03: களி விளி

03: களி விளி

சாமியாடி தங்கிட தத்தரின் மகள் சுழல்விழி ஆகாயத்தின் கடைசி விண்மீன்கள் இருளுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் அதிகாலையில் கற்கோவிலுக்குச் செல்லும் பெருவீதியால் நடக்கத் தொடங்கினாள். சூழ நின்றிருக்கும் ஒவ்வொரு நெடுவிருட்சமும் அவளின் துணை தெய்வங்கள். கைகளில் ஏந்தியிருந்த கூடையில் செவ்விரத்தைகளையும் தாமரைகளையும் இட்டு நிரப்பியிருந்தாள். குளத்தில் இறங்கி கழுத்தளவு நீர்வரை சென்று தாமரைகளைப் பறிப்பாள். தவளைகள் நீந்தி வந்து தொப்புளில் உரசினால் உந்திக் கரைக்கு ஓடிவருவாள். தவளைகள் என்றால் அவளுக்கு அச்சம். கார்காலத்தில் தவளைகள் பாடத் தொடங்கும் பொழுது காதை அடைத்துக் கொண்டு மனைக்குள் ஒளிவாள். சுழல்விழிக்குப் பெயர் வைத்த பொழுது ஆழியன்னை அளித்த அலை நெளிவான சிறு முடிக்கற்றைகளையும் நீண்ட தாமரைகள் போன்ற விழிகளையும் பார்த்த பின்னரே அவளுக்குத் தங்கிட தத்தர் பெயரிட்டிருந்தார். அவளது விழிகள் சுழன்று சுழன்று அனைவரையும் எப்படிப் பார்த்தன என்பதை ஆயிரத்து ஒன்பதாவதோ பத்தாவதோ முறையாகவும் அவர் யாருக்கேனும் உவகை பொங்க விளக்கியபடியிருப்பார்.

சுழல்விழியின் அலைவரிசைக் கூந்தலைப் பார்த்து சகவயதுப் பெண்கள் நளினம் செய்வார்கள். ஈரம் துளியாய்ச் சொட்டும் அவள் கூந்தலின் நுனிக் கற்றையை இளம் பெண்கள் தடவிச் செல்வார்கள். கொத்துத் தாமரைகள் போன்ற முலைகளில் கோட்டு கூர்ந்திருக்கும். நெற்றியில் எப்பொழுதும் திலகமிட்டிருக்க வேண்டுமென்பது தந்தையின் கட்டளை. சந்தனச் சாந்திட்டிருப்பாள். கன்னம் மிருதுவான கள் அப்பங்களின் சதை போலிருக்கும். அவள் பேசும் பொழுது கோவிலின் அகில் வாசனை கமழும். கோவிலுக்கு வருவோரிடம் கதைத்துக் கதைத்து அவளது எள்ளலும் உலக ஞானமும் விரிவு கண்டிருந்தது. வாலிபர்களின் விழித்தொடர்புகளை உள்ளூர மகிழ்ந்து கொள்வாள். பதிலுக்கு அவளிடமிருந்து நாகத் திருப்பலொன்று பதிலாய் கிட்டும். சாமியாடியின் மகள் என்பதால் எளிதில் நெருங்க மாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

அவள் அகத்தில் அன்னையற்ற வெறுமை நிரந்தரமாய் குடிகொண்டிருந்தது. சிறுவயது முதல் யார் யாரிடமோ முலைப்பாலுண்டாள். தத்தரின் வளர்ப்பில் குறையில்லை என்றாலும் அன்னையை எந்த உயிர் தான் சமன் செய்யும். நாகதேவியைத் தன் சொந்த அன்னையென ஆக்கிக் கொண்டாள். விடியலில் முதல் ஆளாக அவளைச் சந்தித்து மலர் சூட்டி அலங்கரிப்பாள். நெய்யூற்றித் திரியிட்டு அகல்களைத் தயார் செய்வாள். சாமியாடி வந்து பூசைகள் தொடங்கும் வரை அவளும் அன்னையும் தனித்திருக்கும் அதிகாலை நாழிகைகளே அவள் வாழ்வின் மெய்க்கணங்கள்.

காலையில் பிடுங்கி வைத்த சிறுதுண்டுத் துளசி அவள் அலைமுடியில் தத்தளிக்க கற்கோவிலை அடைந்தாள் சுழல்விழி. கோவிலில் நுழையும் முதல் கீற்று ஒளியில் அன்னையின் நாகக்கல்லிருந்து ஊதா நிற ஒளி எழுந்து பரவியிருந்தது. அன்னையின் மடியில் இடைத்துண்டு போர்த்தியபடி இளம் பாணன் விரிந்த மார்பு ஏறி இறங்க ஆழ்துயில் கொண்டிருந்தான். அவன் மார்பின் நடுவிலிருந்த புன்மயிர்கள் மேல் செவ்விரத்தம் பூவொன்று விழுந்து கிடந்தது. ஊதாவொளியில் தேவர்களின் அம்சமென மின்னிக் கொண்டிருந்தான். அன்னையிலிருந்த மஞ்சள் அரைந்து இளம் பாணனின் மேனியிலும் ஒட்டியிருந்தது. இடைதுணிக்குள் இளம் பாணனின் ஆண்குறி புடைத்திருந்தது. காலைக் குளிரில் சிறு சர்ப்பமென அது நிமிர்ந்து நின்றது.

சுழல்விழி அன்னையின் மடியில் அவன் கிடப்பதைப் பார்த்துத் திகைத்து நின்றாள். அவன் யாராக இருக்கக் கூடும். என் அன்னையின் மடியில் கிடக்கும் இந்தப் பித்தன் யார்? அவள் உடல் தணல் மிதிக்கும் வெளியெனத் தகதகத்தது. பூக்கூடையைக் கீழே வைத்தாள். அருகில் சென்று அவனைப் பார்த்தாள். நகரில் இதற்கு முன் கண்ட உருவங்களில் இவன் ஒருவனும் இல்லை. முகத்தில் நிறைவு பொலிந்திருக்கிறது. துயிலிலும் எதையோ பற்றிவிடுபவனைப் போல ஒரு கை மெல்ல எழுந்து வீழ்கிறது. அவள் பார்வை அவன் குறியின் மேல் நிலைத்தது. சுழல்விழி அதுவரையில் ஒரு ஆண்குறியைக் கூட நேரில் பார்த்ததில்லை. தோழிகளின் எள்ளல்களின் வழி அது ஒரு விளையாட்டுப் பொருளென்றே எண்ணியிருந்தாள். தொட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் மனதில் மின்னலிட்ட பொழுது அதிர்ந்தாள். யாரிவன். யாரென்றே அறியாத ஆணைத் தொடலாமா? இவன் மனிதன் தானா? அல்லது ஏதேனும் யட்சனா? மனதின் குறுகுறுப்பை அடக்க முடியாதவள் கோவில் வாசல் வரை சென்று திரும்பினாள். பிரகாரமெங்கிலும் சுற்றி வந்தாள். யாருமில்லை. மீண்டும் கர்ப்பக்கிரக வாசலுக்கு வந்தாள். அவன் துயிலை எழுப்ப ஆயிரம் பறை முழங்க வேண்டுமென்பது போல் ஆழத்தில் மிக ஆழத்தில் அவன் தாழ்ந்து கிடந்தான்.

இடைத்துணி சற்றுச் சரிந்திருந்தது. சுழல்விழியுள் ஆர்வம் துள்ளியிறங்க இருவிரல் நுனியால் இடைத்துணியைப் பற்றியிழுத்தாள். நெற்றியில் வியர்வைகள் உருண்டு சந்தனச் சாந்து கரையத் தொடங்கியது. பெரும்பறையினை ஆறு பெருங்கரங்கள் அடித்துக் கிழிப்பதைப் போல் இதயம் கிடந்து துடித்தது. மெல்லிய அரும்பான விடைத்த கரும்பென இளம் பாணனின் குறி விறைத்து நிற்பதை அவள் விழிகளால் பார்த்தாள். தொட்டுப் பார்க்கலாமா என்று அவள் நினைத்த பொழுது அன்னையை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தாள். அவளின் உடல் மாற்றாங்களை அன்னையிடம் எப்பொழுதும் அவள் சொல்லியே வந்திருக்கிறாள். தனக்குப் பிடித்த ஆண்மகன் எப்படியிருக்க வேண்டும். அவன் கண்கள் தேனாய்த் தன்னிடம் உருக வேண்டும். அவன் சொற்கள் கவியாய் தன்னிடம் பொருத வேண்டும்.. இன்னும் எத்தனை ஆசைகளைச் சொல்லியிருப்பாள். அன்னை தான் இவனை அனுப்பி வைத்தாளா. எண்ணங்கள் மனதிலெழுந்து தனக்குத் தானே பதிலளித்துக் கொண்டு தொடுதலின் முதற் கணத்தை நோக்கி அவளைக் கொண்டு சென்றது. அன்னையின் கல்லொளிச் சுடர் அணைந்தது. அகல்களைத் தயார் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிறிது நேரத்தில் தந்தையும் வந்துவிடுவார். மூளை ஒன்றன் பின் ஒன்றாய் ஒவ்வொரு எதிர்கணத்தையும் கணக்கிட்டு முடித்ததும் கைகள் தயக்கமின்றி இடைத்துணியை எடுத்து மூடியது. தாமரைக் காம்பொன்றால் அவன் நெஞ்சில் அடித்தாள். எழமால் கிடந்தவனை இன்னும் இருமுறை வலிக்கும் படி அடித்தாள். நீச்சல் தெரியாதவன் குளத்திலிருந்து பாய்ந்து எழுவதைப் போல் விழித்துக் கொண்டான். சுழல் விழியின் முகத்தைப் பார்த்ததும் அரண்டான். நான்.. நான் என உதடுகள் துடித்து ஏதோ அரற்றியபடி எழுந்தான். கண் நரம்புகள் இரத்தச் சிவப்பாய் விரிந்திருந்தன. இடைத்துணியை இறுக்கிக் கட்டினான். யானைத் துதியைத் தேடினான். தடயமேயில்லை. பதும்மை தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். சரிதான். இங்கு முன்னிற்பவள் யார்? இங்கிருந்து எப்படியாவது சென்று விட வேண்டும் என்பதே அவன் முதலெண்ணமாக இருந்தது.

யார் நீ என்ற கேள்வியை ஒரு முகமாக மாற்றிக் கொண்டு சுழல்விழி நின்றாள். அந்தக் குறிப்பையறிந்த இளம் பாணன். “நான் நகருக்குப் புதியவன். பாணர் குடியைச் சேர்ந்தவன். கோவிலென்று அறியாமல் உள்நுழைந்து விட்டேன். இருட்டில் வழி தெரியவில்லை” என்று அடுக்கிக் கொண்டே போனான். நம்ப முடியவில்லையே என்பதை அடுத்த முகமென அணிந்து கொண்டாள். இவளை ஏமாற்ற முடியாது என்று உணர்ந்த இளம் பாணன் எழுந்து பிரகாரத்திற்குள் வந்தான். தங்கிட தத்தர் பாடும் ஒலி கேட்டது. சுழல்விழி அவன் கைகளை விளையாட்டுத் தோழியெனப் பற்றிக் கடகடவென இழுத்துச் சென்று இரண்டு சர்ப்பச் சிலைகளின் பின்னால் அவனை நிற்க வைத்தாள். தன் ஒருவிரலை வாய் மேல் வைத்து உஷ் என்று ஒலியெழுப்பி விட்டு நகர்ந்தாள். அது ஒரு நாகத்தின் கட்டளை போலிருந்தது.

தங்கிட தத்தர் பாடியபடி வந்தவர் இன்னும் கோவில் தயார்ப்படுத்தப்படவில்லை என்பதைக் கவனித்தார். “சுழலி, இன்று அன்னையிடம் என்னைப் பற்றி என்ன புறம் கூறிக் கொண்டிருந்தாய். ஒருவேலையும் ஆகவில்லையே” என்றார். “உங்களைப் பற்றிச் சொல்ல நல்லதென்று ஏதேனும் உள்ளதா தந்தையே. அன்னைக்கும் எனக்கும் பேச எவ்வளவோ இருக்கும். அவள் என் தேவையறிந்து வரம் தருபவள். நானே எனது ஆசைகளைக் கேட்டால் கூட ஒவ்வொரு காரணமாகச் சொல்லித் தட்டிக் கழிப்பவர் நீங்கள்” என்றாள் சுழல்விழி. “பொல்லாப்புப் பேசாதே மகளே, அன்னை நான் அளிக்கும் பூசையில் மகிழ்ந்து தான் உனக்கு வரங்களை அள்ளித் தருகிறாள்” கெக்கட்டம் போட்டுச் சிரித்துக் கொண்டே தன் கழுத்து மாலைகளைச் சரிசெய்துவிட்டுக் கர்ப்பக்கிரகத்துள் நுழைந்தார்.

அவள் நீரிலோடும் நாகமென இளம் பாணனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு கோவிலுக்கு வெளியே வந்தாள். “பாணரே, தந்தை கடுங் கோபக்காரர். அன்னையின் மடியில் நீங்கள் கிடந்த கோலத்தைக் கண்டிருந்தால் இந்நேரம் உமது உடலில் ஏதாவதொரு பகுதியை வெட்டி எறிந்திருப்பார்” என்று சொல்லியபடி அவனது ஆண்குறியைப் பார்த்தாள். இருந்த இடமே தெரியாது அச்சத்தில் அது மறைந்து போயிருந்தது. இளம் பாணம் வாய் குழறி ஏதோ சொல்ல முனைய, கைகளால் நிறுத்தினாள். “பொழுது கிடைத்தால் சூரியன் நடுவான் தாண்டிய பின் தாழைக்கடலுக்கு வாருங்கள். வந்து உம் புராணத்தைப் பாடுங்கள்”. சொல்லியொரு கணமும் தாமதிக்காமல் கோவிலுக்குள் நுழைந்து மறைந்தாள். தனது முதலாவது கூடல் பேச்சை எண்ணி மேனி மயிர்கள் சிலிர்க்க மிதந்து மிதந்து காலே இல்லாதவள் போல் கர்ப்பக்கிரகத்திற்குத் திரும்பினாள்.

இளம் பாணனின் நாக்கு உலர்ந்து பறைத் தோல் போல் கிடந்தது. அருகிலிருந்த குளத்தில் கால்களை அலம்பி முகத்தை நீருக்குள் நுழைத்து நீரைக் குடித்தான். உடம்பின் நரம்புகள் சீர்பெற்றுக் குளிர்ந்தது. தான் வந்த காட்டின் ஒற்றை வழி பகலில் மாயமாகிவிட்டதை அறிந்தான். பெருவீதியால் நடந்தான். கோவிலுக்குக் குடிகள் சாரைசாரையாகச் செல்ல ஆரம்பித்து விட்டனர். சூரிய ஒளியில் காடும் வீதியும் பனியுதிர்ந்து துல்லியமாகியது. நகருக்குள் நுழைந்து மக்களின் இரைச்சலைக் காதில் ஊற்றிக் கொண்ட பொழுதே அவனின் மயக்கு அகன்றது.

தனது பாணர் குழுவிலிருந்து பிரிந்து சென்று புடவி வெல்லும் ஒரு பெரும் பாணன் ஆவது அவன் ஊழ் என நினைத்திருந்தான். முதுபாணர்களிடம் சுரத்துப் போதவில்லை. அவர்களின் சொற்களுக்குக் கனவின் சிறகுகள் கூடவில்லை. வாழ்வின் மெய்க்கணங்களைப் பாடாமல் மன்னர்களையும் புரவலர்களையும் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று இரந்து வாழும் வாழ்வை அவன் வெறுத்தான். அவனது கனவுகளை இளமைக் கோளாறுகள் என்று சொல்லி எள்ளி நகையாடினர் சக நண்பர்கள். நீ பெரும் புலவனா! இரந்து பாடாமல். பிறரைப் புகழ்ந்து பாடாமல். நீ ஆக்கப் போகும் பாடல்களுக்கு உனக்கு அரசையே எழுதி வைப்பார்களா மக்கள். நீ ஒரு இளம் பாணன். உன்னிடமிருப்பது வெறும் சொற்களும் யாழும். உன்னால் இவ்வுலகையாளும் நியதிகளின் போக்கை மாற்ற முடியாது. அத்தீயில் விழுந்து மாய்வதே மண்ணில் பிறந்த ஒவ்வொரு பாணனும் ஒவ்வொரு பாடினியும் அடையும் தலையெழுத்து. அதை மாற்றியெழுத உன் கையில் இருப்பது ஒன்றுமில்லை..

இந்த சொற்களை அவன் முழுவதும் வெறுத்தான். அவன் அகம் அறிந்த ஒன்றை அவனால் வாய்ச்சொற்களால் அப்போது அள்ள முடியவில்லை. தன்னுடைய பயணப் பொதியை மடித்துக் கொண்டான். கால்கள் இட்டுச் சென்ற திசைகளுக்குச் சென்றான். விழிகள் அள்ளிக் கொண்ட இயற்கையின் பேரெழிலை ஓவியக் குறிப்புகளென மனத்தில் தீட்டிக்கொண்டான். மானுட நாகரிகங்களை, மக்களின் நடைமுறைகளை சடங்குகளை தெய்வங்களை ஒவ்வொன்றாகத் தொட்டு அறிந்தான். தன் அக உலகைச் சமைத்துக் கொண்டான்.

தனிமையே அவனது முழு இருப்பு. அவனன்றிப் பிறிதில்லாத எதிலும் அவன் மனம் கூடாது. அகங்காரி. இருப்பினும் உள்ளின் சுனையில் சற்று நீர் எஞ்சியிருப்பவன். அவனது பாடல்கள் எந்தக் குழுவிலும் இசைக்கப்படுவதில்லை. அவனது யாழ் எந்த அரங்கிலும் மீட்டப்பட்டதில்லை. பாணர் குடி அவன் செயல்களை வெறுத்து ஒதுக்கியது. பித்தன் என வசைபாடியது. அவனிடம் உலகு பற்றிய பெருங்கனவுகள் பகலின் வெளிச்சம் போல் பளிச்சென்று இருந்தன. அவனது சொற்களின் தாளம் அதுவரையில்லா இசை கொள்வது. அவன் கூர்மதியும் வெருகு விழிகளும் பார்க்கும் மக்களிடம் மெழுகைப் போல ஒட்டிக் கொள்கிறது. பேச்சின் சுவாரசியத்தைக் கிழவர்களும் கிழவிகளும் கூடக் கூடியிருந்து கேட்டனர். அவன் ஆகாயம் பிளக்கும் கதைகளைச் சொன்னான். கண்டதைக் கேட்டதை காணாததை காணவே முடியாததை என அவன் சொல்லில் எழாதவையில்லை. அவை மெய்யுருக் கொண்டு மானுட அகங்களுக்குள் அலையத் தொடங்கின. அவன் மெய்ப்பெயரை யாருக்கும் சொல்வதில்லை. ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு பெயரை அவன் சொல்லி வந்தாலும் அவன் சொன்ன கதைகளைப் போலவே அவனைப் பற்றிய கதைகளும் மெல்லப் பரவத் தொடங்கியிருந்தன. பாணர் குழு நீங்கிய ஒற்றை இளம் பாணன் ஒருத்தன் ஊர்சுற்றி வருகிறான் என்பது அந்த தேசம் முழுவதும் பரவிவிட்டிருந்தது.

ஓர் ஊரின் தெருச்சண்டையில் இளம் பாணனின் மூக்கை அவ்வூரில் அப்போது தங்கியிருந்த பாணர் குழுவின் வாலிபன் குத்திய போது மூக்கிலிருந்து சிறு துளி இரத்தம் கொட்டியது. இதைப் பார்த்துச் சிரித்த கிழவர்களுக்குள்ளிருந்து வேறுகாடார் வெளிப்பட்டார். இருவருக்கும் குறுக்கே வந்து இருவரின் நெஞ்சிலும் உலோகக் குற்றியொன்றை வைப்பது போல் தன் கரங்களை வைத்தார். “அடுத்த அடியை அடிப்பவர் எவரோ அவர் அடுத்து என்னுடன் சண்டை புரிய வேண்டும்” வேறுகாடார் தீர்க்கமாச் சொல்லியதைக் கேட்டு கூட்டம் கொண்டாட்டமாகியது. இருவரில் ஒருவன் தாக்கப்பட்டு வீழ்வதைப் பார்க்க ஒவ்வொருவரும் கைதட்டி ஆர்வத்தைத் தெரிவித்தனர். இளம் பெண்கள் சாளரங்களால் விழிநோக்கியிருந்தனர். தாய்மார் சிறுவர்களுக்கு உணவூட்ட அந்தக் காட்சியைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஏற்கெனவே மூக்கிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்த இளம் பாணன் கையால் அதைத் துடைத்து விட்டு புழுதி பற்றியிருந்த தன் குழலைச் சிலுப்பி விட்டு “வாரும் கிழவரே, உங்கள் இருவரையும் கொல்ல எனக்கு இந்த ஒரு கைபோதும்” என இரத்தம் பட்ட கையைத் தூக்கிச் சுற்றியிருந்த கூட்டத்திற்குக் காட்டினான். மனைக்குள் இருந்த பெண்களின் சிரிப்பொலி தடுப்பு எவ்வளவு இருந்தும் வீதிக்கு ஓடிவரும் மழலைகளென வந்து குமிந்தன. வேறுகாடார் ஒருகையைப் பின்புறமாக வைத்துக் கொண்டு மறுகையால் அவனைத் தாக்கவரும் படி அழைத்தார். பின்னால் நின்ற மற்றைய பாணன் இந்தக் கலவரங்களுக்குள் காற்றோடு காற்றானான். இளம் பாணன் திடுக்கென்ற கணத்திற்குள் எட்டி வேறுகாடாரின் இடைத்துணியை உருவினான். இந்தத் தாக்குதலை எதிர்பாராதவர் தனது மேற்துணியால் இடையைச் சுற்றினார். ஆனால் இடைத்துணியை உருவிய பொழுது அவரின் ஆண்குறியின் அழகைப் பார்த்து பெண்கள் வியந்து விழி விரிந்ததை மாபெரும் தோல்வியெனக் கருதி இளம் பாணன் துண்டைத் திரும்பக் கொடுத்தான். வேறுகாடார் சிரித்தபடி “நான் வாளைக் கைகளில் கொண்டு திரிவதில்லை வாலிபனே. அது என் கூடவே பிறந்தது” என்று சொல்லிக் கொண்டு இளம் பாணனின் கழுத்தைச் சுற்றி இறுக்கியபடி அருகிருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார்.

“கிழவரே, கழுத்து நோகிறது. என்னை விடும்” எனச் சீறினான் இளம் பாணன். பிடியை இளக்கி விட்டு முதுகில் இரண்டு தட்டுத் தட்டினார். “நீ யார் வாலிபனே, ஏன் நீ தெருவில் சண்டையிட்டுக் கொண்டு நின்றாய்?”. என்றார் வேறுகாடார். “நான் ஒரு குடி நீங்கிய பாணன். என்னைக் குடித்துரோகியென அவன் விளித்தான். அது தான் அவனைத் தாக்கினேன்”.

” அப்படியா. நல்லது. எங்கு சென்று கொண்டிருக்கிறாய்?”

” எந்தத் திசையும் என்னில் விழைவதே. நானே என் பயணத்தைத் தீர்மானிப்பவன். எங்கு சென்றிடினும் அவர்கள் என் குடிகளே”

“ஆக மொத்தத்தில் நீ ஒரு போக்கிரிப் புலவன். சரிதான். நீ தான் மகத்தான காவியங்களை ஆக்கக் கூடிய மனம் கொண்டவன். சொல்லெண்ணி, இலக்கணம் கற்று, தவமிருந்து எழுதுபவன் தன் இன்மையை எழுதுகிறான். உன் போன்ற பித்தர்கள் தான் வாழ்வின் இருப்பையும் அதன் எல்லா வர்ண பேதங்களையும் ஆக்கக் கூடியவர்கள். எங்கள் நகரில் இன்றைக்கு நான்கு நாட்கள் கழித்து பெருந் திருவிழா நடைபெற இருக்கிறது. யாழெடுத்து இசைக்கும் புலவர்களுக்குத் தம்மண்ணையே அளிக்கும் குடிகள் உள்ள நகர். தேவ இலை மலர்கள் காடாய்க் கிடக்கும் மண். மதுவும் கள்ளும் நீரை விடப் பிரதானம்.
அங்குள்ள பரத்தைகளை உலகில் எங்கிலும் நீ பார்க்க முடியாது. தேவ கன்னிகள் போலிருப்பர். யட்சிகள் போல் காமம் புரிவர்”.

“என்ன கிழவரே, வழித்துணைக்கு ஆட் சேர்க்கிறீரா. ஆசை வார்த்தைகள் கூறிச் சிறு பிள்ளைகளை ஏமாற்றுவதைப் போல் என்னை ஏமாற்றுகிறீரா”.

“இல்லை இளம் பாணனே, உனக்குச் சொல் வேண்டும். சொல் நிகழ வாழ்க்கையில் மெய்யனுபவம் வேண்டும். அல்லது அதைப் பார்க்கவாவது செய்ய வேண்டும். எங்கள் நகரின் நாகதேவித் திருவிழாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் கொல்லப்பட்டதும் கொன்றதுமான வீரர்களின் நினைவுக்கான பெரிய படையலும் களிக்கூட்டும் இருக்கிறது. நீ அப்படியொரு நிகழ்வை உன் வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டாய். நானே என் இளவயதில் ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். இன்று என் சாயலில் பிறந்துள்ள என் குடியின் ஐம்பதுக்கும் குறையாத மக்கள் எல்லாம் அந்த நாளினது சாட்சிகளாக இன்னும் வாழ்கின்றனர்” எனச் சொல்லிப் பலத்துச் சிரித்துவிட்டு “வாய்ப்புகள் அமைந்தால் இம்முறையும் என் குடியைத் தழைக்க வைக்க நான் என் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். சந்ததிகள் முக்கியமில்லையா இளம் பாணனே”.

இளம் பாணன் இனி இந்த ஊரில் இருக்க முடியாது. இந்தக் கிழவனின் நகருக்குச் சென்று வேடிக்கையாவது பார்க்கலாம் என ஆயத்தமானான். ” வாரும் கிழவரே போகலாம். என்னதான் நடக்கிறது எனப் பார்க்கலாம். நீர் சொல்வது பொய்யாக இருந்தால் உம்மை நான் கொல்வதை அந்த நாகதேவியும் தடுக்க முடியாது”.

” காட்டின் வழி தனியே செல்லும் பொழுது உன் போன்ற வீரனுடன் வருவது மனதிற்கு ஆறுதலாயிருக்கிறது இளம்பாணனே ” எனச் சொல்லிப் புன்னகைத்து விட்டு “வா. வாழ்வின் பெருங்களியை உனக்கு நான் காட்டுகிறேன்” என்றார் வேறுகாடார்.

TAGS
Share This