54: அத்திரிச் சாம்பல்

54: அத்திரிச் சாம்பல்

“துயரை தெய்வத்துக்குச் சூட்டுவதன் மூலம் தங்களில் ஒருவரென தெய்வத்தை மானுடர் கீழிறக்குகிறார்கள் பெருந் தளபதி” என்றார் முதுதேரோட்டி அரும்ப முல்லர். சத்தகன் அவரை நோக்கிப் புன்னகைத்து விட்டு “துயரா. அது போர்க்களத்தில் ஒரு ஆயுதம் மட்டுமேயல்லவா. துயரென்பது எதிரிகள் நம்மீது பாய்ச்சும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்றல்லவா நினைத்து வந்தேன்” எனச் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான். அவன் பின்னே நூறு அத்திரிகள் வண்டில்களை இழுத்துக் கொண்டு மங்கலப் பொருட்களுடன் வந்தன. திருவிழாவுக்கான மாதோட்டக் குடிகளின் சார்பான பொருட்களை ஒரு கணம் திரும்பி நோக்கினான். ஆலயப் படையலுக்கெனக் கனிகள் கிடாய்கள் சேவல்கள் முத்துகள் மங்கலச் சுண்ணங்கள் என ஒவ்வொன்றும் சுற்றி வைக்கப்பட்டு அத்திரி வண்டில்கள் மங்கலத்தாலங்கள் எனக் குலுங்கின.

மாதோட்டத்திலிருந்து பட்டினத்துக்கு நீளும் நெடும் பாதை சத்தகனின் பெருவிருப்பிற்குரியது. அதன் நிலவுரு மாறுதல்களும் வனங்களும் நீர்நிலைகளும் இயற்கையின் பல இழை வண்ணங்களும் அவனைக் குன்றா விழிகொள்ளச் செய்பவை. இயற்கையின் வனப்பின் முன் தான் ஒரு சிறுவனெனத் தன்னை உணர்வதையும் தன் மூதாதைகளுடன் கொல்வேல் கவர்தலில் துடிக்கும் தீவிரத்துடன் நோக்கி நிற்கிறேன் எனவும் எண்ணம் தோன்றக் கைகளைத் தட்டிக் குதூகலிப்பான். இயற்கை அவனுக்குத் தோழன். இயற்கையின் மூப்பு அவனது வேரின் நீள்கை. இயற்கையின் வண்ணக் குழைவுகள் காமத்தின் அழகுள்ளவை என எண்ணினான்.

“துயரை எப்படிப் போர்க்களங்களில் ஆயுதமாக்குவார்கள் தளபதி” எனத் தன் நரைத்த புருவங்களைத் தூக்கி உதட்டை விரித்துக் கேட்டார் முதுதேரோட்டி. “துயரம் வினோதமான மிருகம் முல்லரே. அதை வெல்லும் விலங்காக எண்ணுபவரும் கொல்ல வேண்டியதாகக் கருதுபவர்களும் உண்டு. சிலர் வளர்ப்பு விலங்காகக் கொள்வர். எதுவாயினும் அதுவோர் விலங்குணர்ச்சி. எந்த விலங்குணர்ச்சியும் மானுடரை வெல்லும் ஒரு கணத்தை எதிர்நோக்கியே உளத்தில் பதுங்கியிருக்கும். மகிழ்ச்சியும் துயரும் இரணைப் பிறவிகள். போரில் மகிழ்ச்சியை அறிவது வெல்கையில் அல்ல. கொன்று குருதியாடி மேலும் குருதியென எண்ணுகையில். தேர்களையும் வேழங்களையும் அடித்து நொறுக்குகையில். மழைப்பெருக்கெனப் பொழியும் அம்புகளுக்கிடையில் அவற்றை ஒழிந்து வண்டென முன்னேறி எதிரியின் முன் பல்லிளித்து அஞ்ச வைக்கையில். கபாலங்களை நொறுக்கிக் களத்தை மேலும் பயமூட்டுகையில் சொல்லெணா மகிழ்ச்சியுண்டு. நம் மேனியில் குருதி கணமிடைவெளியின்றி ஓடித் ததும்பும். சிரசின் உச்சியில் நான் எனும் பெரும் வேழத்தில் நான் எனும் மாமந்தி நெஞ்சறைந்து அறைகூவலிடும். அவ்வொலி என்னை நானே வியக்கும் ஒலி.

துயரம் போரில் என்னை அடைந்த கணத்தை இப்போது என உணர்கிறேன். துயரம் எண்ணியதும் அருகு வரும் காதலி முல்லரே. அருகு வந்ததும் உளம் கலைக்கும் ஆற்றல். பிரிந்து செல்கையில் உயிரைப் பற்றியள்ளிச் செல்லும் கரங் கொண்டவள். என் குடி மூப்பர் மடிந்த அக்களத்தில் துயரம் என் முன் ஒரு இளங்கறுப்பு நாய்க்குட்டியென வந்து நின்று விழிகள் சரித்து அவரை நோக்கிப் பின் என்னை நோக்கியது. செவிகள் சோர்ந்திருந்தன. அவரையும் என்னையும் சுற்றி வட்டமாக ஓடிவந்து நின்று மென்குரலில் வள்ளென்றது. என் விழிகள் அதுவரை நீரறியாதது. கன்னத்தில் வடிவது காயத்தின் குருதியெனவே முதலில் எண்ணினேன். குருதியின் எண்ணற்ற சூடுபேதங்களை நான் அறிவேன். கழுத்தை அறுத்துப் பெருகும் மனிதக் குருதியின் வெம்மை. புரவியினதும் வேழத்தினதும் தலைகளும் துதிகளும் அரிந்து சீறும் வெஞ்சூடு. மென்காயங்களில் வழிவது. அம்பு குற்றிய ஆழ்காயங்களிலிருந்து பீறிடுவது. அடிவயிற்றில் கதையால் அடித்து வாயால் கொப்பளிக்கும் குருதியின் குளிர் கலந்து சூடு என எண்ணற்ற வெம்மை கொண்டது குருதி. ஆனால் அன்று வழிந்த அச்சூடு அதுவரை அறியாத மென்சூடு கொண்டிருந்தது. வழிந்து பெருகும் தோறும் சூடுவற்றிக் குளிரென்றானது. பேருடலை ஒரு வெந்துளி குளிர்ந்து உறைய வைக்க இயலுமா முல்லரே. அது ஓம் என்றால் அது துயரின் கண்ணீரே. அவரை இழந்து விட்டோம் என எண்ணக் கூடவில்லை. ஒரு மரணம் அழுகையென நம்மை உலுக்க ஒருநூறு மரணங்களைக் கடந்து இரவில் கள்வரென வருகிறது. இளவயது முதல் ஒவ்வொரு மானுட மரணமும் அவ்வுடல்களும் நினைவில் பருக்களென முளைத்து அகவையைக் கூட்டுகிறது. அம்மரணங்களுக்கென சக மானுடர் சிந்தும் கண்ணீர் ஒவ்வொரு துளியாய்ச் சேர்ந்து ஒவ்வொரு உடலுக்கும் பரிமாறப்படுகிறது. எவ்விதம் கண்ணீர். எதற்குக் கண்ணீர். கண்ணீரும் குரலும் இரு நீர்நரம்புகளென ஆவது எங்கனம். பாவனைக் கண்ணீரின் உப்பின் எடையை அறிவது எங்கனம். சொல் தடுக்கி விழும் நீரின் மெய்ம்மை. சொல்லற்று அகநீர் வற்றி விழி மருளும் கண்ணீர்க் கானல். எத்தனை வகையான துயரங்கள். அதற்கென எத்தனை மேனி கொண்ட கண்ணீர்கள்.

ஹ்ம். மகிழ்ச்சியில் கண்ணீர் புன்னகையின் நீர் மட்டுமே முல்லரே. துயரிலேயே கண்ணீர் முழுமை கொள்கிறது. துயருக்கென ஊறும் சுனையே கண்ணீரின் தாய்முலை. அகம் சுரந்து அழாதவர் மானுடரல்ல. நான் முதற் கண்ணீர் சிந்தும் வரை கொல்விலங்கின் துயரில்லா மகிழ்ச்சி கொண்டிருந்தேன். துயரம் அறிந்து கொள்வதால் தோன்றிப் பெருகுவது. எண்ணிக் கொள்வதால் வற்றா ஆற்றல் கொண்டது. துயரம் நோயெனப் பீடிக்கும் வரை அகத்தை மானுடர் முழுதறிவதில்லை. உடனிருக்கும் உடலுறையும் துயரே வாழ்வில் நங்கூரமென அகத்தை நிறுத்துவது” என்றான் சத்தகன். அவனது பேருரு மங்கா ஒளிகொண்ட அருமணியென மின்னிக் கொண்டிருந்தது. குடிப்பெருக்கை நோக்கியவன் உவகையில் நிற்கிறான் என அரும்ப முல்லர் எண்ணிக் கொண்டார். புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்த தேரில் பேரெழில் கொண்ட மந்தியரசன் ஒருவனென உடலசைவுகள் கொண்டு நின்ற சத்தகனின் பெயர் அவன் குடிப்பெருக்கில் நுழைய நுழைய அரூபமான முரசறைபவர்கள் அவன் வரவை அறிவிக்கிறார்கள் என்ற தோற்ற மயக்கு அரும்ப முல்லருக்கு ஏற்பட்டது. அவர்கள் விழிவிரித்து அவன் பேருடலின் வடுக்காயங்களையும் அணிகளையும் மின்னும் விழிகளையும் புஜ வளைவுகளின் மந்திச் செருக்கையும் பொன்முலாம் பூசிய தேரின் மினுங்கலையும் நோக்கினார்கள். உச்சிச் சூரியனின் கீழ் வான்கதிரோனே வந்து தேரில் அமைகிறானென மயக்குக் காட்டினான் சத்தகன். குடிகள் அவன் பெயரை மதிப்புடனும் பணிவுடனும் உச்சரித்துக் கொண்டனர். இளம் தாய்கள் தம் மகவுகளுக்கு அவனைக் காட்டி கைவிரல்களால் தொலைவிலிருந்தே அவனை அள்ளி மகவுகளின் மேனிகளில் பூசிக் கொண்டனர். குழவிகள் அவனை விண்ணவன் என எண்ணினர். வாலிபர்கள் உடலில் குழைவு கொண்டு மேனி மெல்ல முன்வளைய நோக்கினர். இளம் பெண்கள் யாரும் நோக்காது அவனைப் பார்ப்பது எங்கனம் என விழிப்பெருக்கிடை தேடி அலைந்து கொண்டிருந்தனர். முதுபெண்டிர் அவனை வாயார வாழ்த்தி இருகரந்தலைமேல் கூப்பி வணங்கினர். கிழவர்கள் அவனது தேரின் அருகில் சென்று சொல்லாடினர். பெருந்தளபதியே பொழுதிற்காய் ஒரு மல்யுத்தம் செய்வோமா எனப் பகிடி பேசினர். அவன் அவர்களையெல்லாம் நோக்கி விழியைப் பேராயிரம் வாசல்கள் கொண்ட அரண்மனையெனத் திறந்து அவன் உடலையும் ஆவியையும் விரித்து விரித்துச் சென்றான். அவர்கள் ஒவ்வொருவரையும் தனக்குள் பாதுகாப்பவனென அகலக் கைவிரித்து ஒவ்வொரு முகங்களாய் நோக்கி இதழ் பிரித்துப் புன்னகைத்தான். சிறுவர்கள் ஓடிச் சென்று அவன் தேரில் ஏறி அவன் கரங்களில் தூங்கினர். சிறு மந்திகள் சிறுமந்திகள் எனக் கூவிச் சிரித்தான் சத்தகன். தான் சாரதியாய் அமைந்திருப்பது விண்ணவனும் மண்ணவனும் ஆன பெருங்குழவியொன்றுக்கு என அரும்ப முல்லர் விழிநீர் பெருக்கினார்.

சத்தகன் உவகையென நிறைந்து உளம் கொண்டு பட்டினத்தின் எல்லைகளைக் கடந்து உள்நுழைந்தான். அவனுள் துயரென்று அமைந்தவற்றை எல்லையிலேயே விட்டுவிட்டுக் குடிகளில் ஒருவரென ஆடும் விழைவு கொண்டான். அரும்ப முல்லர் அவனைத் திரும்பி நோக்கிச் சிரித்து விட்டு “களி கொண்டு விட்டீரா பெருந்தளபதி” என்றார். சத்தகன் தன் பெருங்கனைப்பென எழுந்த குரலுடன் “ஓம் முல்லரே. குடிகளை ஒவ்வொரு முறை நோக்கும் பொழுது யாருக்காகவுமின்றி நான் புரிந்த கொலைகள் பொருள் கொண்டு உயிர் கொண்டு அசைவதில் ஒரு உவகை எழுகிறது. நான் பொய் சொல்லப் போவதில்லை முல்லரே. நான் என் நடனமெனவே போர்க்களியாடுபவன். என்னுள் எழும் கொல்வெறிகளைக் கொன்றாடும் களம் என போர்க்களம் என் விளையாட்டுத் திடலே. ஆனால் அதற்கு மேலதிகமாய் ஒரு பொருள் எழுகையில் என் கொலைவெறி மேன்மை கொள்வது எத்தனை விந்தை” என்றான்.

“ஓம் வீரரே. உங்களைப் பற்றிய செருக்களப் பாடல்கள் சிங்கைப் படையும் தாளமிசைப்பவை அல்லவா” எனச் சொல்லி உரக்கச் சிரித்தார் முதுதேரோட்டி. அவரது சொற்களை சிரித்தபடி கேட்டவன் “ஓம் முல்லரே. அவர்கள் என் கதையில் எலிக்குஞ்சுகளெனச் சிதறி ஓடுவார்கள். கொல்வேல்களில் எத்தனை ஆயிரம் தலைகளைக் கொழுவியிருக்கிறேன். அவர்களின் பெருவீரர்களை வதம் புரிந்திருக்கிறேன். அவர்களுக்கும் நான் பெருவீரனே. ஒரு வீரன் வியப்பது பெருவீரனை மட்டுமே. புடவியில் அதை மிஞ்சி அவன் வியக்கும் பிறிதொன்றில்லை” என்றான் குழவிச் சிரிப்புடன்.

“நல்லது பெருந்தோளரே. நீங்கள் அப்படி வியக்கும் மாவீரர் யார்” எனக் கேட்டார் முதுதேரோட்டி. அவன் முகம் ஒருகணம் உறைந்து கலைந்து விழித்தபடி “ஐயமேயின்றிச் சொல்வேன் முல்லரே. நான் களத்தில் கண்ட பெருவீரன் சிங்கைப் படையின் பெருந்தளபதி அசலவே. அவன் ஆயிரம் சிம்மங்களின் மேல் நிற்கும் பெருஞ்சிம்மன்” என்று கைகளைத் தட்டிச் சிரித்தான். அரும்ப முல்லர் அவனது பதிலால் அதிர்ந்தார்.

“என்ன சொல்கிறீர்கள் பெருந்தளபதி. அசல மாவீரனா. நம் குடிகளை அழிக்கும் சிங்கையின் கடுஞ்சிறுத்தை உங்களிற்கிணையான மெய் வீரனா. இப்படிச் சொல்ல உங்களில் நா எப்படி எழுந்தது” எனச் சினத்துடன் கூவினார் முதுதேரோட்டி. சத்தகன் அவரது சினத்தைக் கண்டு மேலும் உரக்கச் சிரித்து “முல்லரே. எதிரியை வியக்காத வீரன் போரின் களியை அறிவதில்லை. எளிய குடிகளுக்கு போர் ஒரு சேதியோலை. மடிந்தவர்களும் எஞ்சியவர்களும் வெற்றியும் தோல்வியுமே கணக்கு. ஆனால் வீரனுக்கோ அது வாழ்வை ஆடும் மெய்க்களம். எஞ்சி மீள்வது இரண்டாவது காரியம். வென்று எழுவதே அருஞ்செயல். வெல்லப்பட முடியாத எதிரியே போரின் விசையூற்று. அசல என் அக்கை ஈச்சியைக் கொன்றவன். நான் கண்டேன் முல்லரே. என் விழிகளின் முன்னே மூவம்புகளால் அவரை வீழ்த்தினான். அக்கணம் எழுந்த சினத்தில் நூறு சிங்கை வீரர்களையாவது நான் காலில் பிடித்துத் தரையறைந்து கொன்றிருப்பேன். ஆனால் அக்களத்தில் அசல அனைத்துக்கும் மேலானவரென எழுந்திருந்தார். அவர் கொல்பவர் யாரென நோக்கவில்லை. அக்கணத்தில் அவரிடம் என் விழிகளைக் கண்டேன். வெல்வதை மட்டுமே நோக்கெனக் கொண்டிருந்தார். எது வெல்லப்பட்டால் போர் விசையழியுமோ அதை வெல்பவரே பெரும் வீரர். அக்கை ஈச்சியோ அரசி நிலவையோ களத்தில் புரிவது அதையே. பெருந்தளபதி எண்திசைத் தோளரும் அப்படியானவரே. அரசர் நீலழகரும் அத்தகையவரே. அவர்கள் போரை அதன் ஆழ்வேரிலிருந்து அறுத்து வெல்பவர்கள். வெல்லும் விசையென்பது தெளிந்த விழிகளால் காணப்படுவது.

எதிரியென என் முன் எழுந்து நிற்பவர் எளியவர் அல்ல என்ற உணர்வு கொண்டு நிற்கும் போதே நானும் எளியவன் அல்ல என உணர்கிறேன். அசலவைக் கொல்லும் வெறியுடன் நூறு ஈட்டிகளையாவது அக்களத்தில் வீசியிருப்பேன். அவர் அதைப் புல்களென உதறிக் கொடுங்கனவென எழுந்தார். அவரின் எழுச்சியால் விசை கொண்ட சிங்கைப் படை அன்று நிகழ்த்திய கொலை வெறியாட்டை நான் எப்பொழுதும் அவர்களில் கண்டதில்லை. அக்களம் எனக்களித்த மெய்ம்மை ஒன்று தான் முல்லரே. களத்தில் நிற்கும் அறமென்பது போருக்கு வெளியே தான் பொருளுள்ளது. அது ஒரு குடிப்பேச்சு. போர்க்களத்தில் நின்றிருக்கும் மையவிசை எவரோ அவரே அங்கு வணங்கப்படுகிறார். அவ்வணக்கம் புலிகளிடம் கூட எழுந்தது. அவர்கள் அஞ்சி ஓடியதைப் பார்த்தேன். அக்கை கொல்லப்பட்ட பின் புலிகள் எரிதீயில் விழும் விட்டில்களென மடிந்தார்கள். என் போர்வெறி தணிந்து பின்வாங்க உத்தரவிடுவதற்குள் ஏராளமானவர்கள் மடிந்தார்கள். போரில் வெறியென்பது ஒரு துணைக்கலம் மட்டுமே என அசல அன்று எனக்குக் கற்பித்தார். எதிரியிடம் கற்காத வீரன் அடுத்த களத்திலும் வெல்லப் போவதில்லை முல்லரே.

இதை நான் நீலரிடமும் சொல்லியிருக்கிறேன். அவர் அக்கதையை கேட்ட போது என் அகமறிந்தது அவரிடம் கண்ட அசலவின் விழிகளைத் தான். இருவரும் ஒரு கனவின் இருவாசல்கள். வெல்லும் விசைக்கும் வெறியின் திளைப்பிற்கும் அப்பால் கனவின் விழிகள் காணும் போரொன்றுண்டு. நான் அதை அறியும் விழிகொண்டவனல்ல. ஆனால் அப்படியொரு நோக்கு உள்ளது என்பதை அறிந்தவன்” என்றான் சத்தகன். அரும்ப முல்லர் மேலும் மேலும் சினம் கொண்டார். புரவிகளைச் சாட்டையால் விசிறினார். “என் மீதான சினத்தை ஏன் புரவிகளில் காட்டுகிறீர்கள் முல்லரே” என நகைத்தான் சத்தகன்.

அரும்ப முல்லரின் கைகள் தளர்ந்தன. “அப்போரில் நீங்கள் கண்டது என்ன பெருந்தளபதி. உங்களில் எழும் சொற்களை என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ஈராயிரம் புலிகளைப் பலியெடுத்த கொடுங்களத்தில் வெறியாட்டு ஆடியவனை நீங்கள் வியக்கும் வீரனெனச் சொல்வது ஏன்” என ஆற்றாமையுடன் கலந்தெழுந்த குரலால் கேட்டார் முதுதேரோட்டி.

சத்தகன் தேரில் அமர்ந்து குனிந்து அரும்ப முல்லரின் தோளில் தன் இடக்கையை வைத்து அழுத்தினான். “பாணர்கள் வெல்லும் போரின் நாவுகள் முல்லரே. குடிகளும் வென்ற களங்களையே கேட்க விரும்புவார்கள். ஆனால் தோற்கும் போரிலேயே மெய்யான எதிர்காலம் எழுதப்படுகிறது.

அன்றைய போரை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லையில் சிறுபடைகளின் அசைவைக் கண்ட ஒற்றர்களும் அது வழமையான அவர்களின் படை அமர்த்தல் மட்டுமே என எண்ணினார்கள். நானும் அக்கையும் மாதோட்டத்தில் நடந்து கொண்டிருந்த ஈசனின் திருவிழவில் குடிகளுடன் கலந்து சொல்லாடிக் கொண்டிருந்தோம். அக்கை சொல்லாடுவதில் கொல்வேலை எறிவதை விடத் திறமையானவள். காவல் பணிக்கென ஆயிரக்கணக்கான வீரர்கள் மாதோட்டத்தில் நிலை கொண்டிருந்தமை எங்களை எளிதாக்கியிருந்தது. எல்லைகளில் தாக்குதல்கள் நிகழ்ந்தாலும் தடுத்து வென்று விட முடியும் என எண்ணியிருந்தோம்.

சிங்கைப் படைகள் முதல் எல்லையை வீழ்த்திய போது உச்சிப்
பொழுதாகியிருந்தது. எங்களுக்குச் சேதி வந்தபோது திகைத்துக் குடிகளை ஆலயத்தில் திரளச் சொல்லி நான் ஆணை பிறப்பித்தேன். எல்லைகளுக்கு அருகிலிருந்த குடிகளை இடம்பெயர்ந்து பின்வரச் சொல்லிப் புரவிகளையும் புறாக்களையும் அனுப்பினேன். அக்கை அறுநூறு பெண்புலிகளையும் நானூறு ஆண் புலிகளையும் கொண்ட படையுடன் எல்லையை நோக்கிப் புறப்பட்டார். என்னைக் காவல் நிலைகளை உறுதி செய்து குடிகளைக் காக்க வீரர்களை ஒருக்கிய பின் களம் வரச் சொன்னார். அக்கை குழல்முடித்துப் புரவியில் எழுந்த போது குடிகள் அச்சம் கலைந்து குலவையிட்டார்கள். பத்தாயிரம் குடிகளின் நாவுகளின் குலவைக் குரல்களுக்கிடையில் ஆயிரமாயிரம் நாகங்கள் நெளிந்து படைகொண்டது போல் அக்கையின் படை களத்திசை சென்றது. நான் படைகளை ஒருக்கிச் சிலம்பனிடம் குடிப்பாதுகாப்பை ஒப்படைத்துக் களம் செல்லும் வழியில் வீரர் குழுவொன்று என்னிடம் ஓலைச் சேதியுடன் வந்தனர். வடக்குப் பட்டினத்திற்கு உடனடியாகத் தகவலை அனுப்பச் சொல்லியும் எண்ணுக்கணக்கற்ற சிங்கைப் படையுடன் எல்லையில் கொடும்போர் நிகழ்கிறதெனவும் சொல்லப்பட்டது. என் நெஞ்சம் பாறையில் உருளும் தேர்ச்சக்கரமெனத் தடதடக்கத் தொடங்கியது. களத்தைக் கண்ணால் காணும் வரை அந்த அதிர்வு ஓயப்போவதில்லை என அறிந்திருந்தேன். வேழப்படைகளையும் அனைத்து எஞ்சிய வீரர்களையும் ஒருக்கிக் களமனுப்பச் சொல்லி ஆணைகளைப் பிறப்பித்தபடி சென்றேன். களம் சென்ற போது மாலை கசிந்து செம்பொன் பரிதி குருதியென வடிந்திருந்தது. களமென ஒன்றில்லாது ஆயிரமாயிரம் காட்டெருமைகள் குவிந்திருப்பதைப் போல் சிங்கைப் படைகள் எல்லையைக் கடந்து நெடுந்தூரம் வந்து விட்டிருந்தனர். அக்கை தேரின் உச்சியில் நின்றபடி புலிகளை ஒருக்கும் ஆணைகளைக் கூவினார். முரசுகளும் பறைகளும் முழங்கின. ஓசை ஆணையெனச் செவிகளை உலுப்பின. நான் களம் புகுந்ததைக் கண்ட அக்கையின் முகத்தில் எழுந்த மெல்லிய ஆறுதலைக் கண்டேன். அந்தக் கணச் சோர்வு என்னுள் ஏதோ செய்தது. நெஞ்சில் படிக்கல்லை வீசியது போன்றிருந்தது. களத்தில் அக்கை சோர்ந்து நின்றதை நான் பார்த்ததேயில்லை. நிலம் வந்த பெண் தெய்வங்களின் அத்தனை அம்சமும் கொண்டவர். மடிந்த அத்தனை பெண்களினதும் பெருஞ் சினம் பூண்டவர்.

களத்தில் அக்கை இருக்கிறார் என்ற எண்ணமே தெய்வங்களுடன் துணை நின்று போர் புரியும் மானுடர் எனப் படைகளை எழுச்சி கொள்ளச் செய்யும். நூற்றுக்கணக்கில் பெண்புலிகள் கொல்லப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டிருந்தார்கள். ஆண்களின் சடலங்கள் எண்ணுவாரற்று நிரையாகக் குவிக்கப்பட்டிருந்தது. இருள் கவிழ்ந்தால் சிங்கைப் படை நம்மை முற்றழிக்கும் எனக் கணித்தனர் வியூகிகள். நான் களத்தில் கொல்வேல் வியூகம் அமைத்துப் படைகளை ஒருக்கி விசை கொண்டு சிங்கைப் படையுள் நுழைந்து கொடுவெறியாடினேன். எனது நுழைவினால் சிங்கைப் படையினரும் அஞ்சியதைக் கண்டேன். என்னுள் திரண்ட கொலை வெறியெல்லாம் குவித்து அகூஹ்க் அகூஹ்க் எனக் கூவினேன். படைகள் கூவியபடி கொல்வேலெனத் திரண்டன. அதன் முனையென என் தேரில் எழுந்தேன். கொல்காலன் என்னுள் எழுந்து வளர்ந்ததைக் கண்டேன். மேனியில் முன்னில்லாத நரம்புகள் முளைத்துப் புடைத்தன.

அக்கையின் படையினர் அம்புகளால் கள வழியைத் திறந்தனர். சிங்கையின் அம்புகளை இடைமறிக்க ஒருபிரிவும் ஏனையோரை அழிக்க இன்னொரு பகுதியும் ஒருக்கப்பட்டு கொல்வேலின் வாலில் இருபுறமும் நின்று களம் திறந்தனர். காட்டுத்தீ எரிகையில் பேராறு மதகுடைத்தது போல் எனது படை ஊடறுத்துக் களம் சிதைத்தது. போரில் என்னைக் கண்டால் சிங்கைப் படை அஞ்சும் என நான் அறிவேன். போரில் உளத்தைக் கலைப்பது தான் வெற்றியின் முதல் விசையை அளிப்பது. அக்கை பருந்தின் சிறகெனப் பிரிந்து கொல்வேலின் பின் வீரர்களை வியூகம் அமைத்து வழி நடத்தினாள். குருதி வழியும் கூந்தல்கள் அவர்களைப் பேரழகிகள் என எண்ணச் செய்தது. கொலைக்குருதியின் சுவை கொண்ட பெண்கள் தெய்வங்களும் எதிர் கொள்ள முடியாதவர்கள். பருந்தின் சிறகு குவிந்து முனை கொண்டு வலச் சிறகில் அக்கையும் இடச் சிறகில் சொல்லிற்கினியாளும் விரைந்தனர். குருதிப்பரிதியைப் பிளப்பது போல் சொல்லிற்கினியாளின் வில் சுழன்ற வேகத்தில் படைகளின் விழிகள் அரண்டன. அவளது படை சர்வ நாசம் புரிந்து முன்னேறியது. அக்கையின் கரத்தில் எழுந்த வில்லிலிருந்து பொழிந்த அம்பு மழையை இன்றும் சிங்கைப் படை மறந்திருக்காது. எண்கரங்கள் பூண்ட மாகாளியவள். நோக்கில் ஒரு கூர்மை மட்டுமே சுடர்விட்டது. கரமோ ஆயிரம் வாளிகளை அளியெனக் கொடுப்பவள் போல் சுழன்று மீண்டு தொடுத்தது. இருபுறமும் வில்நாண்கள் ஆயிரமாய் எழுப்பும் ஒலிகள் முரசுகளையும் பறைகளையும் மேவியொலித்தது. பருந்தின் வாயில் கொல்வேலெனக் களம் ஓவியப்பரப்பென நெளிந்தது. சிங்கைப்படை பின்வாங்குவதைக் கண்ட புலிகள் விசை கொண்டு தாக்கினர். களமுனைகள் உலோக விழிகளால் உயிர் பெற்று எழுந்தன.

ஆயிரம் பாணர்கள் நாவில் எழப்போகும் பெருங்களம் ஒன்றில் நின்றிருக்கிறேன் என அகமதிர்ந்தது. வான்பரிதி மரங்களுக்கு அப்பால் விழுந்த போது மேகங்களில் அதுவரை எழாத வண்ணங்கள் எழுந்தன. கடற் பச்சையும் கருங்குவளை நீலமும் குருதிச் சிவப்பும் தாமரை வெண்மையும் அத்திரிச் சாம்பலும் சுடர்ந்து பரவி வானம் களத்தின் ஆடியெனத் துலங்கியது. யார் வரைந்த மேகப் போரின் ஆடி மண்ணில் பிரதிபலிக்கிறதென ஒருகணம் அகம் துணுக்குற்றது. விண்ணவர்கள் தங்கள் ஊர்திகளில் வந்து நின்று போரை நோக்குகிறார்கள். மானுடரின் போரை நோக்கி நின்று பொழுதுகழிக்கிறார்கள் என எண்ணிக் கொண்டேன். அரைநாழிகையில் இருள் சரிந்து விடும். போர் திசை மாறவும் வாய்ப்புண்டு. எதிர் நிற்பவர்களின் எண்ணிக்கையை அறிய இயலவில்லை. கொன்று வீழ்த்தப்பட வீழ்த்தப்பட இடைவெளிகளின்றிச் சிங்கைப் படை கவசச்சுவரென மீண்டு கொண்டிருந்ததை மாயமென நோக்கினேன்.

சிம்மம் கர்ஜிக்கும் பேரொலியுடன் எழுந்த வில்லின் ஒலிகேட்டு என் புரவிகள் ஒருகணம் குலைந்து மீண்டதைக் கண்டேன். படை வேழங்கள் பிளிறியெழுந்தன. சிங்கைப் படையின் முரசுகள் இடிப்பெருக்கினால் தோலும் கோலும் ஆனவையென முழங்கின. செம்பரிதியின் இறுதிக்குருதியும் காய்ந்து வடுவாக உறைந்ததெனக் கருமை கொண்டு சிலகணமே இருள் படிய இருக்கிறதென விழியெழுந்து நோக்கிக் குவிந்த போது பொன்கதிரும் கருங்குருதியுமென வண்ணங் கொண்ட பெருந்தேரில் ஆறு வெண் புரவிகள் முன்விரைந்தெழ ஒரு நாகத்தில் எட்டு நாக்குகள் முளைத்து இடைவிடாது சீறியாடும் வேகத்தில் அம்புகள் பொழியப் பெருந்தோளில் கருங்காப்புகள் பூண்டு கவசத்தில் பெருங்கரடியின் முகங் கொண்டு சிம்மக் கொடி அழல் காற்றில் வீச சிங்கைப் படை ஒருகணம் பெருங்கலத்தால் அமிழும் ஆழியென அமர்ந்து எழ பெருந்தளபதி அசல போரின் தீநுதல்விழியென எழுந்தார். மாவீரரொருவர் களம் புகுவது ஆயிரம் ஆடவர் நடுவே ஒற்றைப் பேரழகி நுழைந்தது போன்று விழியொருமை கூட்டுவது முல்லரே. தேரில் அன்று எழுந்தது வீரமென்றான பேரழகு. மானுடர் அதன் முன் முதலில் மண்டியிட்டே பின் எழுந்து போர் புரிய இயலும். போர் முடியும் வரை அகலாத ஓரவிழியொன்று அவ்வழகில் நிலைப்பதை எந்த வீரரும் ஒழித்துக் கொள்ளவே இயலாது. அது போரின் தர்மம்”.

TAGS
Share This