28: கல்மலர் உரைத்தது

28: கல்மலர் உரைத்தது

“நண்பரே, நான் நெறியுள்ள போர் புரிபவர்களின் பக்கமே நிற்கிறேன். இந்தத் தீவில் நிகழ்வது நெறியின்மைகளுக்கும் நெறிகளுக்கும் இடையிலான யுத்தம்” என வீசிய காற்றின் விசை சென்று முடிந்த போது கூறினார் வேறுகாடார்.

உதய பூர்ணிகர் யானையின் குறும்பென முகம் சூடி “நெறி என்றால் என்ன என்பது அவரவர் நிலை சார்ந்தது நண்பரே. போர் என்பதே நெறியற்றது என்கிறது எனது நெறி.
நெறிகளும் நெறிகளும் கூட போரில் மோதிக்கொள்ளக் கூடும். ஒருவருடைய நெறி இன்னொருவருக்கு நெறியாவதில்லை. போரில் நீங்கள் நெறியுள்ளவர்களின் பக்கம் நிற்கிறேன் என்கிறீர்கள். எவ்வளவு வேடிக்கையான நண்பர்கள் நாங்கள். எனது கோணத்தில் நீங்கள் நெறியற்றவர் நண்பரே” எனச் சிரித்துக் குழைந்தார்.

வேறுகாடார் எழுந்து நின்று குன்றை நீண்ட ஆறெனக் கடக்கும் காற்றுச் சுழலில் உடலை மோத விட்டார். அவரது கழுத்தின் குழல் வளைவுகளின் பிசிர்முடிகள் சுழன்று சுழன்று மின்னின. வண்டியோட்டி வேடத்தில் இருந்தவர் காதில் மணிக் குழைகள் அணிந்திருந்தார். அவை சிறு மணிகள் காற்றில் கிலுங்குவதைப் போல ஆடிக்கொண்டேயிருந்தன.
“அவரவர் ஏற்றுக் கொண்ட தர்மங்களுக்குக் கட்டுப்பட்டாலே போதும் நண்பரே. நான் அறத்தால் உருவான குடியைச் சேர்ந்தவன். அறம் பிழைத்து போர் புரிய மாட்டோம். அறத்துடன் வெல்கிறோம். அல்லது வீரமரணம் எய்வோம். அதுவே எங்கள் போர் நெறி” என்றார் வேறுகாடார்.

“நல்லது நண்பரே, நம் வாழ்க்கை குடி நெறியினால் மட்டும் கட்டுப்படுத்தப்படுவதல்ல. குல நெறிகள். மொழி வழிகள். நிலப்பிரிவுகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நெறியை உருவாக்கிக் கொண்டே வளர்கின்றன. நான் பிறப்பால் நான் வேறொரு மதத்தைச் சேர்ந்தவன். அந்த நெறியே என் குடும்ப வழி. ஆனால் நான் இன்று ஒரு புத்த துறவி. பிட்சு. நாடோடி. நான் என் குடும்பத்தின் பார்வையில் நெறி பிறழ்ந்தவன் தான் இல்லையா” எனச் சிரித்துக் கொண்டு இருந்தவர் மெளனமாகி “அறங்கள் நாம் வாழும் பொருட்டு நாமே உருவாக்கிக் கொண்ட கதைகள் நண்பரே. அதில் திருத்தம் செய்யும் உரிமை நமக்கிருக்கிறது. இன்னுமொரு புதிய கதையையும் நாம் சேர்க்கலாம். சிலவற்றை அழிக்கலாம். புடவி நிலையின்மையின் கருப்பை நண்பரே. அனைத்தும் என்றைக்குமாய் மாறிக் கொண்டேயிருக்கும். நிலையவற்றவை. புத்தர் அதை அனிகா என்கிறார். எவ்வளவு அழகான எண்ணம் அது. எதுவும் முன்பிருப்பது போல் திரும்பவும் அப்படியே ஆகப் போவதில்லை. அப்படி ஆகுவதைப் போல காலம் ஒரு தீராத சுழிப்பு என நோக்கினாலும் அக்கணத்தில் நின்று விலகி நிற்பவருக்குத் தெரியக் கூடியதொன்று உண்டு. அவ்விலக்கத்தின் வழி அவர் அச்சுழியின் முழுவிசையையும் அதிர்வுகளையும் தற்செயல் பெருக்கையும் வேறு உச்சியிலிருந்து நோக்குகிறார். அவர் அங்கு மேலும் ஒரு முனை முன்செல்லும் வரலாற்றைக் காண்கிறார். அந்த முனை பலவற்றால் கூர்கொள்கிறது. பலவிசைகளின் கரங்கள் கூடியெழுந்து அந்த ஒற்றை மென்முனை கூட்டப்படுகிறது. நுண்மையாக்கம் செய்யப்படுகிறது. மானுடரில் ஒரு அபூர்வமான தன்னிணைவு நிகழ்கிறது. அதன் வழி சிறு துவாரத்திற்குள்ளால் பீறி விரியும் மதகென மானுடம் தன்னை வழிய விடுகிறது. அணையென அது காத்தவற்றை உடைப்பது அச்சிறு துவாரமே. நாம் அத்தகைய ஒரு துவாரத்தால் தான் இச் சிறிய தீவை நோக்குகிறோம் நண்பரே. உச்சம் பெற்று ஓய்வு கொள்ளும் மாகடல் அலைகள் போன்றது போர். எல்லாவற்றையும் போல யுத்தங்களும் நிலையற்றவை. ஒருநாள் ஓயும். பிறிதொரு நாள் வாய்திறந்து நகங்களைக் கூராக்கிக் கொண்டு வேட்டைக்குத் தயாராகும்.

இப்பெருக்கிலிருந்து விலகித் தன் ஊற்றை நோக்கித் திரும்பும் சிலருக்காவே இந்த மடாலயமும் குடிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. அலைகள் எழுந்து ஆடிய பின் வற்றிப் பின்வாங்கத் தானே வேண்டும். நான் இந்த மண்ணில் ஊன்ற வந்த விதை ஆலம் பழம் போன்று சிறியது. எளிமையான ஆயிரம் விதைகளின் சிறுபந்தென அவற்றைத் தூவுவதே என் பணி. அது இம்மண்ணில் ஆயிரமாண்டுகள் தழைக்கும் தத்துவமாகத் திகழும் என எண்ணுகிறேன்” என்றார் உதய பூர்ணிகர்.

வேறுகாடார் உரத்துச் சிரிக்கத் தொடங்கினார். “ஆயிரமாண்டுகள்.. ஆயிரமாண்டுகள்” எனத் திரும்பத் திரும்பச் சொல்லி உதடுகள் விரிந்து பற்கள் தெரியச் சிரித்தார். உதய பூர்ணிகர் என்ன தவறு விட்டோம் இவர் இப்படிச் சிரிக்கிறார் என எண்ணி அவரையே நோக்கினார்.
வேறுகாடார் திரும்பி துறவியின் விழிகளை நோக்கினார் “நீங்கள் நம்பும் நெறி தான் சரியென்பதை எப்படித் தீர்மானித்தீர்கள் நண்பரே. அதுவும் நிலையற்றது தானே. ஆயிரமாண்டுகள் வாழுமென நீங்கள் எறிந்த விதைகள் இம்மண்ணில் முளைக்காமலும் போகலாம். இல்லையா. எல்லாம் நிச்சயமற்றது. அனிகா” எனச் சொல்லி நகைத்துக் கொண்டிருந்தார்.

உதய பூர்ணிகருக்குள் சினம் ஒரு மென்னரவென நுழைந்து எழுந்தது “நண்பரே, அறியாத தற்செயல்களின் பெருக்கில் அலைக்கழிக்கப்படும் சிறு தூசுகள் மாத்திரமே நாம். நான் தூசு என உணர்ந்து விட்டேன். நீங்கள் அதை உணரவில்லை. அதனால் துயர் கொண்டிருக்கிறீர்கள்” என்றார் உதய பூர்ணிகர்.

வேறுகாடார் மேலும் நகைத்து “நீங்கள் விடுதலை பெற்றவர் என்பதும் அனிகா தானே துறவியே. நிலையற்றது. அதுதான் எவ்வளவு அழகியது. போரில் வெற்றியும் தோல்வியும் போல. காதலில் கூடலும் பிரிவும் போல. நான் ஒரு தூசு என்பதை நான் அறியவில்லை என்பதை எப்படிச் சொல்கிறீர் நண்பரே” என வினவினார் வேறுகாடார்.

“உங்கள் விழிகளில் நிரம்பித் ததும்பும் துக்கம் தான் உங்களைக் காட்டும் ஆடி. நீங்கள் புவியில் அளிக்கப்பட்ட அனைத்துத் துக்கங்களினதும் இரு விழிகள் கொண்டவர் என்பதை ஒவ்வொருமுறை உடனிருக்கும் போதும் உணர்ந்திருக்கிறேன். சிலநேரங்களில் துயரம் சென்று தீண்டாத அருங்கணங்களும் உங்களில் எழுந்திருக்கின்றன. உங்கள் பற்றால் நீங்கள் துக்கத்தையும் உங்கள் விலகல் இயல்பால் அதிலிருந்து மீட்சியும் அடைகிறீர்கள். வினோதமான ஒருமை இந்நிலைக்கு உண்டு. உங்களை நான் ஆராய்ந்து வருகிறேன் நண்பா” எனச் சிரித்துக் கொண்டே கைகளைக் காற்றில் தூக்கி விரல்களை மலர்கள் போல் விரித்துக் காட்டினார்.

“உங்கள் ஆராய்ச்சியின் படி நான் விவேகியும் அவிவேகியும் ஆனேன். நன்றி நண்பரே. நன்றி. இந்தக் கலவை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் என்னை மதுவில் ஊற்றப்பட்ட பால் என எண்ணிக்
கொண்டிருந்தேன். அது சரிதான். ஆனால் நான் அருந்த யாருமற்ற கலயம் நண்பரே. நானே வேண்டும் போது எதை அளிக்க விரும்புகிறேனோ அதைக் கொடுக்கிறேன். என் வாழ்க்கை நீண்டதொரு நாடகம் நண்பரே. அதில் எல்லா மையப்பாத்திரங்களும் நான் தான். என்னை நானே நடித்து நானே என்னை விலக்கி இன்னொருவனாய் நடித்து முடிவிலா வேடங்களில் முடிவிலாத புனைவுகள். ஆழத்தில் அந்த நிலையாமை எனக்குப் பிடித்திருக்கிறது நண்பா. நான் அனிகாவில் நிலைபேறு கொண்டவன்” எனச் சிரித்துக் கண்களைச் சிமிட்டினார்.

உதய பூர்ணிகரின் மாணவன் மகாசோதி அவித்த கிழங்குகளையும் கனிகளையும் இன்னீரையும் கொணர்ந்து அவர்கள் முன் வைத்தான். இருவரும் அவித்த கிழங்கை உண்டு கொண்டு வனத்தின் அடர்த்தியை நோக்கிக் கொண்டிருந்தனர்.

“இன்றைய போரில் நீங்கள் வென்று வீட்டீர்களா நண்பரே” என்றார் உதய பூர்ணிகர். “நான் தினமும் ஒரு போரில் வென்றே இன்னொரு நாளைத் திறக்கிறேன் நண்பரே. இன்றைய படைகளின் போர் புலிகளால் வெல்லப்படும் என்றே தோன்றுகிறது. பலபருவத்துப் பகையும் பல்லாயிரம் பேரின் கண்ணீரும் குருதியும் சிங்கை அரசனால் எம் மண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று நீலழகன் எழுந்த தோற்றத்தைத் தொலைகாண் கருவியில் பார்த்தேன். தசமுகம் கொண்டு எழுந்த தொல்மாகளன் ராவணன் எனப் புரவியில் களம் நுழைந்தார். அவர் முகத்தில் கனன்றது மூத்தோரின் பழிச்சொற்களிலிருந்து திரண்ட கருமை. கொல்லப்பட்ட குழவிகளின் இனிய கனவுகளைச் சுமக்கும் இருவிழிகள். குழல்கள் அவர்க்கு குடிகள் அளித்த நற்சொல்களின் உடன்வருகையெனச் சிரசில் விரிந்து நீண்டாடியது. அவர் கரங்கள் மட்டும் மண்ணிலும் விண்ணிலும் வாழும் தெய்வங்கள் தொட்டு உருவாக்கிய உலோகத் தூண்கள். அவருள் அகமென உறையும் ஒன்றே மேனியென்றாகிச் சுடர்ந்தார். எண் வேழங்கள் பின் திரையென எழுந்து பாய்ந்து வர புரவிகள் ஒவ்வொன்றும் நீள்மூச்சிழுத்து அனலேறிய களத்தில் ஆற்றும் மழையென அவர் நுழைந்தார். அதுவரை களத்தில் நுரைசீறக் கிடந்த ஒவ்வொரு மூச்சும் அவரால் உயிர் பெற்றது நண்பரே. அவர் உடல் களத்தில் உருகம் ஏந்தி எதிர்ப்பட்டதும் படை முழுவதும் ஓருடல் என ஒருங்கியது. தொலைகாண் கருவியை நுணுக்கி நோக்கினேன். அவர் அக்கோட்டையையே நோக்கியிருந்தார். வீரனொருவன் மார்பறைந்து கர்ஜனையிட்டு அவரை வரவேற்றான். சிம்மங்கள் அஞ்சியோடும் கர்ஜனை முழக்கங்கள் அக்களத்தில் எழுந்து நாம் அமர்ந்திருக்கும் குன்றில் பட்டு மீளவும் களத்திற்குள் திரும்பின. அவர் எழுந்த களத்தில் அவர் எந்த தெய்வத்திற்கு நிகரானவர். அவரின் அறங்கள் அவரைக் கவசமெனச் சூழ்ந்திருக்கின்றன எனப் பாணர்கள் சொற்கள் பாடுகின்றன. அவரின் சினம் குடிகளிலிருந்து அவர் எடுத்துச் சூடிக்கொண்ட வாகை மாலையென என்றும் மார்பில் ஒளிர்வது. எண்ண எண்ணச் சொற்கள் சலித்து விலகும் நேர்கூர் கொண்டவர். அம்பின் நுனிக்கு உள்ள கூர்மையும் வாலுக்கு உள்ள விசையும் கொண்டர் என்பதைக் களங்களில் கண்டிருக்கிறேன்.

தனித்திருக்கையில் அவரும் உங்களைப் போலொரு துறவி என்ற எண்ணம் மயக்கென எழுவதுண்டு நண்பரே. அதனால் தான் உங்களை அருகமர்ந்து அறிவதன் வழி அவரை எங்கோ தொட்டுக் கொண்டிருக்கிறேன் என உணர்கிறேன்” எனச் சொல்லி மெல்லப் புன்னகை உதட்டில் நதியெனத் தாவி எழு மேலே தொடர்ந்தார். “அவர் ஒரு யோகி என நான் கண்ட கணங்கள் உண்டு நண்பரே. உங்களைப் போலவே அவருக்கும் தெய்வங்களில் நம்பிக்கையில்லை. அனைத்தும் இயற்கையின் தற்செயல் விளைவுகளின் மின்கணங்கள் என வாழ்வைக் காண்கிறார். போரில் வெல்வதும் தோற்பதும் கூட தற்செயலானதே. எத்தகைய முன் தயாரிப்புகள் இருந்தும் தோற்கும் களங்கள் உண்டு. அறியாமல் தொட ஆழ்பெருக்கெழுந்து வென்று களியாடும் கணங்களும் உண்டு. போர் இந்த இரண்டு மெய்மைக்குமிடையில் ஒரு வண்ணத்துப்பூச்சியென மிதக்கிறது எனத் தோன்றுவதுண்டு. அவருள் அதன் நித்திய சிறகடிப்பைக் கண்டுள்ளேன். அது முழுதுற்றவன் மட்டுமே கொள்ளும் உவகை. முழுமையை அறிவதால் அல்ல. முழுமையில் தன்னை முழுத்துளியெனத் திரட்டி அளிப்பவரின் அகம் தீண்டும் ஒத்திசைவு.

அவர் வெல்ல முடியாதவர் நண்பரே. கொல்தெய்வங்கள் எதிர்வந்தாலும் அவர் உருகம் தாழாது. முழங்கால்கள் நிலம் தொடாது. அவரை அழிப்பது மட்டுமே அவரை வெல்லும் ஒரே வழி. ஆனால் அவர் அழிக்கப்பட்டால் ஆயிரமாயிரம் சொற்களில் பொருளென அமைவார். கதைகள் சொல்லிய மெய்வீரனென குழந்தைகளின் கனவுகளில் எழுவார். குடியின் தெய்வமென ஆகுவார். அவருடன் அமர்ந்திருக்கையில் என் உடலில் மெய்ப்புல்கள் எழுவதுண்டு. ஒரு தெய்வத்துடன் அமர்ந்திருக்கிறோம் என்ற அரைக்கண மயக்கு. அவரை விழிநோக்க எண்ணி பின் இயலாமல் இமைகள் தானாகத் தாழ்ந்து கொள்ளும்.

மண் தரையில் வீரர்களுடன் அமர்ந்து விளையாடும் சிறுவன். அன்னையரிடம் கதைகேட்டு மடிதுயிலும் குழந்தை. சிறுத்தைகளும் கிளிகளும் யானைகளும் வந்து அவரருகில் அண்டி நின்று உடல் உரசுகையில் மாயோன் தான் எழுந்து வனம் நுழைந்தானோ எனத் தோன்றும். கதைகளில் நாம் கேட்கும் ஒவ்வொரு தெய்வத்தினதும் ஒரு அம்சம் அவரில் அணியென ஒட்டிக்கொள்ள விழைகின்றன எனத் தோன்றும். அவரது சொற்களில் இளம் பெண்களில் நாணம் முதல்முறை அவிழும் பொற்கணம் ஒன்று மீள மீள நிகழுவதை நோக்கி முதுவீரர்கள் புன்னகைப்பதுண்டு. அங்கம் அழலெழ மன்றுகளில் அவர் சொற்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பாதாளங்களை ஆளும் நாகங்களின் அரசன் கார்கோடகன் மண்வந்து சீறியெழுவது போல் ஒலிக்கும். அவர் மானுட மேனியில் எழுந்த நாகதேவியின் புத்திரன் எனவே எண்ணுகிறேன். அந்த எண்ணம் ஒரு கற்பனை என்றாலும் அவர் கற்பனைகளுக்கு நிகர் வடிவானவர் என்ற அம்சம் முன்வந்த எண்ணத்தை விரட்டி அவரைத் தெய்வமெனச் சிந்தையில் எழ வைக்கிறது. இப்போரில் நாம் வெல்வோம் என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை நண்பரே” எனச் சொற்கள் பெருகிப் பெருகி தன்னுடல் ஒளிக்குமிழாக மிதக்கத் தொடங்குவதை உணர்ந்த வேறுகாடார் தன்னை உந்தித் தரைக்கு வந்தார். உதடுகளை இறுக மூடிக்கொண்டபோது புயல் துதிக்கரம் கொண்டு சுழன்றெழுவது போல் அவரது அகம் சொற்களால் சீறியபடியிருந்தது.

அவரது சொற்பெருக்கை எங்கோ ஒலிக்கும் பறவையின் குரலெனக் கேட்டிருந்த உதய பூர்ணிகர் வேறுகாடாரை அவரது உச்சகணத்திலேயே திகழ விட்டு அமைதியாகவிருந்தார். ஊழ்கத்தில் சொற்கள் எழுந்தவர் போல் அவருள் வெளிவந்து கொண்டிருப்பவை எவருடைய சொற்களென உதய பூர்ணிகர் நோக்கியிருந்தார். குளிர் காற்றுப் பட்ட அல்லியென முகம் தழைத்து நின்ற வேறுகாடார் வெற்றி முழவும் பறைகளும் புலிகளின் பேய்க்களியாட்டு ஒலியும் எழ “வென்றுவிட்டார்கள். கொடுங்கோலன் ஒழிந்தான்” என அமர்ந்திருந்த உச்சகணத்தில் விழியொன்று திறக்க யுத்த களம் அவருள் மாயக் காட்சிகளென ஓடத் தொடங்கின. களத்தை மேலிருந்து தெய்வங்களும் கீழிருந்து அசுரர்களும் நோக்குகிறார்கள் என எண்ணமெழ வானை நோக்கி மேகங்களை உற்றார் வேறுகாடார்.

“அவரை ஏன் இத்தனை நுண்மையாகக் கண்கொள்கிறீர்கள் நண்பரே. நீங்கள் அவரை அப்படி ஆக்கிக் கொள்ள விழைகிறீர்கள். நீங்கள் இழந்து விட்டிருப்பது எதுவோ அவரில் எஞ்சியிருக்கிறது. அல்லது நீங்கள் ஈடாக வைக்க அஞ்சும் ஒன்றை அவர் அக்களத்தில் கொடையென வைத்து முன்னெழுகிறார். உங்கள் மீதான தீராத துயர்களின் இருட்டிலிருந்து எழுந்தவர் அவர். அவர் உங்கள் துயர்களின் திரள். உங்கள் சொற்களின் வழி அத்துயரிருளை விரட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர் அகம் அலைகணமும் ஓயாத கடல் என அமைவது என்றே தோன்றுகிறது.

இது இங்கனம் மீள எக்கணமும் நிகழப்போவதில்லை என்பதே வாழ்க்கைக்கு நிகழ்ந்த பேராச்சரியம் நண்பரே. இக்கணம் கொள்ளும் மெய்மைக்கு நிகரான ஒன்று புவியில் இல்லை. நிகழுக்கு அறிதலில்லை. நிகழே அறிதல். முன்னும் பின்னும் ஆடும் ஊசல்களான கடந்ததும் எதிர்ப்படுவதும் மட்டுமே காலம் எனக் கொள்ளப்படுகிறது. இப்போர்கள் வரலாற்றின் பெருக்கில் சில ஆயிரம் நடுகற்களை ஊன்றும். கதைகளைப் பின்னும். குடிகளை மேலும் வெறியாட்டெழச் செய்யும். ஆனால் அரசன் போர்களின் கொலைச் சேற்றில் அறியும் ஞானம் மானுடர் அரிதாகவே அடையக்கூடியது. அதை நீலழகனும் அறிவார். அந்த இருட்டை விரட்டவே அவருள் தர்மங்கள் துணை நிற்கின்றது. நியாயங்கள் சொற்களாகத் தருக்கி அறங்களாக உம் குடியளித்தவற்றை அவரது அகம் அகவிடாயின் நீராகக் கொள்கிறது” என்று சொல்லிய பின் வேறுகாடாரை நோக்கினார் உதய பூர்ணிகர்.

“நண்பரே, நான் துறவிகளை நம்புபவனல்ல. அவர்கள் குடிகளிடமிருந்து உணவையும் ஆடைகளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு மெய்மையைக் கற்பிப்பதாக பாவனை செய்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. என்றாவது உங்கள் குருதியினர் கண் முன் கொன்று வீழ்த்தப்பட்டு குடிப்பெண்கள் கொடுகலவி புரியப்பட்டு உங்கள் மனைகள் தீப்பற்றியெரிய அதன் நடுவில் அன்பின் தாமரையை நீங்கள் கையில் ஏந்தியதுண்டா. மண்ணின் தீராத கொடுவினைகளுக்கு எதிராக தீச்செயல்களுக்கு மறுவிளைவாக புத்தரின் புன்னகை உதிர முடியுமா. புத்தர் அறிந்த மெய்மைகள் அவரின் அன்றாட வாழ்வின் மிகைக் கொடையினால் உண்டாகியவை. அவர் அரசரின் மகன். மண்ணிறங்கிய பின்னரே குடிகளைக் கண்டவர். நோய், மூப்பு, இறப்பை அறியாத குழந்தை. அவற்றைக் கண்ணுற்ற போது அவர் அகம் நடுங்கியது உண்மை தான். அது அப்படித் தானிருக்கும். ஆனால் எனக்கோ என் குடிகளுக்கோ அப்படியல்ல. நாங்கள் வெறும் தரையைக் கொத்திப் பிளந்து வயல் செய்பவர்கள். பெருங்கடலை நோக்கி மீனள்ளச் செல்பவர்கள். பனைகளில் கள்ளிறக்குபவர்கள். வாணிபம் செய்பவர்கள். வஞ்சம். பொறாமை. இழிவு. காமம். காதல். ஆசை. பாசம் என இச்சைகளும் கீழ்மைகளும் கொண்டவர்கள். மண்மேல் நிகழும் பெருங்களியைத் துய்க்கும் நாக்கொண்டவர்கள். புலன்களை உயிர்த்து அகத்தைத் தீட்டிக் கொள்பவர்கள். தேவையெனில் மந்தமும் தேவையெனில் சினமும் கொள்பவர்கள். கொன்று குவிக்கப்படுபவர்கள். அங்கம் அரியப்படுபவர்கள். வில் தேர்பவர்கள். சிற்பம் செய்பவர்கள். கதை தூக்கிப் பயிற்சி செய்பவர்கள். ஓவியம் தீட்டுபவர்கள். நாகங்களை வழிபடுபவர்கள். பாகர்கள். பாம்பாட்டிகள். பட்டி மேய்ப்பவர்கள். வேட்டையாடுபவர்கள். ஆடலும் பாடலும் இசையும் கொள்பவர்கள். நறும்புகையில் உளக்கூச்சமும் தீயிலையில் அகவிழியும் திறப்பவர்கள். எளியவர்கள். எளியவர்களின் பொருட்டு புத்தருக்குள் கனிந்ததை அமுதெனவே கொள்கிறேன் நண்பரே. வலியவருக்கு எளியவர் மேல் என்றைக்கும் மண்ணில் நிகழாத ஒன்று அவருள் எழுந்தது. அதை அவர் அக்கோணத்தில் நோக்கினார். அதை மெய்ச்சுகிறேன்” என கற்குவியலில் ஓடும் தேர்ச்சில்கள் தடக்கியெழும் இடறலுடன் வேறுகாடாரின் உதட்டில் சொற்கள் ஓடின.

“வாழ்வை அறிதலுக்கு ஒவ்வொரு மரபும் நூற்றுக்கணக்கான வழிகளை ஊழ்கத்தின் வழி உண்டாக்கிக் கொள்கின்றன. நாம் அறியும் மெய்மை அவற்றின் கனவுருக்களிலிருந்தே எழுபவை. உங்களின் சொற்களில் எழுபவை என்றோ ஊழ்கத்தில் உதித்த சொற்களே. அவற்றின் தருக்கங்களே. தருக்கமற்ற மெய்மை வழிகள் சிலருக்கே மண்ணில் அமைவதுண்டு. அவர்கள் தம் செயல்களில் முற்றழிவதால் அக்கணத்தைத் தீண்டுகிறார்கள். ஆனால் அவர்கள் அதிலேயே அமைவதில்லை. தீயில் அமரும் வண்டென அவர்கள் உலைவார்கள். உங்கள் அரசர் களங்களின் அரசரென்றால் புத்தர் புலன்களின் அரசர். புலன்களே போரின் விழைவை அடைந்து பின் களத்தை அடைகின்றன. ஆகவே தான் புத்தர் அரசர்களின் அரசர் ஆகிறார். ஓம். அவர் பேரரசர் ஆவது அங்கனமே நிகழ்ந்தது. தன்னைத் தன்னில் வென்றெழுதல். பிற வழிகளும் மண்ணில் திகழலாம். நான் தேர்ந்தது கொல்லாமை என்ற பெரும் நெறி. அதில் என்னால் கொல்லப்படுபவரினதும் கொல்பவரினதும் கூர்பிரித்தறிய முடியாத விலக்கொன்று எழுவதை நோக்கியே என் ஊழ்கம் நிகழ்வதுண்டு. இங்கு மோதிக்கொள்வது யார் நண்பரே. இளையவர்கள். இளம் கெளதமரைப் போன்றே வாழ்வறியாதவர்கள். அவர்களுக்கு மெய்மை அளிக்கும் வாய்ப்பை போர் பிடுங்கிக் கொள்கிறது. மானுடரில் துயர் நிகழும் வரை போர்கள் நிகழும். அது அவ்வாறு நீளக்கூடாதென எண்ணுபவர்கள் போரைப் போரினால் வெல்லுவதின் பொருளின்மையை என்றாவது உணர்தல் கூடும். நாம் ஏதாவது புதிய வழிகளை இனியாவது பரிசீலிக்கலாம் எனத் தோன்றுகிறது. என்னால் ஆகக் கூடியவற்றை ஆற்றுகிறேன் நண்பரே” என முதுதந்தையின் கனிந்த குரலில் சொன்னார் உதய பூர்ணிகர்.

வேறுகாடாரின் உளம் தணியத் தொடங்கியது. காற்றசைக்காத அல்லிக் குளத்தை நோக்கினார். ஒரு சாம்பல் நிறக் காட்டுக் குருவி குளத்தருகில் வந்து அமர்ந்து குளத்தை நோக்கியது. தன் குரலால் அதை எழுப்புவதைப் போல ஓசையிட்டது. வேறுகாடார் அங்கிருந்து இன்னொரு கிளைக்குத் தாவியமரும் பறவையென அகம் கலைந்தெழுந்து அமர்ந்தார்.

“எனது துயரம் என் கரங்களால் வனையப்பட்டது நண்பரே. நான் குடிகளின் பொருட்டோ விடுதலையின் பொருட்டோ அல்ல எதன் பொருட்டுமின்றி இப்புவியில் அலையும் பூச்சி. எனது அவத்தை என் கரங்களாலேயே புரிந்தேன். நிகரற்ற கொடும் பழியொன்றை நான் கருதும் நெறிகளின் பொருட்டு ஆற்றினேன். அக்கணமே என் நெறிகளும் நெடுங்காலம் தூங்கி அறுந்து விழக் காத்திருக்கும் மலைகளை இணைக்கும் மரப்பாலமென முதுமை கொண்டன. இப்போது அவை உடைந்து பாதாளங்களில் விழும் ஓசையைக் கேட்டபடி அவ்வழியே தனித்திருக்கிறேன். இத்தனிமையை பலநூறு சொற்களாக்கி போர்களாக்கி விரித்துக் கொள்கிறேன். என்னுள் கொலை வேறொன்றாக நிகழ்கிறது. அதை நான் அறிகிறேன். சொற்களால் தொட விரும்பாத துயர். நான் மட்டுமே சூடும் துயர் மலர். அது வாடுவதில்லை. மேலும் மேலும் அவிழ்தில்லை. அப்படியே அக்கணத்தில் உறைந்து விட்ட கல்மலர் அது. கொடுங் கணத்தில் சிலையாகிய ஒரு இனிய மலர்” எனத் தலை நடுக்கம் எழ கண்ணில் நீர் விசும்பத் தொடங்கினார் வேறுகாடார்.

“நாம் நமது துயரை முற்றொழிவதில்லை நண்பரே. அதை அறிகிறோம். அறிவதன் வழி அதை ஆயிரம் மலர்களாக்கி அவற்றில் ஓயாமல் உளத்தை மொய்க்க வைக்கிறோம். அது ஒரு சடங்கு என உளம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். நீங்கள் அந்த மலரை எக்கணமும் நீங்கத் தேவையில்லை அன்பரே. அம்மலரென ஆகுக. அதன் வழி அம்மெய்மையை அறிக. மானுடம் மீளாத துயரென்பது எதுவுமில்லை என்பதே எனது நெறி எனக்கு அளித்த வெளிச்சம். மானுடம் சூடிக்கொள்ளாத கீழ்மைகள் எதுவுமில்லை என்ற இருளிலிருந்து மலர்ந்து வந்த ஒளிப்பூ. அதில் ஒன்றை நீங்கள் உங்கள் வாழ்வை வாழ்ந்து சேரும் கணத்திலேனும் ஒருகணம் முகரக்கூடும். கல்மலர் உயிர் பெற்று உங்கள் கரங்களில் தழையக் கூடும். எக்கணமும் தீண்டாமல் உறைந்த அப்பெருக்கில் ஒரு பிழையென அது உங்களை ஏற்றுக் கொள்ளக் கூடும். பிழைகளும் சரிகளும் நாங்கள் உருவாக்கிக் கொண்ட கூடுகள். அதிலொரு கணம் இன்னொன்றை அறியும். இன்னொன்றில் வேறொன்றாக அமையும். அக்கணம் கூடும்” என்ற சொற்களை உதய பூர்ணிகர் சொல்லி முடித்த பொழுது வேறுகாடார் தனது கல்மலரில் ஒரு மென்பனி படர்ந்து உயிர்த்துளி அசை கொண்டது போல் அகமயக்குக் கொண்டார். சாம்பல் குருவியின் குரல் “வசு” “வசு” என அல்லிக்குளத்தை அலைக்க எண்ணி ஓயாது ஓசையிட்டது. கல்லும் நீர்மையும் தொடப்படாத வெளியில் வசுதாவின் மார்பில் வேறுகாடார் ஒரு துடிப்பு எழக் கேட்டு கனத்த நீரிமைகளால் விழிகளை மூடிக் கொண்டார்.

TAGS
Share This