34: ஏழு அன்னையர்
அழியும் ஒரு துளி அழிவே மீதொரு அழிவின் முதல் துளியாகியது. அழிவில் எஞ்சும் அழியாத ஒன்றே விழைவென உருக்கொண்டது. அது காக்கையெனக் கருஞ்சிறகுகள் விரித்து கூர் கரும் அலகுகள் மின்ன கொழு கரும் விரல்கள் கொண்டு ஒவ்வொரு இச்சையையும் தூக்கி அகாலத்தில் எறிந்தது. எறிந்ததைக் கொத்திக் கூடிப்பகிர்ந்துண்டது. அலகில் எஞ்சியவற்றை மேலும் அலகெனப் பகுத்துப் பரிமாறியது. கருமையின் குழவியே அழிவின் சிறகென எழுந்து காக்கையாகியது. காக்கையே உனது வாகனம். காலங்களை நீ ஏறிவரும் நூதனம். கா எனக் கரையுமொலி காலமென்றாகுக. கா ஓர் ஊழ்கச் சொல்லென விதையானது. அச் சொல் பல்லாயிரம் முறை கரைந்து கரைந்து காகங்கள் ஆகின. அவை இடைவிடாது அலகுகளை உரசிக் கொண்டன. இச்சைகள் தம் நிறத்தைக் கருமையெனச் சூடியது அங்கனம் என அறிந்து உளம் திகழ்ந்து நின்றார் ஆடற் சித்தர்.
*
சீவித் தனித்துண்டுகளாக்கி விதை நீக்கிய மாங்கனிகள் தேனில் ஊறிய பலாச் சுளைகள் வாழைப்பழங்கள் அன்னமுன்னாப் பழங்கள் கொய்யாக் கனிகள் மரமுந்திரிக் குலைகள் வெல்லம் கலந்து உருட்டப்பட்ட விளாம்பழ உருண்டைகள் என பழங்களை அரிந்த கலயங்களையும் பனங்கிழங்கு, சீனிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்குகளின் வேகவைத்த கிழங்குகளைக் கொண்ட கலயங்களையும் அரிசிமாவில் செய்த அப்பங்களும் தேனும் பனங்கட்டியும் இட்டுக் காய்ச்சிய சுடுபாலும் மூங்கில் குழாய்களில் வேகவைத்த அரிசிமாப் பிட்டும் ஆவிபறக்க உணவு வண்டிலுடன் வந்தான் ரூபகன். துறவிகளுக்கான குடில்களின் நடுமுற்றத்தில் வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது. நெடுத்து வளர்ந்த வேம்பின் நிழற்கரங்கள் அம்மணல் வட்டத்தைக் குடையெனத் தாங்கின.
இருபது வாழையிலைகள் அடுக்கப்பட்டு துறவிகள் அழைத்து வந்து அமரக் கோரினான் ரூபகன். “இன்னும் இருவர் உண்ணும் படி இலைகளை ஒருக்குங்கள்” எனச் சொன்னார் மகாசோதி. ரூபகன் தலையசைத்து இலைகளை இட்டான். அவை நீரில் அலம்பிக் குளித்து வடிந்தன. சூட்டில் விழிபிதுங்கிய மூங்கில் குழல் பிட்டுகள் இலைகளில் இடப்பட்டன. நீராவிச் சுழல் எழுந்தது போல் பிட்டிலிருந்து நீராவிப் புகை பரவியது. அருகே கனிகளில் ஒவ்வொன்றும் பிறைவடிவில் அடுக்கப்பட்டன. ஒவ்வொரு இலைக்கும் முன்னே மூங்கில் குவளைகளில் சுடுபால் உற்றப்பட்டது. குடிநீர்க்கலயங்கள் ஐவருக்கு ஒன்று என வைக்கப்பட்டு மூங்கில் குவளைகளில் நீரும் வார்க்கப்பட்டது. வேகவைத்த கிழங்குகள் முன்னே பரப்பி வைக்கப்பட்டன. மகாசோதி சிரித்துக்கொண்டே “இதையெல்லாம் துறவிகள் உண்டால் நாளையே துறவைத் துறந்து விடுவார்கள் நண்பரே” என வேறுகாடாரிடம் சொன்னார். “நாவுக்குத் துறவில்லை நண்பரே. நாம் உணவை ஒறுப்பது அதை எவ்வளவு அடிவயிற்றிலிருந்து விரும்புகிறோம் என அறிய. வயிறு நிறைவதை நோக்குங் கால் மனிதர் அறியும் ஒரே நிறையுணர்வு உண்டியே எனத் தோன்றும்” என நகைத்துக் கொண்டு சொன்னார் வேறுகாடார். இளம் பாணன் பிட்டில் பாலைக் கலந்து மாங்கனியையும் வாழையையும் பினைந்து குழைத்து வாயை நிறைத்தான். தொண்டையால் உணவு செல்வதை நோக்கி நோக்கி நாவைச் சப்புக் கொட்டினான். கிளியின் சொண்டு போல் வளைந்திருந்த மாங்கனியின் சுவையை உண்டபின் ஒரு முழு மாங்கனியை மெல்ல மெல்லச் சுவைத்து உண்டான். மரவள்ளிக் கிழங்கை எடுத்துக் கடித்து அதன் சூடு தாங்காமல் பால் குவளையை வாயில் கவிழ்த்தான். சுடுபாலின் சூட்டில் வாய் அவிய நின்றவனை நோக்கி வேறுகாடாரும் மகாசோதியும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர். “நீங்கள் சொல்வது இப் பாணரைப் பொறுத்த வரையில் மெய்தான் நண்பரே. அவர் உண்ணும் அழகை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்” எனச் சொன்னார் மகாசோதி. இளம் பாணன் எதுநேரிடினும் அச்சமின்றி உணவை ருசித்து ருசித்து உண்டான். பிட்டின் நீராவி மணத்திலும் கனிகளின் இன்மணத்திலும் கிழங்குகளில் விரியும் நீராவியும் பாலின் ஆவியும் கலந்து நறுமண ஆவிப்பெருக்கை இளம்பாணனின் நாசிக்குள் நிகழ்த்தியது. இளம் பெண்ணின் கன்னமென அப்பத்தைக் கிள்ளிப் பார்த்து அதை மடித்து இன்னொரு நாவுக்கு முத்தமிடுபவன் போல் வாய்க்குள் செலுத்தினான். வெண்ணெய் உருகுவது போல் அவன் தொண்டைக்குள் அப்பம் கரைந்து நழுவியது. ஒவ்வொரு துளியையும் எச்சிலுடன் குழைத்து நா திளைக்கத் திளைக்க உண்டு களித்தான். குழந்தையின் களியாட்டு உண்கையென அவன் விரல்களில் ஒவ்வொரு உணவினதும் ஒரு பருக்கையோ துளியோ எஞ்சியது. இறுதியாகக் கையை உண்பவனைப் போல் அதை உறிஞ்சினான். அதன் பின்னரே உலகென்ற ஒன்று அங்கிருப்பதை அறிந்து மென்நாணம் கொண்டான்.
கழுவுநீர்க்கலயத்தின் முன் குனிந்து நீர் மொள்ள முடியாமல் நின்ற இளம் பாணனுக்கு மகாசோதி மென் புன்னகையுடன் மூங்கில் குவளையில் அள்ளி நீரூற்றினார். “உணவு நிறைவளித்ததா பாணரே. இந்த மண்ணின் சுவை உம் நாவில் தொட்டுவிட்டால் மண்மகள் உம் நாவில் குடிகொள்வாள். உணவே ஒரு குடியை அளக்கும் முதன்மை அளவுகோல் என என் ஆசிரியர் சொல்லுவார்” எனப் புன்னகை மாறாமல் சொன்னார். கழுத்து வரை நிரம்பிய நீரிற்குள்ளிருந்து மீனின் குரலென இளம் பாணனின் சொற்கள் மேற்தளத்தில் பொருளாகாமல் உதட்டுக் குவிவென எஞ்சியது. பிறகு அனைத்து உணவிலிருந்தும் சிறுதுளி ஆவியெனப் பிரிந்து வாயால் வெளியேறியது. “நல்லது. காற்றிற்கும் கொஞ்சம் உணவளித்தாய். உன் கொடை வாழ்க” என வேறுகாடார் உரக்கச் சிரித்தபடி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். மகாசோதி “நண்பரே, நாம் பட்டினத்தில் உள்ள மடாலயத் துறவிகளைச் சந்திக்கச் செல்வோமா” எனக் கேட்டார். “நல்லது போகலாம் நண்பரே. நம் இளம் பாணர் உண்டு முடித்து விட்டால் எங்கும் செல்லலாம். இத் திருவிழாவில் நானே அவரது தந்தை. கையை விட்டேனென்றால் காணாமல் போய்விடுவார்” எனச் சொல்லி உதட்டைக் குவித்து உடலை முறுக்கினார். இளம் பாணன் குரல் நாண்கள் மீண்ட யாழென “எங்கும் செல்லலாம். இனி மூநாளுக்கும் உண்டி தேவையில்லை” எனச் சிரித்துக் கொண்டு சொன்னான்.
வண்டில்களை ஒருக்கச் சொல்லி ரூபகனிடம் சொன்னார் மகாசோதி. பட்டினத்தின் மையப் பகுதியில் புத்த துறவிகளுக்கான மடாலயம் ஒன்றை நிறுவியிருந்தான் நீலழகன். உதய பூர்ணிகரே அதனைத் திறந்து வைத்தார். அங்கிருந்து தமிழ்க்குடிகளுக்கு புத்தரின் போதனைகளும் வாழ்நெறிகளும் பயிற்றுவிக்கப்பட்டன. மகாசோதி “குறைவானவர்களே புத்தரின் நெறிகளைப் பின்பற்றுவதாக மடாலாயத்தின் தலைமைத் துறவி சேதி அனுபியிருந்தார்” எனப் புன்னகை மாறாமல் வண்டிலில் அமர்ந்தபடி கேட்டார். “நீங்கள் உண்டியைச் சுருக்கச் சொல்லுகிறீர்கள். ஆசைகளைக் கைவிடச் சொல்கிறீர்கள். பற்றை அறுக்கச் சொல்கிறீர்கள். இது மூன்றிலும் தான் இக்குடியே வேர் ஊன்றிக் கிளை பரப்பில் விழுது விட்டிருக்கிறது நண்பரே” எனச் சிரித்தார் வேறுகாடார். “தமிழ்க்குடியின் நாவில் சுவையும் நனவில் கனவும் புறத்தில் பற்றும் மூன்று புலனாகாத கயிறுகள். அவர்கள் நாவின் பற்றை ஒறுப்பதை புத்தரென்ன ஈசனே வந்து கேட்டாலும் நிகழாது. ஆசைகளின் குழவிகள் இந்த மக்கள். அவர்களின் எளிய கனவுகள் கூட ஈடேறாதவை. அவர்களின் கனவுகள் என்றாவது வயிறு நிறையும் உண்டியைப் போல் நிறையுமானால் அவர்கள் ஆசைகளை விடுவதைப் பற்றி யோசிக்கக் கூடும். மூன்றாவது பற்று. குடிகள் பற்றினாலேயே திரள்கள். அல்ல என்றால் தனித்துமிகள். துமிகளாகும் போது அச்சம் மேலெழுந்து விடும். அரட்டைப் பிரியர்களே பற்றைப் பற்ற வைப்பவர்கள். மண் மேல். மக்கள் மேல். குடிப் பெருமைகள் மேல். பொருள் மேல். பொருளுண்டாக்கும் தினவு மேல். தினவு கொடுக்கும் தைரியத்தின் மேல்.. என மேல் மேலாக அடுக்கப்பட்ட பெரும் பற்றுக் கோபுரம் இக்குடி. பற்றையும் ஆசையையும் அறுத்து விடச் சொன்ன உங்களை இன்னமும் மண்மேல் அனுமதித்திருப்பதே பிறரை மதிப்பதும் மாற்றுத் தரப்பைக் கேட்பதும் அறமென அவர்கள் ஒழுகுவதால் தான். இல்லையென்றால் புத்தர் ஞானமடய என்ன உணவு உண்டார் எனத் தான் அவர்கள் சிந்தை செல்லும்” எனச் சொல்லி நகைத்தார் வேறுகாடார். “தமிழ்க் குடிகளின் தத்துவ விவாத மரபுகளை நீட்டிப்பது புத்தம் அளிக்கும் முதற் பெருங் கொடை நண்பரே. நீங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மையான மரபையும் பண்பாட்டையும் உங்களுக்கென ஆக்கிக் கொண்டு விட்டீர்கள். அவை விவாதிக்கப்பட்டு மறுசீரமைப்பது காலத்தின் மறுக்க முடியாத இயல்விசை. தன்னை மீள மீளத் தொகுத்தும் பகுத்தும் கொள்ளாத குடிகளுக்கு மண்ணில் எதிர்காலமில்லை” எனக் கவலை ஒரு கீற்றென எழும் குரலில் சொன்னார் மகாசோதி.
“அதற்கான காலம் திரள்கிறது என எண்ணுகிறேன் நண்பரே. அளப்பரிய விலைகளை மண்ணின் பொருட்டு இக்குடிகள் அளித்திருக்கிறார்கள். அவர்கள் விழைவுகளின் பெருங்குழைவு பெரும் போர்களை ஆக்கி நடத்தியிருக்கிறது. எங்கேனும் ஒரு மின்மினியென இருட்டில் அவர்களில் ஒளி தேடும் ஒருவனோ ஒருத்தியோ எழுந்து மிதக்கக் கூடும். அவர்களே இக்குடியின் வெளிச்ச வால்கள். எமது காலம் முடிந்து விட்டது. எதனாலும் கழுவ முடியாத குருதி கொண்டிருக்கின்றன கரங்கள். எங்கும் திடுக்கிடும் கனவுகளிலிருந்து விழித்தெழும் தாய்மாரும் இளம் மனைவியரும் குழந்தைகளும் இரவுகளை ஊடறுத்து ஒலிக்கின்றனர். சித்தம் பிறழ்ந்தவர்கள் முழுமதி நாளிலும் அமாவாசையிலும் ஆழிகளின் கொந்தளிக்கும் அலைகளென நகர் நுழைகிறார்கள். தலை விரி கோலத்தில் ஊழிக் கூத்தை ஆடுகின்றனர். அச்சமூட்டும் சொற்களை விசிறி எறிகின்றனர்.
மூன்று பருவங்களுக்கு முதல் வந்த முழுநிலா நாளில் ஏழு முதுபெண்டிர் அரண்மனை முற்றத்தின் முன் நின்று வசவும் வாக்குமாக தொல்மொழியில் சுழன்றாடினர். ஒருவர் சிகையை இன்னொருவர் பற்றியிழுத்து அறுத்தனர். மரத்திலேயே காய்ந்து தூங்குவன போன்ற முதுபழமுலைகளைக் குறுவாள்களால் கீறினர். மண்ணில் தலையை மோதி மோதி விழுந்தனர். அவர்ளில் ஒரு முதுபெண் எழுந்து அரண்மனை வாயிலில் தலையை அறைந்து குருதிசொட்ட நினைவிழிந்து வீழ்ந்தாள். அவர்கள் மாரிலறைந்து பேரொலியுடன் குரல் எடுத்த போது வாயில் காவலர்கள் குலைகள் நடுங்கின. உதிரம் உறைந்து கட்டியாகியது.
முதுபெண்டிர் மார்புகளில் குருதி சீறச் சீற மேலும் மேலும் சித்தம் பேதலித்தனர். முதுபெண்டிர் ஒருவரை ஒருவர் அறைந்தனர். விலாக்களில் ஏறி மிதித்தனர். கால்விரல்களைக் கடித்து நகங்களையும் மண்ணையும் துப்பினர். அவர்களின் வாய்களை மேலிருந்து நோக்கிய காவல் வீரர்கள் அதன் பின் பணிக்குத் திரும்பவேயில்லை. கொல்லன்னைகள் நுழைந்துவிட்ட மண் என ஆகிவிட்டது. இனி மீள்வில்லை என அகம் சொல்லிச் சொல்லிச் சலிக்கிறது. எத்தனை இழந்து விட்டோம் நண்பரே.
ஏழு பெண்டிரும் விடியலின் முதல் ஒளி எழுந்த போது ஆழிக்கரையை நோக்கி நடந்து ஆழியுள் புகுந்தனர். அவர்களைத் தொட்டு மீட்க எவருக்கும் துணிச்சலிருக்கவில்லை. மேனியெங்கும் செம்மண்ணும் குருதியும் படிந்துறைந்து நரைக்கூந்தலில் செந்நிறம் தீச்சலாகைகள் எனக் கூர்ந்திருந்தன. குடிகள் கடற்கரை மணலில் மண்டியிட்டு அழுதனர். பிழை பொறுக்க அன்னையரே என அடிவயிற்றிலிருந்து கத்தினார்கள். கத்திக் கத்திக் குரல் நாண் அறுந்து மயங்கி வீழ்ந்தார்கள். ஏழு அன்னையரும் பிற குடிகள் எவர் சொல்லும் கேட்காத வெறும் கடல் வெளியில் ஒருவர் பின் ஒருவராக பலிமேடைக்குச் செல்பவர்களென நடந்தார்கள். அறியாத குரல்களைக் கேட்டு செவிகூர்ந்தவர்களென அவர்கள் முதுமுகங்கள் சுடர்வீசியெரிந்தன. தெப்பங்களும் மரக்கலன்களும் கரைதிருப்பிக் கட்டப்பட்டன. குழந்தைகளையும் இளையவர்களையும் மனைக்குள் செல்லும்படி முதியவர்கள் அடித்து இழுத்துச் சென்றார்கள். கடற்கரை ஓர் ஓலவெளியெனச் சீறி நுரைத்தது. காகங்களும் பருந்துகளும் கரையிலும் வானிலும் சுழன்று சுழன்று பறந்தன. காகங்கள் கரைந்து கரைந்து ஆயிரக்கணக்கான காகங்களால் ஆழிக்கரை கரைதலோலமென எழுந்து குடிகளுள் அச்சம் காக இருள் எனப் படர்ந்தது. காகங்கள் அச்சமூட்டும் கொல்தெய்வங்களென ஆகின. அதன் ஒவ்வொரு கரைதலும் போரில் உயிர் நீத்த ஒவ்வொரு வீரனதும் வீராங்கனையினதும் இறுதிச் சொற்களெனப் பருக்கைகள் சிதறி உலர்வது போல் கரையில் ஒட்டின. ஏழு அன்னையரில் முதலாமவர் கடலில் தலை தாழ்ந்து மறைந்த போது கதிரவன் எழுந்திருக்கிறான். கடலோடிகள் கடல் அன்னையை நோக்கி வீழ்ந்து படுத்துக் காத்தருள்க தேவியே எனக் கூவினார்கள். இரண்டாவது தாய் கடலுற்ற போது முதுபெண்டிர் நரைக்கூந்தல் புரள மண்ணில் அறைந்து வான் நோக்கி நிமிர்ந்து செய்தவை பொறுக்க வானே மண்ணே எனப் பிலாக்கணமிட்டார்கள். மூன்றாவது தாய் கடல் தாழ்ந்த போது இளம் தாய்கள் தங்கள் முலைகளில் குருதியெனப் பால் சுரப்பதைக் கண்டு அஞ்சி மனைகளுக்குள் ஓடிக் குழந்தைகளை அணைத்துக் கொண்டு நடுங்கினார்கள். நான்காவது அன்னையை ஆழி சூழந்த போது ஆடவர் தம் வில்களிலிருந்து நாணை அறுத்தனர். வேல்களை மண்ணில் தலைகுற்றிப் புதைத்தனர். பின் விரக்தி மண்டிய விழிகளால் அக் கடலை நோக்கினர். ஐந்தாவது அன்னை ஆழிமூழ்கிய போது காகங்கள் எழுந்து மனைகளின் மேலே குதித்துப் பறந்து ஓலைகள் காற்றில் எழுந்து சுழல்காற்று எழுந்தது போல் குடிமனைகள் கிளர்ந்தெழுந்தன. சிறுவர்களும் இளம் பெண்களும் அச்சத்தில் செய்வதறியாது மனைக்குள் ஓடித் திரிந்து நிலைமறந்தனர். ஆறாவது அன்னை ஆழிவற்றிய போது கடற்கரையிலிருந்து ஒவ்வொருவரும் ஓடி நகருக்குள் ஒளியத் தொடங்கினர். அன்னையரின் நிழல்களெனக் காகங்கள் குடிகளைத் துரத்தி வந்தன. ஆட்களற்ற கரையில் நின்று கடைசியாய் கரை நீங்கிய திமிலர் ஏழாவது அன்னை திரும்பி விழிநிலைத்து அரண்மனையை நோக்கினாள் என்றார். அவள் விழிகள் உதிரச் சிவப்பாய் மின்னின. நரைக் கூந்தலில் கடல் நீரோடியது. தோலின் சுருக்கங்கள் மின்னியது. ஒருகணம் தலையை ஓங்கி ஆழியில் அறைந்து நீலக்கருமிருளில் புகுந்து மறைந்தாள். ஏழு அன்னையரதும் உடலங்கள் கரைதிரும்பவில்லை நண்பரே.
இந்தக் இக்களியாட்டு அந்த ஏழு அன்னையரளித்த கொடுங் கனவிலிருந்து மீளவே. சிறுவர்களினதும் இளம் பெண்களினதும் கனவுகள் முடிவேயில்லாமல் ஒற்றைக் கண் கொந்திய காகங்கள் சிறகுகள் எரிந்து வீழ்கின்றன. அவை மானுட உடலும் காகத் தலையும் கொண்டவையாக எழுகின்றன. சிறுவர்கள் விளையாட அஞ்சி செக்கருக்கு முன்னர் மனைகளில் ஒடுங்குகின்றனர். இளம் பெண்கள் நெஞ்சில் இன்னதென்று அறியாத நெடுவலியெழ இரவுகளில் படுக்கைகளில் புரள்கிறார்கள். தாகம் தாகமென நீர் மொண்டு குடிக்கிறார்கள். உள்ளிருக்கும் ஆன்மாக்களுக்கும் சேர்த்தென பேருண்டி கொள்கிறார்கள். ஆடவர்கள் கைகள் வலுக்குன்றியிருக்கின்றன. தீயிலையும் கள்ளும் முவ்வேளை உணவென புகைத்தும் குடித்தும் அலைகின்றனர். காடுகளில் வேட்டையாடுகின்றனர். அவர்களின் கொல்வெறி கண்டு விலங்குகள் அஞ்சியொளிகின்றன. மன்றுகளிலும் சத்திரங்களிலும் சிலந்திகளும் பல்லிகளும் குறிசொல்லும் உயிரிகளென உலவின. ஒவ்வொரு பல்லியின் இச்சும் ஒரு வாக்கெனக் கேட்டது. துர்ச்சொல் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு இச் விழுந்தது. சிலந்திகள் பின்னிய வலைகளைத் தாமே அறுத்து தாமே பின்னி முடைந்து கொண்டேயிருக்கின்றன. கிழவர்கள் சுடலைகளில் கள்ளருந்தி ஒருவரை ஒருவர் தாக்கி விழுகின்றனர். மந்திரக் குறிச் சடங்குகளும் பலிகளும் நேர்த்திகளும் பெருகியிருக்கின்றன. சித்தம் பிறழ்ந்த ஒருவரையேனும் எதிர் கொள்ளாத நாளொன்று இப்பட்டினத்திற்கு இல்லாமலாகி இருக்கிறது. அவர்களோ மண் மேல் எழுந்த நாகப்பித்துகள் என காண்பவரை அச்சுறுத்தும் மொழியை ஒன்று போலவே உச்சரிக்கிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் சித்தம் பிறழும் சில கணங்களாவது நிகழாமல் கடக்கும் நாட்கள் அரிதாகி வருகிறது. அரசன் நெஞ்சின் புண் வழிந்து பெருகி உடலென ஆகுபவன் என அழிந்து கொண்டிருக்கிறான். அரசி அரண்மனையின் நிழலென அங்கேயே உறைந்து விட்டார். எல்லைகளில் சிங்கை வீரர்கள் குடிலமைத்து களியாட்டு புரிகிறார்கள். போர் புரிய சித்தமில்லை. போருக்குக் கொடுக்கப் பிள்ளைகளும் இல்லை. குடிகள் தமது நிழலைத் தாமே அஞ்சி வெளிச்சத்தில் நடக்க ஒண்ணாத நாளும் வருமெனக் கற்பனையிலாவது நாம் கண்டதுண்டா நண்பரே. இருளில் இருளென வாழும் குடிகள். நாகர் உலகு மண்மேல் எழுந்தது. மனைகள் ஒவ்வொன்றும் புற்றென ஆகிற்று.
அதனாலே கள்ளும் மதுவும் தீயிலையும் வற்றாமல் ததும்புகிறது. அக்காட்சியைக் கண்ட குடிகள் சித்தம் அக்காட்சியைத் தம் அழிவெனக் கொண்டனர். அதைக் கதைகளாய்க் கேட்ட குடிகள் அதை ஓர் அழிவாக்கென நெஞ்சில் உருட்டினர். பாணர்கள் சொல்மீட்ட அஞ்சி மதுச்சாலைகளில் கிடக்கின்றனர். நானும் அஞ்சுகிறேன் நண்பரே. நான் கழுவப்படாத குருதிகளின் உடல் என உணர்கிறேன். எனது நெறிகள் எங்கே தவறின என்பதை விரிந்து விரிந்து பெரிதாகும் பூதமொன்றின் ஒவ்வொரு மேனிமயிரெனவும் காண்கிறேன். அதன் பேருருவம் என்னை அச்சுறுத்தவில்லை. அதன் இருப்பே என்னை நிலைகுலையச் செய்கிறது. எஞ்சிய வாழ்வு அப்பூதத்திடம் தலைகொடுக்கும் காலமென்பது மட்டுமே. நான் துறப்பவனல்ல நண்பரே. நான் துறப்பது எளிது. ஆனால் சூடுவதே அறம் என எண்ணுகிறேன். நான் இந்தக் குருதியைச் சூடுவேன். என் விழைவுகளின் எல்லைகளை அறியாத விசைகளை எழுப்பி விட்டேன். இனி அவை என்னை அறுத்துக் கொல்லட்டும். அதுவரை நீளும் காலத்தின் பின் நான் எட்டாவது அன்னையென நின்றிருப்பேன்” என வேறுகாடார் பித்தோய்ந்தவர் எனச் சொல் முடித்தார். மகாசோதியின் முகத்திலிருந்த புன்னகை கீற்றுக் குறையாமல் ஒளிர்ந்ததை நோக்கிய இளம் பாணன் உடலில் மெய்ப்புல்கள் எழுந்தன. தன்னைச் சுற்றிலும் களிகொண்டு ஆடிச் சிரிக்கும் குடிகளை நோக்கினான். இருள் சூழ்ந்த பட்டினத்தின் பேய்க்களியென அவன் உளம் பதைபதைத்தது. ஒவ்வொரு குழவியின் முகமும் சுடுகாட்டின் சாம்பலென அவனை வந்தறைந்தது. பெண்களின் சிரிப்பில் பிணமெரியும் வாடை காற்றை நிறைத்து மூச்சு முட்டியது. ஆடவர்கள் நரமாமிசம் உண்ணும் கொல்விலங்குகள் போல் தோற்றம் கொண்டனர். அவன் உண்ட உணவு குருதியும் நிணமுமென எழ வாய் ஓங்காளித்து உணவைக் கொட்டினான். உடல் முழுவிசையில் எழுந்து பிரண்டான். மகாசோதி அவனைப் பிடித்துக் கொண்டார். “அமர்க பாணரே. நீங்கள் இப்போது காண்பவை ஒரு உளமயக்கு மட்டுமே. இவர்கள் இவர்களறியாத விசைகளின் திவலைகள் மட்டுமே. அறியாமையால் விழையும் எதுவும் கொடியதல்ல. அறிந்தவர் இயற்றுவதே குற்றம். அறிய அறிய நீங்குவதும் குற்றத்தின் இயல்பே. நீங்கள் உங்கள் அகக்காட்சிகள் அளிக்கும் சித்திரங்களால் சித்தம் பேதலிக்கக் கூடும். இந் நிலத்தின் கதைகளைச் சித்தமிழக்காமல் இதுவரை ஒருவரும் கேட்டதில்லை. குடிகளே மறந்து விடத் துடிக்கும் வாழ்க்கை அவர்களது. அது அவர்கள் தேர்ந்து கொண்டதல்ல. கையளிப்பட்டது. இங்கு முடிவிலாது கையளிக்கப்படும் வரலாற்றின் சுமைகளால் அவர்கள் நத்தைக்கூடுகளென வீங்கியிருக்கிறார்கள். இப்பொழுது தம் கூட்டைச் சுமக்கச் சக்தியற்ற நத்தைகளென உழல்கிறார்கள். அவர்களை இக்கணம் இவ்வண்ணமே காண்க. அகத்தை ஒழிக. எண்ணும் தோறும் பெருகுவதே குருதியின் இயற்கை. அதை விட்டொழிந்து நிலை திரும்புக. நிகழை ஊழ்கமெனக் கொள்க” என சாந்தமான குரலில் சொன்னார். வேறுகாடார் உடலழிந்தவர் போல் வான் நோக்கிச் சரிந்து படுத்தார்.
இளம் பாணன் மகாசோதியின் வதனத்தை நோக்கினான். காற்றுத் தொடாத நீரின் சாந்தம் அதிலிருந்தது. புறத்தை ஒறுத்து அவர் முகத்தை நோக்கியிருந்தான். மெல்ல மெல்ல அகத்தின் கொந்தளிப்புகள் தணிந்து சொற்களில் திரண்டன. “கூறுக துறவியே. இக்குடிகளை நோக்குந் தோறும் அவர்களைக் கேட்கும் தோறும் என் அகம் சொல்லிலா எல்லைகளில் வெளவால்கள் என மோதுகின்றன. ஒலியால் மோதி ஒலியால் திரும்புகிறேன். எனக்கு நீங்கள் சொல்லக் கூடியது என்ன. குருதிப் போர்க்களங்களுக்கு அறமென ஒன்றை வகுத்துரைக்க இயலுமா. நம்மைக் கொல்ல வருபவர்கள் முன் ஒருவர் என்ன செய்ய இயலும். இக்குடிகள் எழுந்தமை ஏன் என அறிந்தேன். ஆனால் ஏன் தவறுகள் புரிந்தனர். எதனால் அத்தவறுகள் மீண்டும் மீண்டும் பெருகின. எதனாலும் ஆற்ற முடியாத துயரை விரும்பி விழைபவர் அல்ல மானுடர். இன்பமே அவர்களின் விழைவு. ஆனால் எண்ணித் துணிந்தே ஏனிந்தக் கொலைகள். முடிவுறாத குருதியோலம். சொல்லுங்கள்” என நுனிக்கிளையில் பற்ற முடியாத எடை கொண்ட பறவையென வண்டிலில் ஆடினான் இளம் பாணன்.
மகாசோதியின் குரல் ஆதியிலிருந்து கேட்பது போல் ஒலிக்கத் தொடங்கியது. “பாணரே, நம் புடவி தற்செயல்களின் சொல்லிலாப் பெருக்கு என்பதை உணர்க. இங்கு எதற்கும் எவ்விதப் பொருளும் இல்லை. ஒவ்வொரு பொருளாய்த் தொட்டுப் பெயரிடுவது போல் அனைத்தையும் வகைப்படுத்தி அறிந்து ஆளும் ஆதியாசை மானுடரில் என்றும் தீராது துடிக்கும் முதல் விசை. அது ஆயிரமாயிரம் காரணங்கள் கொள்வது. ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்புது அறங்களால் மீட்டிக் கொண்டு விசை நாணைச் சுருதி குன்றாமல் பார்த்துக் கொள்வது. வகைப்படுத்தும் பொழுதே பிரிவு தொடங்குகிறது. ஆண் பெண் குழவி முதியவர் இன்மை இருப்பு ஆசை நிராசை பொன் மண் கடல் கரை சிவப்பு பச்சை நறுமணம் கொல்நாற்றம் இளமை மூப்பு உனது எனது நமது அவரது இழிவு மேன்மை குற்றம் தவறு அறம் அநீதி இன்பம் துன்பம் நோய் மூப்பு கண்ணீர் மகிழ்ச்சி பறவை விலங்கு ஒளி இருள் என ஆயிரமாயிரம் பொருள்களையும் உணர்வுகளையும் வகுத்தும் தொகுத்தும் நாம் புரிந்து கொள்ள விழைகிறோம். நம் மூளைக்குத் தருக்கம் ஒரு கூர்வாளென அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றையும் பிரிக்கும் படி இடைவிடாது அது எழுந்தபடியே இருக்கிறது. நாம் மேலும் மேலும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு செல்கிறோம். ஒன்று எங்கு ஒன்றுமிலாது எஞ்சுகிறது என நோக்க விழைகிறோம். எஞ்சலற்று மிஞ்சும் ஒன்றையும் கூட வெட்டும் ஒரு வாள் எப்போதும் எத்திசையிலிருந்தும் எவரிடமிருந்தேனும் எழும். இம்முடிவடையாத அறுத்தலும் வகுத்தலும் பிரித்தலும் தொகுத்தலும் அடிப்படை மானுட விழைவு என்பதை அறிக. அவ்வாளை உளத்திலிருந்து அகற்றும் வரை அதன் கூர் மழுங்கப்போவதே இல்லை.
அறியாத ஒரு கணத்தில் அது உன்னையும் வெட்டும். வெட்டி வெட்டி இன்புறும். உன் குருதியால் உன் வாள் துலங்கும். தருக்கம் அளவுக்கு விசைகொண்ட இன்னொன்று மானுட மூளைக்குப் போர்க்கலன் என அளிக்கப்பட்டதில்லை. ஆகவே தருக்கத்தை ஒழித்து உன் முன் திகழ்பவற்றை நோக்குக.
அறியும் விழைவு குழந்தையின் விழிகளுக்குரியவை. அவை கூர்வாள்களுக்கானவை அல்ல. அது வசீகரமான வாள் என்பதால் அதை நீங்குவதும் எளிதல்ல. பல்லாயிரம் பல்லாயிரத்தில் ஒருவரே அவ்வாளை எடுத்து மண்ணில் சாற்றி நீங்குகிறார்.
தருக்கத்தினால் பிரிந்து துண்டாகிய பல்லாயிரம் துண்டுகளை இழைத்துத் தைப்பதே அறத்தின் பணி. வாளின் பிடியென அறம் மண்ணில் நிலைக்கிறது. கூர்முனை அழியும் போது பிடியும் அழியும். அறம் மானுடர் எண்ணிய விந்தையான கற்பனை. விழைவுகள் விளைந்த அதே கருப்பையில் அறமும் பிறந்தது. அறம் நிலைநாட்டும் தோறும் உயர்வானதென்றும் நிலைத்து நீடிக்கும் தோறும் மீறப்பட வேண்டியதென்றும் மீளப் புதிதென ஆகும் தோறும் குருதியுண்பதென்றும் மூநிலைகள் அதற்குண்டு. இம்மண் மூன்றாவது நிலைக் காலத்தில் வாழ்கிறது. முதல் நிலையில் உயர் கனவுகள் என எண்ணியெழுந்தவை கொண்ட உக்கிரம் மீறப்பட்டு மேலும் ஒன்றென விரியும் தோறும் விசையுடன் குருதியை அள்ளியுண்ணும். மீளப் புதிதென ஆகும் நிலையில் இன்றுள்ள குடிகள் தாம் குடித்ததும் அளித்ததுமான குருதியை என்ன செய்வதென்று அறியாமல் நிற்கின்றனர். அதன் பொருட்டு தருக்க வாள்களைச் சபைகளில் சுழன்றுகின்றனர். மேலும் மேலும் துண்டுகளை அறுக்கின்றனர். அவை அவர்களது சதைகளே. அவற்றையே அவர்கள் உண்டு திளைக்கின்றனர். அவை தோல்களென எலும்புகளெனக் குருதியெனக் கொண்டு புத்தறம் உயிரென விளையும் காலம் சுழற்சியின் மைய விழி. அது ஒருபோதும் தன் விசையை கடந்த காலத்தின் பொருட்டு இழக்காது. கடந்ததை இழந்ததே புத்தறத்தை அடைவதென அது மேலும் ஒரு துண்டு தருக்கித் தன் பிடியை வலுப்படுத்திக் கொள்ளும்.
எனது நெறியின் கோணத்தில் இச்சொற்களுக்கு எந்தப் பொருளும் இல்லை பாணரே. நான் இந்த நிலத்தின் வேரிலிருந்தே எனது நெறியை எங்கு ஒட்டலாம் என எண்ணுபவன். எங்கு அதன் கேள்விகள் இயல்பாய் ஒட்டி மலராய் விரியும் என நோக்குகிறேன். அதன் பொருட்டு நான் குடிகளை ஆய்கிறேன். அவர்களைக் கனிகிறேன். நான் ஆய்ந்த வரையில் இவர்கள் பொறுக்க ஒண்ணாத எதையும் புரிந்தவர்கள் அல்ல. எளிதில் விளங்க முடியாத மாபெரும் பெருக்கின் சில கணங்களை அவர்கள் தம் வாழ்வளித்து அறிந்து கொண்டார்கள். அது ஒரு ஆதார விசை. அங்கிருந்து அவர்கள் எழுவது எங்கென நோக்குவதே நம் பணி. அதன் பொருட்டே நாம் அவர்களை அறிகிறோம். அளைகிறோம். காண்கிறோம். உமது சித்தம் அவர்களை இப்பருப் பெருக்கின் ஒரு குழவிக் கூட்டமென நோக்கியமையட்டும். அவர்கள் கடந்த கால அறங்களும் தருக்கங்களும் நம் சொற்களால் மேலும் விரியட்டும். ஊழ்கமென அவர்கள் அவர்களைப் பயிலட்டும். அதுவரை எளிய உடல்களெனக் களிகொள்ளட்டும். இன்புற்று எய்தட்டும்” எனச் சொல்லி வேறுகாடாரின் குழலில் விரல்களை வைத்துக் கோதினார். உடல் மெய்ப்புற்று எழுந்த வேறுகாடார் “ஓம் நண்பரே. நாம் ஒருபோதும் ஓயலாகாது. குன்றா விசையே அறம் ஆக்குபவர்களின் பணிமுறை. அறிக இளம் பாணனே, இந்த நிலமும் குடிகளும் இக்கணம் திளைப்பது அழிவின் பித்தில். அதுவே ஆதிப் பித்து” எனச் சொல்லி உடல் மலரச் சிரித்து மேனியில் மேலும் மெய்ப்புல்கள் விரிய உதடு விரித்து “வசு, உன்னை என் அறங்களின் பொருட்டுக் கொன்றேன். ஈற்றில் என் அறங்களையும் கொல்வேன். கொலை என் தொழில்” எனச் சொல்லாகத ஒலியொன்றில் அச்சொற்களை ஏற்றி அனுப்பினார் விண்ணுக்கு. வெண்ணாகம் அச்சொற்களை அருகனெக் கேட்டுக் கொண்டிருந்தது.