32: யாகுப ரூப
காலம் உறைந்து மீண்டும் கலையும் காலம் எத்துணை எளியது என நோக்குங்கால் ஆடற் சித்தரின் நுதலில் விழியொன்று மெல்லக் கீறி இமைகள் உதித்தன. தீயின் பல்லாயிரம் பல்லாயிரம் மடிப்புகளில் ஓர் அலையின் நுரையில் அதன் நுரையின் அலைநெளிவில் நெளிவின் கணமென கணத்தின் கணமென ஆடலிறை ஆடிச்சிரிக்குமொலி அப்பல்லாயிரம் பல்லாயிரம் தீ மடிப்புகளிலும் ஓர் அதிர்சுருளென விரிந்து சுருங்கியது. ஒரு சுவாசத்தின் உள்ளிழுக்கும் கணங்களென அவற்றின் எண்ணிலா அதிர்வுகள் எண்ணற்ற கழல்கள் என ஆடற் சித்தரின் நுதல் விழி நோக்கியது.
*
புலரியின் மென் செம்மஞ்சள் ஒளி உசையை வந்து எழுப்பிய போது அவள் தன் குன்றுமணி விழிகளை உருட்டிக் கசக்கிக் கொண்டாள். சிறகுகளை மெல்ல விதிர்த்து சூட்டை சமநிலைக்குக் கொண்டு வந்தாள். மஞ்ச அறையைச் சுற்றிலும் நோக்கினாள். வெண் மெளனம் சூடிய நித்திய கல்யாணி மலரை நிலவை தன் வெண்ணிழை மினுங்கத் தொடங்கும் கூந்தலில் சூடினாள். ஆடியில் தன் முகத்தைப் பார்த்தாள். ஆயிரமாயிரம் சிக்கலான நார்களின் குழைவினால் உண்டாக்கப்பட்ட எழில்கொள் மலர்மாலையென அவள் முகம் எப்போதும் இருப்பது. அதன் இழைபிரியாத மெளனத்தை அழகென்றும் அச்சமென்றும் அரண்மனைச் சேவகர்கள் கருதுவர். நிலவை எழுந்து முன்முகப்பிற்குச் சென்றாள். முதல் நாளிரவு வரைந்திருந்த உப்பு வட்டம் காற்றில் அலைபட்டு ஓவியத் தீற்றல் என நீண்டும் கலைந்தும் இருந்தது. லீலியாவைச் சென்று எழுப்பலாமா என எண்ணினாள். பிறகு அவள் பயணக் களைப்பில் இருக்கக் கூடும். இன்னும் சில நாழிகைகள் துயிலட்டும் என எண்ணிக் கொண்டாள்.
தானகி பரபரக்க ஓடிவந்து முன்முகப்பில் நின்ற நிலவையைக் கண்டதும் ‘அரசி’ என்றாள். நிலவை அவளைத் திரும்பி நோக்க “நேற்று யவனத்தில் இருந்து வந்த குழுவிலிருந்த குள்ளப் பெண்ணுக்கு வயிற்றுப் போக்கு. நமது உணவுகள் ஒத்துவரவில்லை போலும். அரண்மனை மருத்துவர் ஆலயத்துக்குச் சென்றுவிட்டார். ஊரில் யாரையேனும் அழைக்கவா” எனக் கேட்டாள். “போ. அழைத்து வரச் சொல்” என சொன்னாள்.
விடியலின் முதல் நாழிகையிலேயே அடுமனைப் புகைகளும் வாசனைத் தூபங்களும் தீயிலை இழுக்கும் புகைகளும் எழுந்து பட்டினம் புகையால் உயிரளிக்கப்படுவது போல் தோன்றியது. அரண்மனையைச் சுற்றிய பகுதிகள் அமைதியில் உறைந்திருந்தது. காகங்களும் மைனாக்களும் புலுனிகளும் அரண்மனைக்கு அருகிருந்த வீதிகளில் கத்திப் பறந்து கொண்டிருந்தன. அரண்மனையில் நின்று நோக்கினால் ஒருபக்கம் பட்டினமும் மறுபுறம் கடலும் தூரத்திலென மின்னும். இரண்டிலும் இருந்து விலத்தி நோக்குமிடத்திலிருப்பது தான் அரசா என எண்ணிக் கொண்டாள் நிலவை. அரசு என்றால் என்ன என்ற கேள்வியை எத்தனை ஆயிரம் முறை கேட்டுக் கொண்டு தனக்குத் தானே பதிலளித்துக் கொண்டிருப்பாள். ஒவ்வொரு முறையும் அப்போது இருக்கும் நிலையிலிருந்து எதிர்முனையிலேயே அவளது விடைகள் நிலை கொள்ளும்.
முதற் பருவ யுத்தம் அவள் நினைவில் எழுந்து உருக்கொண்டது. வானம் கீலம் கீலமாக செம்மஞ்சள் பட்டையை நெற்றியில் கட்டியிருப்பது போல் பகல் ஒளிகொள்ளத் தொடங்கியது. முதற் பருவ யுத்தம் எப்பொழுது நினைவில் கொண்டாலும் நிலவையை மயிர்க்கூச்செறியச் செய்து உள எழுச்சிக்குக் கொண்டு செல்லும்.
தேம்பவாவி கொல்லப்பட்டு இடாவத்த நகரில் போரை வென்று திரும்பிய நீலழகனை தமிழ்க்குடிகள் தெய்வமென்று உரைத்தனர். வடக்கும் கிழக்கும் வெற்றிக் கொண்டாட்டங்களில் மூழ்கியது. தேம்பவாவியின் வைக்கோல் பாவைகள் வீதிகளில் கொழுத்தப்பட்டு ஆவிக்கடன் செலுத்தினார்கள். போரில் கொல்லப்பட்ட மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவுகூரும் சடங்குகளை ஆற்றினார்கள். ஒவ்வொரு குடியிலிருந்தும் திசையிலிருந்தும் நூறு நூறு புதிய புலிகள் எழுந்து வனம் புகுந்தனர். பன்னிரண்டாயிரம் வீரர்களைக் கொண்ட மாபெரும் படை நீலழகனின் கீழ் திரண்டது. அவர்களது நடைபவனி நாளில் வில்லுடனும் வேலுடனும் கதைகளுடனும் புரவிகளிலும் வேழங்களிலும் தேர்களிலும் வரும் போர்வீரர்களையும் தளபதிகளையும் மலர் அள்ளிச் சாற்றி வழிபட்டனர் குடிகள். முதற் பருவ யுத்தம் அக்கணத்திலிருந்து தொடங்கியது. மலகந்தகம தமிழ்க்குடி எல்லைகளை இடைவிடாது தாக்கத் தொடங்கினான். இருள் வீரர்கள் என்ற மிகக்கொடூரமான சிங்கையின் படைப்பிரிவொன்று எல்லைகளில் புகுந்து வீரர்களைக் கொன்று குவிக்கத் தொடங்கியது.
இருள் வீரர்கள் உடலெங்கும் கருமண்ணும் எண்ணையும் பூசியிருப்பார்கள். எண்ணை பூதங்களென அன்னையர் குழவிகளுக்கு உணவூட்டும் போது குழந்தைகளை அச்சமூட்டச் சொல்லுவர். “எண்ணை பூதத்திடம் பிடித்துக் கொடுத்து விடுவேன். உண்கிறாயா இல்லையா” என அன்னையர் அச்சம் கலந்த குரலில் சொல்லும் பொழுது ஏனென்றே அறியாமல் குழந்தைகள் வாயைத் திறந்து கொள்வார்கள். இருள் வீரர்களின் படை ஈவிரக்கமற்ற ஒரு கொலைக்குழு. அவர்களின் தலைவன் சோமசேனன் முடிந்தவரை கொன்று விட்டு உயிருடன் திரும்புங்கள் என்பதை மட்டுமே அவனது படைக்கு ஆணையாக இட்டிருந்தான். இருள் வீரர்களோ எல்லைகளைக் கடந்து குடிமனைக்குள் புகுந்து பெண்களைக் கவர்ந்து சிறைபிடிக்கும் வெறி மிகுந்தவர்கள். இருள் வீரர்கள் பிடிபட்ட பெண்களை பலபுதிய வகையான சித்திரவதைகள் மூலம் கொடுகலவி புரிந்து கொன்றனர். ஒருமுறை அங்கிருந்து தப்பி வந்த கதிரழகி என்ற பெண் சொன்ன கதைகளைக் கேட்டு நீலழகன் நான்கு நாட்கள் உறக்கமின்றி விழிதிறந்திருந்தான். பின் கதிரழகியின் சித்தம் பேதலித்தது. அவள் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை கருவிழிகளும் சுருள் முடிகளும் கொண்டதாக இருந்தது. நீலழகன் அக்குழவியைக் குழந்தைப் பேறற்ற குடும்பமொன்றிடம் கையளித்தான். “ஒளிவீரன்” என அதற்குப் பெயரிட்டான். அந்தக் குழந்தை தன் சிறு குறுணிப் பற்களைக் காட்டி அவன் சுட்டு விரலை இறுகப் பற்றியது. நீலழகன் மெல்லிய புன்னகையுடன் அவ்விரலை விடுவித்துக் கொண்டான்.
இருள் வீரர்களின் தாக்குதல்களை முறியடிக்கப் புலிப்படை புதிய காவல் முறைகளையும் தாக்குதல் வழிகளையும் பயின்றனர். வேறுகாடாரின் உளவுப்பிரிவின் இருநூறு பேர் கொண்ட பெரும் பிரிவொன்று சிங்கை நகரின் எல்லைகளில் சுழற்சி முறையில் உளவிலீடுபட்டனர். இருள் வீரர்கள் சிங்கைக் குடிகளே அறியாத வண்ணம் எல்லைகளைக் கடப்பவர்கள். அவர்கள் நேரடியாக மலகந்தகமவின் உத்தரவுகளுக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். சிலவேளை அதையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை என சிங்கை வீரர்கள் கூறுவதுண்டு. சோமசேனன் பிறவியிலேயே வலது கைவிரல்கள் பின்னிக் கொண்டது போல் உடலமைந்தவன். அது அவனது உளத்திலும் பின்னியிருக்கிறது எனத் தோன்றுபவன். அவனது வலக்கை விரல்களை நோக்குபவர்களை கணமும் யோசிக்காமல் வாளால் வெட்டிக் கீறிக் கர்ஜிப்பான். அவனது அன்னை அவனை போரில் ஈடுபடக் கூடாது எனத் தடுத்த போது அவளின் சிரசை வெட்டி வீதியில் போட்டு அதைச் சுற்றி நடனமாடினான். “என்னை இங்கனம் பெற்றவள் நீதானே. கொடூரி. உனது அகக் கோணலால் தான் என் விரல்கள் இப்படி ஆகின. உளமும் அதே போல் ஆகின” என்று வெறிக்கூச்சல் இட்டதாகச் சிங்கைக் குடிகள் திண்ணைகளில் இரகசியமாகப் பேசிக் கொண்டனர். அவனது அச்சமூட்டும் இயல்புக்குப் பிறிதொரு காரணம் அவனது படைப்பிரிவின் தளபதிகளான சுவீர மற்றும் பவீர. இருவரும் இரண்டு கரங்களெனச் சோமசேனனுக்கு அமைபவர்கள். அவனது அத்தனை கோணல்களும் தெளிவுருவில் அமைந்தவர்கள். போரை வெறியென்று மட்டுமே பொருள் கொள்பவர்கள். போரில் நுட்பங்களை விட ஆயுதங்களை விட பலம் வாய்ந்தது வெறி. கொல்லும் வெறி. கொன்று கவர்ந்து புணரும் வெறி. புணர்ந்து கொன்று அப்பிணத்தையும் புணரும் வெறி. கெஞ்சிக் கூச்சலிடும் வீரர்களையும் பெண்களையும் காலின் கீழ் போட்டு நசுக்கும் வெறி. தெய்வமென தாங்கள் ஆகுவது கொல்லும் வெறியினால் என்பதை நன்கறிந்தவர்கள் இருவரும். அன்னையின் வஞ்சம் கலந்த முலைப்பாலென இருவரும் முழுப்படையினருக்கும் அவ்வெறியினை ஊட்டியே வளர்த்தனர். மானுடர் வெறி கொள்ளுந் தோறும் அவர்கள் தமது மூலவிசைக்குத் திரும்புகின்றனர். மானுடர் தம் கொல்வெறியினை அறம் நீக்கி வலி நீக்கி பொருள் நீக்கி முழுமுற்றாக அறியுந் தோறும் மாபெரும் கொல்விசையை அடைகிறார்கள். அதன் மூலம் ஆற்றலின் பெருக்கென விழைகிறார்கள். இருள் வீரர்கள் மானுடக் கொல்வெறியின் ஆற்றல் விசைகளால் தம்மை ஆக்கிக் கொண்டவர்கள். சிங்கைப் படையே அஞ்சும் அதன் பிரிவுகளில் ஒன்றென ஆகுபவர்கள்.
தேம்பவாவியைக் கொன்றது முதல் இருநாட்களுக்கு ஒருமுறையென இருள்வீரர்கள் எந்த எல்லையிலும் இடைவெட்டி நுழைபவர்களாக ஆகினர். கொன்று தலைகளை வெட்டி குவித்தனர். குடல்களை அள்ளி காவற் பரண்களில் கட்டினர். கழுகுகளும் பருந்துகளும் நரிகளும் கழுதைப் புலிகளும் நிறையுணவு பெற்று வனவிளிம்புகளில் வாழத் தொடங்கின.
எண்திசைத் தோளனும் இன்மரும் உதிரரும் வனக்குடில் கூடத்தில் குழுமியிருந்தனர். எண்திசைத் தோளன் அடிபட்ட வேங்கையெனச் சினமூச்செறிந்தபடியிருந்தான். நீலழகன் குடிலுக்கு வந்த போது அங்கிருந்த கதையொன்றை எடுத்து நிலத்தை அறைந்து பிளப்பவனைப் போல சித்தம் பிறழ்ந்து நின்ற எண்திசைத் தோளனை நோக்கினான். அவன் கதையை எறிந்து விட்டுக் கொல்வேலை எடுத்து பயிற்சிப் பாவையொன்றை நோக்கி வெறிக்கூச்சலுடன் எறிந்தான். அதன் தலை உடைபட்டுப் பொடிப் பொடியாகியது.
உதிரர் அவனைத் தடுத்து நிறுத்தி கூடத்திற்குள் அமர்த்தினார். என்னவாகிற்று என வினவினான் நீலழகன். “கிழக்கின் முனைப்பகுதியால் இன்று புலரியில் நுழைந்த இருள் வீரர்கள் படை அங்கிருந்த குடிமனைகளை மொத்தமாகச் சூறையாடி எரித்து கொலைவெறியாட்டு நிகழ்த்தியிருக்கின்றனர். நமது தளபதியின் அன்னையும் தந்தையும் கொல்லப்பட்டு எரிதீயில் எறியப்பட்டிருக்கிறார்கள். அவரின் தங்கை உட்பட அறுபது பெண்களைச் சிறையிட்டுக் கொண்டு போயிருக்கிறார்கள்” என்று இன்மர் கூறினார். நீலழகனின் விழிகள் உறைந்து சில கணம் அசைவற்றிருந்தது. “ஒற்றுப்படை தகவல் ஏதேனும் அனுப்பியதா” எனக் கேட்டான். “இருள் வீரர்கள் மாவலி ஆற்றின் கரையில் உள்ள யாகுப ரூப எனும் கிராமத்தில் மதுவுண்டு வீதிகளில் வைத்து நம் பெண்களைப் புணருவதாகச் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அங்கிருந்த சிங்கைக் குடிகள் இருள் வீரர்களை அஞ்சி வனத்திலும் மடாலயத்திலும் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்” என்று விளக்கினார் இன்மர்.
எண்திசைத் தோளனின் பற்கள் நறநறக்குமொலி அங்கிருந்த முதுவீரர்களை மெல்ல அச்சமூட்டியது. எண்திசைத் தோளன் அவனது நிதானமான சுபாவத்திற்கும் அமைதிக்கும் படைவீரர்களால் மதிக்கப்படுபவன். போரில் கூட போரை உருவேற்றும் பொருட்டே கோபங் கொள்பவன் என வீரர்கள் நினைக்குமளவு அமைதியான ஆழம் கொண்டவன். அவனின் இத்தகைய கட்டற்ற சினம் அங்கிருந்தவர்களை சிலகணங்கள் உலுக்கியது. “வீரர்களைத் திரட்டுங்கள். ஒருங்கு விசையில் இரண்டாயிரம் போர்வீரர்கள் திரளட்டும். எண்திசைத் தோளன் தலைமை கொள்ளட்டும். அது அவரது நிலம். அதன் காடுகளையும் வழிகளையும் அவரே அறிவார்” என நீலழகன் கூறினான். உதிரர் “அவர் சற்று சினமடைந்திருக்கிறார். போரை வழிநடத்துவதில் அது அழிவுகளை நோக்கிச் செல்லக் கூடும். இன்மர் வழிநடத்தட்டும். எண்திசைத் தோளனும் உடன் வரட்டும்” எனத் தணிந்த குரலில் சொன்னார்.
எண்திசைத் தோளன் தன் வாளை உருவியபடி சினம் கொண்டு எழுந்தான். “யாரும் வரவேண்டாம். நானே சென்று கொல்கிறேன். நான் யாருக்கும் கட்டுப்பட்டவனல்ல” எனச் சீறினான். நீலழகன் அவன் கொல்வெறித் தோற்றங் கண்டு ஒருகணம் நிலைகுலைந்தான். பின் தன்னை ஒருங்கிக் கொண்டு “நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள் தளபதி. உங்களுடன் உங்கள் படைகள் உடன் வரும்” எனக் கூறினான். ஒரு நாழிகைக்குள் படை ஒருங்கியது.
மாவலி ஆற்றின் தீரத்தால் வேழங்கள் ஓடிய தடம் புதை தடங்களென ஒளிர்விட்டது. புரவிகளின் கனைப்பொலி காட்டை உலைத்தது. எண்திசைத் தோளன் சித்தம் அழிந்து முதற் கொலைக்கணத்தை நோக்கியவனெனப் புரவியில் எரிகல்லெனச் சீறியபடி விரைந்தான். காடு அதிர்ந்து கற்கள் வெகுண்டு பொறிவிழிகள் திறந்தன. வனவிளம்பில் ஒளிந்து நின்ற சிங்கைக் குடிகள் புரவிகளின் ஒலிகள் கேட்டு மேலும் மேலும் வனத்துள் உறைந்தனர். எண்திசைத் தோளனுடன் அவனைப் போலவே வெஞ்சினமும் தணியாத பேராற்றலும் கொண்ட கிழக்கின் புலிப்படை இணைந்து கொண்டது. எதிர்ப்பட்ட முதலாவது சிங்கைக் குடியைச் சேர்ந்த கிழவனொருவனின் தலை வானில் சுழன்று அவன் கழுத்திலிருந்து குருதி பீறிட்டது.
இன்மருக்கு அச்செய்தி கிடைத்த போது தாமதமாகியிருந்தது. எண்திசைத் தோளன் யாகுப ரூபவில் இருந்த மனைகளைக் கொழுத்தினான். அவனது படை அவனது கரங்களாகவும் கால்களாகவும் சித்தங்களெனவும் விரிந்து அங்கு கண்பட்ட ஒவ்வொன்றையும் எரித்தது. புணர்ந்து குற்றியிராய்க் கிடந்த தமிழ்க் குடிப் பெண்களைத் தேர்களில் இட்டு மருத்துவக் குழுவிற்குக் கூட்டிச் சென்றனர். உதிரரும் இன்மரும் அவன் ஆடிய வெறிக்கூத்தை நோக்கி விழியுறைந்தனர். இருள் வீரர் படை புகுந்த தமிழ்க்குடி நிலமென அச்சிங்கைக் கிராமம் வெறியாட்டில் உலைக்கழிக்கப்பட்டிருந்தது. இருள் வீரர்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நிலத்தில் இறைத்தனர் கிழக்குப் புலிப்படை. சுவீரவின் தலையை நூறு துண்டுகளாக வெட்டினான் ஒரு வீரன். பவீரவின் தலையை கொல்வேலில் குற்றி சதுக்கத்தில் ஊன்றினான் இன்னொருவன். ஒவ்வொரு கிழக்குப் புலியும் கொலைவெறிக் கூத்தனென குருதி உடலில் படிந்து படிந்து சினமேறிய விழிகளால் அனைத்தையும் அழிக்கும் அழலெனக் கூவினர். வசவுகளைப் பொழிந்தபடி கொல்லப்பட்ட இருள் வீரர்களின் குடல்களை எடுத்து மாலைகளாய் அணிந்து அமலையாடினர்.
மடாலயம் நோக்கி எண்திசைத் தோளன் தன் புரவியைத் திருப்பினான். உதிரரும் இன்மரும் தங்கள் தேர்களை விரட்டியபடி அவனைப் பின் தொடர்ந்து ஓடினர். மடாலய வாசலில் நின்ற துறவிகள் ஐவரின் தலையை எண்திசைத் தோளன் இரண்டு வீச்சில் வெட்டி எறிந்தான். நாப்பிரட்டி வெறியோசை எழுப்பினான். மடாலயத்துள் இருந்த சிங்கைக் குடிகள் அவனது பேய்க்கோலத்தைக் கண்டு கண்ணீர் பெருகி ஓடக் கைகளை வானில் கூப்பிக் கொண்டு கத்தினர். மடாலயத்தில் இருந்த மேலும் இருபது துறவிகள் அமைதியாக எழுந்து வந்து ஆலயத்தின் முன் வெட்டி வீழ்த்தப்பட்ட தலைகளுக்கு அருகில் மெல்லிய ஒளிரும் வதனத்துடன் நின்று எண்திசைத் தோளனை நோக்கினர். அவன் ஓங்கிய வாளும் கையுமாய் சில கணங்கள் அவர்களை நோக்கினான். அந்த முகங்களில் அமைந்திருந்த சாந்தம் ஆடியென அவனைச் சிலகணம் நோக்க வைத்தது. அறியாத கணத்தில் மெய்ப்புற்றவன் வாளைக் கீழே வீசிவிட்டுப் புரவியிலிருந்து குதித்து இறங்கித் துறவிகளின் கால்களில் விழுந்து கேவிக் கேவி அழுதான். இன்மர் தனது தேரிலிருந்து இறங்கித் துறவிகளைச் சென்று வணங்கினார். “எங்களது செயல்களுக்காக எங்களை மன்னியுங்கள் துறவிகளே” எனக் கரங் கூப்பினார். அவர்களிலிருந்த முதிய துறவியான ஒருவர் முன்னே வந்து “செல்க. உங்களுக்குரியதை எடுத்துக் கொண்டு உங்கள் வாழிடங்களுக்குத் திரும்புக” என அமைதியாகச் சொன்னார். எண்திசைத் தோளன் எழுந்து இன்மரின் தேரில் சென்று ஏறினான்.
யாகுப ரூபவில் இருந்து இருபது பெண்களை உயிருடன் மீட்டனர் புலிகள். எண்திசைத் தோளனின் தங்கை அங்கே கிடைக்கவில்லை. அவள் என்னவானாள் எனத் திரும்பத் திரும்ப அரற்றியபடி அவன் தேரில் கிடந்ததாக இன்மர் நீலழகனுக்குச் சொன்னார். எண்திசைத் தோளன் சித்தம் தெளிந்து ஒருங்க ஏழுநாட்கள் ஆகியது. மருத்துவர்கள் அவனது சித்தம் ஒரே நினைவால் மீள மீளச் சுழல்கிறது. அதுவே அனலென்றாகி மேனியைக் காய்ச்சலாக்குகிறது எனக் கூறினர்.
ஏழாவது நாள் அந்தியில் நீலழகன் எண்திசைத் தோளனின் நெற்றியைத் தொட்டு வருடினான். “தோளனே, நமது படை முழுவதும் திரட்டிச் சென்றாவது அவர்களை வீழ்த்துவோம். ஆனால் நீயின்றி அவர்களை நாம் வெல்ல முடியாது. உனது கரங்களின்றி நான் யுத்தம் புக இயலாது. எழுந்து வா. உன் ஆழங்களில் இருளென நிறைவது பொருளற்ற அச்சங்கள். உனது சினத்தின் கொடிக்கயிற்றைப் பற்றியபடி மேலேறி வா” எனச் சொல்லிச் சொல்லி அவன் தலையை வருடியபடி இருந்தான். அடுத்த புலரியில் எண்திசைத் தோளன் விழித்துக் கொண்டான். அவனது உடல் மீண்டு வருகிறது என்ற செய்தி வனக்குடிலில் பரவியது.
எண்திசைத் தோளன் அவைக் கூடத்தில் வந்தமர்ந்த போது அனைவரின் விழிகளும் தன்னையே மொய்க்கின்றன என மெய்ப்புக் கொண்டான். விழிதூக்கி அவர்களை நோக்க இயலாமல் தலை தாழ்ந்து கொண்டான். உதிரர் மெல்லிய புன்னகையுடன் “போரில் நிகழ்ந்தவற்றை எண்ணி வருத்தமுறுகிறாயா தளபதி” என எண்திசைத் தோளனை நோக்கிக் கேட்டார். அக்கேள்வியால் மின்பட்டவன் போலத் துள்ளியெழுந்தான் எண்திசைத் தோளன் “எனக்கு வருத்தமென ஏதுமில்லை என இச்சபை அறிக. அவர்கள் நம் குடிகளைக் கொன்றழிப்பவர்கள். நமது நெறிகளுக்கு உட்பட்டே நாம் அவர்களது குடிகளைக் கொல்வதில்லை. அதற்கும் ஓர் எல்லை உண்டென அவர்கள் அறிய வேண்டும் உதிரரே. நான் அப்போரில் உணர்ந்த வெறியென்பது நான் என்றும் என் ஆழத்தில் உணர்கின்ற ஒன்று தான். முழுக்கொலை வெறி. இருள் வீரர்கள் அவ்வெறியிலிருந்தே தமது ஆற்றலை அடைகின்றனர் என்பதை அவர்களைப் போன்றே கொலைவெறியாட்டு எனக்குள்ளும் எழுந்த போது உணர்ந்தேன். நான் அச்செயல்களுக்காகக் குற்றவுணர்ச்சி அடையப் போவதில்லை. மடாலயத்தின் துறவிகளைக் கொன்ற போதே என் உளம் துணுக்குற்று அடங்கியது. அவர்கள் எந்நாளிலும் நமக்கெதிராக போர்வெறி கொண்டவர்களில்லை. அவர்கள் முகத்தில் தழைந்த சாந்தம் நான் பூண்டு கொள்ள விரும்பும் அணி. ஆனால் இனியொருபோதும் நான் அப்படி ஆகப் போவதில்லை. திரும்ப முடியாத குற்றங்களைப் புரிந்து விட்டேன். நீங்கள் அதற்கு என்ன தண்டனை கொடுக்கிறீர்களோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” எனக் கூறிய எண்திசைத் தோளன் மரப்பெட்டியில் கற்பாறையெனச் சத்தமிட்டபடி அமர்ந்து கொண்டான். தீப்பந்த வெளிச்சத்தில் அவன் முகம் வெறியில் உறைந்தது போலிருந்தது. நீலழகன் மெல்லிய குரலில் “இனி இப்படியான கொலைகள் நிகழக் கூடாது. நமது அறங்களை நாம் காப்பதென்பது நமது வாள்களை நம்பும் நமது குடியைக் காப்பதைப் போன்றது. சிங்கைக் குடிகள் நம் எதிரிகள் அல்ல. நாமும் குடிகளைக் கொல்லத் தொடங்கினால் அவர்களின் படைபலம் இருமடங்காய் உயரக் கூடும். இப்பொழுது அவர்களிடமிருப்பது வெறி கொண்ட ஊதியப் படை. அதுவே தம் குடி காக்கும் படையென உருக்கொண்டு எழுந்தால் மாபெரும் ஆற்றல் கொள்ளும். அளவில் சிறியவர்களானாலும் நமது படையின் ஆற்றல் அவ்வெண்ணத்தினாலேயே வெல்லப்பட முடியாததாகின்றது. நடந்தவைகளை ஒழிந்து. நம் அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். யாகுப ரூபவின் தாக்குதல் வெற்றி பற்றிய பாடல்களைப் பாணர்களைக் கொண்டு இயற்றுக. மன்றுகளும் திண்ணைகளும் அதன் உக்கிரத்தையும் நியாயத்தையும் பாடுக. பிறவற்றை அப்பாடல்கள் பாடாதிருப்பதை உறுதி செய்க. அவ்விதம் சிங்கைகளின் குடிக்கொலை பற்றியோ மடாலயம் பற்றியோ பாடல்கள் புனைபவர் எவெரேனும் இருந்தால் அவர்களைச் சிறையிடுக” எனக் கூறினான் நீலழகன். சிலகணங்கள் உதிரரும் இன்மரும் உறைந்தனர். எண்திசைத் தோளன் மெல்லிய சிரிப்பு உதட்டில் எழ அவையை நிமிர்ந்து நோக்கினான். நீலழகன் எழுந்து நின்று இருளை நோக்கிக் கொண்டிருந்தான். அவன் குழல் காற்றில் சுழன்று தழைந்து கொண்டிருந்தது.