01: ஊழி விளி
காலம் இன்னதென்று கணக்கிடாக் காலமொன்றில் ஓர் ஊழி எழுந்தணைந்த பெருநிலத்தில் குழல் கலைந்து தோள் புரள நிற்கிறான் இளம் பாணன். மிச்சமிருக்கும் புடவிக்குத் தன் உதிரத்தின் ஒவ்வொரு சுழிப்பிலும் மூழ்கியெழும் மானுடக் காதைகளைப் பாடுதற்கு அவனுளம் கூர்ந்தது. ஓடும் காட்டுப் புரவிகளுடன் சமநேரத்தில் ஓடி அவற்றில் தாவி ஏறுபவனைப் போல அவன் சொல்லில் ஏறிக்கொண்டான்.
மாபெரும் பிணக்குவியல்களின் மணம் கலைவதற்கு இப்போது பொழுதில்லை. எஞ்சிய குடிகள் அமர்ந்திருந்த குன்றில் எரிவிறகுகளை தீக்குள் ஊட்டியபடியிருக்கிறாள் பதும்மை. நாற்றம் பொறுக்கவியலாத நூற்றுக்கணக்கானவர்கள் மூக்கில் வாசனைத் துணியைச் சுற்றி மேனியில் தைலங்களைப் பூசினர். ஊழி அணைந்து சில நாழிகைகள் பெயர்ந்திருந்தது.
நள்ளிரவு கடந்து முதல் நாழிகையில் மா ஆழியலைகள் பேரொலியுடன் நிலத்தை அறைந்து கடந்தன. சில மணித்துளிகளில் ஒருபக்கமிருந்த கடல் மறுபக்கம் வரை இறைந்து திரும்பியது.
ஊழியின் கர்ப்பத்தில் இளம் பாணன் சுடரும் கன்னம்பெரிய சர்ப்பத்தின் உறைவிழியுள்ள அக்கற்கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் உள்ளடித்துச் சென்று சேர்க்கப்பட்டான். நாகதேவியின் மகவென அக்கருங்கல் மடியில் சில நாழிகைகள் நினைவழிந்து கிடந்தான். விழி மெல்ல அருட்டிய போது வெளிச்சம் புகாத அந்தக் கோவிலின் உள்ளே பலவித வர்ணங்களிலாலான பருமன்களினால் சிறிதெனவும் பெரிதெனவும் அசையும் அரவங்களின் நெளிவையே ஒளியெனக் கண்டான். அவன் உடலை மெல்ல எழுப்பி விழிகளைக் கூர்ந்து அவனிருந்த அறையின் படிக்கட்டைத் தாண்டி அவை உள்நுழையவில்லை என்பதை உறுதிசெய்து கொண்டு மீண்டும் கல்மடியில் சாய்ந்து படுத்தான். உடல் உப்பின் வீச்சத்தால் குமட்டியது.
சிறிது நேரத்தில் ஓர் ஒளிக்கற்றை நேரே அந்தச் சிலையின் விழிகளின் நடுவே உள்ள தாழ்வான பகுதிக்குள் குத்தீட்டியென நுழைந்து அவ்வறையைத் தொட்டு எழுப்பியது. அங்கிருந்து ஊதாவின் பேரெழில் கொண்ட ஒளிப்பிழம்பின் சுடர் பெருகி முதற் சுரந்த முலைப்பாலென கற்கோவிலை உயிரூட்டியது. ஒவ்வொரு அரவமும் ஒரே உடலெனச் சுருண்டு நிமிர்ந்தன. நாநுனிகள் தீவட்டிகள் காற்றுடன் உரசுவது போல் தோன்றித் துழாவின. அவ்விழிகளை அவன் அஞ்சினான். பேரழகு உண்டாக்கும் அச்சத்தை அவன் இத்தனை நெருக்கமாய் அறிந்ததில்லை. அவனுள் தேவி நாகத்தின் மூச்சென எப்போதும் இருந்ததை எண்ணிப் புன்னகையுடன் எழுந்தான். அருகில் வழிந்த நீர்ச்சுனையில் ஆடையை நனைத்து உதட்டில் தடவிக்கொண்டான். நீர் நீர் என உளம் தவித்தது. தன் தாகத்தை ஒரு சர்ப்பத்தின் நாக்கென உணர்ந்தான்.
நாகதேவியின் தலையைப் பிடித்துச் சிலையின் உச்சியில் ஏறிக் கோவிலின் மேட்டில் நின்றான். தூரத்தில் எஞ்சிய குடியினர் குன்றில் அலைவது சிறு பாம்புகள் விளையாடுவது போல் தோன்றியது. சூரியன் தன் இளங் கீற்றுகளை ஒவ்வொன்றாக மேகங்களால் நுழைத்து பூமியை நெருங்கத் துடிக்கிறது. மேகத்தின் கடுநீல வர்ணத்தை உற்று நோக்கினான். தோள்களில் புரளும் குழலை அள்ளி முடிந்தபடி சுற்றியிருப்பவற்றை நோக்கினான். அழிவின் ஓவியத்தை ஒவ்வொரு தீற்றலாய் கண்ணெடுத்தான். வானில் கடுநீல மேகங்களின் குவைக்குள் எப்படித் தவறியதென அறியமுடியாத வெண்மேகக் கொத்தொன்று பூங்குவையென நீண்டிருந்தது. அதன் நேர்கீழே நிற்கும் இளம் பாணனை குன்றிலிருந்த பதும்மையின் விழிகள் உற்று நீங்கியது.
மரங்கள் பெயர்த்து வீசப்பட்டிருந்தது. வேர்கள் புரண்டு சிதறிக்கிடக்க மிருகங்களின் இறந்த உடல்கள் அவற்றில் ஊறிக் கிடந்தன. வேழக் குட்டிகளும் முது யானைகளும் நிலத்தில் கலைந்து கிடந்தன. யானைக்குட்டியொன்றுக்கு அருகில்
பெரும் புலியொன்றின் வாய் திறந்தபடி உறைந்திருந்தது.
பறவைகள் நிலத்திற்குத் திரும்பியிருந்தன. மாமிசப் பட்சிகள் தம் காலையுணவைப் பிய்த்து உண்டன. பேராழிச் சுழலுக்கு வீழாத பெருமரங்களும் சிறுதாவரங்களும் இன்று புதிதாக அடுக்கி வைக்கப்பட்டவை போல் தோன்றின. வனத்தினதும் நகரத்தினதும் கோலத்தை கடலின் கரங்கள் உருமாற்றியிருந்தது. கால்கள் உந்த இளம்பாணன் நடந்து குன்றேறினான்.
பதும்மை யாரையும் விழி நோக்கவில்லை. அவளருகில் சுட்ட இறைச்சியைப் பற்களால் கிழித்தபடி சப்பி அரைத்துக் கொண்டிருந்த கிழவர் வேறுகாடார் அவனைக் கைகாட்டி அழைத்தார். “இளம் பாணரே அமர்க. நீங்கள் இந்த நகருக்கு வந்த மூன்றாவது நாளே இப்படியாகும் என்று நினைக்கவில்லை. இதன் அழகை இன்னும் கொஞ்சம் நீர் பாடக் கேட்டிருக்க வேண்டும், இப்பொழுது ஆழியல்லவா கொண்டு போயிற்று. என்னே உம் விதி” ஒரு இறைச்சித் துண்டை நீட்டினார். வாங்கி அதை மணந்தான், பன்றியின் இறைச்சி. கொழுப்பு வடியக் கிடந்த அதன் எலும்பை அருகிலேயே வைத்திருந்தனர். அதைப் பார்த்தபடி உண்ணத் தொடங்கினான். “கடற்கோளில் இளம் பன்றிகள் கூட மடிந்திருக்கின்றன. நீர் எப்படிப் பிழைத்தீர் கிழவரே” என்றான் இளம் பாணன்.
ஓரக்கண்ணால் பதும்மையின் பின்னழகை ரசித்தபடியிருந்த வேறுகாடார் கேள்வியால் இளம் பன்றியெனச் சீறினார். “நான் எப்படியோ பிழைத்துக் கொண்டேன். பரத்தைகளுடன் கிடந்து அவள்களின் அங்கத் திரட்சிகளைப் புகழ்பாடி தெருக்களில் மதுவுண்டு வீழ்ந்து கிடக்கும் உன் போன்ற புலவன் உயிர் பிழைத்திருப்பது தான் ஆச்சரியம். ஆழியலைக்குக் கண் குருடு. இன்னொருமுறை வந்தால் உன்னை நிச்சயம் வாயில் போட்டுக் கொள்ளும். அல்லது உன்னை உண்டால் அதற்குச் செரிமானம் ஆகாமல் போகலாம் என்று அஞ்சியிருக்கும்” கிழவர் சொல்லி முடித்ததும் வென்ற களைப்புடன் பதும்மையின் முலைகளைத் தேடினார். அவள் எழுந்து சென்றிருந்தாள். அவ்விடத்தில் பன்றிகளை அறுத்த வாலிபன் தன் இலிங்கம் கெளபீனத்தால் வெளியில் தொங்குவதை அறியாமல் கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டிருந்தான். வேறுகாடார் செருமி விட்டு, “இப்புவியில் உள்ள எல்லாத் துர்சகுனமும் இன்று என்னை ஏன் இப்படி வதைக்கின்றன”. வாலிபனைச் சுட்டிக்காட்டி, “இவன் அறுத்த இறைச்சிகளிலேயே இது தான் சிறியது இதற்கெதற்குக் கத்தியைக் கூர் தீட்டுகிறான். இங்கே வா, பழக்குலையெனப் பிடுங்கி விடுகிறேன்”. வாலிபன் திரும்பி ஏறிட்டுவிட்டுத் தன் ஆண்குறியை உள்ளே வைத்து ஆடையை இறுக்கிக் கட்டினான். இளம் பாணன் “கிழவரே உமக்கு எது கிடைத்தாலும் வாயில் போட்டுக் கொள்வீரா” என ஒரு வாள்வீச்சை நிகழ்த்திவிட்டுக் கிழவரின் கண்களைப் பார்த்தபடி நீர்க்குடுவையைச் சரித்தான்.
காற்றில் ஆவியெழுந்து அகன்று பரவி நீர்த்திரையென ஆகியது. குடியினர் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினர். தூரத்தில் நாகக் கோவில் வெய்யிலில் நீண்டு நெளிந்தது. அருகில் உள்ள கருங்கல் மாளிகையொன்றில் இரவு தங்குவற்கெனப் பொருட்களையும் விறகுகளையும் உணவையும் சேமிக்கப் பெண்களும் ஆண்களும் விரைந்தனர். இறந்தவர்களின் உடலை ஆழி பிளந்த பெரும்பள்ளம் ஒன்றில் தேங்கியிருந்த நீருள் கொணர்ந்து சேர்த்தனர். உறவினரின் உடல்கள் கிடைத்த பொழுது கூடி அழுதனர். குழந்தைகளின் ஆடைகளும் விளையாட்டு பொம்மைகளும் சிதறிக் கிடந்தன. சிறார்கள் ஓடியோடி அவற்றைப் பொறுக்கினர். இளம் பாணன் குன்றை விட்டு இறங்கினான். வேறுகாடார் ஒருகையை ஊன்றி எழுந்தார். விரிவு கொண்ட தோள்கள். கிழவரே என விளிக்கும் பொழுது மேலும் தினவு கொள்பவை. ஆந்தையின் விழிகள். தலையும் கூட ஆந்தையென்று தோன்றும்படிக்குச் சுழலக் கூடியவை. தனது வெண்குழலை முடிந்து கட்டியபடி இறுகிச் சிவந்த உடலை வெய்யிலில் உலர்த்தியபடி இளம்பாணனுடன் கூடநடந்தார்.
“கிழவரே, எத்தனை இழப்புகள். எத்தனை கண்ணீர். இனி என்ன செய்யப்போகிறார்கள் இக்குடிகள். தலைவர்களும் மாண்டு போயினர். செல்வங்களைக் கடல் கொண்டு போயிற்று. இனி இவர்கள் எந்தத் திசையில் நடப்பார்கள்?”
“புலவரே, நான் வாழ்நாளில் கண்ட மாபெரும் அழிவு இதுதான். இதன் அழிவு எத்தகையதென்றுக் கூட என்னால் கணிக்க முடியவில்லை. யாராலும் முடியுமா என்றும் தெரியவில்லை. அரசன் மாண்டு போனான். இளவரசர்களும் இல்லை. தலைமையேற்கும் வீரர்களும் உயிர் பிழைத்தார்களா தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன்”. பிடி கழன்று கலைந்த வெண்முடி காற்றில் அலைய, “நாங்கள் மீண்டும் புதிய நகரத்தை ஆக்குவோம். எங்களின் மூதாதையர்களின் கரங்களால் ஆனது இந்த நகர். அதன் ஒவ்வொரு துளியிலும் அவர்களின் ஆவி கலந்திருக்கிறது. நாங்கள் நாகத்தின் குடிகள். கடைசி நாகம் இருக்கும் வரை நாங்களும் இருப்போம்” கிழவரின் கண்கள் சிலதுளிநேரம் ஊதா நிறக்கீற்றென ஒளிர்வதை இளம் பாணன் கண்டான். நாகதேவியின் கற்சிலை அங்கிருக்கும் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரின் விழியினாலும் பார்த்துக் கொண்டிருப்பதான பிரமை எழுந்தது.
கிழவரும் இளம் பாணரும் அரண்மனைக்குச் சென்றனர். அங்கு உருக்குலைந்து போயிருக்கும் தளபாடங்களில் பயன்படக் கூடியவற்றைக் குடியினர் எடுத்துச் சென்றபடியிருந்தனர். விசாலமான அந்த அரச மண்டபத்தில் போர்க்கருவிகள் எங்கும் இறைந்து கிடந்தன. அரசனின் உடல் கிடைக்கவில்லை. ஆனால் படுக்கையறையில் அரசனது வாளைக் கண்டுபிடித்தார் கிழவர். இதை எனது தந்தை தான் செய்தார் என்று இளம் பாணனிடம் கொடுத்தார். இளம் பாணனால் அதைத் தூக்கிப் பிடிக்க முடியவில்லை. “எழுத்தாணி பிடிக்கும் கையில் இது தங்காது. உமக்கு எமது நகரின் சிறுவர்கள் விளையாடும் வாள் ஒன்றைப் பிறகு வாங்கித் தருகிறேன். இப்போது இங்கே கொடும்” என வாளை வாங்கிக் கொண்டார் கிழவர்.
இளம் பாணன் காலையிலிருந்து இரண்டாவது தோல்வியை உணர்ந்தான். கிழவர் குறும் புன்னகையுடன் காய்ந்த சுள்ளியை வைத்திருப்பதைப் போல் வாளைப் பிடித்தபடி அரண்மனைக் காவல் கோபுரத்திற்கு வந்தார். சிறிது நேரம் நகரைப் பார்த்துவிட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டார். சரிந்து கீழே சுவற்றில் சாய்ந்தபடி ஒரு காலை நீட்டிக் கொண்டு அமர்ந்தார்.
இளம் பாணன் விழிகளால் தொடக் கூடிய எல்லைவரை நகரையும் அடவியையும் துழாவினான். ஆயிரம் யானைகள் மதங் கொண்டு போர் புரிந்த ஒற்றை உடலென நகரும் அடவியும் உருக்குலைந்து போய்க் கிடந்தது. ஈரம் வடியாத சிதைந்த நகரின் தளங்கள் ஒளிபட்டு மின்னியது. இப்படியொரு அழிவை அவன் இனி வாழ்நாளில் பார்ப்பானோ தெரியாது. ஒன்றுவிடாமல் இந்தக் காட்சிகளை அள்ளி அகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென ஒவ்வொன்றிற்குள்ளும் ஊடுருவினான். வேறுகாடார் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டுக் கசப்பு மிளிரச் சொன்னார், “உனக்கு அழிவும் ஒரு பாட்டுத் தான். இல்லையா?”
“அழிவு என் வழியாகத் தன்னைச் சொல்லிக் கொள்கிறது கிழவரே. நான் புலவன். எனது அகம் சொல்லில் கனவென நுழைவது. சொல்லை அறிவதன் மூலம் அறிய முடியாததை அறிய விழைவது. நான் அறியாததையும் சொற்கள் அறிகின்றன. அவை சொல்லாய் அமைந்த பின்னர் தான் நான் அதை அறிகிறேன். இந்த நுண்மையை அறிவதற்குக் கண்கள் அகத்தில் இருக்க வேண்டும். பெண்களின் புறத்தில் அல்ல” இளம் பாணன் நகர் வெளியை விழிகளால் உறிஞ்சிக் கொண்டே கிழவரை எண்ணி உள்ளூரச் சிரித்தான். அது அவன் முகத்தில் ஒரு கணம் என மின்னியது.
வேறுகாடார் எழுந்து இளம் பாணன் அருகில் வந்தார். தோளைத் தன் முதிய கரங்களால் ஆசீர்வாதத்தைப் போல் மென்மையாகத் தொட்டார். “அப்படியே ஆகட்டும் இளம் பாணரே, உன்னால் இயன்றால் இவ்வழிவை அழியாச் சொற்களில் நிலைநிறுத்து. என் குலம் உன்னை வாழ்த்துவதாக. எங்களின் இறுதி உப்பையும் நான் உனக்கு அளிக்கிறேன். உன்னிலிருந்து என் மூதாதையர்களின் தொல்சொல் முளைக்கட்டும். சொல்லால் மீண்டும் இந்த நகரைக் கட்டு. அதன் வாழ்வைப் பாடு. அழிவைப் பாடு. மிஞ்சிய குடிகளின் உயிர்களில் நாகத்தின் நெளியும் மேனியென உன் சொல் என்றுமிருக்கட்டும். அவளின் ஒளிர் விழிகளென என் சந்ததிகளுக்கு அவை வழிகாட்டட்டும்”. சொல்லி முடித்ததும் வேறுகாடாரின் உதடுகள் ஒட்டிக்கொண்டன. கரங்கள் அவனிலிருந்து நீங்கி ஒடுங்கியது. இளம் பாணன் வெளியை நோக்கியபடி நின்றான். ஒரு சொல்லும் எழாமல் அகம் சுருண்டது.
பதும்மை ஒரு தங்க மயில் விளக்கைத் தூக்கி ஒரு சிறுமியிடம் கொடுத்தாள். குஞ்சுகளை வழிநடத்தும் தாய்க்கோழியென சிறுவர்களைப் பெருவீதியில் வழிநடத்தினாள். இளம் பாணன் அவளை நோக்கினான், இம்மாபெரும் அழிகளத்தின் நடுவே அவளின் கால்கள் இரண்டும் எப்படி அவனை அசையவிடாமல் விழிபின்னுகிறது. நீண்ட கால் விரல்கள். ஆழிமணல் கலையாமல் விரல்களில் கொஞ்சம் ஒட்டியிருந்தது. கருமையான அக்கால்களின் உறுதியான நடை. இடைத்துணியை முழங்கால் வரை இழுத்துக் கொழுவிக்கொண்டு உடைந்த மனையொன்றில் மந்தியெனத் தாவினாள். அதன் சுவரில் நடந்தபடி சென்றவள். இளம் பாணனின் விழிகளை முதுகால் அறிந்தாள். திரும்பி நின்று கீழ்ப்பகுதியில் ஓடிக்கொண்டிருந்த சிறுவர்களை அதட்டியபடி நிமிர்ந்து காவற்சுவற்றைப் பார்த்தாள்.
கிழவரும் இளம் பாணனும் அழிகளத்தின் வெளிக்குள் உறைவதும் அசைவதுமான ஒவ்வொன்றையும் ஒரு நாகத்தின் இரு விழிகளெனப் பார்த்தபடியிருந்தனர். இளம் பாணனின் அகத்திற்குள் மட்டும் பதும்மையின் பார்வை குழியுள் நுழையும் ஒளிக்கற்றையெனப் புகுந்துகொண்டிருந்தது. கற்கோவிலின் மேற்தளத்தில் படர்ந்திருந்த அருகம்புற்களுக்கிடையிலிருந்து தலையுயர்த்திய நாகமொன்று வெண்முகிற் கொத்தின் கீழ்நின்று நகர் நோக்கித் தலை வெட்டியது.