25: சித்தர் உரைத்தது

25: சித்தர் உரைத்தது

மின்நேர் திரிசூலம் ஏந்தி ஏந்தி
விடை மேல் வந்துதித்த விண் கதிரா அழல் குழலா
தாளமிடும் துணங்கைகள் அணங்குகளாடி
கூகைகள் பருந்துகள் ஆந்தைகளாடி
கணங்களும் பூதங்களும் திசைகளுமாடி
ஆடலும் பாடலும் ஆடியாடி
ஆடிய பொற்கழல் ஏறியாடி
வீசிய வார்சடை விம்மியாடி
மிடற்றினில் நச்சமுது கூடியாடி
குருதியில் கூற்றன் கூத்தையாடி
ஆடலில் ஆடலும் ஆடியாடி
ஆடிய அரவுகள் மேனி சூடி
அங்கவன் ஆடல் நானுமாகி
ஆகினன் அவனே கால காலன்
அவன் கோலமே எந்தையும் ஆன வீரன்.

பேய்மகள் காடவெற்பி

“ஆயிரமாயிரம் கைகளினால் நுட்பமாக வாளிக்கப்பட்டு குருதியும் வியர்வையும் சிந்தி செல்வமெலாம் அழித்து ஆக்கும் எந்தப் பேராலயமும் கூட ஆக்கியவன் அழிந்த பின்தான் குடிகளுடையதாகும். அதுவே அரசுகளுக்கும் நிகழுவது நீலா. மாந்தர்கள் தம்மைக் குடியென்று சொல்லிக் கொண்டாலும் ஒவ்வொரு ஆணவத் துமியினதும் ஆழிக்கொந்தளிப்பே ஓவ்வொரு உயிரும். அவர்கள் ஆணவங்களின் பெருமலையின் மேல் ஒருஅடி மேலும் வைத்துத் குடிகளைத் திரட்டுபவன் அவர்கள் ஆண்மையின் பெருக்குரு. அவன் குடிகளை நிலை நின்று காப்பதால் பேரன்னையின் நிகருரு. அவனை அவர்கள் உள்ளூர வெறுக்கவே செய்வார்கள். அதனாலேயே மிகையான புகழையும் அளிப்பார்கள். இந்த இரண்டும் தீண்டாத தூரத்தில் உன்னை நீ வைத்திரு” என கருவரிகள் கொண்ட புலித்தோலாசனத்தில் அமர்ந்தபடி ஆடற் சித்தர் நீலழகனிடம் சொன்னார்.

மெல்லிய புலரொளி குடிலில் விசிறி நிழலென ஒளி கொண்டிருந்தது. பனியின் புகையுடல் குடில்களை அளைந்து கொண்டிருந்தது. விரியன் துதிக்கையை ஆட்டி உடற்பூச்சிகளை விரட்டிக் கொண்டு உறக்கத்தில் கனவு கொண்டிருப்பது போல் அமைந்திருந்தான். நீலழகன் விரிசடையும் நீறுடலும் குறுவாள் விழியும் கொண்ட ஆடற் சித்தரை நோக்கி “நீங்கள் சொல்லும் சொற்களின் சிறுதுளியை நானும் உணர்ந்திருக்கிறேன் தாத்தா. என் குடிகளின் விழிகளில் எழும் வியப்பின் விரிவுகளின் பின் கசப்பின் தீராத ஆழியொன்று அலையடிப்பதை. ஒரு கடல் மைந்தன் அறியாத ஆழிகளுண்டா” எனச் சொல்லி கசந்து உதிரும் புன்னகை
யொன்றைச் சூடியிருந்தான். அவன் விழிகளில் மேலும் மேலும் கசப்பு மண்டி அவற்றிலிருந்த பேரொளி மங்குவதைச் சித்தர் நோக்கியபடி
யிருந்தார். பின் மெல்லச் சொல்லெடுத்து “இவை நாம் தேர்ந்து கொண்ட வேடங்கள் இல்லை நீலா. நாம் நமது ஈசனின் ஆடலில் ஒரு தாளம். அவன் அலகிலா ஆட்டம் அழிவின் பெருவியப்பில் எழுவது. அவன் நம் கரங்களாகவும் காரணங்களாகவும் மண்ணில் இறங்குகிறான். அவனை அவனே ஆடி அழல் கொண்டு அழிவிலா அழிவை ஆடித் தீர்கிறான். அதை உனதென்று எண்ணுவதும் அகங்காரமே. உன்னில் துடிக்கும் நான் தன்னைப் பொருள் கொள்ள இக்கசப்பை அருந்துகிறது. நாம் கசந்து கொள்ள இங்கு வேறு பொருள்கள் உண்டு நீலா” எனச் சொன்னார். அவர் குரல் அவரிலிருந்து தொடங்கி அவருக்கு அப்பால் சென்று கொண்டிருந்தது. “நான் என ஒன்றை நீ அறிந்திருப்பது உன் விழைவால். உன் உறுதியான பற்றினால். உன் இச்சைகளின் இணைவொலியால். அவை உனதல்ல நீலா. ஒவ்வொன்றும் இப் பெருக்கின் இழுவிசைகள். நீ அதில் நின்றிருக்கும் ஒரு பூச்சி” என்று சொல்லிகொண்டிருந்தவரை நோக்காமல் “நான் அறியேன் தாத்தா. நான் என் விழைவெனக் கொள்வது எதை. என் அகமறிவதையா. சித்தம் உரைப்பதையா. அல்லது எதிலும் உயிராய் துடிக்குமொன்றே என்னிலும் துடிகொள்வதையா. வாழ்வு விழைவின்றி அமைய முடியுமா. உங்களுக்கு ஈசனா அல்லது உங்களின் ஆடலா விழைவு. ஈசன் ஒரு காரணம் மட்டுமே என எண்ணுகிறேன் தாத்தா. ஆடலே உங்கள் விழைவு. அதில் மெய்யுதிர்ந்து உச்சம் நோக்கியெழ எழ உங்கள் உடல் அழிந்து அக்கணங்கள் மட்டுமே என நீங்கள் எஞ்சுவதைப் பார்த்திருக்கிறேன். அந்த ஆடலில் எழுவது எது. உங்கள் அகங்காரமா” என சித்தரை நோக்கி மெல்லிய குரலில் கூறினான் நீலழகன்.

ஆடற் சித்தர் புன்னகைத்தபடி “ஓம் நீலா. உறங்கும் யாழின் தந்தியில் உறையும் மெளனமொன்றையே நான் அணிந்திருக்கிறேன். மீட்டும் போது அவை தந்திகள் அல்ல ஒலி. ஆடும் போது நான் ஒரு அசை. கொல்லும் போது நீ யார் நீலா. அக்கேள்வி துளைக்கும் வண்டென உன்னில் வாழ்வது. நீ அதைக் கொல்ல முடியாது” என்று நீலனின் நோக்கறுந்து நிலைத்திருந்த விழிகளை நோக்கினார்.

நீலன் மண்புழுவின் வால்மிதிபட்டது போல மெல்ல உணர்வெழுந்தான். “தாத்தா நான் கொலை புரிபவன் தான். உங்கள் ஈசன். காலகாலன். திரிபுரங்களை எரித்தவன். சுடுகாட்டில் ஆடி எரியுடல்களின் சாம்பலைப் பூசி தீயிலை புகைத்து விழி சிவக்க பூத பிரேத கணங்களுடன் கூடி ஆடுவது எதை. கொலையைத் தானே. கொலையை ஆடுவதும் ஒரு தெய்வமா. கொலையை மண்ணில் அனுமதிப்பதும் உங்கள் தெய்வங்கள் தான். அவை ஆக்கவும் காக்கவும் அழிக்கவுமென விழைவு கொண்டவை. அந்த மூன்றும் என்னில் விழைவென எழுவது கூடாதா. சொல்லுக” என சினத்துடன் அவர் விழிகளை உற்றான். சித்தர் வாய் விரிந்து புன்னகை அவிழ “ஆக நீ ஆக்கும் பிரமனும் காக்கும் விஷ்ணுவும் அழிக்கும் ஈசனும் என உன்னை எண்ணிக் கொள்கிறாய். அல்லவா. நன்று. மிக நன்று. மூன்று தெய்வங்களின் விழைவில் அவிழும் மலரென உன்னை உணர்கிறாய். ஆனால் நீ கசப்புக் கொண்டிருக்கிறாய் நீலா. அது உன் விழிமடலென எப்போதும் உன்னில் இமைக்கிறது. தெய்வங்களுக்கு கசப்போ வெறுப்போ ஏது. அவை தம் தொழில்களென அவற்றை ஆற்றுகின்றன. அவற்றின் தொழில்கள் அவற்றுக்கு அறங்கள். உன்னில் கசப்பது உன் அறம். உனக்குள் நீயே ஆக்கிக் கொண்ட தர்மங்கள்” எனச் சொல்லெழுந்தார் ஆடற் சித்தர்.

“உயிர்களின் வாழ்வை ஆக்குவது அழிவின் மெய் விழைவென்றால் அழிவின் தூதுகரமென எஞ்சுவது தான் நானா. அல்ல. நாகதேவியின் மெய்ச்சிலையின் முன் தேம்வவாவி குடிப்பெண்களின் அங்கங்களை அறுத்துக் கொலை வெறியாடியதும் ஈசனின் ஆடல் தானே. அழிவின் ஆடல். அலகிலா ஆடல்” என உறுமலின் நாணெனக் குரல் விடுபட உரைத்தான் நீலழகன்.

“அழிவின் பாவங்கள் எண்ணற்றவை நீலா. திரிபுரம் எரிப்பதும் கொடியவர் வதங்களும் எதனால் நிகழ்கின்றன என எண்ணினாயா. ஈசன் அழிவின் கொடுவெறிக்கு எதிர் நின்று ஆடுபவன். மானுடர்க்கு சுயவிசை ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது நீலா. அதைத் தம் இச்சை விசையின் விழைவுப் பெருக்கென ஆக்குபவர்கள் உலகை மேலும் விசையழிக்கிறார்கள். ஈசனின் சடையில் எழும் சீறலை நான் அகமறிந்திருக்கிறேன். மண்ணில் நிலை கொண்டு ஊழ்கம் கொள்கையில் நான் காண்பது அவன் நாகச் சடைகளையே. அவற்றின் விடநாவுகள் எண்திசையிலும் அலைபவை. அவை காலாதீதத்துக்கும் எரிக்கும் நஞ்சை உமிழ்பவை. அவன் உண்டு அவன் தொண்டையில் ஏற்றிருக்கும் நஞ்சும் அதுவே. அழிவின் நஞ்சு. அழிப்பவனின் தொண்டை நீலத்தொண்டையால் ஆனது நீலா. அன்னை அவன் சங்கு பற்றி அதை அடக்குபவள். ஒரு விழைவு நஞ்செனவும் இன்னொரு விழைவு அதிலிருந்து உன்னைக் காப்பதெனவும் ஆகும் ஆடலது. நீ உன் நஞ்சை அடக்கும் கரங்களை அடைவதே உன் நஞ்சை வெல்வதன் ஒரே வழி” என தண் மிளிரும் குரலில் ஓதியமைந்தார் சித்தர். இருவருக்கிடையிலும் நஞ்சாலான நதியொன்று ஓடிக்
கொண்டிருக்கிறதென நீலன் எண்ணினான். பின் அது சுரக்கும் சுனை தன் கால்விரல்களிலிருந்து பெருகுவதை நோக்கினான். மெய்ப்புல்கள் எழ நீலத்திலிருந்து சிவப்பு விரிவதைப் போல் சினம் கொண்டான்.

“உங்கள் ஆடலிறையின் ஆடல்கள் இறைசித்தமெனவே ஆகுக தாத்தா. நான் எளியவன். என் யாக்கையின் நிலையாமையை முற்றறிந்தவன். கொல்போர் வெளியேகும் ஒவ்வொரு வீரனும் உணரும் மெய்ம்மை அது. என் தொண்டையின் நிறம் நீலமெனவே திரள்க. என் நஞ்சை நான் அகலப்போவதில்லை. கசப்பை ஊற்றி ஊற்றி அதனை மேலும் எரிவென ஆக்கிக் கொள்கிறேன். உங்கள் தெய்வங்களின் ஆடல் அதுவென்றே ஆகட்டும்” என பற்ற முடியாத நீர்ப்பரப்பில் காலுதைத்து மிதக்க உன்னுபவன் போலானான் நீலன்.

ஆடற் சித்தரின் விழிகளில் கனிவின் இழைகள் பரவின. “நீலா, சினம் தவிர். உன் சினம் குடிகளை அழிப்பவர்க்கானது. உன்னை நீயே அழித்துக் கொள்ள அவை எழக்கூடாது. அச்சினம் எளிய ஆணவம் மட்டுமே. தெய்வங்களினுடன் பொருதும் மானுட விழைவு மட்டுமே. நீ கருவில் நுழையும் பொழுதே உன் விசைகளும் உன்னில் எழுந்து விட்டவை. நீயே ஆக்கிக் கொள்ளும் திரைகளை அவை தம் மென்கரங்களினால் விலத்தியபடி உன்னை அகம் நோக்கியிருப்பவை” என மேற் சொல்ல சொல்லெழுந்தவர் அவன் முகத்தை ஒருகணம் நோக்கினார். நீலன் நோய்ப்பட்ட புலியென மூச்சு அணைய அமர்ந்திருந்தான். சித்தர் அவன் விழிமீளும் வரை காத்திருந்தார். அந்த அமைதி நீலனைக் கலைக்க அவன் திரும்பிச் சித்தரை நோக்கினான். அவர் முகத்தில் குறும்பு என விரியும் கன்னங்களை நோக்கிய பின் அவை தந்தையின் களிமுகத்தின் ஒளிகொண்டிருப்பதை நோக்கி மெல்ல அகம் அமைதியடைவதை நோக்கி வியந்தான். எத்தனை உச்சங்களை சில கணங்களில் ஏறியேறி அடைந்தவன் அங்கிருந்த வெறும் பரப்பொன்றில் நிலையழிந்து வீழ்ந்தவன் போல் அவரது விழிநோக்கி நிலைகூடினான்.

ஆடற் சித்தர் தன் வலக்கரத்தில் ஒரு வெண்ணல்லியை எடுத்து அவனிடம் நீட்டினார். அவன் குழம்பிய விழிகளுடன் அவரை நோக்கியபடி அம்மலரை வாங்கினான். சித்தர் முகம் மேலும் மலர்களென விரிந்தன. “நீலா உன்னில் எழும் விசைகளை நான் அறிவேன். அவை வேறு எவரையும் விட நொதிகூடியவை. அமிலமும் தேனும் பாலும் விடமும் கலந்துகொண்ட கலயம் உன் அகம். அதில் ஒரு வெண்ணல்லியின் நறுமணத்திற்கும் இடமுண்டு என்பதைச் சினமின்றி நோக்கு. அடக்கப்படும் காமமளவு ஆற்றலுள்ளது பிறிதொன்றில்லை நீலா. நான் அதை முற்றறிந்தவன். என் சொல்லை நீ பரிசீலிக்க வேண்டும்” என அமைதியானார். “உங்கள் முன்விபரணங்கள் மிகையாக இருக்கின்றன தாத்தா. சொல்ல விழைவதைச் சொல்லுங்கள்” என்றான் நீலழகன்.

“நான் சொல்ல வருவதை உன் அகம் எப்பொழுதோ அறிந்து விட்டது நீலா. அகத்தின் பாவனைகள் தான் எத்தனை இனியவை” என்றார் சித்தர். நீலழகன் உதட்டில் மெல்லிய சினரேகைகள் எழுந்தமைந்தன.
ஆடற் சித்தர் அதுவே தருணம் என உணர்ந்தவரென சொற்களை மீட்டினார் “நீ மணம் புரிய வேண்டும் நீலா. அது இரு வகைகளில் அவசியமானது. ஒன்று, நீ அரசனென முடிசூடி இக் குடிகளை ஆளும் பொழுது உன் அரசியாக ஒரு பெண் அமைவது குடிகளின் நம்பிக்கையை வளர்க்கும். அவள் உன் குடியன்றிப் பிறிதொரு குடியில் அமைவது அக்குடிகளுடனான குருதிக் கலப்பையும் அதன் வழியான ஆதரவையும் உருவாக்கும். அது உன் அரச உரித்தில் அடிப்படையான இருவிசைகளை இணைக்கும். வேளாண் குடியில் மணம் கொள்வது கருவூலத்திற்கும் அரசு சூழ்கைக்கும் உகந்தது” என்ற சித்தர் அவன் முகத்தில் எழும் எண்ணச் சிதறல்களை நோக்கிய பின் “இரண்டாவது உன் நலன் சார்ந்தது நீலா. நீ காமத்தை அறிவதன் வழி அறியும் போர் உன்னைக் கூர் கொள்ளச் செய்யும். உன் வாழ்வு நிலையற்றது என அறிவேன். நிலையற்ற விழைவுகளின் மேல் விழைவு கொள்ளும் பெண்களும் புவியிலுண்டு. அவர்களால் அவ்விசையை எதன்பொருட்டும் மறைத்துக் கொள்ள இயலாது. நாகங்களை மாலையாக அணிந்து கொள்பவர்கள் போல அவர்கள் வீரர்களை அகம் விழைகிறார்கள். அவனைப் புணர்கையில் எழும் சர்ப்ப மூச்சில் மலரும் காமத்தை தீண்டித் தீண்டித் தம் நாகங்களை உயிர் பெறச் செய்கிறார்கள். அவர்களே அரசுக்கும் உகந்தவர்கள். உன்னைத் தேரும் பெண் உன் அகத்திலும் புறத்திலும் நிலையற்று விரியும் இழைகளை இணைக்கக் கூடியவளாக அமைவாள். உன் அகம் காமத்தை முற்றறியும் போது போர் வேறொரு ஆடலென உன்னில் விழைவு கொள்ளும். ஆண்கள் புறத்துடன் போர் புரிபவர்கள். பெண்கள் அகத்துடன் அதையே புரிபவர்கள். இவ்விரு இணைவையும் அறியாமல் நீ அரசனாக இயலாது. போரை முழுதறிய முடியாது. போருக்கு அகமுண்டு நீலா. அது ஒரு பெண். முடிவிலா ஆடலனின் ஆடல் விசை அவள் தான். காமம் மானுட விழைவுகளில் நிகரற்றது. உன் அகம் அதன் நாவுகளை உன்னில் எப்பொழுதும் உணர்ந்திருக்கும். அதற்கெதிராக நீ உருவாக்கிக் கொண்ட கவசங்கள் மெய்யுலகில் பயனற்றவை. நீ வெல்ல வேண்டிய பெரும் போர் பெண் எனும் பேருடல். பெண்ணுடல் என்பது சதைக்குமைவல்ல நீலா. முண்மா முட்களாலான சதைக் கூடாரம் அது. அதைக் கனிய வைத்து நெருங்குகையில் உன்னில் ஒரு நாண் அறுபட்டு பின் மேலும் விசையுடன் பொருந்திக் கொள்ளும். அந்த வில்லே எப்போரிலும் உன் அம்புகளில் மின்னும் கூரெனவும் விடுபடும் வாலெனவும் ஆகுவது. அம்பின் முனையை அறிவது எவ்வளவு அடிப்படையானதோ அதன் அடிகளை அறிவதும் அதேயளவுக்கு நிகர்மதிப்புள்ளது. மன்மதனின் கையிலிருக்கும் கரும்பு வில்லை நீ ஏந்தினால் தான் சிவனின் பிநாகத்தின் எடையை அறிய முடியும்
இந்தச் சுழல் எளிய கணக்கல்ல. முற்றறிதலால் மட்டுமே போர்கள் வெல்லப்படுகின்றன. உன் அகத்தின் கழிமுகச் சுழிப்பில் பொங்குவது கொல்லுதல் வெறியாட்டென்பதை நீ உணர்ந்திருப்பவன். அதன் சுனையூற்று காமத்தின் விழை விசையென்பதையும் அறிக. உன் நாகத்தைக் கழுத்தில் ஆரமென அணிந்து கொள்ளாமல் உன்னால் சிங்கை நகரை வெல்ல முடியாது. உன் கசப்பையும் நீங்க முடியாது” சித்தரின் உறுதி குலையாத சொற்களைக் கேட்டு அகம் காந்தியவன் போல மூச்செறிந்து கொண்டிருந்தான் நீலழகன்.

சில கணங்களில் அச்சொற்கள் அவனை அவனென அறிந்தவரின் சொற்களென வியந்தான்.
“தாத்தா, நீங்கள் பெண்ணுடல் துறந்தவர். நான் அதைத் தீண்டாத தூரத்தில் வைக்க விழைபவன். ஆனால் எனது நாகத்தை நான் விழிகளால் கண்டுவிட்டேன். அவள் பேயுரு எனச் சுடுகாடுகளில் அலையும் விட நாகமென என்னில் விழியெறிந்த போது அவள் அகத்தின் வெம்மையையே என் உளம் நாடியது. அந்த விந்தையான எண்ணம் அகத்தில் வேர் கொண்டு என் தசைநார்களை இழுத்துக் கொண்டிருக்கிறது. அவளை என் நஞ்சில் முளைத்த காந்தள் என என் கழுத்தில் அக்கணமே சூடிக் கொண்டு விட்டேன். ஆனால் அவளின் அகம் திசைகளற்று வெறுமை கொண்டிருக்கிறது. அவளது வாயில்கள் எந்நேரமும் சாற்றப்பட்டிருக்கிறது. அதோ அக்குடிலே அவளது கர்ப்ப நிலமென அமைந்து கொண்டிருக்கிறாள். எக்கணமும் என் குடில் புகுந்து குறுவாளால் என் சங்கை அரிந்தெறியக் காத்திருப்பவள் என உணர்கிறேன். அதில் நான் அஞ்சுவது அதற்காகவே நானும் காத்திருக்கிறேன் என்ற மெய்யுணர்வு தான். மெய். நான் உடலென்று மண்ணில் வந்த பெண்களில் எவரிலும் அதை அறிந்ததில்லை. அவள் விழிகளை கணநேரமே உற்றிருக்கிறேன். அதன் தொல்லாழங்களில் விசைகொண்டு எழுந்து வந்தது நான் தான். அது நான். என் ஆழத்தில் மலர்ந்த நச்சுமலரின் இதழ்களை அவள் விரல்களில் கண்டேன். அது என்னை அழிக்கும் விசைக்கு ஒரு தூவிபலமே போதும். ஓம். நான் ஒரு தூவியால் கொல்லப்படும் வேழமென்று என்னை எண்ணிக் கொண்டிருக்கிறேன். எனது ஆணவம் தான் எத்தனை மகத்தான எடை கொண்டிருக்கும் சிதழ்க் கொப்பளம். தூவியெடைக்கு அஞ்சுமளவு சிதழ் தாத்தா” என சொற்கள் எழுந்த ஊற்றை அறியாது விரல்கள் குலைந்து ஒன்றையொன்று பின்னிக் கொள்ள அவன் கழுத்து நரம்புகள் விம்மியெழுந்தன.

மெளனத்தில் அணைந்த சுடர் மெல்லெ நாவெடுப்பது போல் ஆடற் சித்தர் சொல்லெடுத்தார் “நல்லது நீலா. நான் அவளை அறிவேன். அவள் இக்குடிலில் வீற்றிருக்கும் நாகங்களின் அரசி. இக்குடி நாகங்களால் உண்டானது. நாகங்களே இக்குடிக்குக் காப்பும். அவள் உன்னை ஏற்பதே நிகழக் கூடியது. எத்திசையும் அறியாமல் மலர்ந்த மலரொன்றை நீயல்ல. நானும் அறியேன். ஆனால் உன் ஆழுள்ளம் அறிந்த மெய்யை அவள் அகமும் உணரும். மனிதர்களின் வஞ்சம் ஒரு ஊழ்ச்சதை நீலா. அதை அவர்கள் அகற்றவே எண்ணுவார்கள். எண்ணும் தோறும் அது உடலென வளரும். அது எதனால் ஆனதோ அதுவே அதைக் கொல்லும் கிருமியும். இந்த இயற்கையின் ஆடலில் நீயொரு சிறுநுண் துள்ளல் மட்டுமே. அவ்வொலியை நீ உன் பிலவிலிருந்து நோக்குவதால் அஞ்சுகிறாய். நீ நோக்க வேண்டியது உன் விசை முற்றும் பொருதி வாள் சுழற்றிக் கொன்று சீறும் குருதியில் எவள் முகம் எழுகிறதோ அவளே உன் குருதியை வென்றவள்” எரியும் அக்காட்சியை அகக்கண்ணால் கண்டவர் தன்நுனியதிர்ந்து பின் தனக்குள் திரும்பிக் கொண்டார்.

நீலழகன் பேச்சற்று நிலவையின் குடிலை நோக்கினாள். அந்த மூடிய இருட் குடிலின் உள்ளிருந்து அவள் அவனை நோக்கியிருப்பதை அறிந்து உடல் விதிர்விதிர்க்க எழுந்து தன் குடிலுக்குள் சென்றான்.

*

அன்றைய இரவின் இரண்டாவது நாழிகையில் வேறுகாடாரின் ஒற்றுப் புறா வனக்குடிலுக்குள் வந்து எண்திசைத் தோளனில் அமர்ந்து கொண்டது. ஓலைச் சுருளைக் கண்டவன் அதை எடுத்துக் கொண்டு நீலழகனின் குடில் வாயிலைத் தட்டினான். அன்று பூத்த இளம் தளிரின் துடிப்பு முகத்தில் விரிய புன்னகைத்தபடி கதவைத் திறந்த நீலழகனை என்ன நேர்ந்தது என அறியாத விழிகளுடன் நோக்கினான் எண்திசைத் தோளன். “நீலரே ஒற்றுப் புறா வந்திருக்கிறது. தேம்பவாவி இடாவத்தவில் நிலை கொண்டிருக்கிறான் என அது உரைக்கிறது. அது நம் வன எல்லையின் விளிம்பில் உள்ள சிங்கை நகர்களில் ஒன்று. தாக்குதல் திட்டமெதுவுமின்றி அவன் அங்கு நிலைகொள்ள மாட்டான் என அஞ்சுகிறேன்” என்றான் எண்திசைத் தோளன்.

நீலழகனின் விழிகளில் மெல்லிய ஒளியொன்று கூடியிருப்பதை நோக்கியவன். அச்செய்தி அவனை உலுக்கவில்லை என்பதை அகமறிந்து திகைத்தான். நீலன் குடிலின் ஒன்றுகூடல் அவையைத் திரட்டும் படி ஆணையிட்ட பின் அங்கு மலர்ந்திருந்த கொண்டல் மலர்களை நோக்கினான். தூங்கும் எழிற் கூந்தலென அது அவிழ்ந்திருக்கிறது என எண்ணினான் நீலன்.

அவையில் போர் விபரிப்பென சொற்களில் எழுந்த போது நீலன் மெல்ல மெல்ல தேம்பவாவியின் முகத்தை நினைவில் அமர்த்தினான். மூன்று முறை தேம்பவாவி தாக்குதல்களிலிருந்து தப்பியிருந்தான். அதன் பின்னர் மேலும் வெறியுடன் வன விளிம்பிலிருந்த கிராமங்களைத் தாக்கியழித்து வெறியாட்டாடினான். ஆலயங்களைப் பெயர்த்தான். சிறுவர்களின் தலைகளை அறுத்து கூர் வேல்களில் காட்சிப் பொருள்களென வைத்துச் சென்றான். குடிப் பெண்களை ஆநிரைகளைக் கவர்வது போல் கைகளில் கயிறுகளால் பிடிகாப்பிட்டு அடித்து இழுத்துச் சென்றான். அந்த நினைவுகள் கூர்ந்து கூர்ந்து தேம்பவாவியின் வெறிமுகம் நீலனுள் எரியும் அமிலப் பாறையெனத் திரண்டது.

“நாளையே அவனைக் கொன்று அவன் தலையை நாகதேவியின் மடியில் படையலிடுவோம். அந்தக் கொல்நரகனின் நெஞ்சைப் பிளந்து குருதியாட்டு ஆடுவோம். எண்திசைத் தோளா நீ படைகளை இப்போதே முன்னகர்த்து. நம் நகர்வீரர்களிலும் ஆழிப்படை வீரர்களிலும் இருந்து களம் புகக் கூடிய எல்லா வீரர்களையும் நான் இப்பொழுதே சென்று அழைக்கிறேன். நம் குழந்தைகளுக்காக இப்போரைச் செய்ய அழைக்கிறேன். என் சொல்லே அவர்கள் எழுந்து வர ஒரே வழி. நீ முன் செல். நான் பின் வருகிறேன்” என்று அனற் சன்னதம் வந்த பாதங்கள் நிலை கொள்ளாதவையென நடந்து கொண்டிருக்க உறுமினான் நீலழகன். “நாளை அவன் தலை அறுபடுவது உறுதி நீலரே” என்றான் எண்திசைத் தோளன்.

*

அன்றிரவு திமிலரின் வழி வழி உரித்தான ருத்ரம் என்ற வலம்புரி வெண்சங்கை போரில் மடிந்த வீரர்களின் நடுகால்லொன்றின் மேலே வைத்து ஊழ்கத்தில் அமர்ந்திருந்தார் ஆடற் சித்தர். வாகை மரங்கள் காற்றில் மலர்களைக் கொட்டி அவை மண்ணின் விழிகளென நிலத்தில் உருண்டன. அங்கு ஆயிரம் விழிகள் நோக்குபெற்ற விசை குமிந்திருந்தது. காற்று புரண்டு படுக்கும் மணலென வீசிக்கொண்டும் வீழ்ந்து பரவிக்கொண்டும் சிதறியது. வானில் விண்மீன்கள் மேலும் முளைத்த விழிகளென மண்ணை உற்று நோக்கியபடி விரிந்திருந்தன. கூகைகள் அலறுமொலி நடுகற்களில் அதிர்ந்து அதிர்ந்து திரும்பின. சந்தன மரங்களின் மெய்வாடை காற்றில் கமழ்ந்தது.

நடுகற்களின் இடைகளிலிருந்து போரில் இறந்த வீரர்கள் தோன்றி நிலை கொள்ளாது அலைவது போல் ஊழ்கக் காட்சி சித்தருள் எழுந்தது. மின் கணத்தில் விழிமுன்னே கோரமுகம் கொண்ட பெண் ஒருத்தி எழுந்து வந்து கொல். கொல். என செவியதிர ஆணையிட்டாள். அவர் தன்னை அவள் பிடிக்கும் நெருக்குடன் விசைகொண்டு முன்வர விழிதிறபடாமல் கட்டுண்டிருக்கிறது என உடலுணர்ந்து அச்சம் மீதுற்றார். கொல். கொல். கொல் என ஒலிகள் அவரைச் சூழ எழுந்தன. துத்தம். கைக்கிளை. விளரி. தாரம். உழை. இளி. சச்சரி. கொக்கரை. தக்கை. தகுணிதம். துந்துபி. தாளம்.
வீணை. மத்தளம். கரடிகை. தமருகம்.
குடம். முழா. பறை என இசைக்கருவிகளைப் பேயுருக்கள் வாசித்துக் களியாடல் கொண்டன. குருதியாலான நெருப்பாறொன்றில் ஈசன் தன் விரிசடைகள் நாகங்களென அதிர்ந்து விரிய வேய்தோள்கள் விம்மிப் புடைக்க கழல்களில் குருதி நர்த்தனம் எழ விரல்களில் முத்திரைகள் எழுந்து மாகதையொன்றை நிகழ்த்தியது. விழிகள் சித்தர் நன்கு பழகிய விழிகளின் தோற்றம் கொண்டிருந்தது. அழல் விரிவும் மாவிழைவும் கொண்ட உக்கிரம் அதில் மணிகளென ஆடியது. ஒவ்வொரு திசையும் குருதியாறு எழுந்தது. ஒவ்வொரு ஆற்றிலும் ஒவ்வோர் ஆடல். ஒவ்வொரு ஆடலிலும் முன்னில்லாத உக்கிரம் மூண்டு மூண்டு எரிந்தேறியது. ஒவ்வொரு துளிக் குருதி மணியும் விழிகளெனச் சூடி பேய்வீரர்கள் களியாட்டு ஆடினர். பூதங்களும் கணங்களும் பிசாசுகளும் மெய்யில் மெய்யென அவன் தாளில் எழுந்தன. பின் அவனை விலகி ஆடின.

அவற்றின் உருப்பெருக்கிடை ருத்ரம் ஒரு மாமுத்தென ஒளிர்ந்து கொண்டிருந்தது. சங்கை எடுக்க நீரில் அலையும் பிம்பதைத் தொட்டுவிடுவதைப் போல் அவர் விரல்கள் எழுந்தன. தொட எண்ணும் ஒவ்வொரு கணமும் அது தொலைவாகியது. பின் எண்ணாக் கணத்தில் அவர் வலக் கரத்தில் உறுவாளின் பிடியென வந்தமைந்தது. அதை உதடுகள் குவித்து வில்லென உடலை வளைத்து நாணென உதட்டை இழுத்த போது பேயுருக்கொண்ட ஒவ்வொரு ஆவிகளும் ருத்ரத்தினுள் ஆழிதிரும்பும் அலைமடிப்புகளென உள்ளணைந்தன. நடுகல்லின் மீது ஒரு செவ்விரத்தம் பூ குருதி வழிந்து மண்தொட நீண்டிருந்தது. அகலொன்றின் திரிச்சுடர் அரவென எழுந்து காற்றில் நீந்தியது.

இமைகளை மூடித் தன் உயிர் மூச்சை இழுத்து ருத்ரம் எழுகவென அகத்தில் கூவியபடி காட்டெருதின் பேரூளையெனக் காற்றை ஊதியெழுந்தார். அப்பால் தானும் ஒரு ஒலியென ருத்ரத்துள் நுழைந்து ஒலிந்து வெளியேறினார்.

*

தேம்பவாவியின் கோட்டைக்கு முன்புறமிருந்த அடவியைச் சங்கொலியால் முழக்கியபடி நீலழகனின் பின்னே புரவியில் வெண்குழல் சிலிர்த்து அவரையும் ஒரு வெண்புரவியொன்றாக்க ஆடற் சித்தர் போரில் நுழைந்தார். அவர் இடக்கையில் திரிசூலமும் வலக்கரத்தில் ருத்ரமும் ஏந்தி கால ருத்ரனெனக் களம் வந்த கோலத்தைக் கண்ணுற்ற ஏழிசைக் கூத்தன் போர் உருக்கொண்டு களம் எழுந்தது எந்தை ஈசன் என எண்ணி விழிமயக்குற்றான். ஆடும் கொலைஞன். அழிவின் தழற்கூத்தன். திரிசூலம் ஏந்திய மாகூற்றன். எழுக நீ எம்மான் என உளம் கூவிய சொற்களை நடுங்கும் விரல்களால் வழியும் நீரை அள்ளுபவனைப் போல ஓலைகளில் குற்றத் தொடங்கினான்.

TAGS
Share This