவித்திருக்கிறேன். பணமின்றி அலைந்திருக்கிறேன். இருப்பதை வைத்தும் எஞ்சுவதைக் கொண்டும் வாழும் தன்மையை எனது இளவயது உருவாக்கியளித்தது. இன்றும் மனம் விரும்பியபடி சிறு மேலதிகச் செலவையும் செய்யமுடியாதபடியே நிலமையிருக்கிறது. வறுமை மனிதருக்கு அடிப்படையில் கற்றுத்தருவது ஒன்றுண்டு. அதை ஒரு கலைஞர் உணர்வது முக்கியமானது. பெரும்பான்மைச் சமூகம் பணமிருப்பவர்களையும் இல்லாதவர்களையும் எப்படி நடத்துகிறது என்பதன் அடிப்படை வேறுபாடு மிக மிக நுட்பமானது. பணம் ஒரு பெரிய வஸ்து. அதுவே சமூகத்தின் முதன்மையான அளவுகோல். ஒருவரின் அறிவையோ புலமையையோ எள்ளி நகையாடும் பெரும்பான்மைக் குடிமக்கள் பணத்தின் முன் பல்லிளித்து வால்குழைத்து நிற்பதை அன்றாடம் பார்க்கிறோம். அதில் அவர்களுக்கு எந்தச் சிறுமையும் எழுவதில்லை. ஆனால் ஒரு கலைஞர் தன் நுண்ணுணர்வால் எழுந்து நின்று இந்த வையகத்தை உய்விக்க வந்தவன் நான். என்னைக் காக்க தெய்வங்களை அழைப்பது வையத்தைப் பாலிப்பதற்கு என்று சொன்னால் வால்குழைப்பிகள் குரைக்கின்றன. ஒரு கலைஞர் அத்தகையவர்களின் முன் தன் குன்றாத ஆணவத்தின் கோலை ஊன்றியபடி நிமிர்ந்து நின்றே ஆக வேண்டும்.
*
காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் அங்கு
தூணில் அழகியதாய் நன் மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் அங்கு
கேணி அருகினிலே தென்னை மரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு தென்னை மரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர் போலே நிலாவொளி
முன்பு வர வேணும் அங்கு
கத்தும் குயில் ஓசை சற்றே வந்து
காதில் பட வேணும் என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம்
தென்றல் வர வேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே ஒரு
பத்தினிப் பெண் வேணும் எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தர வேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப்
பாலித்திட வேணும்.
பாரதி