58: காய விழைஞன்
“நான் அஞ்சுவது என் தாகத்திற்கு மட்டுமே” என்றான் ஓசையிலான். “நீ சொல்லிய சொற்கள் எங்கோ எவரோ சொல்லிக் கொண்டிருக்கும் நீண்ட பாடலின் சிறு சிரங்கையளவு கொண்டவை. அவை வாழ்வை அறிந்து விலகியவர்களுக்கானது. உனது நாவுக்குச் சுவையே பழகவில்லை. நீ எங்கனம் சிவத்தை எண்ண முடியும். அறிக இளையோனே. தாகமென்பது மானுடருக்கு அளிக்கப்பட்டத்தில் தலையாயது. எதன் பொருட்டும் தாகம் கொண்டவரே புடவியை இயக்கும் விசைச் சுழற்சி. அலைந்து பரிமாறிக்கொண்டிருக்கும் பண்பாடுகளின் கயிற்றுத் திரிகளை பொன் சங்கிலிகளை முத்தாரங்களை வைர இழைகளைத் தும்புப் பிசிறுகளைப் பறவைகள் சிற்றலகால் கொத்தி வந்து முடையும் மாபெரும் கூடெனப் புடவியை ஆக்குபவர்கள் தாகங் கொண்டாரே. தாகத்தை உன் அறியாமைகளால் மூட முடியும். காரிருட்டில் வைக்கப்பட்டிருக்கும் அணுக்குமிழ் போன்ற படிகக் கல் அறியாமை. அதில் ஒரு சிட்டிகை ஒளி நிரம்பினாலும் அதன் பின் அங்கு அதுவே இருளை அளக்கும் கருவியென ஆகும். இப்புடவியை ஓசையிலாது நாற்றமிலாது இனிமையிலாது கசப்பிலாது மயக்கிலாது துயரிலாது களியிலாது நீ அறிவது என்பது புலனிலாது நின்றிருக்கும் பாறையைப் போன்றது. பாறையில் சிறு கற்கள் மோதியதெனப் புலம்புகிறாய். நீராழம் காண முடியவில்லை எனக் கலங்குகிறாய். இதில் எந்த நடுக்கும் தேவையில்லை. நீ எண்ணாத ஒவ்வொரு விழைவும் உன் அகத்தை விதைகளைச் சுற்றியிருக்கும் மென்னிதழ் கவசங்களென மூடியிருக்கின்றன. உன்னால் விரும்பும் திசையை நோக்கியமைய இயலாது ததும்பி நடுக்கில் ஒரு கணம் நீ எய்த பின்னும் உன் கல்லை ஆவிகடந்து சென்று உந்திப் பாறையில் வீழ்த்துவது அவையே.
உன் இன்மைகளை நீ அறியாது உன் முழுமைகளை நீ கொள்ள முடியாது. உன் முழுமைகளை நீ வெல்லாது உன் இன்மைகளுக்கு நீ திரும்ப முடியாது. அதுவே மெளனத்திலிருந்து சொல்லும் சொல் திரும்பவும் மெளனத்துக்குச் செல்லும் வழியென நூல்கள் வகுக்கின்றன. புடவியை இன்று பிறந்திட்ட நெறியற்ற மூர்க்கனைப் போல் அடைக. வென்று நிலை கொண்டு உன் ஆணவத்தின் பேருருவை உண்டாக்கிக்கொள். அங்கிருந்து உனக்கு வேண்டியதெல்லாம் நகமளவு ஊசியும் நகத்தில் ஒட்டிய துணுக்களவு கூர்மையும். அது அவ்வாறே வந்தமையும் என்பதே புடவியை ஆளும் வல்லமைகள் உரைப்பது. ஆகவே உன் தாகத்திற்கு அஞ்சாதே. உன் விழைவுகளின் முன் புறமுதுகிடாதே. உன்னை ஆளும் புடவியின் வல்லமைகளை உன் முன் பணிய வைப்பதே சிவத்திடம் நீ சேரும் வழி. வகுக்கப்பட்டவை எல்லாம் எளிய குடிகளுக்கானவை. நீ வகுக்கப்பட முடியாத நிர்க்குணனை அடைவதற்கு வகுத்தலும் பிரித்தலும் நீட்டலும் முழக்கலும் தடையாகவே அமையும்” என்று சொல்லியவன் காற்றை போன்று அவனருகில் சயனத்திலிருந்தான். கொற்றன் அவனை பனைகள் சூழ்ந்த கள் குடிச்சாலையில் கருவாட்டை முகர்ந்து வாயில் முழுமீனை உண்பவனென நின்றிருந்த போது கண்டான். பார்ப்பதற்குப் பொருளற்ற விழிகளும் திளைக்கும் உடலும் கொண்டிருந்தான். குழலில் இளங்காற்றைச் சூடியவனென அலைகொண்டிருந்தான். மினுக்கும் கருமை கொண்ட மேனியன். சொல்லற்றவன் என நின்றிருந்தவன் கருங்கலயத்தைக் கவிழ்த்துப் பனைப்பால் குடித்து வாயையும் மீசையையும் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த போது தன்னை நோக்கியிருந்த கொற்றனின் முன் வைக்கப்பட்டிருந்த முழுக்கலயக் கள்ளைக் கண்டதும் அவனை நோக்கி உதட்டைச் சுழித்துப் புன்னகைத்தான்.
கொற்றன் அவனுடைய இழிவாயின் புன்னகையைக் கண்டு கலயத்தைக் கைகளில் எடுத்துச் சுழற்றினான். விரல்களால் மெல்லிய தாளமிட்டு அவனுடைய சொல்லின்மையைக் கலைக்க எண்ணினான். அங்கிருந்த கள் வாடை அவனுக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டிருந்தது. அதுவரை போதையின் எந்த வாசமும் அவனது நாசியில் தீங்கெனவே சுவை கொண்டிருந்தன. போதையில் இருப்பது சித்தமழியாதவர்கள் நடத்திக் கொள்ளும் சடங்குக் களியென எண்ணிக் கொண்டிருந்தான். இன்று அனைத்தையும் அறிந்து மீள மூநாள் தான் எஞ்சியிருக்கிறது என வகுத்துக் கொண்ட போது அவனுடைய உளம் அனைத்தும் அனைத்துமெனத் தவித்தது. சொற்கள் மட்டுமே அனைத்துமில்லை எனக் கூவியது. சொல்லின்மையும் பொருளற்றது என அரற்றியது. சொல்லெடு சொல்லெடு என அவனது அகம் தன்னைத் தானே அடித்துக் கொண்டது. காணும் விழிகளில் ஒரு அழைப்பை எதிர்நோக்கிச் சலித்தான். குடிகள் எங்கும் களிப்பெருக்கில் சொல்முற்றி விரைந்து கொண்டிருந்தனர். இடியும் மின்னலும் முழங்கும் வானில் ஒடுங்கிய செவிகளைக் கூர்ந்தபடியிருக்கும் சிறுமேகக் கலைவென நின்றிருந்தான். கள் குடிச்சாலைகளில் யாரேனும் சொல்லாடக் கூடுமென இங்கு வந்திருந்தான். தன் முன்னமர்ந்திருந்தவனுக்கு அவனது அகமே பெயரிட்டுக் கொண்டது. ஓசையிலான். நல்ல பெயர் என எண்ணிக் கொண்டான். தான் ஒரு பெருஞ் சித்தன் ஆன பின்னர் தன் மாணாக்கர்கள் யாருக்காவது அப்பெயரைச் சூட்டலாம் என பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான்.
ஓசையிலான் அவனைக் கண்டு சொல்லெடுத்த அரை நாழிகைக் காலத்தில் சிந்திய கள்ளெனத் தன் வாழ்வை அவன் முன் ஊற்றினான். கொற்றனது சொற்களின் பதற்றமும் தீவிரமும் ஓசையிலானை மகிழ்வூட்டும் அங்க சேட்டைகளென ஆவதைக் கண்டு சொல் நிறுத்தி அவனை நோக்கினான். ஓசையிலான் தனது தாகத்தின் அச்சத்தைச் சொல்லி மேலும் சிலவரிகள் சொன்ன போது முன்னிருப்பவன் போதைக்களியில் நின்றிருக்கும் இளையவன் அல்ல. அவனுள் ஏதோவொரு மந்தணம் குமிழிடுகிறது என எண்ணிக் கொண்டான் கொற்றன். தேய்பிறையின் கடைசிக் கீற்றை நோக்கும் போதும் தெரியும் நிலவின் கருமுழுமையென ஒன்று அவனின் மிச்சத்தை அச்சொற்களின் வழி கொற்றனின் முன் காட்டின.
“நீங்கள் காவியம் கற்றவரா நண்பரே” என வினவினான் கொற்றன்.
“நாம் காவியத்தில் தான் வாழ்கிறோமில்லையா இளையோனே. காவியம் சொற்களால் ஆன புடவியெனில் நாம் சொற்களால் தான் புடவியைத் தொட்டுப் பொருள் கொள்கிறோம். விழியற்றவனின் கரங்களெனச் சொற்கள் நம்முடன் வதிகின்றன. சொல்லற்றவரென்று எவரேனும் உளரா. குழவிகள் மிழறுவதும் அழுகையும் கூடச் சொல்லே. சொல்லென்பது ஒலி. ஒலியினால் ஆகும் வரி. வரியினை நெருக்கி அடுக்கிக் கட்டும் தெப்பம் கவிதை. தெப்பங்களினை இணைத்து ஆக்கும் மாபெரும் அரண்மனை போன்ற கப்பல் காவியம். காவியம் மிதக்கும் நீர் மானுடர். மானுடரில் சவாரி செய்து பேரலைகளில் சறுக்குபவரே புடவியை வெல்கிறார். நான் தெப்பங்களில் தொற்றியேறிக் கப்பலில் சென்று கொண்டிருக்கிறேன். இக்கள்ளை அருந்தி என்னுடன் ஏறிக் கொள்க” எனச் சொல்லிச் சிரித்தான் ஓசையிலான். அவனது பற்கள் கள்வெண்மையில் மினுங்குபவையென எண்ணிக் கொண்டான் கொற்றன். கள்ளிருந்த கலயத்தை உயர்த்தி உதடும் நாவும் படாமல் மலையைத் தொடாமல் வீழும் அருவியெனக் கள்ளைக் கவிழ்த்தான். தொண்டையில் மோதிக் குருதிக் குழாய்களில் தேங்கி பிரவாகமென நரம்புகளில் ஓடியது கள்.
ஓசையிலான் தீயிலையை உதிர்த்து உள்ளங்கைகளில் அரைத்து முகர்ந்து மலர்ச்செடியின் வேரை நுகர்ந்து மூங்கில் துதியில் நிறைத்து அடைத்தான். தீக்கொள்ளிகள் எரிந்த கள் குடிச்சாலையின் முன்முகப்பிற்குச் சென்று துதியை ஏற்றி இழுத்துக் கொண்டு புகையை மந்திரம் பரப்புபவனென புறமெங்கும் ஊதியபடி வேடிக்கைகள் சொல்லிக் கொண்டு வந்தான். குடிமகன்கள் அவனை வாழ்த்துபவர்கள் போலக் கூவினர். கரங்களை நீட்டியவர்களுக்குத் துதியை வழங்காது மறுத்து இது கன்னிமகன் ஒருவனுக்கு என்று சொன்னான்.
கலயத்தை அருந்தித் தீர்த்த கொற்றன் விழிநரம்புகள் மெலிந்து சிவக்க மெல்லிய தள்ளாட்டம் நரம்புகளை நோயுற்ற புரவிக்கால்களென ஆட்ட அமர்ந்திருந்தான். ஓசையிலான் அருகமர்ந்து ஈசனின் புகையையும் மூட்டிக் கொள் இளையோனே. ஈசனின் முதற் சித்து இந்தச் செடியின் மலர்களே. புடவியை ஆக்குவதற்கு முதன் நாள் இச்செடியை பிரபஞ்சத்தின் பெருக்கில் ஒரு தொல்நட்சத்திரத்தில் எரியும் அனல்கொதிக் குழம்பை நீரென ஊற்றிச் சீறும் வால்மீன்களைக் காற்றென அளித்து நெருப்பால் வேலியிட்டு வளர்த்தானாம். அவனது ஆசையின் கனவில் தோன்றிய செடியின் ஒவ்வொரு இலையும் ஒரு கனவுப் பிரபஞ்சம். ஒவ்வொரு தளிரும் பிரபஞ்சங்களைக் கடக்கும் வாசல்கள். ஒவ்வொரு மலரும் ஒருகோடிப் பிரபஞ்சங்கள். இயற்கையின் முதல் மயக்கு இச்செடியின் ஆற்றலே. மயக்கற்ற ஒருவனல்லாது இவ்வளவு பிழைகளுள்ள புடவியை ஒருவர் ஆக்க முடியாது. முதற் தீயிலையின் மலரென முகைத்தவளே அன்னையென்றானாள். மானுடரிலும் மிருகங்களிலும் பறவைகளிலும் பூச்சிகளிலும் கிருமிகளிலும் புல் பூண்டு செடி கொடி தாவரங்களிலும் அணுக்களின் நடனத்திலும் வளியிலும் நெருப்பிலும் நீரிலும் மண்ணிலும் எங்குமென ஆற்றலாய் எழுந்தவள் சக்தியென்றானாள். மலரே சக்தி. சக்தியின் மலரில் யுகயுக மாயைகள் அவிழும். அவளே போதையென்றானாள். ஈசனின் மயக்கு. ஈசனென மண்ணெழுந்த ஒவ்வொரு ஆடவனின் மயக்கும் அவளே. அவள் தீயிலையென மண்ணில் விளைகிறாள். கொடி மலர்களென பெண்களில் அமர்கிறாள். ஆகவே அவளைப் போற்றுக. போதையின் அன்னையை வழிபடுக. நுரைக்கும் அவள் மதனப்புகையை ஆவிநிறைத்துப் பிரிந்து எழுக” என்றான் ஓசையிலான்.
கொற்றன் துதியின் வாய்நுனியை நோக்கினான். மெய்மறந்த ஆடலில் நுதல் திறந்த ஈசனின் நுதற்கண்ணெனக் கங்குகள் சுடர்ந்தணைந்தன. கையில் ஏந்தி இழுத்து முதற் புகையை முதல் அன்னையை முதற் போதையை முதல் மாயை நாசிக்குள் நிறைந்து நெஞ்சைப் பெருக்கினான். திக்கித்த இருமலொன்று கொட்டி அடக்கியது அவன் மேனியை. விழிகளில் நீர் சொட்டிச் சிவந்து செம்பழமென ஆக அவன் மேனியதிர்ந்து புகைக்குடிலானது. மேலும் மேலும் புகைத்தாகம் கொண்டு துதியை இழுத்தான். ஓசையிலான் அவனது ஆவலின் வீச்சைக் கண்டு உரக்கச் சிரித்து அவன் முதுகில் அறைந்தான். “விடாதே கொல்லவளை. கொல் முதல் மாயையென்றானவளை” எனச் சொன்னான். கொற்றனுள் புன்னகை ஆயிரங் குழவிகளின் உவகைகொண்ட உதடுகளின் நெளிவென வீசியெழுந்தது. “புன்னகை ஒரு புகை என்றான்” தலை தூக்கிய கொற்றன். “அப்படித் தான் ஒரு மகத்தான காவியத்தின் முதல் வரியெழும்” எனக் கூவிச் சிரித்தான் ஓசையிலான்.
இருவரும் குழவிகளாகிப் புகைப் பிரிவுகளைப் பற்றிக் கொண்டு மிதந்து ஆகாயத்தில் அங்குமிங்கும் அலைந்த போது தங்கள் முகங்களைத் தற்செயலாய்க் காணும் போது எல்லையில்லா முதற் சிரிப்பின் குழந்தைமை உற்றனர். புன்னகையில் மலரென்றாகிச் சிரிப்பில் வாசமென்றாகி பெருஞ் சிரிப்பில் நறுமலையென விசிறும் தீயிலைகளான புடவியின் மேல் பறந்தனர்.
கொற்றன் அந்தரச் சிலையொன்றில் அமர்ந்திருந்து இன்னொரு கிளைக்கரத்தில் சயனத்திலெனப் படுத்திருந்த ஓசையிலானை நோக்கி “உங்களது தாகம் எது மூத்தவரே” என்றான். “கேள் இளையோனே. தாகமென்பது உயிர் உலையின் கொதிப்பு. உயிர் மரத்தின் முனைப்பு. தீமலைகளின் மெளனம். ஆகாய வெளியின் நீலம். களங்கமின்மையின் வதனம். காதலின் தவிப்பு. காமத்தில் முனகல். சித்தில் எரியும் தீயில் விழும் நெய்மழை. பித்தில் நாம் விரும்பும் பெண்ணுடன் போகம். பொன்னும் பொருளும் மணியும் மாணிக்கமும் நகையும் அணியும் ஆபரணங்களும் கண்ணும் கருத்தும் எண்ணும் எழுத்தும் விண்ணும் புவியும் கனலும் புனலும் ஏகமும் அநேகமும் ஏற்றமும் தாழ்வும் எங்குமிருக்கும் தாகமே வாழ்வின் முதல் அவி. வாழ்வெனும் யாகசாலையில் நாம் எரிப்பது தாகத்தையே. தாகமே விழைவு. வற்றாத தாகமே பெருவிழைவு.
நான் பெருவிழைவு கொண்டது எங்கனம் என நானறியேன். அது என் சுபாவம். விழையும் ஒவ்வொன்றும் என்னை நானெனத் தருக்கி விரித்து மாமலைமேலே மாதவத்தானென நிற்கச் செய்கின்றன. புடவியின் ஆசைகள் முற்றற்றவை. எண்ணற்றவை. பெருக்கு நிற்காதவை. பெண்ணின் அடங்காத காமத்தின் விழைவே அறங்களை வகுத்தது. ஆணின் தீராத காமத்தின் விழைவே அறங்களை அழிப்பது. எரியும் தீயும் தீராத பருத்திக் காடெனவும் புடவியை எண்ணியிருக்கிறாயா இளையோனே. நான் தீயும் பஞ்சும். நான் அனலும் பற்றலும். நான் மென்மையும் மிக மென்மையும். தீ பஞ்சை விட மென்மையானது இளவலே. ஆகவே தான் தீ பற்றுவதில்லை. பஞ்சு பற்றிக் கொள்கிறது. பற்றுவது என்றும் நெறிகளை ஆக்குவது. பற்ற வைப்பது என்றும் நெறிகளை எரிப்பது. நான் தாகம். பெண்ணுமொரு தாகம். புடவி ஒரு பெருந்தாகம். வெல்லும் கனவுகள் பெண்ணும் புடவியும் எனக்கு ஆக்கி அளிக்கும் மகவுகள்.
என் பெயர் ஒளிவீரன். ஒளியில் ஏது வீரம் இளையோனே. என் தந்தையும் தாயும் என்னை வளர்ப்பவர்கள். என்னைப் பெற்ற தாயையும் தந்தையையும் அறியாது வாழ்ந்து வந்தேன். என்னை வளர்த்தவர்கள் தெய்வங்களின் கருணை கொண்டவர்கள். என்னை அல்லும் பகலும் ஒளிகுன்றாது சீராட்டி வளர்த்தனர். பாலும் அமுதும் தேனும் அளித்தனர். சொல்லும் வில்லும் பயில வைத்தனர். நீலழகரே என் தலைதொட்ட தந்தையெனச் சொல்லினர். அவரின் கரத்தில் நான் தவழ்ந்தேனாம். சிறுவனாகத் திரிந்த போது அந்த எண்ணமே என் நடையிலும் மார்பிலும் இரண்டு அடுக்கைக் கூட்டியிருந்தது. சொல்லாடும் களங்களில் முன்னோர் சொற்களை எதிர்த்தேன். சொற்களைச் சொற்களால் முனை முட்டி முறித்தேன். முன்னோர்களின் அறங்களை எள்ளி நகையாடினேன். நெறிகளை மீண்டும் வகுக்கப் போகிறேன் எனச் சூழுரைத்தேன். குடிகளை மடையர்கள் என எண்ணித் திரிந்தேன். சோற்றுக்கு வாழ்ந்து பேற்றுக்குக் காமம் கொண்டு நீற்றுக்கென மடியும் அற்பர்கள் எனச் சொன்னேன். என் சொற்கள் என் ஆசிரியர்களை அறைந்தன. அவர்களிடம் கற்ற அமுதனைத்தும் ஆலகாலமெனத் திரும்பியதைக் கண்டு முகம் சுழித்து என்னை விரட்டினர். ஆசிரியர் சாலைகளிலிலிருந்து விரட்டப்படுபவன் அல்லவா மெய்மாணவன். அவனே மகத்தான செயல்களுக்கான ஊழ் கொண்டவன். ஆசிரியர்களை வணங்கினேன். அவர்கள் என்னை விரட்டும் வரை கற்றேன். கற்றதைக் கற்றேன். சொல்லெண்ணி அகத்திருத்தினேன். சொல்லாண்ணாத் திசையில் அகத்தைத் திறந்தேன். எனது கடைசி ஆசிரியர் ஒரு பித்தர். வனக்கொற்றவை ஆலயத்தில் பித்தராய் ஊன் உண்டு வாழ்ந்தவரைச் சென்று சந்தித்தேன். நான் சென்ற போது அவர் நிர்வாணமாக அழுக்கை மேனியாக்கிக் கிடந்தார். அதுவும் நல்லாடையென எண்ணிக் கொண்டேன். எலிகளின் புழுக்கைகளைக் குவித்து வைத்தது போல் அவரது தேகம் நாற்றமடித்தது. அருகமர்ந்து அவரைச் சிலநாள் நோக்கினேன். சொல் பேசவில்லை. செயலாலும் பேசிக்கொள்ளவில்லை. அவரை ஒரு பொருட்டென மதிக்காத செருக்கு என்னை விசைகுன்றாது அங்கு நிற்கச் செய்தது. நீ வந்த போது சொல்லியவை போன்ற பாடல்களை அன்றாடம் வாயால் பாடிக்கொண்டிருப்பார். கொற்றவையின் சிலையை நோக்கிக் கொண்டு சுயமைதூனம் செய்வார். சுக்கிலத்தை மலர்களென அவளின் பாதத்தில் மலர்த்துவார். அவை எனக்கு ஆச்சரியமூட்டவில்லை. வினோதமான காமக் கற்பனையென எண்ணினேன். நானுமொருமுறை சுயமைதூனம் செய்ய முயற்சித்தேன். பற்கள் நெரிபட்டுப் புருவங்கள் தீத்துள்ள கோரமுகியான அக்கருங்கல் தெய்வத்தை புணர்வதை என்னால் எண்ண முடியவில்லை. குறி சுருங்கி நீர்ப்பை போன்று தூங்கியது.
அவரது உணவில் பாதியை எனக்கென வைத்திருப்பார். நரிகள் வந்து அதை உண்டு செல்லும் நாட்களும் அமைந்தன. நரிகளுடன் சண்டையிட்டு உணவைக் காப்பாற்ற வலுக் கொண்டேன். சர்ப்பங்கள் திரியும் சருகுக் குவியலெனக் கிடந்த அந்த ஆலயம் பித்தரது மேனி போலவே உருக்கொண்டிருந்தது. சிலபொழுதுகளில் அந்த ஆலயம் தான் மானுடரென வடிவம் கொண்டு ஊனுண்டு காமம் தெளித்துப் பாடல் பாடி வாழ்கிறதோ என எண்ணிக் கொள்வேன். அடிக்கடி வேட்டையாடச் செல்வார். சிலபோது நரிகள் இழுத்து வந்து கைவிட்ட மிச்ச ஊனைத் தின்பார். அவரது அகம் கரையாது என்பதை அறிந்த நான் அங்கிருந்து செல்ல எழுந்தேன். என் விசையை ஒரு நொடிக்கு உற்றவர் சிரித்தார். “ஏன் சிரிக்கிறாய் பித்தா” எனக் கேட்டேன். “அப்பன் ஈசன் முதுகிழவி ஒருத்திக்கென அரசனிடம் சேவகம் செய்த கதை உனைப் பார்த்த போது நினைவில் வந்தது” எனச் சிரித்தார். எனக்கு அடியும் நுனியும் விளங்கவில்லை. “கதையை நான் அறிவேன் பித்தா. அதற்கும் எனக்கும் என்ன உறவு” எனக் கேட்டேன். அவர் மேலும் சிரித்துக் கொண்டு கதையை வேறொரு கோணத்தில் கண்டவரெனச் சொன்னார்.
“பாரதத்தில் ஒரு மன்னன் தன் குடிகளைக் கட்டாயப்படுத்தி பெருவெள்ளம் எழுந்த வேளை அணையொன்றைக் கட்ட வைத்தான். வந்தியெனும் கிழவிக்காக ஈசன் மானுட உருக் கொண்டு அவள் விற்கும் பிட்டை உண்டு அவளுக்கெனக் கூலியாளாகப் பணி செய்யச் சென்றான். அவன் தான் முழுப்பித்தனாயிற்றே. ஆற்றின் பெருக்கைப் போலவே அணையற்றவன். ஆடினான் பாடினான் சிரித்தான். அங்கு வந்த அரசன் அவன் பணி முற்றாது இருக்கவே ஏன் பணிகளைச் செய்யவில்லை என வினவினான். அதற்கும் பித்தன் சிரித்தான். சினம் தாளாத அரசன் அவன் முதுகில் சாட்டையால் அடித்தான். அந்தவொரு அடி புடவியின் ஒவ்வொரு உயிரின் முதுகிலும் விழுந்தது. பித்தன் மறைந்தான். அவன் ஏன் எழுந்தான். ஏன் அந்த அடியை ஒவ்வொரு உயிரிலும் ஒரு வடுவென ஆக்கினான் என அறிவாயா” எனக் கேட்டார்.
“எல்லா உயிரும் தானே என உணர்த்த ஈசன் ஆடிய நாடகம் அக்கதை” என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே “எல்லா உயிரிலும் வடுவென ஒன்று உண்டு அறிவிலி. அதுவே அவ்வுயிரின் ஆண்டவன். வடுவிலிருந்தே நீ உன்னை ஆக்கியவனில் சென்றமைய முடியும். அன்று பித்தன் அளித்த வடுவே அவனுக்கான வாசல். அதைத் திற” என்றார்.
நான் முதலை புகுந்த சேற்றுக்குளமெனக் குழம்பினேன். என்னில் வடுவென எதுவும் இருக்கவில்லை. நற் சுற்றம். செழுங் கல்வி. பொலி வளம் கொண்டிருந்தேன். பித்தரை நோக்கிச் சிரித்து விட்டு “வடுவற்றோர் ஈசனை அடைய முடியாதா பித்தா. சொல். நான் இங்கு வடுவற்ற மேனியனென நின்றிருக்கிறேன்” எனச் சொன்னேன். அவர் புன்னகை தீச்சுடர் அணைவதென உதட்டுக்குள் அடங்கியது. “உனது மேனியே உன் வடு மைந்தா. உன் மெய்த்தந்தையை நான் அறிவேன். இப்போது உன்னை வளர்ப்பவரிடம் உன்னை அளித்த போது நானும் உடனிருந்தேன். நீ இங்கு வந்த போது உன் மேனியில் உன் மெய்த்தந்தையைக் கண்டேன். உன் தந்தையே உன் வடு” என்றார். நரி மிச்சில் உண்டு சித்தம் பேதலித்து விட்டதா என நகைத்து விட்டு அக்கேள்வி என்னில் அனற் புழுவென நெளிந்து சதையில் ஊர்வதைக் கண்டு உடல் வேக இல்லம் நோக்கி ஓடினேன். அன்னை என்னைக் கண்டதும் உவகை கொண்டு வாரியணைத்தார். அவரை விலக்கிக் கொண்டு சினத்தில் கத்தினேன். “என் மெய்த்தந்தை யார். சொல்லுங்கள்” எனக் கூவினேன். அவர் அழுது கொண்டே மண்ணில் சரிந்தார். அவரைத் தூக்காது நின்றபடியே அவரை எரிப்பவன் போல் உற்றேன். அரை நாழிகை அழுதவர் எழுந்து தூணில் சாய்ந்து கொண்டார். “உன் தாயின் பெயர் கதிரழகி” என்றார். சொல்லிய பின் கண்ணீரும் மூச்சும் சீராக வெளிப்பட அடுத்த சொல் எழாமல் நின்றார். நான் வெறியுற்று வீட்டின் நடுவே அலைந்தேன். உடல் தாளவில்லை. பொய் பொய் பொய் என வீடு கூவியது. அன்னை எனை நிமிர்ந்து பார்க்காது தரையை நோக்கியபடி மெல்லிய உறுமல் போன்ற குரலில் “உன் தந்தையின் பெயர் சோமசேனன். இருள் வீரர்கள் படையின் தலைவன். கொடுமரக்கன். ஈவிரக்கமற்றவன். எங்கள் வீதிகள் தோறும் பெண்களைக் கொன்று எரித்தவன் உன் தந்தை. நீ அவன் விந்து” என்றாள். சீறலுடன் மடங்கி விழுந்து அழுதாள். சோமசேனனை அறியாத தமிழ்க்குடிக் குழவிகள் உண்டா இளையோனே. அக்கணம் என் உடல் காந்த அங்கிருந்து திரும்பச் சென்று வனக்கொற்றவை ஆலயத்தில் பித்தனைத் தேடினேன். சில நாட்கள் அங்கே தங்கினேன். அவர் எங்கும் தோன்றவில்லை. மனம் சலித்து ஓயாது அலைந்தேன். தீவு முழுவதும் சுற்றி என் அன்னையைத் தேடினேன். அவளைப் பித்தி என்றார்கள். இருள் வீரர்கள் அவளைக் கொடுகலவி புரிந்தே பித்தியாக்கினர் என்றனர். அச்சொற்கள் என்னில் வடுக்களின் வடுவடுக்கெனத் தேங்கி நிணங்களின் நிணவூற்றென ஊறிச் சீழின் சீழ்ப்படையென ஆகி உறைந்தன.
நினைவு மடிந்து ஓர் ஆற்றங்கரையில் கிடந்த போது மீண்டும் பித்தரைக் கண்டேன். அவர் என்னைக் காணாதவர் போல நகர்ந்து சென்றார். அவரைத் துரத்திச் சென்று முதுகில் அறைந்தேன். அவர் நீரை உதறும் புலியெனச் சிலுப்பிவிட்டுச் சென்று கொண்டிருந்தார். அடக்கி வைத்திருந்த கண்ணீர் அனைத்தும் கொட்டிப் பிறக்க அவரை வசைகளால் ஏசிக்கொண்டு கேட்டேன் “கொடூரனே. நீயொரு இரக்கமற்ற கொல்விலங்கு. உன் தாயையும் மகளையும் புணர்பவன். விலங்கையும் கோர தெய்வத்தையும் காமுறுபவன். அற்பன். அறிவிலி. புடவியில் நின்றிருக்கும் மூடர்களில் கீழானாவன். பாதகர்களில் முதன்மையானவன். ஏன் என்னிடம் அச்சொற்களைச் சொன்னாய். என் வாழ்வே புரண்டு தலை கீழாய் சரிந்து விட்டது. உடல் ஒரு நோக்காடாய் வளர்பவனுக்கு வாழ்வென ஒன்று அமையுமா. என் வாழ்வை அழித்தவனே. என் உடலைப் புண்ணென உணர்த்தியவனே. என்னை இங்கனம் ஆக்கியதில் என்ன களியுனக்கு. சொல். சொல். சொல்” என விடாது துரத்தினேன். இருநாட்கள் மறுமொழி கூறாது வனப்பரப்பில் ஓங்கியிருந்த மருதமரங்களின் நிழலில் அமர்ந்திருந்தார். நான் உண்ணாது உறங்காது நோக்ககலாது அவரை உற்று எதிரமர்ந்திருந்தேன். அவரிடம் எனக்கென ஒரு மந்தணம் உள்ளதெனக் காத்திருந்தேன். உடல் உலர்ந்து அவரின் சொல் ஊற்றக் காத்திருக்கும் கலயமென ஆனேன். மருதமரத்தின் மேலே விண்மீன்கள் சுடர் கொண்டு அணைந்து திரும்பின. விழித்து அமர்ந்தன. ஒவ்வொரு உயிரிலும் விழுமொரு வடுவுருவில் உடுக்களென ஆகின. ஒவ்வொரு உயிரும் கனலும் புண்ணின் காயமென மின்னின. சிவம் காயமேனியின் மேல் பல்லாயிரம் உயிர்களின் வடுவோசை கேட்டு அமர்ந்திருக்கும் கல் என எண்ணிக் கொண்டேன். வடுமேனியன். காய விழைஞன். கொடுகுணன். மலக்குடிலோன். சீழ்த்தலையோன். இரவலன். பிச்சையூண் தின்னி. அவனின் ஒரு பிண்டச் சதையொன்று என் முன் அமர்ந்திருந்தது. அதே இரக்கமற்ற கொல்லும் உண்மையுடன். அதைச் சொல்லிக் கொல்வதில் இன்புற்றவன் என என் முன் ஆடாது அசையாது ஊழின் அறுப்பான்.