60: பாடு மீன்கள்
அறியாத போது சிந்தும் கண்ணீர் ஆயிரம் மடங்கு சிறகுகள் கொண்டவை. அவை மேனியை மிதத்தி அகத்தை உருக்கி திரவச்சிறகுகள் பூண்கின்றன. காலில்லாக் கண்ணீர் கன்னத்தில் நடக்கின்றது. விழியில்லா அந் நீர் விழிமயக்கு அளிக்கிறது. கண்ணீரின் மொழி ஒற்றைச் சொல்லால் ஆனது. அச்சொல் வைரத்தின் பட்டைகளெனத் திசைக்குள் திசையவிழ்ந்து பொருள் கொள்கின்றன.
இன்பத்தின் நாவுகள் சிரசற்றவை. நாவு மட்டுமே ஓர் உடலென அமைந்தவை. நாவின் நரம்புகளில் இன்பமென்பது அனைத்துச் சுவைகளையும் கொண்டது. உவர்த்தலின் இன்பம் வஞ்சம் வெல்கையில் கசப்பின் இன்பம் பகை முடிக்கையில் புளிப்பின் இன்பம் திகட்டித் தீர்க்கையில் கார்ப்பின் இன்பம் மிகைத்துத் திரள்கையில் துவர்க்கும் இன்பம் அணைந்து பிரிகையில் இனிப்பின் இன்பம் அனைத்தும் அழிகையில்.
துக்கத்தின் மேனி பாவனைகளால் ஆடுவது. நடனம் மானுடர் தம்மை ஆடும் கலை. மெய்யாகத் தம் பாவனைகளைப் புனைந்து மெய்யிலேயே நிகழ்த்தும் ஆற்றுகை. தன்னில் தானே நிகழும் கலையென்று மானுடர் ஆக்கிய அருங்கலை. தாளமிட்டு மண்ணில் கால் தொட முன்னரே புவி தொட்ட களிப்பில் ஆடும் குழவியின் மேனியில் திளைப்பென நடனம் தொடங்குகிறது. காலும் கையும் உதைக்கும் நடனம். நெளிந்து அழுது வீறிடும் பாவனை. கண்ணீர் விழுத்தி புடவி வணங்கும் மரபு. ஆடலின் ஆரம்பச் சடங்கு. பின் முற்றாத ஆடல்களால் பின்னப்பட்ட வாழ்வின் சடலத்தை எரிதீ ஆடிமுடித்துச் சாம்பலும் நீர்கரைந்து ஓடுகையில் பிறிதொரு உயிரில் பிறிதொன்றாகி முடிவிலா ஆடலில் இணைகிறது.
பாடு மீன் பட்டினத்தின் தலைமைக் கூத்துப் பள்ளியின் எழுபத்தியிரண்டு திறன் கொண்ட இளையோரும் தம் இருநூறு வண்டில்களில் வடக்குப் பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். உடல் களைப்பின்றி வந்து சேர்வதற்காக இடைப் பட்டினங்களிலும் சிற்றூர்களிலும் ஓய்வும் ஆறலும் கொண்டனர். அவர்களின் தலைமைக் கூத்தர்களான தூவெள்ளியரும் அலகிலாளும் முன் வண்டிலில் அமர்ந்தபடி குடித்திரளை நோக்கிக் கொண்டிருந்தனர். இளையோர் புடவியின் கோலங்களையும் குடிகளின் பெருக்கையும் வேடிக்கை பார்த்துக் கதைகள் சொல்லி ஒருவரை இன்னொருவர் அபிநயித்து நடித்துக் காட்டி விளையாட்டில் களித்தனர். வண்டில்களில் அவர்களுக்கான ஆடைகளும் அணிகளும் விரிவட்ட அரங்கினை ஆக்கத் தேவையான கருவிகளும் பொருட்களும் துணிகளால் மூடப்பட்டிருந்தன.
யீலை தன் மையிட்ட விழியை ஆடியில் நோக்கி வண்டில் குலுங்கும் போது விலகிச் சேரும் தன் பிம்பத்தைக் கண்டு உவகையுடன் சிரித்தாள். உதி தன் ஆடையை இழுத்து மூடிக் கொண்டு வெய்யில் வெய்யிலெனப் புலம்பிக் கொண்டிருந்தாள். சந்தனி தன் அணிகளின் பெட்டியை உடும்பு போல் பற்றிக் கொண்டு துயின்று கொண்டிருந்தாள். அப்பால் ஆடவர் வண்டிலில் தருகன் தன் தோழர்களின் கரங்களில் ஆடும் வண்டிலில் மானுடக் கூம்பு அமைக்க உந்தியேறிக் கொண்டிருந்தான். அவனது வித்தைகளால் குடித்திரளை ஈர்க்க மந்தியாட்டம் ஆடுகிறான் எனச் சொல்லி உரக்கச் சிரித்தான் நாவினியன். லாவகன் தன் நோக்கை உறுத்து உதியின் இளமார்புகள் மேடிட்டு உள்ளமையும் ஆடையை அளவிட்டான். அவனது உதட்டில் அவற்றில் இனிப்பு இருக்குமென்ற பாவனை மின்னச் சப்புக் கொட்டினான். பாலை மலரோன் தன் மணிமுத்தாரத்தை ஒவ்வொரு முத்தாக எண்ணி ஒவ்வொருமுறையும் ஒன்று குறைகிறது எனக் குறைபட்டுக் கொண்டிருந்தான்.
சிம்ம சொரூபி தன் கால்களில் குழைந்த சிவப்பின் வண்ண மிச்சத்தை நோக்கிய பின் நிமிர்ந்து “வடக்குப் பட்டினத்தை என்றாவது பார்த்திருக்கிறாயா அக்கா” எனச் சாயைக் கேட்டாள். “இல்லை சொரூபி. பாணர்கள் வாயினால் பல்லாயிரம் கதைகளினால் பலகோடி நடனங்களென அப்பட்டினத்தைக் கனவு கண்டிருக்கிறேன். கலைகளும் காவியமும் செழிக்கும் மண். குன்றா ஆற்றலின் மானுட மையங்களில் முதன்மையானது. இத்தீவின் சிரசென அமைவது. நம் பட்டினங்களின் செல்வங்களை நாம் அளவிடும் எடை கொண்ட தராசின் எதிர்த்தட்டு வடக்குப் பட்டினமே” என்றாள் சாயை. அவளது குரலில் கனவின் இனிமை கூடியிருந்தது. ஆவலின் துள்ளலென்றும் சொல்லலாம். சாயை சொற்களைச் சொல்லும் போது முழுதாய் விழுங்கிச் சொல்பவள் போல் காற்றை உள்ளிழுத்து அரையாச் சொற்களைச் சொல்லுவாள். மிகுதி கற்பனையில் முளைக்கும் சொற்களுக்கானவை என்பது அவளது தருக்கம். அவளது சுருள் கூந்தல் மின்னி அழகு கூடியிருக்கிறது என நோக்கினாள் சிம்ம சொரூபி. சொரூபியின் உதடுகள் மேல் சிறுத்தும் கீழ் தடித்ததும். சாயையின் உதடுகள் இரண்டு நிகரான மலரிதழ்கள் எனக் குவிந்து விரிபவை. அவளுக்குச் சாயையின் உதடுகளை நோக்கும் பொழுதெல்லாம் பொறாமையின் கரிப்பைத் தன் உமிழ்நீரில் உணர்வாள். சாயையின் விழிகளும் மானென மருள்பவை. மயக்கென ஆடுபவை. உவகையென ஒளிகொள்பவை. துயரில் கரைந்து உருகுபவை. நோக்காத போது தெய்வமென எண்ணச் செய்பவை. அவளது உடலை மாற்றி அணிந்து கொள்ள ஒரு கணம் கிடைத்தால் அக்கணத்தை முழுது வாழ விழைவு கொண்டவள் சொரூபி.
பாடு மீன் பட்டினத்தின் ஆறுகளிலும் கழிமுகங்களிலும் கடலிலும் பாடும் மீன் கன்னிகைகளில் ஒருத்தி படகில் ஏறித் தரையில் வந்தவளெனக் குரல் கொண்டவள் சாயை. கனிமையின் குரல் என்றும் கடுமையில் சினமென்றும் தவிர்க்கையில் உவர்ப்பென்றும் எண்ணற்ற சுவைக்குழைவு கொண்டவள். பாடும் பொழுது ஒளிவிழும் ஆற்றில் துள்ளியாடும் மீன்களென அவளது குரலில் பாடுமீன்களின் பெருக்கு உடைந்து பெருகும். நூறு நூறு ஆடலர்கள் நடுவே அச்சமின்றி இளஞ் சிறுமியின் துடுக்கும் பேதமையும் கொண்டு அழகெனவும் அறிவெனவும் தோன்றுவாள். பட்டினத்தின் பாணர்கள் கதைகளில் உலவும் மாயக் கன்னிகை இவள் தான் எனச் சிம்ம சொரூபி அகத்திற்குள் சொல்லிக் கொள்வாள்.
ஒருமுறை கருநிலவு நாளில் தோழிகளுடன் ஆற்றில் படகு விளையாட்டுக்குச் சென்றிருந்தாள். தொலைவின் இருட்டில் ஆடும் விளக்கொன்று நிலவுக் குட்டியென அமர்ந்திருக்கும் படகைக் கண்டாள். ஆற்றில் காற்று அலையலையென விழுந்து தவழ்ந்து ஆற்றின் நீர்க் கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்தது. தோழிகள் குளிரில் ஆற்றின் நீரோட்டம் அதிகரிக்கிறதோ என அஞ்சிப் படகில் ஒடுங்கிக் கொண்டு அச்சமூட்டும் கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லி அச்சத்தைப் பேருருவென மூட்டிக் கொண்டிருந்தனர். ஆறுகளின் அடியே தொல் கன்னிகள் கருநிலவில் மேலெழுந்து வந்து தமக்குரிய பெண்ணுடலைக் கண்டு உடல் மாற்றிக் கொள்வார்கள். மாறிய உடலுடன் கரை சென்று விரும்பியவனைப் புணர்ந்து களிகொண்டு வெறிக்கூச்சலுடன் ஆற்றில் குதித்து உடலை மாய்த்து மீண்டும் மீனுருக் கொண்டு மறைவார்கள் என்றாள் யீலை.
அவர்களின் கண்களை நோக்கினால் சித்தம் அவர்களின் வசமாகிவிடும். அதன் பின் காண்பவர் எல்லாம் மீன்களெனவே தோன்றும். பித்தாகி உடல் காந்தும். கடந்த காலம் அழிந்து பொழுதற்ற காலத்தில் நிரந்தரமாய் அகப்படுவோம். அவர்களின் விழிகளை நோக்காது உடற்செதில்களை நோக்குவதே அவர்களிடமிருந்து தப்பிக்க வழி. அவர்கள் பாடுவதைக் கேட்டால் அக்கணமே செவிகளை அடைத்துக் கொண்டு குடிதெய்வங்களின் பெயர்களை உச்சரித்து நம் செவிகளை நம் சொற்களால் நிறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களின் குரல்கள் செவியில் மெழுகென ஒட்டிக் கொள்ளும். மானுடக் குரல்கள் பொருளளியும். அப்பாடல் மட்டுமே தவிப்பென அகத்தில் எஞ்சும். நாம் மீண்டும் மீண்டும் அதைக் கேட்கவென ஆற்றில் படகுகளில் கருநிலவு நாட்களில் அலைவுறுவோம். அது ஒரு சாபம் என்றாள் உதி.
பாடு கன்னிகள் விரும்பினால் ஆணுருக் கொண்டு தாம் விழையும் பெண்களைக் காதலில் மயக்கி காமத்தில் அருந்தி தம்முடன் ஆற்றுக்குள் அழைத்துச் செல்வார்கள். பாடு கன்னிகளை ஆற்றில் கண்டால் படகில் ஒளிந்து கொண்டு படகின் விளக்குகளை அணைத்து விட வேண்டும். ஒளியைக் கொண்டே மீன்கள் நம்மிடம் வருகின்றன. பாடு மீன்கள் குரலை ஒளியாக்கி பெண்களிற்கென வலை விரிக்கிறார்கள். ஆண்களை விடப் பெண்களையே அவர்கள் எளிதில் வீழ்த்துவார்கள். ஒருமுறை அவர்களின் முகம் நோக்கினால் நம் அழகென்பது எத்தனை எளியதென்பது நமக்குப் புலனாகும். தீராப் பேரழகை விரும்பாத பெண் புடவியில் இல்லை. அழகெனும் மாயமே பெண்ணுக்கென அவர்கள் விரிக்கும் வலை. அம்மாயத்தில் நாம் விழுந்து விட்டால் அவர்களில் ஒருவரென ஆகுவோம். எவ்வகையிலேனும் மீண்டால் ஆடிக்குள் பாவையென அவர்கள் முகமே தோன்றும். நம் முகம் அழிந்து மறைந்து விடும். நம் முகத்தை நாமே வெறுப்பதைப் போல் தண்டனை பெண்ணுக்கு உண்டா என்றாள் சந்தனி.
ஆற்றின் அலைச்சரிவுகள் சுழலில் இழுத்துச் செல்வதென மயக்குக் கொண்டது. சொல்லில் எழாதவையும் செவிகள் அறியாதவையுமான பாடல்களும் கதைகளும் அச்சத்துடன் விழையும் குரலொன்று காற்றில் பரவிக் கொண்டு நெருங்கி வருவதைப் படகின் உள்ளிருந்து சிம்ம சொரூபி கேட்டாள். அனைவரும் செவிகளை அடைத்துக் கொண்டு குடித்தெய்வங்களின் பெயர்களை உச்சாடனங்களெனச் சொல்லினர். சொரூபியின் செவிகளில் அக்குரல் காலமற்ற இனிமையெனக் கேட்டது. செவிகளை அடைக்கும் கரங்களை மெல்ல விடுவித்துக் கொண்டு கீற்றிடையால் வழியும் ஒளித்துண்டென அக்குரலைத் தன்னிருளில் விழவிட்டாள். அக்குரல் ஓசையென்றான இசை கொண்டது. காதலில் ததும்பும் மலர்களின் தேனால் மட்டுமே பொருள் கொள்ளக் கூடியது. காமத்தின் அனலால் மட்டுமே நிகர் எடை வைக்கக் கூடியது. சொல்லற்ற அக்குரலில் அழைப்பும் தவிப்பும் தனிமையும் இழைந்திருந்தது. தோழிகள் விழிகளை இறுக்க மூடியபடி உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை நோக்கிய சிம்ம சொரூபி அக்குரலின் ஏதோவொரு இழையைத் தன் அகமறிந்திருப்பதைக் கண்டு வியந்தாள். அக்குரல் நெருங்க நெருங்க அவள் தான் அறிந்த குரலின் அறியாத பாவம் அதுவெனக் கேட்டாள். விழைந்து விட்ட பின் திரும்புதல் என்பது பெண்ணுக்குப் புடவியில் அளிக்கப்படாத வரம்.
அவர்களின் படகில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும் ஒலியுடன் எதுவோ மோதும் ஓசையெழுந்தது. கரையில் எங்காவது மோதிக்கொண்டோமா என எண்ணியவள் தலை தூக்கி விழி திறந்து நோக்கினாள். கழிமுகத்தை நோக்கி அமர்ந்திருந்த பெண்ணொருத்தியில் ஒரு விளக்கின் மஞ்சள் பொலிந்து கொண்டிருந்தது. அவளது சுருட் கூந்தல் முதுகில் அலையடித்தன. சொரூபியின் மேனி மெய்ப்புக் கொண்டது. பாடு கன்னிகையின் குரலில் அவளறிந்த பாவனைகள் அவளறியாத இசைமையில் வெளிப்பட்டன. அவள் நானென எண்ணிக் கொண்டாள். இருளில் வானையும் கரையையும் ஆற்றையும் நோக்கினாள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இருளென அமைந்தும் அசைந்தும் செல்வது போல ஒவ்வொரு பெண்ணும் ஒரு இருளின் வேறு வேறு பாவங்கள் என எண்ணிக் கொண்டாள். அங்கிருப்பவள் நானென்றால் ஏன் அஞ்ச வேண்டும் என அகம் சொல்லியது. சொரூபி ஒலியற்ற குரலால் அவளை அழைத்தாள். அக்காற்று அவளைத் தொட்டதென பாடு கன்னிகை திரும்பினாள். அவள் படகின் விளக்கிலிருந்த மஞ்சள் இருளில் கரைந்து நூர்ந்தது. இருளில் பாடு கன்னிகை இருளாறு என நெளிந்தாள். தோள்கள் இருகரையென ஓடும் ஆறு என எண்ணினாள். சிம்ம சொரூபி எழுந்து அவளின் படகில் தாவிக் கடந்தாள். படகினுள் இருந்த தோழிகள் பெருக்குரலில் உச்சாடனங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அருகிருந்த படகிலிருந்து பெருஞ்சிரிப்பொலிகள் எழுந்த போது சொரூபிக்குச் சித்தம் பேதலித்து விட்டதென உதி புலம்பத் தொடங்கினாள். அவர்களது படகில் மீண்டும் சொரூபி குதித்து “எழுந்திருங்களடி. இப்பாடு மீன் கன்னிகை நம்மை ஒன்றும் செய்யாளாம். நல்லவளாய் இருக்கிறாள்” என நகைக்காமல் முகத்தைத் தீவிரமான பாவனையில் வைத்தபடி சொன்னாள். மூவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி சொரூபியிடமிருந்து படகின் எதிர்முனைக்குள் சென்று ஒடுங்கிக் கொண்டு குடித்தெய்வப் பெயர்களை உச்சாடனம் செய்து கூக்குரலிட்டனர். சொரூபி குனிந்து மூங்கில் கழியை எடுத்து அவர்களை நோக்கி நீட்டி “என்னுடன் நீங்களும் ஆற்றுக்குள் குதித்து பாடு மீன்களின் அரசுக்கு வர வேண்டும். தனியே செல்ல அச்சமாய் இருக்கிறது. விடிவதற்கு முன் திரும்பி விடலாம். எழுந்திருங்கள்” என வெருட்டும் குரலில் ஆணையிட்டாள். அஞ்சி எழுந்தவர்கள் தம் படகின் விளிம்பில் அமர்ந்திருக்கும் சாயைக் கண்டு விழிநீர் கொட்ட அஞ்சிச் சிரித்து சொரூபியை அடித்துத் தள்ளினர். “பயந்தே விட்டோமடி பாதகத்தி. எதில் விளையாடுவதென்று உனக்குத் தெரியாதா. சந்தனியைப் பார் இன்னும் மேனி நடுக்கு விக்கலெனத் துடிக்கிறது” என படபடக்கும் குரலில் சொன்னாள் யீலை.
சாயை சிரித்துக் கொண்டு தனது படகிலிருந்த மீன்களை எடுத்துக் காட்டினாள். “இன்று நாம் பாடியே ஆற்றின் மீன்களை அள்ளி விடலாம். ஆற்றின் செவிகள் மீன்கள். ஆற்றில் பாடல் பட்டுத் தெறித்தால் செவிகள் முளைப்பதைப் போல் ஆற்றின் மேற்பரப்பில் மீன்கள் துள்ளிடும். கரை சென்ற பின் சுட்டு உண்ணலாம்” என்றாள் சாயை. உதி ஆற்று மீனின் பெருப்பைக் கண்டு விழிவிரித்தாள். “என்ன அக்கா இவ்வளவு பெரிய மீன்கள். இவை எந்தப் பாடலுக்கு ஆற்றின் அடியிலிருந்து எழுகின்றன” என வியப்புக் கலையாத விழிகளுடன் கேட்டாள்.
“இவை காதலில் தனித்திருக்கும் மீன்கள் உதி. காதலில் தனித்திருப்பவர் மெலிவது மானுடரில் தான். மீன்கள் பெருப்பவை. ஆகவே அவைக்குக் காதல் பாடல்களின் ஒலிதான் பிடித்தமானவை. காதலின் குரல் தூண்டில் முள்ளென ஆற்றில் விழுந்தால் ஓடி வந்து பற்றி ஏறிக்கொள்ளும்” என்றாள் சாயை. அவளது குரலில் படகில் துடித்து மேனியடிக்கும் மீன்களின் துடிதுடிப்பு ஓர் அணியெனப் பொருந்தியிருந்தது.
“தனியாகவா படகில் வந்தாய் அக்கா. உனக்கு அச்சமாயில்லையா” என்றாள் உதி. “இல்லை உதி. இது நமது ஆறு. நாம் பிறந்தது முன் நம்முள்ளும் நமக்கு வெளியிலும் இது தான் ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள மீன்களும் ஆமைகளும் பூச்சிகளும் நமது சோதரர்கள். ஆறு நம் அன்னை. அவளைச் சினமேற்றாது அடங்கி மிதந்தால் அவள் நம்மை மடியிட்டுத் தாலாட்டுவாள். அச்சமூட்டும் கதைகள் எதையும் நிகரனுபவிக்காத நித்திய நீர்க்கண்டம் கொண்ட பாணர்களால் அளக்கப்படுவது. நமது அன்னையரும் தந்தையரும் நாம் ஆற்றுக்குச் செல்லும் விழைவை அகத்தே கொண்டிருப்போம் என்பதை நாம் பிறக்க முன்னரே அறிவார்கள். இந்த ஆறு இங்குள்ள ஒவ்வொருவரும் இளவயதில் தனித்துலவும் நீர்க்காடு. எம் பட்டினத்தின் குடிகளின் உளங்களில் ஓயாது சுருண்டெழுவதே ஆறென்றாகியது. தாளமல் துள்ளுவதே மீன்களென்றாகின. நமது விழைவுகளே மீன்களுக்குப் பாடக் கற்றுத் தந்தது. கேளுங்கள். அவை நம் விழைவுகளின் உதட்டோசைகள்” என்றாள் சாயை.
ஆறு மெல்ல மெல்ல நீரிலிருந்து குரல் நுரைப்பது போல் மீன்கள் துள்ளியேறி அலை மேவுவதைக் கண்டனர். ஒவ்வொரு மீனும் முன்னை விட இன்னொன்று பெரிதாய் வெள்ளி மினுக்காய் பாய்ந்தது. கணத்தில் புரளும் அலைகளென மயக்குக் காட்டின. ஒவ்வொருவரும் எழுந்து நீரில் வழுகிச் சென்றபடி மீன்களின் குரலைக் கேட்டனர். காதல் முகிழ்த்த முதல் நாளின் உவகையுடன் ஓடும் இளம் பெண்ணின் அகத்தாளம் கொண்டு ஆறு ஓடியது. இனிய முத்தங்களின் கனவுகளில் நீந்துபவையென மீன்கள் சிறகடித்து எழுந்தன. ஆகயக் கருமையில் மேகமீன்கள் அசைந்து தூங்கின. பாடுமீன்களது குரலின் மானுட நாவென எழுந்த சாயை உதட்டில் காதலின் தவிப்பில் அந்தரிக்கும் ஆன்மாவின் உருக்கம் பெருகியது. நால்வரும் படகில் நின்றபடி ஆற்றின் ஒழுக்கில் அவளது தவிப்பில் மிதந்தனர். பாடும் ஒவ்வொரு மீனும் காதலிக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஆழத்தில் அறிந்த ஒற்றைப் பாடல் காற்றில் பரவியது.