ஜல்லிக்கட்டு – ஒரு அசலான மாற்றத்தைக் கற்றுக் கொள்ளுதல்
தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்திற்கு உலகம் முழுவதுமுள்ள பெரும்பாலான தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழக இளைஞர்களினதும் மக்களினதும் போராட்ட நியாயத்தினை அங்கீகரித்து கவனயீர்ப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். கடந்த பல தசாப்தங்களில் ஒரு மொழியாக தமிழர் சேர்ந்து நிகழ்த்தும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் இதுவாகத் தானிருக்கும். ஈழத்தமிழர் போராட்டம் முக்கியமானது. ஆனால் இதன் அம்சமும் வடிவமும் மிக முக்கியமாக நாம் அவதானிக்க வேண்டியதென்று நினைக்கிறேன்.
இவ்வளவு கேளிக்கையான “கார்னிவல்ஸ்க் ” தன்மை கொண்ட போராட்டம் தமிழகச் சூழலிலும் சரி பிற தமிழ் பேசும் சமூகங்களிலும் சரி இதுவரை இடம்பெற்றதாகத் தெரியவில்லை. கார்னிவல்ஸ்க் என்பது பெரிய அதிகாரத்தை கேலி செய்தும் பகிடி விட்டும் கொண்டாடுவது. இப்பொழுது ஓ. பி .எஸையும் மோடியையும் தமிழக எம்பிக்களையும் கிழித்து தோரணமாக்கி தொங்க விடும் பல வசனங்களையும் படங்களையும் காணொளிகளையும் நாம் பார்த்து வருகிறோம். ஆண்களும் பெண்களும் அரச அதிகாரத்தை மிகக் கேவலமாக பேசித் தள்ளுகிறார்கள். இதற்கு ஒரு வகையில் இந்தியாவில் உள்ள ஜனநாயகச் சூழலும் காரணம். ஈழத்தில் இந்த நிலைமை வித்தியாசம்.
ஆனாலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல படிப்பினைகளை தமிழக இளைஞர்கள் தொடர்ந்தும் இந்த போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- சூழல் சார்ந்த அவர்களின் பொறுப்பு. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பல இடங்களிலும் போராட்டக்காரர்களால் பயன்படுத்தி போடப்படும் கழிவுகளை அவர்களே சுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
- மிகவும் க்ரியேட்டிவாக போராட்டத்தை பல உத்திகள் மூலம் நீர்க்க விடாமல் அல்லது சோர்ந்து விடாமல் ஏற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். மெமே கிரியேட் செய்து சும்மா சுற்றுகிறவன் என்றவரிலிருந்து முகநூல் பிரபலங்கள், கார்ட்டூன் வரைபவர்கள் வரை தமது மொத்த உழைப்பையும் இந்த விடயத்தின் ஆழத்தில் உள்ள பல அடிப்படை விடயங்களையும் வெளியில் கொண்டு வைத்து அதனை எளிமையாக ஒரு “மாஸ்” அதாவது பெருந்திரளான மக்களிடம் கொண்டு சேர்ப்பதென்பது மிக முக்கியமான விடயம். எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் போராட்டங்களிலும் ஒரு வகை வரட்டுத்தனங்களைத் தவிர்த்து கேளிக்கையும் கொண்டாட்டமுமாக குறைந்த பட்ஷம் க்ரியேட்டிவாக எளிமையாக பெருந்திரளிடம் நமது கோரிக்கைகளை முன்வைப்பது அவசியமான ஒன்று.
- உற்சாகமான பேச்சாளர்கள், பல விடயங்களையும் கவனத்திற்குட்படுத்தும் போக்கு என்பதும் முக்கியமானது. இது ஜல்லிக்கட்டுக்கு மட்டுமானதில்லை என்பதை இரண்டாவது நாள் முதல் இளைஞர்களின் பல்வேறு குரல்களினூடாக நாம் அறிகின்றோம். விவசாயிகளைப் பற்றி, மரபுகள் அழிவதைப் பற்றி, உணவு, சுகாதாரம் போன்றவற்றின் முக்கியத்துவம், உள்ளூர் அடையாளங்களை பேண வேண்டியதன் அவசியம் பற்றி பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருவது ஆரோக்கியமானது. இந்த வகையான கருத்துக்கள் ஒரு பெருந்திரளான மக்களிடம் கருத்தாக சென்று சேர்வது இந்த மாதிரி ஒரு பொதுக் குறிகாட்டியான பிரச்சினைகளின் போது மட்டுமே சாத்தியம். வாழ்க்கை முழுவதும் கத்தினாலும் கும்பல் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டு வருவது கடினம், ஆனால் சில சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அவற்றை வெகுஜன கருத்தியலாக மாற்றுவது மிக முக்கியமானது. அவற்றை செய்யும் அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த வகையான கருத்துக்களை உருவாக்குவதற்காக தமது வாழ் நாள் முழுவதும் உழைத்த பலரின் உழைப்பும் அவர்கள் உருவாக்கிய அறிவு சார் கருத்துக்களும் தான் இன்று கோஷங்களாகவும் பலமான எதிர் விவாதங்களாக உருவாக்கியிருப்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது.
- “மாஸ் மெண்டாலிட்டி ” அதாவது கும்பல் மனநிலைக்கென்று இருக்கக் கூடிய பல பொதுவான வரையறைகளை மீறி இந்த போராட்டம் இடம்பெறுவது முக்கியமானது. தமிழ்நாடு தன் மேல் கவிந்திருந்த பல தவறான அபிப்பிராயங்களை மாற்றிக் காட்டியுள்ளது. இனி தமிழ்பேசும் சமூகங்களில் இடம்பெறும் சாத்வீக அற வழிப் போராட்டங்கள் அனைத்திற்கும் ஒரு வித்தியாசமான முன்னுதாரணமாக இது மாறியிருக்கிறது. சமூகவலைத்தளங்கள் பற்றிய பொதுப்புத்தியில் உருவாகியிருந்த பல கருத்துக்களையும் இந்த மாற்றம் புரட்டிப் போட்டிருக்கிறது.
- எனது அவதானிப்பில் கடந்த எட்டு வருடங்களில் தன்னெழுச்சியாக ஈழத்தில் இப்படி இளைஞர்கள் எதற்காகவும் ஒன்று கூடவில்லை. வித்தியாவின் போராட்டம் தவிர்த்து.
இதில் தவறுகள் இருக்கலாம், இது மேலோட்டமானதாகவும் இருக்கலாம் ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள். எங்களுடைய சூழல் தமிழகத்தைப் போன்றதல்ல. இங்கே பல சிக்கல்கள் உண்டு. ஏனைய பல பொதுப்பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் இப்படி வரவில்லைத் தான், ஆனால் இளைஞர்கள் இப்படியான ஓரளவு ஆபத்துக்குறைந்த கவனயீர்ப்புக்களிலாவது ஒன்று திரள்வது, ஜனநாயகத்தை, அற வழிப் போராட்டங்களை நடத்துவது தேவையான ஒன்று. அது எதிர்காலத்தில் வளரும் போக்குக் கொண்டது. அப்படி ஆகவில்லையென்றால் கூட பரவாயில்லை, ஆனால் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை.
இந்தத் தலைமுறையில் போராட்ட வடிவங்கள் மாறத் தொடங்கி விட்டன. நாம் யாரிடமிருந்தும் நல்லவற்றைக் கற்றுக் கொள்ளலாம். அதிலெல்லாம் பெரிய தவறிருப்பதாகத் தெரியவில்லை. இனி ஈழத்தில் நடக்கும் போராட்டங்களில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கவனயீர்ப்புகளில் பங்குபற்றும் ஒரு பத்துப்பேர் வந்தாலும் அது பெரிய வெற்றியே. சும்மா இருப்பதை விட எதையாவது முயற்சி செய்து பார்ப்பது தான் நமக்கிருக்கும் ஒரே வழி.
(2017)