நோவிலும் வாழ்வு

நோவிலும் வாழ்வு

கவிஞர் வசிகரனின் முதற் கவிதை நூல் ‘நோவிலும் வாழ்வு’ ஆக்காட்டி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது. எமது தலைமுறையில் எழுந்து வரும் புதிய நிலமும் சொல்லூற்றும் கொண்டவர். அவருடைய முதற் தொகுதிக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.

நிலம்

அசைய முடியாமல் நிற்கிறது மரம்
காற்றும் தொலைந்துபோனது
வானிலிருந்து கொட்டுகிறது
கத்திரிவெயில்

உடலில் ரோமம் போல
எங்கும் புழுக்கம்

மின்விசிறி சுழர
நாமும் சக்கரமானோம்
பாதங்களைக் கட்டிக்கொண்டு கிடந்தோம்
வாழ்வு மீண்டும் மீண்டும் வருவதாய் தோன்றியது.

மாரியில்
மிதிக்கப் புதையும் நிலம்,
நீர் வறண்டு போனபின்
குதியில் குத்தும்

அன்பே…

நிலம் போன்றது நம் உடல்
நீர்சேர நிறம் மாறும்

ஈரம் ஊறுகையில்
இளகும்
புதையவிடும்.

(கவிஞர் வசிகரன்)

கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் உடல்களும் நிலவுருக்களும் ஏற்கெனவே ஈழத்தில் புழக்கத்தில் இருக்கும் கவியுலகுகளில் இருந்து பிறிதான ஒரு கரையை நோக்கியிருக்கிறது. அன்றாட வாழ்வின் இருளுலகுகளுக்குள் குத்தி ஏறி இறங்கும் சிறு படகென அவரால் நுழைய முடிகிறது. திசைமானியில்லாத அப்படகை யாருக்கும் தெரியாமல் கரையிலிருந்து எடுத்து வந்த சிறுவனைப் போல் தான் விரும்பிய திசைகளிலெல்லாம் செலுத்திப் பார்க்க இயல்கிறது. ஒருகையைக் குவித்து மறுகையால் தீ மூட்டி பீடியைப் பற்ற வைக்கும் அச்சிறுவனுக்கு முடிவற்ற பெருங்கருணை எறிக்கும் முழுநிலா நாளில் அலைவிளிம்பின் நுரைச்சிரிப்பெனக் கூர் கொண்ட வரிகளை அளிக்கின்றன கடலும் நகரமும்.

TAGS
Share This