08: பலி விளி

08: பலி விளி

மாலை கரைசேரும் யவன மரக்கலனில் தனக்கான வலிநீக்கு ஒளடதங்கள் வந்து சேரும் எனப் பேராவலுடன் காத்திருந்தான் தமிழ்க்குடியின் முதற் பரதவ அரசன் நீலழகன். போரில் அங்கங்களை வெட்டி வீழ்த்தும் போதும் ஆயிரமாயிரம் அம்புகள் பெருமழைப் பெருக்கென எதிரிகளின் படை மீது குவிந்து சதை புகும் பொழுதும் அவர்களின் கதறும் ஓலம் அவன் செவிகளை நிறைக்கும் பொழுதும் தனது பட்டினத்தில் அவர்கள் செய்த பாதகங்களினை எண்ணியெண்ணி இன்னும் இன்னும் அவர்களின் குருதி வேண்டுமென அவன் உள்ளம் பாலைமழை தீண்டும் மணல் நாக்குகளெனத் தவிதவிக்கும். போர் நிகழும் களங்களில் காணும் ஒவ்வொருவரையும் எரிக்கும் விழிகள் கொண்டிருந்தான். போர்க்களத்தில் அவன் உள்நுழையும் பொழுது சொந்தப் படையினரே பெரும்புலி நுழைந்த மாட்டுப்பட்டியெனத் திமிறி ஓடுவார்கள். போரில் வென்ற பின் களத்தில் நிற்கும் எதிரியின் தலைமைப் புரவியொன்றைத் தேர்ந்து அதன் கழுத்தை ஒரேவீச்சில் வெட்டி அதன் குருதியில் கைகளையும் வாளையும் கழுவிக் கொள்வான். அதைத் தன் சடங்கென அவனே ஆக்கிக் கொண்டான்.

கார்த்திகை மாதம் உதித்த கதிரவன் என அவனைப் பாணர்கள் பாடினர்.
கார் திரண்டு மூடியிருக்கும் கார்த்திகை வானத்தில் தோன்றிய அவன் ஒளியே மண்ணை உய்விக்க வந்ததென்றும் அவன் புன்னகையில் படரும் குழந்தையின் குறும்பு உளவலிகள் போக்குமென்றும் நடையில் மிளிரும் ராஜ புரவியின் செருக்கு அவன் மண்வந்த தேவவீரனெத் தோன்றச் செய்யும் எனவும் பட்டினத்தின் மனைத் திண்ணைகளில் முதுகிழவர்கள் சிறுவர்களுக்குக் கதை சொல்லினர்.
ஆழியின் கரையில் பிறந்ததனால் அவனுள்ளே எப்போதும் ஒரு முடிவில்லாத கடுநீலக் கடல் அலையடித்தபடியிருக்கிறது என அவன் அன்னை சிறுவயதிலேயே உணர்ந்திருந்தாள். அவனது இளமைக் காலத்தில் மூண்ட சிறுபோர்களில் அவனது தந்தை அறியாமல் ரகசியமாகப் படை வீரர்களுக்கு உதவிகள் புரிந்தான். ஆழி அவனது உள்ளமென்று ஆனது போலே சிவந்தும் கருத்தும் வெளுத்தும் கிடக்கும் மண் அவனது மேனியென ஆகியது. சித்தம் எவருக்கும் எப்பொழுதும் முன் தாழ ஒவ்வாதது. அது அவனது பிறவிக் கவசம்.

கடற்கரையில் சகோதரிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுவான். அலைகளில் மூழ்கி மறைந்து திரும்புவான். அவன் ஆழிக்குள் மறைந்து ஒளிந்து கொள்ளும் போது கடல் மீன்களால் கூட அவனைக் கண்டுபிடிக்க முடியாது எனச் சகோதரிகள் சொல்வர். அவன் ஆழ்நீச்சலில் மறைந்து அவர்களைத் தேட வைக்கும் பொழுது சகோதரிகள் அழுதுகொண்டு அலைகளில் மூழ்கியெழுவர்கள். களைத்துக் கரைசேரும் போது அவர்களுக்கு முன் தோன்றிச் சிரித்துக் கொண்டு அலைகரையில் நடந்து வருவான். கடலில் அலையெனவும் காட்டில் மரமெனவும் ஆகக் கூடியவன் என முதுபடகோட்டி ஒருவன் அவன் தந்தையிடம் அவனைப் பற்றிச் சொன்னார். மாலை வேளைகளில் சிப்பிகளும் சோழிகளும் பொறுக்கி மணலில் அரண்மனை கட்டுவான். அதில் அழகிய சிற்பிகளையும் சோழிகளையும் தேர்வு செய்து அலங்காரம் செய்து கொள்வான். தேர்வு செய்வதில் அவனுடைய விழிகளுக்கு நுட்பமதிகம். அரண்மனையை ஆக்கியதும் அதன் முன் அமர்ந்து கொள்வான். போர்களைக் கற்பனை செய்துகொண்டு அரண்மனையைக் காப்பான். தாம்பூலப் பூச்சிகள் மணலில் வரையும் கோடுகளைத் தன் அரசின் எல்லைகளென ஆக்கிக் கொள்வான். அதன் ரேகை போன்ற மென்னுட்பமான கோடுகள் நாகதேவி அவனுக்கிட்டிருக்கும் ஆணைரேகையாக எண்ணிக்
கொள்வான். பின்னர் கனவில் மிதக்கும் விழிகளுடன் கடலையே பார்த்தபடியிருப்பான்.

சிங்கை நகரின் தாக்குதல்கள் அதிகமான பொழுது தனது குடிகள் அரசற்றுச் சிதறியிருப்பதை எண்ணி வருந்தினான். எற்கெனவே இருந்த அரசன் போரில் ஆர்வமின்றி எந்நேரமும் கலவியில் திளைப்பதாகக் குடிகள் வசைபாடினர். தம் குடிகளுக்கு நேரும் அவலங்களைப் பார்த்த வாலிபர்கள் குழுக்களாகச் சேர்ந்து தம் பகுதிகளில் நடக்கும் தாக்குதல்களை எதிர்த்தனர். சிங்கை நகரின் படைபலமும் ஆயுதபலமும் தமிழ்க்குடிகளை விடப் பத்துமடங்கு பெரியது. தாக்குதல்களில் ஏராளமான வாலிபர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணரப்பட்டனர். சொத்துகள் சூறையாடப்பட்டன. பட்டிகள் சாய்த்துச் செல்லப்பட்டன. நாகதேவி ஆலயத்தைக் கைப்பற்றிய அன்று நாகதேவியின் முன் நூற்றுக்கணக்கான பெண்களைப் புணர்ந்து சிங்கை நகர் அரசு தன் சுக்கிலப் பலியை நாகதேவிக்குச் சமர்ப்பித்ததாக எக்காளமிட்டது.

வீசினால் யானைத்துதிக்கை வாழைக்குருத்தைப் போல் வீழும் உருகம் என்ற பெருவாளை முதுகொல்லர் சீர்த்தரிடமிருந்து அன்று தான் நீலழகன் பெற்றுக் கொண்டான். அனைத்துக் குடிகளிலிருந்தும் தீரமும் கூர்மதியும் கொண்ட ஐநூறு வீரர்களைக் காட்டில் திரட்டினான். அவனே அவர்களில் வயதில் இளையவன். அவனைத் தம்பியென்றே பெருவீரர்கள் அழைத்தனர்.

பெருவனத்தின் இருளில் வீரர்களைத் திரட்டினான். தமது குடியின் ஒற்றர்களை அவனது படையே அறியமுடியாதபடிக்கு ஒரு ஒற்றர் கூட்டத்தை ஒருங்கிணைத்தான். வேறுகாடார் அவனது தலைமை ஒற்றனாக ஆனார். கூகையின் சுழலும் விழிகளும் கலக்கமற்ற முகமும் வேண்டும் பொழுது வேண்டியபடி தன்னை உருமாற்றிக் கொள்ளும் லாவகமும் வேறுகாடாரிடம் இயல்பிலேயே அமைந்தது. படைவீரர்களைப் போர்வீரர்களாக்கினான் நீலழகன். தாய்களும் தந்தைகளும் காதலிகளும் அறியாது பாம்புகள் நுழைவது போல் வாலிபர்கள் வனமேகினர். இருளில் கள்வர்கள் போல் பட்டினம் சென்று மீளப் பழகிக் கொண்டனர். நீலழகன் பிறவிப் போர்வீரன். அவனுடன் அருகிருக்கும் பொழுது எதிரியின் பத்துமடங்கு படையினரும் காலின் கீழ் நசிபடும் சிறுபூச்சிகளாகவே படைவீரர்களுக்குத் தோன்றும். உறுதி கலையாத அவன் வதனத்தை அவர்கள் தங்களின் ஆடியென எண்ணிக் கொண்டனர். அவர்களின் உளங்களில் அவன் விடுதலையின் தாகத்தைப் பெருக்கெடுக்கச் செய்யும் மந்திரச்சொல் என விழுந்தான்.

குடிகள் அதுவரை கேட்டதிலேயே நீண்ட போரை நீலழகன் சிங்கை நகரை எதிர்த்துப் புரிந்தான். சிங்கை நகரில் அரசர்கள் வீழ்ந்து கொண்டே சென்றனர். ஈசல்கள் போல மறுபடியும் பிறந்து கொண்டும் இருந்தனர். உருகம் போர்க்களங்களைக் குருதியில் ஆழ்த்தியது. தமிழ்க்குடியிலும் இழப்புகள் கூடிக் கொண்டே போனது. வீரர்கள் அங்கவீனமானார்கள். பெண்கள் விதவைகளானார்கள். நீலழகன் எப்பொழுதும் குடிகளிடமிருந்து தள்ளியே இருந்தான். நான்கு பருவங்களுக்கு ஒருமுறை நாகதேவியின் குருதிப்படையல் நாளில் கற்கோவிலுக்கு வருவான். குடிகள் வைத்த விழி எடுக்காமல் அவனையே பார்த்தபடியிருப்பர். அசையாத கற்பாறையொன்றைப் போல் குவிந்திருப்பான். அங்கவீனமான போர்வீரர்களை அழைத்துப் பட்டினத்தை ஆக்கும் பணிகளை மேற்பார்வையிடக் கேட்டுக் கொண்டான். அவர்களது உடலின் அங்கமென ஆகிய அவனது சொற்களை அவர்கள் சிரமேற்றனர்.

போர் துவங்கி இந்தப் பருவத்துடன் நூற்றியிருபது பருவங்கள் கரைந்து போயின. அவனது உள்ளம் குருதியும் ஓலமும் பெருகிப் பெருகி பாறையின் அடுக்குகளென இறுகியது. துயரமும் குற்றவுணர்ச்சியும் அவனது விழிகளில் நரம்புகளெனப் பின்னி விரிந்தது. நடையில் ஒரு தாளம் குறைந்திருந்தது. யாருடனும் பெரிதாகச் சிரித்துப் பேசுவதில்லை. கடைசிப் போரில் அவன் மேனியில் பட்ட புண்கள் ஆறாமல் சிதல் கட்டிக் கொண்டிருந்தன. அயல் நிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய பாசாண வகைகளால் தயாரிக்கப்பட்ட வாள்களையும் அம்புகளையும் அப்போரில் சிங்கை நகர் பயன்படுத்தியது. அவனது நெஞ்சில் விழுந்த ஆழமான வாட்கீறல் ஒன்று வடுவாகமல் சேற்றுப்பரப்பென உடலில் தங்கியது. வலியில் இராத்திரிகளில் அனுங்கியபடி கிடப்பான். நிலவை அவனை நெருங்குவதை உள்ளூர வெறுத்தான். அவளின் வாழ்வைத் தான் அழித்துவிட்டதாக அவனுள் ஒரு குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. அது நிலவையின் ஈரக்குரல். அது எழும் போதெல்லாம் அவன் வலி ஆயிரம் மடங்கு ஒவ்வொரு நரம்பிலும் புரண்டோடியது. மருத்துவிச்சிகளின் குடில்களில் தங்கிக் கொள்ளத் தொடங்கினான். பரத்தையர் மூலம் ஒற்றறிந்தான். வேறுகாடார் இன்றும் அவனது தலைமை ஒற்றனாக நிலங்களை அலைந்து அறியும் அவனது நிழலாக உடனிருந்தார்.

மூநாளில் பெருங்களி நிகழவிருக்கிறது என்ற எண்ணம் அவனுள் சற்று இறுக்கத்தைத் தளர்த்தியிருந்தது. குடிகளின் சிரிப்பொலியும் குழந்தைகளின் முகங்களும் அவனுக்கு ஒளடதமாகின. பெரும் போர்கள் முடிந்த பதினெட்டுப் பருவங்களின் பின் பெருங்களி கூடுவது குடிமரபு. ஆனால் முடியாத யுத்தங்களுக்கிடையில் நீலழகனால் பெருங்களியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இறுதியாக நடந்த யுத்தத்தில் உருகம் அவன் கரங்களில் இருந்து தவறிய பொழுது அவன் முதன்முறையாக அகம் நடுக்குற்றான். உருகம் கரம் தவறிய மின்கணத்தில் எதிரி வீரனின் பாசாண வாள் ஒன்று அவன் நெஞ்சைக் கீறியது. புரவியிலிருந்து சரிந்தான். அவனது மெய்ப்பாதுக்காப்புப் படையினர் சுற்றி அரணமைத்து அவனை மீட்டனர். அவனைக் காக்கும் போரில் அறுபத்து மூன்று வீரர்கள் மடிந்தனர். அன்றிரவு வலியிலும் நடுக்கத்திலும் புண்பட்ட நாகமெனப் புரண்டு கொண்டிருந்தான். மதுக்குப்பியொன்றை அவனது காயங்களில் கவிழ்த்தான். மது எரிதிரவமென மேனியில் ஓடியது. விழிகளின் நீர் கரைகடந்தது. அன்று இரவு முழுவதும் அன்னையின் கரங்களுக்குள் கிடப்பதாக எண்ணியபடி மெல்ல மெல்ல இறகொன்று காற்றிறங்குவது போல் உறக்கத்தில் அமிழ்ந்தான். இன்று காலை முதல் அந்த இராத்திரியின் நினைவுகள் அவனுள் எழத்தொடங்கி விட்டன. யவன மரக்கலன் கரைசேர்ந்த செய்தியை படைவீரனொருவன் கொணர்ந்தான். சிறு தேரில் ஏறினான். தேரோட்டி சக்கடன் குதிரைகளுடன் பேசியபடி தேரைச் செலுத்தினான். பெருவீதியைத் தவிர்த்துக் கடற்கரை வீதியால் செல்லப் பணித்தான் நீலழகன். கடற்கரையெங்கிலும் குடிகள் களிவிளியாட்டுகளை ஆடியபடியிருந்தனர். ஆண்களும் பெண்களும் வலையிழுத்தனர். பதனீர்க் கலயங்களும் கள்க்குவளைகளும் ஆறாய் ஓடிக்கொண்டிருந்தன. கள்ளருந்திய கிழவர்கள் மணலில் மல்யுத்தம் புரிந்து விளையாடினர்.

இளம் பெண்கள் கூடி நின்று பகிடிக் கதைகள் சொல்லினர். “விடாதீர்கள் தாத்தா அவரது குழலைப் பற்றியிழுங்கள்.. நீங்கள் அவரது கெளபீனத்தை அவிழுங்கள்.. அய்யோ கிழவரே ஆமைக்குட்டியைப் போல் மணலுக்குள் கிடக்காதீர்.. எழுந்திருங்கள். போர் புரியுங்கள்.. போரில் உங்கள் எதிரியை வீழ்த்துங்கள்..உங்களுக்காக இளம் பெண்களின் மார்புகள் துடிக்கின்றன” எனக் குரல்கள் கூவிச் சிரித்தன.

சூரியன் பாதிச் செங்குளமென ஆழியில் நிரம்பிக்கொண்டிருந்தான். நீலழகன் யுத்தங்களில் மோதிய ரதங்களை மேகங்களில் கண்டான். பெருஞ் சிவப்பான கொத்து மேகத்தை இறந்த போர்வீரர்கள் எனக் கண்டான். சற்றுத் தள்ளியிருந்த கருமேகமொன்றை வீழ்ந்து கிடக்கும் மாகளிறென எண்ணிக் கொண்டான். அதன் துதிக்கையில் தாமரை போன்ற குறுமேகமொன்று குழந்தையின் கையில் கிடப்பதைப் போல் நீண்டிருந்தது. இரவுக் கடலுக்குச் செல்லும் சிறு மரக்கலன்கள் கரையிலிருந்து கடலுக்குள் இறங்கின. சுட்ட மீன்களும் கள்ளும் நிற்காமல் கிடைக்க வேண்டி பனைகளிலும் கடல்களிலும் குடிகள் குதூகலத்துடன் குழுமினர்.

கடற்கரை முழுவதும் நீண்டிருந்த ஆயிரமாயிரம் பனைகளின் ஓலைகள் உரசிக்கொள்ளும் ஒலிகள் அவனைப் பற்கூசச் செய்தது. மேனி மயிர்கள் சிலிர்த்துக் கொண்டன. தேரின் சக்கரங்களில் உழுபட்டுச் சரியும் ஈரமணலெனச் சிலகணங்கள் தன்னை எண்ணிக் கொண்டான். சக்கடன் பெருங்களியின் கற்பனைகளுடன் குதிரைகளை விரட்டினான். அவை காற்றில் நுழையும் சுழல்காற்றுகளென வேகங்கொண்டு விரைந்தன. சிறுவர்கள் அலைகளில் விளையாடியபடி சிப்பிகளும் சோழிகளும் பொறுக்கிக் கொண்டிருந்தனர். இளம் பெண்களும் ஆண்களும் கரையில் சறுக்கிய நண்டுகளைப் பிடிக்க ஓடினர். ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டனர். மணலிலும் அலையிலும் சரிந்து விழுந்தனர். மணலை அள்ளி உருட்டி பிருஷ்டங்களில் எறிந்தனர். ஒருவர் மீது ஒருவர் உராய்ந்து கொள்கையில் இடைகளைக் கிள்ளினர். குழல்களையும் கூந்தல்களையும் இழுத்து விளையாடினர். நீலழகன் பேராழியை நோக்கினான். கடலிலிருந்து எழுந்த உப்பு வாசம் அன்னையின் மணமென நீலழகனை அணைத்தது.

யவன மரக்கலன் சொப்பிரஸ்ஸாவிலிருந்து கரை திரும்பிக் கொண்டிருந்த இளம் பாணன் உள்ளத்தில் லீலியா என்ற பெயர் அச்சமூட்டும் ஒரு நிழலாக வளர்ந்து கொண்டிருந்தது. காற்றில் அலைபடும் தீப்பந்தங்கள் நிரம்பிய துறைமுகக்கரையைப் பார்த்துக் கொண்டிருந்த செலினியின் பக்கத்தில் வந்தமர்ந்தான். சிறுதேரின் அருகே நிற்கும் நீலழகனுடன் வேறுகாடர் கதைத்துக் கொண்டிருந்தார். குதிரைகள் கால்களை உயர்த்திக் கொண்டும் துள்ளிக் கொண்டும் கனைத்தன. சக்கடன் அற்றை “ஓவ் ஓவ்” என்று தடவிக் கொண்டிருந்தான்.

சிறுகலன் கரையை முட்டியதும் இறங்கிய இளம் பாணன் குழந்தையைத் தூக்குவது போல் கைகளை மேலே நீட்டியபடி செலினியைப் பார்த்தான். அவனது கைகளை வலக்காலால் ஒரு தட்டு தட்டிவிட்டு மந்தி கொப்புத் தாவுவது போல செலினி மணலிறங்கினாள். கலனிலிருந்த பெட்டியைத் தூக்கப் பத்துப் பேராவது தேவையென இளம் பாணன் கணித்து விட்டு செலினியைப் பார்த்துப் பத்துவிரல்களைக் காட்டினான். செலினி அவனை முறைத்துவிட்டுக் கலனோடிகளிடம் பெட்டியைக் காட்டி கைகளால் சைகை செய்தாள். அவர்கள் விளங்கிக் கொண்டவர்கள் போல் அருகிருந்த தங்கள் சகாக்களை நோக்கி சீழ்க்கையடித்தனர். குடுகுடுவென ஓடிவந்தவர்கள் பத்து மனிதர் எடைகொண்ட அந்த மரப்பெட்டியைக் கீழே இறக்கினர். பெட்டி மணலில் வைக்கப்பட்டதும் உறுமிக் கொண்டு ஆடி அமைந்தது. செலினி சிரித்து விட்டு பெட்டியில் மூன்றுமுறை தட்டினாள். பெட்டி உறுமலை நிறுத்தியது. இளம் பாணனின் பிருஷ்டத்தில் யாரோ உதைத்தது போல் பாய்ந்து விழுந்தான். புலி புலியெனக் கத்தியபடி வேறுகாடாரை நோக்கி ஓடினான். குடிகள் சுற்றி நின்று அவனது நாரையோட்டத்தைப் பார்த்துக் கைதட்டி சீழ்க்கையடித்துச் சிரித்தனர். வேறுகாடார் அவன் தூரத்தில் வருவதைப் பார்த்ததும் நீலழகனைப் பார்த்து தலையசைத்து விட்டு விடைபெற்றுக் கொண்டான்.

“என்ன புலவனே எங்கே புலி. யாருடைய புலி. இந்த மண்ணுக்கு வந்து விட்டுப் புலிக்கு அஞ்சலாமா. வாரும். அது வேடிக்கை காட்டக் கொணர்ந்திருக்கும் புலி. ஒன்றும் செய்யாது. நாளை அதைக் கடற்கரை நடைக்குக் கூட்டிச் செல்வோம்” என்றார் வேறுகாடார்.

அச்சத்தில் வியர்த்து வழிந்து இதயம் முரசின் தோல் போலத் துடித்துக் கொண்டிருந்த இளம் பாணன் “ஏய் கிழவா. உனக்கு நான் என்ன கெடுதல் செய்தேன். இப்படி ஒரு தீவில் வந்து என்னைச் சிக்க வைத்து விட்டாயே. வாழ்நாளில் நான் ஒரு புலியைக் கூட நேரில் பார்த்ததில்லை” என்றான்.

“நீர் உம் வாழ்வில் எதைத் தான் நேரில் பார்த்தீர். எல்லாமே கற்பனை தானே. இந்த புலியையும் ஒரு சொல்லென எடுத்துக் கொள்ளுங்கள் புலவரே. அதுபோக எமது பட்டினத்தில் எந்த வீதியில் திரும்பினாலும் அடிக்கொரு புலியிருக்கும்” என்றுவிட்டு உடல் சிலிர்க்கச் சிரித்தார்.

“என்ன புலியா.. ஏய் கிழவா சொல்.. உண்மையிலேயே புலிகளை உமது குடிகள் வளர்க்கிறார்களா. நான் கலமேறி என் நிலத்திற்கே போய் விடுகிறேன். ஏய் கிழவா நில்..” எனக் கத்தியபடி இளம் பாணன் வேறுகாடருக்குப் பின்னால் ஓடினான்.

வேறுகாடார் கலைந்த குழலை முடிந்த படி மகவுடன் விளையாடும் தந்தையின் புன்னகையுடன் துறைமுகத்தின் அடுத்திருந்த வண்டியோட்டிகளின் குடில்களை நோக்கிச் சென்றார்.

ஆயிரக்கணக்கான பெரு மாடுகளும் எருமைகளும் நிரை நிரையாகப் பட்டிகளில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு ஆயிரம் மாடுகளுக்கும் இடையில் ஒரு குடிலெனக் காவலும் இடப்பட்டிருந்தது. தீப்பந்தங்களின் ஒளியில் மாடுகளின் விழிகளும் எருமைகளின் தோல்களும் இளம்பாணனுக்கு அச்சமூட்டின. வேறுகாடாரின் உடலுடன் ஒட்டியபடி ஓடி ஓடி நடந்தான். முதலாவது குடிலின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிக்கு அருகில் சென்று பார்வையிட்ட வேறுகாடார் இரண்டு செப்பு நாணயங்களை வண்டியோட்டியிடம் நீட்டினார். இரண்டு வளைவாள் போலக் கொம்புள்ள கரிய மாடொன்றை வண்டிலில் பூட்டி அதில் ஏறி அமர்ந்தான் வண்டியோட்டி. வேறுகாடார் தாவி ஏறிக் கொண்டு இளம் பாணனுக்குக் கைநீட்டினார். முகத்தைத் தொங்கவிட்டுச் சோகமாக நின்றவனைப் பார்த்த வேறுகாடார் முகத்தில் கனிவு பரிந்தது.

“இளம் பாணனே, உன் நிலத்திலும் நீ நிலத்தை பார்க்கவில்லை. பாணர்களின் பிறவிக் குணமது. உனக்கு எல்லாமே சொற்கள். உண்மையில் ஒன்று எதிர்ப்பட்டுவிட்டால் அதை உன்னால் நேர்கொள்ள முடியாது. இந்த நிலத்தில் உனது சொற்களும் வாழ்க்கையும் இணைந்து கொள்ளப் போகின்றன என்பதை நான் உளமறிகிறேன். உன்னைப் போலவே கனவு காணும் விழிகளைக் கொண்ட இன்னொருவரை எனக்குத் தெரியும். கனவு காண்பவர்களின் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு நிரந்தர அச்சம் மண் போல் பரந்திருக்கிறது. எங்கும் ஒட்டிக் கொள்ளாமல் ஆகாயத்தை நோக்கி விழிகளை உயர்த்தும் எண்ணம் அந்த அச்சத்திலிருந்து பிறப்பது தான். கனவின் விழிகளுக்கு அச்சம் ஒரு அணி இளம் பாணனே. எனது குடிகள் தம் நிலத்துக்கு வருபவர்களைக் காத்து நிற்பவர்கள். அவர்களின் ஆழத்தில் உள்ள அந்தக் குணமே அவர்களின் முதல் இயற்கை. அஞ்சாதே, ஏறிக் கொள்” எனக் கைகள் நீட்டினார்.

கிழவருக்குள் எங்கிருந்து இந்தச் சொற்கள் எழுந்து இப்படி அமைந்தன என்பதை இளம் பாணன் வியந்தான். கைகளைப் பற்றியபடி ஏறினான்.

“இளம் பாணனே இந்த மாட்டுக்கு இது தான் முதல் சவாரி” என்று சொல்லியபடி உரக்கச் சிரிக்கத் தொடங்கினார் வேறுகாடார். இளம் பாணன் தனது கரங்களை விரித்து வண்டிலிலிருந்த நீள்தடிகளில் இரண்டைப் பற்றியபடி இருளில் ஒளிரும் துறைமுகத்தைப் பார்த்தபடி வந்தான். காற்றில் கீசிக் கொண்டு வண்டில் பறந்தது.

லீலியாவின் உறையணிந்த கால்கள் ஈரமணலில் முதல் காலடியை வைத்த பொழுது தலை வெடுக்கென்று உயர்ந்து அவளுள் பெரும் சர்ப்பம் நுழைந்து தலையை விழுங்குவது போல் உருத்தோன்றி உடல் விறைத்தது. ஆகாயத்தை நோக்கி விழிமூடியிருந்தது. இருவிழிக் கரையாலும் கண்ணீர் சளசளவென ஓடத் தொடங்கி முகத்துணியில் வழிந்து பெருகியது.

TAGS
Share This