15: நிலவை எழல்

15: நிலவை எழல்

வெண் மெளனம் சூடிய நித்திய கல்யாணி மலரொன்றை நிலவை கூந்தலில் நுழைத்துத் தன் விரல்களால் அழுத்திக் கொண்டாள். உசை “நீலா. நீலா” என்று மிழற்றியது. உசை தன் சிவந்த ஆரத்தை வளைத்து கொழு அலகைத் திறந்து குறுநாக்கை வெளியில் நீட்டி உள்ளிழுத்தாள். நிலவை தன் குடியிலிருந்து நீலழகனின் படைவீரர்களுடன் வனக் குடிலுக்கு அழைத்து வரப்பட்ட பொழுது அக்குடிலில் இருந்த கூண்டில் தன் பசுஞ் சிறகுகளை விரிக்காமல் உலகைத் தன் புன்விழிகளால் உருண்டு பார்த்துக் கொண்டிருந்த சிறுகிளி உசை. புலிப்படை வீரனொருவன் மாங்கனிகளுக்கு எய்த அம்பொன்றில் உசையின் தாய்க்கிளி காயம்பட்டு இறந்தது. பின் உசையை எடுத்துக் குடிலில் வைத்திருந்தார்கள்.

விரிந்த மேனி கொண்ட பாலைகளும் வாகைகளும் தலைவிரித்துப் பூச்சொரியும் அந்த வனத்தின் படைக்கலக் குடிலுக்கு அவள் முதன்முறையாக வந்து சேர்ந்த பொழுது இருள் கலையாத அதிகாலை. பாலை கனிகொள்ளும் போது பாலைக்காட்டிற்குள் பிறமரங்கள் வளர்வதாகத் தோற்றங் கொள்ளும் காடு. அதே காடு வாகை பூ விழிக்கும் பொழுது வாகை வனத்தில் எஞ்சிய மரங்களுக்கு என்ன பணியென எண்ண வைக்கும்.

முதல் நாள் அந்தியில் தமிழ்க் குடிகளிற்கிடையில் நிகழ்ந்த உட் போரில் அவளது தமையனிருந்த குடிகளின் போர்ப்படைக் குழுவொன்று நீலழகனின் படைவீரர்களால் கொல்லவும் கைதுசெய்யவும் பட்டார்கள். நீலழகனின் வீரர்களைத் தடுக்கும் முயற்சியில் நிலவையின் தமையன் சீலதேகன் படுகொலையானான். சீலனின் இரத்த விளறாய்க் கிடந்த உடலின் மேல் விழுந்து கதறியழுத நிலவை சீலனின் வாளை எடுத்துக் கொண்டு நீலழகனின் வீரர்களை நோக்கி சித்தம் அழிந்தவள் போல் சுழற்றினாள். வீரர்கள் என்ன வினைபுரிவதென அறியாது மிரண்டு விலகினர். அவளின் கருங்கூந்தல் சர்ப்ப மூச்சுடன் கலைந்தெழ கண்களில் குருதியென நீர் பெருக்க நிலவை தடக்கையில் உறு வாள் ஏந்திய கோலம் அவளை உக்கிரை எனத் தோற்றியது என பின்னொரு நாள் வீரனொருவன் நீலழகனிடம் தனிமையில் சொன்னான்.

சீலதேகன் நிலவைக்கு வாளும் வில்லும் புரவியேற்றமும் கற்றளித்தவன். அவளது இளவயதில் சிங்கை நகர்ப் படைகளின் தாக்குதலில் அப்போதைய அரசனின் அரசவை மதியூகியாக பணிபுரிந்த அவளது தந்தை சாளக தேவரும் தாய் கமல சொரூபியும் கொலையுண்டனர். தமையன் சீலதேகனே அவளை அமுதும் பாலும் ஊட்டி வளர்த்தவன். அவனறிந்த எல்லாவற்றையும் அவளுக்கும் அளித்தான். அவளது கரங்களில் தமையனும் சிரசில் அவளது தந்தையும் உறைவதாக குடியினர் கூறுவர்.

சீலதேகனும் அவனது குழுவினரும் படுகொலை செய்யப்பட்ட வெஞ்சூடு ஆறாத நிலத்திலிருந்து கைதுசெய்யப்பட்டு வனக்குடிலுக்கு நிலவையைக் கூட்டி வந்திருந்தனர் புலிப்படை வீரர்கள். அதிகாலையில் பனி கலைந்து ஒளியின் முதல் நுனிகள் வனத்தை அடைந்த பொழுது மயிலொன்றின் அகவல் கேட்டுக் கண்திறந்தாள் நிலவை. கைகளில் பிடிகாப்புகள் இடப்பட்டிருக்கவில்லை. அவளுடன் கைது செய்யப்பட்ட பெண்களுடன் அவள் ஒரு வார்த்தையும் உதிர்க்கவில்லை. இறுகி ஆற்றின் அடியில் கிடக்கும் கரும்பாறையெனத் திரண்டிருந்தாள். இரவிரவாக அழுது கண்களில் செவ்வரிகள் படர்ந்திருந்தன. முகத்தில் உலர்ந்த நதியின் கடைசி நீர்க்கோடுகளென கண்ணீர் சென்ற தடங்கள் உலராமல் இருந்தன. உதடுகளும் நாக்கும் வறண்டிருந்தன. நெடுங் கூந்தல் குலைந்து விரிகோலமுற்றிருந்தது. ஒரு சிறு கொத்துக் கூந்தல் முன்வளைந்து வலக்கண்ணை மறைத்தது. நெஞ்சினுள் தமையனின் குறும்பு விழிகளும் உலகறியாத முகமும் தோன்றித் தோன்றி மறைந்தன.

மலகந்தகமவின் நாகதேவி கோவில் தாக்குதலின் பின் நீலழகன் தமிழ்க்குடியை ஒரே அணியாகத் திரட்டி போரை ஒருங்கிணைக்க விழைந்தான். அன்றிருந்த அரசரை நாகதேவி கோவிலில் வழிபாட்டில் இருந்த வேளை அம்பெய்து கொன்றான். தமிழ் மண்ணில் வாழும் அனைத்துக் குடிப்பிரிவுகளிலும் நீலழகன் பெயர் அச்சத்துடனும் தீவிரத்துடனும் ஒலிக்கப்பட்டது அதன் பின்னர் தான். இருநூறு தேர் வீரர்கள் கொண்ட சிறுபடை நீலழகனுடையது. அவனைப் பிறவிப் போர்வியூகியென அறிஞர் மதிப்பிடுவர். அவனது சித்தம் போரின் இழைகளால் பின்னப்பட்டது. எங்கு எது அசைந்தாலும் வலையில் எழும் சிற்றதிர்வுக்கும் கொடுக்குயர்த்தும் ராட்சத சிலந்தியென ஊழ்கம் கொண்டவன் என அவனைப் பாணர்கள் நாவுகள் உச்சரிக்கத் தொடங்கின. வெஞ்சினமூறிய புலியொன்றின் கொல்முகத்தை சிங்கை வீரர்களால் கொல்லப்பட்ட துரிதையெனும் சிறுமியின் குருதித் துளிகள் சொட்டிய துணியில் செஞ்சாய வேர்களில் வடித்தெடுத்த சிவப்பிலும் நாகதேவியின் உடலில் கரைந்து உருகும் மஞ்சளிலும் குழைத்து ஆக்கினான். பட்டினத்தின் தெருக்களில் புலிக்கொடி ஒரு சங்கேதமென நுழைந்தது. ஆடற் சித்தரும் குல மூத்தோரும் அக்காலத்தில் சிங்கை நகருக்கெதிராகப் படைதிரட்டி வந்த வாலிபர் குழுக்களை ஒருங்கிணைத்து ஓரணியாகத் திரட்ட முனைந்தனர்.

பொதுமன்றுகள் நிகழும் நாட்களில் நீலழகன் சபைகளுக்கு வருவதில்லை. அவனின் பிரதிநிதிகளே வருவார்கள். அவர்களும் ஒரு சொல்லும் பேசாமல் அனைத்தையும் விழிகூர்ந்தபடியிருப்பார்கள். வீரர் குழுக்களுக்கிடையில் விவாதங்கள் எழும். விலங்குகளின் போர் என முரண்பாடுகள் உச்சம் கொள்ளும். வாள்களை உருவியபடி கடுஞ்சொற்களில் மோதிக் கொள்வார்கள். நீலழகனின் வீரர்கள் எந்த அசைவுமின்றி நோக்கியபடியிருப்பர். சில வேளைகளில் நீலழகனின் ஒற்றுவிழிகள் மட்டும் தான் அவர்கள் என்று பிறகுழு வீரர்கள் ஆடற் சித்தரிடம் முறையிடுவார்கள்.

ஆடற் சித்தர் நீலழகனின் வனக்குடிலுக்கு நேரில் சென்றார். இமைக்காமல் பேசும் அவன் விழிகளை நோக்கி “நீலா, நாம் சிதறியிருக்க முடியாது. குடி ஒருங்கிணைந்தே ஆக வேண்டும். உன் முடிவைச் சொல்” எனக் கேட்டார். அவன் சித்தரின் விழிகளையே நோக்கிக்கொண்டு சொற்களை நாவில் எண்ணியடுக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை சித்தர் அகக் கண்ணில் அறிந்தார். சிலகணங்களில் தன்னை ஒருங்கிக் கொண்டு விழிகளை விழிகளால் அளந்தபடி “தாத்தா, குடிக்
குழுக்களுக்கிடையில் எழும் முரண்பாடுகளை அறிந்து வருகிறேன். ஒவ்வொன்றும் கவலையளிப்பதாகவே இருக்கிறது. நம் நிலத்தின் எல்லைகள் சுருங்கி வருகின்றன. சிங்கை நகரின் படைகளை மலகந்தகம ஒருங்கிணைத்து விட்டான். நாம் எதிர்கொள்ளப் போகும் படை நம் குடித்திரளையும் விட அதிகம். நம் குடிப் படைகளின் விவாதங்களை சிறுபிள்ளைகளின் சண்டையெனவே நோக்குகிறேன். யார் தலைமை கொள்வது என்பதே இவர்களின் உள்ளோடும் மெய்யான மோதல்களின் நோக்கு. அவற்றில் எனக்கு அக்கறை இல்லை”என கடகடவென எண்ணிய சொற்களை மிகநிதானமாகச் சொன்னான். சித்தர் சற்று உளம் நோக்கிய பின் “நீலா, நீ மட்டும் தனித்து என்ன செய்வதாய் இருக்கிறாய்” என நேரடியாக அவன் அகத்திற்குள் அந்தக் கேள்வியைத் தொடுத்தார். அவன் ஏற்கெனவே சொன்ன சொற்கள் இந்தக் கேள்விக்கானது என்பதைப் போல் சற்று விழிவிரிய “தாத்தா, நான் என்னை மட்டுமே நம்புகிறேன். எனது உருகமே இக் குடியை வழிநடத்தும் ஓர்மை கொண்டது என உணர்கிறேன். புலிப்படை நம் குடியின் கனவின் தழல். எதை எரித்தும் இந்த நிலத்தையும் குடிகளையும் நாம் காப்போம்” என சிலவரிகளில் தன் உளத்தை சிறு நூற்கயிற்றில் ஒரு முடிச்செனச் சொன்னான். சித்தர் சற்றுப் பின்சாய்ந்து நிதானமானார். சொற்களை இனி நீலனிடம் அதிகம் எதிர்பார்ப்பது கடினம். அம்புகள் அளவுக்கே சொற்களிலும் கூர்மையையும் கவனத்தையும் கொண்டவன் என எண்ணிக் கொண்டார்.

அவனது குடிலை விட்டு எழுந்து வெளியில் வந்து அவனது வீரர்களின் பயிற்சியை நோக்கினார். காலையிலிருந்து அந்திவரை அவர்கள் ஆற்றப் பணிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆயுதங்கள் சீராக அடுக்கியிருந்தது. அவை தினமும் துடைக்கப்பட்டு இன்னும் சில நாழிகைகளில் தொடங்கவிருக்கும் போருக்கென எழுந்திருப்பவை எனத் தோன்றின. ஆனால் அவை எப்பொழுதும் அப்படித் தான். நீலன் எப்பொழுதும் போருக்கு எழும் உறுவாள் நுனி. அவன் குணத்தை அவன் படைகள் பெற்றிருந்தன. குழுவாகச் சேர்ந்து தசைப் பயிற்சிகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருந்தன. இன்னொரு திசையில் வேழங்களை வைத்துப் போர் புரிவதைப் பற்றிய பயிற்சி. இளம் பாகர்கள் சிலரும் அவன் குழுவிலிருந்தனர். அனைவருமே ஏறக்குறைய வாலிபர்கள். சிறுமீசையும் அரும்பாத தாடைகளும் தசைப் பயிற்சியினால் பொலிமேனியும் கொண்டவர்கள். சித்தர் சிலகணம் அவர்களை நோக்கிய பின் புன்முறுவலுடன்
“நீலா, உனது குணாம்சம் உன் வீரர்கள் ஒவ்வொருவரிலும் ஓடுவதைப் பார்க்கிறேன்” என்றார் . நீலழகன் சிரித்தபடி” இது என் குணமல்ல தாத்தா. நம் மண்ணின் அம்சம். நாங்கள் ஒவ்வொருவரும் மண்ணின் அம்சங்கள். இல்லையா” என்றான் குழந்தைச் சிரிப்புடன்.

சித்தர் பட்டினம் மீண்ட சில நாட்களிலே புலிக் கொடிச் சின்னமணிந்த பதாகைகள் செஞ்சாந்தில் குழைத்த எழுத்துகளுடன் துணிகளில் தோன்றின. “அனைத்துப் படைக் குழுக்களும் எவ்வித மறுப்புமின்றி புலிகளின் கீழ் ஒருங்கிணைய வேண்டும். மீறினால் படைகள் அழிக்கப்படும்” என்ற சேதி எழுதப்பட்டிருந்தது. எழுத்துகளின் மேலே ஒவ்வொரு வளைவும் கூர் உகிரும் சிறுவாள் முனை போன்ற பற்களும் செவ்விழிகளும் கொண்ட உறுமும் புலியொன்று தேர்ந்த கரங்களினால் தீற்றப்பட்டிருந்தது.

நிலவையின் தமையன் இச்சேதியை அறிந்து அகம் துடித்தான். “புலிகள் தாங்கள் மட்டும் தான் வீரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா. மண்ணையும் குடியையும் காக்க இங்கு ஆயிரமாயிரம் மறவர்கள் இருக்கிறார்கள். இங்கு சிந்தும் ஒவ்வொரு குருதித் துளிக்கும் பதில் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரித்திருக்கிறது. அதை யாரால் தடுக்க முடியும்” என தனக்குள் பொருமிக் கொண்டிருந்தான். நிலவை நிலமையைப் பற்றி விசாரிக்க சீலதேகனை அழைத்திருந்தாள்.

நெடுநாள் கழித்து மனைக்குத் திரும்பிய சீலதேகன் உள்ளெழுந்த ஆற்றமைகளால் நிலை கொள்ளாது அங்குமிங்கும் குறுநடை நடந்தான். தூணில் கரமொன்றை சாற்றி ஏற்றி வைத்துக் கொண்டு இடையில் கைவைத்து வெறுநீலவானை நோக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு சிறுகலயத்தில் பச்சை மிளகாய் கலந்த மோர் கொணர்ந்து திண்ணையில் வைத்தாள் நிலவை.

உடலை மிருதுவாக்கிக் கொண்டு நிதானமாக சுவரில் சாய்ந்து அமர்ந்து பஞ்சுத் தலையணை ஒன்றை மடிக்குக் கொடுத்து விட்டு சீலதேகனிடம் நிலமைகளைக் கேட்டாள். சீலதேகன் நீரில் அள்ளிக் கொட்டிய வெடிபலவன் வித்துக் கோதுகளைப் போல படபடவென வெடிக்கத் தொடங்கினான். சீலனின் சின விழிகளும் கள்வெறியென மயக்கும் நிதானமற்ற பேச்சும் அவளுக்கு எரிச்சலூட்டியது.

நிலவை தலையணையைத் திண்ணையில் இறக்கி வைத்தாள். மனையின் முன்வளைவில் நின்ற செவ்விரத்தம் பூக்கள் மரம் சிவக்க மலர்ந்திருப்பதைப் பார்த்தாள். குடிகளின் கோபம் இப்படித் தான் கொப்பளிக்கிறது என எண்ணினாள்.
அவள் அரசுசூழ்தலை நுணுக்கமாக அறிந்தவள். தந்தை அவளுக்குச் சிறுவயதில் சொல்லிய சொற்களும் சொல்லாத நுண்மையும் அவளில் அவளென நிறைந்திருக்கிறது.

தன் தணிகுரலை சீர்செய்துகொண்டு
“அண்ணா, போரில் எதிரிகளை விடத் தோழர்களே முக்கியம். நம் குடிக்குள் பிளவுகொண்டு சிங்கைப் படைகளை வெல்ல இயலாது. நீங்கள் நீலழகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வருவதே உகந்தது. நீங்கள் சொல்வதைப் போலன்றி புலிகளைப் பற்றி நான் கேட்கும் கதைகள் எனக்குள் உணர்த்துவது வேறொன்றை. புலிகள் இக்குடியின் அடிவித்தின் சூலைக் கொண்டிருக்கிறார்கள். இக்குடிகளின் மெய்யம்சம் அவர்கள். உங்கள் படைக் குழுக்கள் நீரில் மீன்களெனக் குடிகளுக்குள் வாழ்கிறீர்கள். புலிகள் அப்படியல்ல. அவர்கள் ஆமைகள் போன்றவர்கள். எப்பொழுது நீருக்குள்ளும் நிலத்திற்குள்ளும் சென்று மீள வேண்டுமோ அதை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். குடிகளை எங்கு நெருங்க வேண்டுமோ அங்கு நெருங்கியும் எங்கு விலக வேண்டுமோ அங்கு விலகியும் நடக்கிறார்கள். இது நிகர் வாழ்க்கை சார்ந்த அனுபவம் அண்ணா. குடிகள் மெல்ல மெல்ல வெந்நீரில் பனங்கட்டி கரைவது போல் கரைக்கப்படுவதைப் பார்க்கிறேன். புலிகளின் பாணர்கள் உங்கள் படைத்தலைவர்களை விடத் திறமையானவர்களாக இருக்கிறார்கள். போரில் வில்லளவுக்கே சொல்லும் பொருள் கொண்டது. சினமின்றிச் சிந்திக்க வேண்டிய காலமிது. சிங்கைப் படையினர் நம்மை அவர்களின் கொடுநகத்திற்குள் அழுத்தி முன்னேறுகிறார்கள். எல்லைகள் சுருக்குகின்றன. நிலம் எங்களுடையது அண்ணா. குடிகள் நம் மக்கள். நீங்கள் எல்லோரும் அடைய நினைக்கும் அரசர் வேடம் ஒரு கழுக்கோல். அது உங்களின் வழி உள்நுழைந்து உங்கள் உயிரைக் குடித்தே வெளியேறும். அதை விரும்பி ஏற்பது அகங்காரத்தின் சிறுமழலைத் தனத்தில் உண்டாகக் கூடியதா. இயலாது அண்ணா. அரசுசூழ்தல் ஒரு சதுரங்கம்.
ஆடப்படும் காய்களினால் அல்ல அதை ஆட்டும் கரங்களினாலேயே வெற்றி முடிவாகிறது. போரில் வெற்றியை அன்றி வேறெதற்காவது பொருளுண்டா. யார் எதிரியை வெல்கிறாரோ அவரே தன் குடிகளை வெல்பவர்.

நீலழகன் ஆழியின் புத்திரன். பரதவக் குடி அவனுடன் நிற்கும். வேளாண் குடிகள் அவர்களுடன் இணைந்து கொள்வதே நம் குடிப்பலத்தை அதிகரிக்கும். போரென்பது மெய்யான அதிகாரங்கள் மோதிப் புரளும் கொல்களம். களத்தில் நடக்கும் போரினால் அல்ல வெற்றிகள் முடிவாவது. ஒரு போர் யாரின் கரங்களில் கையளிக்கப்படுகிறதோ அப்பொழுதே போரின் வெற்றியும் கணிக்கப்படுகிறது எனத் தந்தை சொல்லியிருக்கிறார். முதுகுடிகள் இணங்கி வரும் இக் காலத்தில் நீலழகனே தலைமையேற்று இப்போரை நிகழ்த்தட்டும். போர் அவனை விழுங்கிக் கொண்டால் எஞ்சியோர் தொடர்ந்து போரிடட்டும். நம் குடிக்குள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பது முனைகொண்ட விளைவிதைகளை அழிப்பது போலாகிவிடும். இப்பொழுது நாம் எண்ணம் கொள்ள வேண்டியது குடியொருமை அன்றிப் பிறிதொன்றில்லை” என ஆற்றின் வழுக்கும் மேற்பரப்பில் விழும் அனைத்தையும் ஆறு கடலுக்கு இழுத்துச் செல்வதைப் போல அவனைக் குடிப்படைகள் நோக்கிச் செல்லும் கழிமுகத்தைச் சுட்டி அழைத்துச் சென்றாள் நிலவை.

சீலனின் செவிகளில் அவளின் சொற்கள் காய்ந்த புளியங்கோதுகளை இறைப்பதைப் போல இருந்தன. “நீ எப்பொழுது நீலழகனின் கொடிச்சீலையானாய் நிலவை. அவன் தானொருவன் தான் ஆண்மகன் என நினைத்துக் கொண்டிருக்கிறான். எமது படையை நெருங்கும் பொழுது அறிவான். எங்கள் குடியின் வாள்களின் வீச்சை. வலைமடி இழுபவனுக்கும் ஏர்முனை குற்றியிழுப்பவனுக்கும் உரவேறுபாடு உண்டல்லவா. நாங்கள் வழிவழியாய் அரசு சூழ்ந்த குடி. அவன் யார் எங்களை ஆள. நீ அமைதியாக இரு நிலவை. மீன் காய்ந்தால் கருவாடு ஆகும். அந்த நாள் விரைவில் வரும்” என சொற்களை அலைத்து அலைத்து கைகளை உயர்த்தியும் விரித்தும் கறுவினான். அவனுக்குள் அவளின் மதிச்சொற்கள் விழமுடியாதபடி அவனை அவனே அடைத்துக் கொண்டிருந்தான்.

நிலவை உளத்தில் மழைமப்பைப் போல் மென்சோக விசும்பொன்று விரிந்து பரக்கத் தொடங்கியது. புலிகள் தம்முடன் இணையாத ஒவ்வொரு குழுவாய் தாக்கியழிக்கும் கதைகள் பாணர்களால் ரகசியமாகப் பாடப்பட்டன. நீலழகனின் படைகள் இருளில் புலிவிழிகளெனக் காத்திருப்பவை. அவனது ஒற்றர்கள் எங்குமிருக்கிறார்கள் என்ற தோற்றமயக்கு குடிகளிடம் எழுந்து அவர்களின் குரலில் ஒரு ரகசிய தாளத்தை உண்டாக்கியிருந்தது. புலிகளின் ஒற்றர்கள் நிலத்தில் மண்புழுவெனவும் வாணிபத் தலங்களில் பணிபுரியும் சிறுவர்களின் விழியெனவும் மாடுகளை ஓட்டிவரும் வண்டியோட்டிகளெனவும் நீலழகனை வசைபாடும் பாடல்களைப் பாடும் பாணர்களில் ஒருவனெனவும் யானைகளில் விளையாட்டுக் காட்டும் பாகர்களின் குறுஞ்சிரிப்பிலெனவும் தோன்றத் தொடங்கினார்கள்.

அச்சத்தின் சொற்கள் காலப்
போக்கில் தன்னை வெல்ல இன்னொரு சொல்லை உருவாக்கிக் கொள்ளும். வசைபாடும் பாணர்களுக்கு நிகராக நீலழகனை வாழ்த்தும் குழுவொன்றும் உருவாகியது. “புலிகள் படை சிங்கை நகருக்குச் சிம்ம சொப்பனம்” என்றான் ஒரு பாணன். இன்னொருவன் “நீலழகன் முன் தோன்றினால் இருட்டு பகலாகும். அவன் புலிநடையினில் சிம்மங்கள் வெருளும். முதுதாதைகளின் சொல்லாசியை அங்கத்தில் கவசமென அணிந்த பிறப்பு அவனது” என்றான்.

சத்திரத் திண்ணைகளில் சொல்லாடல்கள் எழுந்தன. புலிகள் சொல்வது நியாயம் தான் என்றது ஒரு குழு. கொல்லப்பட்ட நம் குடியினரின் ஆன்மாக்கள் நம்மையெல்லாம் மன்னிக்குமா என்றது இன்னொரு பிரிவு. கொல்லப்பட்டவர்கள் சொற்கேளாதவர்கள் என்றனர் கிழவர்கள். நீலழகன் மட்டுமென்ன குடி மூத்தோரை மதிப்பவனா. நீங்கள் யாராவது அவனை நேரிலாவது பார்த்திருக்கிறீர்களா என்றது பிறிதொரு வாலிபர் குழு. சொற்களை உருட்டி உருட்டித் தம் அச்சத்தையும் அகத்தையும் மேவினர் குடிகள். முதலில் அஞ்சுவது பின்னர் வணங்கத்தான் என்ற சுழல் ஒருபோதும் அணையாது என்றனர் முதுபெண்டிர்.

ஒவ்வொரு நாளும் நகர நகர புலிகள் தமிழ்க்குடியின் ஒரேபடையென ஆகிக் கொண்டிருந்தனர். நீலழகனின் பெயர் அச்சமின்றி ஒலிக்கும் திண்ணைகள் கூடின. அவன் கரங்கள் காப்பதையன்றி எதற்குமல்ல என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு குடிகள் தம் அச்சக்கோதை உடைத்தனர். சிங்கை நகரிடமிருந்து எல்லைகளை விடுவிக்கும் போரை நீலழகன் வழி நடத்தினான். போர்களில் வெற்றிகள் எழுந்தன. போர் வெற்றிப் பாடல்களைப் பாடும் பாணர்கள் மக்களை மகிழ்விக்கத் தொடங்கினர். “புலிகள் தமிழில் அறியாதது அஞ்சல் என்ற சொல்லொன்றே. அவர்கள் ஆளும் காலத்தில் அச்சமென்ற சொல்லைக் கூடக் குழந்தைகள் அறியப்போவதில்லை” என முதுபாணனொருவன் முழுக்குவளைக் கள்ளை வாயில் ஊற்றிவிட்டு உரத்த குரலில் மதுச்சாலையின் இருக்கையின் மீது ஏறி நின்று வெண்நரைக் குழல்கள் உகிர்களென விறைக்கப் பாடத் தொடங்கினான்.

*

நிலவை ஒருமுழுப் பொழுதும் உணவும் நீருமின்றிக் குடிலுக்குள் அடைந்து கிடந்தாள். குடிலுக்குள் வெளிச்சம் வரும் வழிகளே இல்லை என்பதை நோக்கினாள். கருப்பையின் இருட்டு என எண்ணிக் கொண்டு கைகளை தொடையிடுக்கில் வைத்துக் கொண்டு உட்பக்கம் சுருங்கிப் படுத்திருந்தாள். செக்கர்ப் பொழுதில் வாயிலைத் திறந்து கொண்டு மாதுமியாள் தேக்கிலையில் ஊன்சோறு கொணர்ந்தாள். உணவிலையை நிலவையின் முன்னே வைத்துவிட்டு அகலை ஏற்றினாள். மெல்லிய மஞ்சளொளி அகலில் துடிக்கும் கண்ணீரென அசைந்தது. எழுந்து உடலைச் சுற்றிக் கொண்டு மூங்கில் கழியாலான தரையில் அமர்ந்தாள் நிலவை.

“யாருடைய வேள்வியின் படையலிது. என் தமையனினதா. அல்லது உன் தந்தையினுடையதா மாதுமி” என குரல் வற்றிக் கிடந்த தொண்டையிலிருந்து சீறல் காற்றென மூசியெழுந்தாள்.

“நாம் யாருடைய படையல் நிலவை. போர் ஆடவர்களின் களிவிளையாட்டு என ஆகிக் காலங்கள் உருளத் தொடங்கி எத்தனை காதம் வந்துவிட்டோம். நீலழகன் அசையும் அப்பெருந்தேரின் ஒரு சில்லு மாத்திரமே. அதில் நேற்று நம் உதிரத்திலிருந்து சில சிரசுகளை பலி கொடுத்திருக்கிறோம். நாம் அறியமுடியாத வகையில் இங்கே எல்லாம் நிகழ்கின்றது. நானோ நீயோ என்ன செய்ய முடியும். இப்பொழுது நீ உன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் எனக்குத் தோன்றுவது. சோற்றைக் கொஞ்சமாவது உண்” என்றாள் மாதுமியாள்.

வஞ்சினமுள்ள சிரிப்பொன்று உதட்டில் துடிக்க “நீங்கள் கொன்றவருடன் குடிப்படை நடத்தலாம் மாதுமி. உம் குடி போர்களில் வெல்லலாம். ஆனால் எல்லாச் சக்கரங்களும் ஒரு நாள் தடம் விலகும். நீலழகனின் சக்கரம் என்றோ புரளத் தொடங்கிவிட்டதை நீங்கள் யாரும் பார்க்கவில்லையா. இல்லை. பார்க்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவனை உங்கள் காவல்தெய்வமென ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறீர்கள். இனி உங்கள் விழிகளில் எந்த லட்சணக் குறையும் தென்படாது. எல்லாமே இனி தெய்வாம்ச லீலைகள் தான். சொந்தக் குடிமகனைக் கொல்பவனும் ஒரு தலைவனா மாதுமி. சொல். உனக்கு உதிரம் உறைந்து போனதா. நா எழவில்லையா. அவன் ஒருபோதும் மன்னிப்புக்குத் தகுதியானவனில்லை மாதுமி. என்றாவது நீங்கள் உணர்வீர்கள்” என கடகடவென சொற்களை கண்களில் தழன்ற நீருடன் கொட்டினாள் நிலவை.

“உன்னுள் எழுவதை நானும் உணர்கிறேன் நிலவை. என் சொற்களை என்னிடமே நீ சொல்லிக் கொள்வது போல் எண்ணமெழுகிறது. ஆனால் நான் உன்னளவு சொற்கள் கொண்டவளோ அரசியல் அறிந்தவளோ அல்ல. எளிய வேளாண் குடிப் பெண். ஆடுகளை மேய்க்கவும் நாற்றை ஊன்றவுமே அறிந்திருக்கிறேன். நான் இப்பொழுது உணர்வது ஒன்று தான். ஆடவர்களின் இந்தப் பலிகளத்தில் நானொரு ஆடாய்த் தலை வைக்க மாட்டேன். இந்தக் குருதிச் சேற்றில் என்னை ஊன்றிக் கொள்ள மாட்டேன்”. என சொல்லி மூச்சை சீராய் வெளியே போக விட்டு ” இப்பொழுது நீ உணவருந்து நிலவை. இது வனம். அடுத்த வேளை உணவிருக்குமா தெரியாது. உன் மனையின் கடைசி நாற்று நீ தான். உன்னிலிருந்து தான் உன் அண்ணன் மீண்டும் மண் தொட முடியும்” என்றாள்.

நிலவை ஊன்சோற்றை உருட்டி ஒவ்வொரு கைபிடியாய் இறுக்கிக் கொண்டு வழியும் கண்ணீரைப் புறங்கையால் துடைத்தபடி “நாங்கள் இப்பொழுது சொந்தக் குடியின் கைதிகள். இல்லையா மாதுமி” என விசும்பினாள்.

“தெரியவில்லை நிலவை. வெளியில் நம்மோடு வந்தவர்களுடன் நீலழகன் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் தமது அச்சங்களையும் கோபங்களையும் கொட்டித் தீர்த்தார்கள். மாலையில் நடந்த ஒரு பயிற்சியில் வீரனொருவன் வேழத்தால் தள்ளி விழுத்தப்பட்டிருக்கிறான். நமது குடி மருந்தறிந்தவர்களே அவனுக்குச் சென்று உதவினார்கள். அவனும் அவர்களும் இப்பொழுது கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். காயங்கள் ஆறிவிடும் நிலவை. சுமந்து அலைய யாரும் விரும்புவதில்லை. நீலழகனுடன் நானும் சில வார்த்தைகள் பேசினேன். அவர் தான் இந்த உணவைச் சமைத்தவர்…” என மாதுமியாள் சொன்னதும் அடிவயிற்றிலிருந்து எழுந்த ஓங்காரத்துடன் உணவைத் துப்பினாள். தேக்கிலையை மாதுமியாளின் முகத்தில் வீசியெறிந்தாள். “வெளியே போய் விடு பன்றியே. நம் குடிகளைக் கொல்பவனின் சோற்றை உண்பதற்கு நான் நஞ்சை உண்டு மாய்வேன். போ. போய் விடு” என விழிகள் கண்ணீரால் எரிய கரங்களை மூங்கில் கழிகளில் கைகள் கன்றுமளவுக்கு அடித்தாள். அவளின் விசை கொண்ட கரங்களினால் மூங்கில் கழிகள் விதிர்த்து நடுங்கின. அகல் ஒரு கணம் சுழித்து நீண்டது. வேட்டைக்காரர்களின் நடுவே வெறியேறி உறுமும் கர்ப்பம் சுமக்கும் தாய்ப்புலியென உடலெழுந்தாள். மாதுமியாளின் சிகையைப் பற்றியிழுத்து நகங்களால் கீறினாள். மாதுமி அலறிக் கொண்டு வாயிலைத் திறந்து இருட்டினில் தடுக்கித் தடுமாறி ஓடத் தொடங்கினாள். ” அணங்கு. அணங்கு. அவளுக்கு அணங்கு எழுகிறது” எனக் கூச்சலிட்டபடி வேளாண் குடிப் பெண்களிருந்த குடில் வாசலுக்கு ஓடினாள்.

தன் குடிலிருந்து வெளியே வந்த நிலவை இருட்டில் அங்கங்கு குமிந்து தீயின் முன் சுற்றிருந்து அரட்டையிலிருக்கும் வேளாண் குடிக் கைதிகளைப் பார்த்து ஒரு கணம் நின்றாள். சீராக ஏழு சாய்வு வரிசையும் ஏழு நெடுக்கு வரிசையிலும் அமர்ந்திருக்கும் புலிப்படை வீரர்களைச் சுற்றி கரங்கள் நடுங்காமல் தீப்பந்தகளைத் தூக்கி வைத்தபடியிருக்கும் பன்னிரு வீரர்களையும் நோக்கினாள். தீப்பந்த ஒளியில் அவர்களின் முன் பழைய பழுப்பேறிய நீண்ட செவ்வகத் துணியொன்றில் நில
வரைபடமொன்றை நான்கு வீரர்கள் பிடித்தபடியிருந்தனர். உயர்ந்து சடைகளை விரித்து யோகத்தில் முதிர்ந்த பருத்த வாகையொன்று தலைமுழுக்கப் பூத்திருந்தது. அதன் கறுப்பும் மஞ்சளுமான மலர்கள் நிலத்தில் வீழ்ந்து கொண்டிருந்தன. தன் குழலில் வீழ்ந்த மலரொன்றை எடுத்துக் கைகளில் பிடித்து தீப்பந்த ஒளியில் உருட்டி ‘சிறுத்தையின் தோல் இந்த மலர். புலிகள் போர்க்களத்தில் கொள்ள வேண்டியது இப்பூவின் பெயரையே..” எனச் சொல்லி மலரை முகர்ந்து சிரித்துக்கொண்டு மலரைக் குழலில் வைத்து இளங் குருளையென நின்ற நீலழகனைப் பார்த்தாள். நோக்கிய கணமே அகத்தால் அவனை அவன் தானென அறிந்தாள். நீலன் என்ற கிளிக்குரலொன்று அவளுக்குள் எழுந்து நூர்ந்தது.

அவளுள் எழுந்த புலி மெல்ல நகர்ந்து குகைக்குள் திரும்பியது. வேளாண் குடி மகளிர் இருந்த முற்றத்திற்குச் சென்றாள். அழுது கொண்டே நகக்கீறல்களால் உண்டான சிவந்த கோடுகளைத் தடவிக்கொண்டிருந்த மாதுமியாளின் மடியில் போய் விழுந்து கொண்டு விசும்பத் தொடங்கினாள். மாதுமி அவளின் கரங்களை எடுத்து நீவியபடி “நிலவை நீ எம் குடியின் உயிர் நா. உன் சொற்கள் நம் உக்கிரையின் நாவிலிருந்து எழுபவை. நீ எம் குடியைக் காத்தருள்வாய். நீ என் முன் எழுந்த வேகத்தின் நொடிப்பொழுதில் என் அகம் அதைத் தான் வந்தடைந்தது. அழாதே தங்கையே. அழாதே. நாங்கள் உன் உதிரம். நீ எங்கள் சிவப்பு” என்றாள் கீறல்வலி எங்கு மறைந்தது என்பதை மறந்த மாதுமியாள்.

TAGS
Share This