77: வட்ட மலர்

77: வட்ட மலர்

ஆழ்பிலவென நெடுநீட்டகம் கொண்டிருக்கும் அரசு சூழ்தல் கற்றவர்களின் உதட்டில் ஓயாது ஒளிரும் புன்னகைக்கு எப்பொருளுமில்லையெனப் பொன்னன் எண்ணினான். தமிழ்ச்செல்வன் பிடிகோலில் இடக்கரத்தை ஊன்றி அடிவேர் சாய்ந்து நிற்கும் தென்னையென அமைச்சர்களின் தேரில் வளைந்திருந்தார். அவரது முகத்தின் புன்னகையை நோக்கிய குடிகள் அவை தான் அந்த மந்திரப் புன்னகையெனக் கூவினர். அவர் தான் புன்னகைக்கும் பெருமதியாளர் எனச் சொல்லி மந்தணக் குரலில் வாழ்த்தினர். அரசு சூழ்தலில் புகழ்பெற்றவர்கள் அணியும் இரண்டு அணிகலன்களில் கடுகடுப்பும் உறை முகமும் உள்ளூர அச்சத்தையும் அதனால் மேனியில் உண்டாகும் நடுக்கத்தையும் அணையிட்டுக் கொள்வது. புன்னகையோ வெல்பவரின் அணிகலன். அப்புன்னகையின் அடியை அறிய அவரை ஆள்பவராலும் இயலாது. உளம் மெய்யாகவே விரிந்து சிரித்தாலும் அச்சிரிப்பில் எதுவோ ஓர் முனை அரசின் கால்களில் நுண்ணிடுக்கைத் துழாவிக் கொண்டிருக்கும். தமிழ்ச்செல்வன் பொன்னனின் உறவினர். ஆனால் எவ்வகையிலும் பொன்னனை அவர் நெருங்க அனுமதிப்பதில்லை. அவரது புன்னகை கவசமும் அகழியும் என எண்ணிக் கொள்வான் பொன்னன்.

பொற்தேரின் அருகே வாழ்க வாழ்க பொற்தேர் ஏறிய பெருங்காதலன் வாழ்க என இளம் பெண்கள் கூவிய போது நீலழகன் மெல்லக் குனிந்து குழவிகளுக்கு வணக்கம் வைப்பவர் போல் பணிந்து கரங் கூப்பினான். நிலவை இளம் பெண்களை நோக்கி விழியால் படர்ந்து பரவிய போது அவ்வாழ்த்தொலி சுடுபாறையில் விழுந்த சாரல்களென அவிந்து மறைந்தன. அருகில் மனையாள் உள்ள ஆடவருக்கு அவளே கட்டும் காவலுமென எண்ணி புடவிக்கே அரசனானாலும் மனைவிக்கு அடுமனைக் கலம் தான் என்ற குடிச்சொல் நினைவில் சிரித்தது. மாபெரியோர் அளவற்ற வீரர்கள் எனக் கொண்டாடுவோர் கட்டுறும் இடங்களை நோக்கி நகைக்க விரும்பாத எளிய உள்ளங்கள் எங்காவது உளதா எனத் தன்னைத் தானே ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தான் பொன்னன்.

மத்தகங்கள் வெள்ளிநீரெனப் பொலிய பின்னேரச் சூரியன் செம்பொன் ஒளி தகக்க பல்லாயிரம் வேழங்களாலான பெருக்கில் ஒற்றைப் பெரும் பொன் மலர் தலைமுறை தலைமுறையாகத் துதிக்கைகளுக்கு அளிக்கப்படுவதைப் போல பொற்தேரில் நீலன் நகர்ந்து சென்றான். மகத்தான கலையாக்கமென பொன்னன் எண்ணிக்கொண்டிருக்கும் பெரும்பொற்தேர் காலமடிப்பில் மூழ்கி மறையவிருக்கும் எளியோனான அரசனொருவனை மார்பில் ஏந்திய மூதன்னையின் கடைசிப் பெயரன் மிதித்து நிற்கும் தொல்முலை மார்பின் உவகைத் தொட்டிலெனக் குடியிடை ஆடியது. முது அன்னையர் தலையில் கைவைத்துக் காற்றால் நீலனை அள்ளிக் கெடுதிகள் அகல எனக் கூவி கண்படுநெடி நீறாக என விரல்களை மடித்து நெட்டியுடைக்குமொலி இலைகள் உதிர்ந்து எரிவிறகுகளாக எஞ்சியிருக்கும் காடு காற்றில் படபடவெனத் தீப்பற்றும் ஒலிவெட்டிப்போசை கொண்டது. முதுகிழவர்கள் அவனது தேகத்தில் எப்பாகத்தில் எவ் அரக்கன் குடியிருக்கிறான் என்றும் எத்தேவர்கள் அவன் அணிகள் ஆயினர் என்றும் மண்ணில் இம்மாகருமைக்கு நிகரென வைக்கக்கூடிய எதையும் தம் வாழ்நாளில் ஒலித்த கதைகளிலும் பாடல்களில் கேட்ட ஒப்புமைகளிலும் கூட அறிந்ததில்லையென்றும் இவன் வாழும் காலத்தில் நம் விழிகளும் அவனைக் கண்டன எனச் சொல்வது சுவர்க்கத்தின் வாயிலில் செல்லுபடியாகும் நாணயமெனவும் சொல்லிச் சொல்லி அள்ளூறினார்கள்.

பொற்தேரின் சகடங்கள் சுழன்றதிர பொன்னின் தழல் நெளிவுகள் குடித்திரளில் ஒளியோவியங்களைத் தீட்டின. கருமையில் ஒளிர்க்கும் களிகளால் மலர்கள் அள்ளித் தூவி எச்சில் வாய்பறக்கக் கூவும் வாழ்த்தொலிகளில் பொன்னும் அருமணிகளும் முத்துகளும் கொட்டின. புரவிகளின் கனைப்பொலிகள் காற்றை உதறித் தள்ளின. மன்றுக்கு அருகிருக்கும் பெருவீதியால் பொற்தேர் நகர்ந்த போது பெருஞ்சாளரத்தில் குறு மந்தியெனத் தூங்கிக் கொண்டு ஆயிரங் கொத்து மானுடர்க்கிடையில் அகம் கிளர நோக்கினான் துடியன்.

இளம் விறலிகள் மெய்மறந்து நிலவையை நோக்கிய போது அசையாத தெய்வத்தினுள் ஆடும் யாழிசையின் தனிமையைக் கேட்டாள் சீரணி. துயருறும் பெண்கள் விழியின்மையில் கூட ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கிறார்கள் என எண்ணினாள். குடிகளை நோக்காத சற்றுத் தாடை உயர்த்தி நெடும்பரப்பை மட்டுமே நோக்கும் பார்வையுடன் அமைந்திருந்த நிலவையின் அணிகளோ மாணிக்கங்களோ மலர்க்குழைவோ மேனியின் மதர்ப்போ அல்ல. அவளின் நோக்கில் எழும் அனைத்துக்கும் வெளியே நின்றிருக்கும் தொல்தெய்வமே அவளின் பேரழகு என நுனிக்காலில் எழுந்து தூணைப் பற்றிக் கொண்டு சிற்றுடல் எழுந்து மிதக்கப் போவதைப் போல் நின்றாள். எத்தெய்வம் கண்ட கனவின் மெய்விருப்பு நிலவை என எண்ணிச் சித்தம் கலைந்தாள். நிலவையை அணு அணுவென நோக்கி நோக்கி அவர் மேனி அகலும் வரை அக்கணத்தை இன்னுமொரு அணுத்துமிக் காலத்தால் நீட்டிவிடுபவள் போல உடலை விரித்தாள்.

பொன்மாமலர் துதிகளால் வானில் எறியப்பட்டு ஏந்தப்படுவதைப் போல நகர்ந்து பெருவீதியால் புழுதியிடையெழ இடைவெளியின்றி மேனிகள் நெருக்கி நின்றிருந்த மானுடத் திரளில் கொற்றனும் ஓசையிலானும் மூச்சை இழுக்கவென மார்பை விரித்துச் சுருக்கவும் இரும்பினால் அடைபட்ட பெட்டியென அசையாது நிலைகொண்டது திரள். ஒவ்வொரு மூச்சும் அனலும் புனலும் கலந்தவொன்றாகிச் சீறி எழுந்து பரவின. காற்றின் இன்மணங்கள் மயக்கை எறிந்தன. தீயிலையும் கள்மணமும் சிகைக்காய் வாசனையும் வியர்வையின் நீர்ச்சிதறல்களும் மலர்மாலை நறுங்காற்றும் வேழங்களினதும் புரவிகளினதும் விலங்கு மணமும் எவை எவை எதனால் எத்தனை விரிவிலும் சுருக்கத்திலும் நாசி நுழைந்து திரும்புகிறதென அறியாத களி வாசனையை அறிந்தார்கள் இரு இளம் பித்தர்கள். மேனிகள் ஒன்றையொன்று மூட்டிக் கொள்ளும் இடையிலும் எது காமத்தை உண்டாக்காது மானுடரை மேலும் உச்சத்தில் எழச் செய்கிறதென நோக்கினான் கொற்றன். மானுடர் அகத்தில் மேன்மையின் உச்சியில் அருமணியென்ற ஒன்றைக் குடியில் வகுத்த பின்னரே கீழ்மையைத் தொட முடியும். மானுடரில் சிலர் அருமணியென ஆக்கப்பட்டு அங்கு வைத்தமர்த்தப்படுகிறார்கள். வரலாற்றில் எல்லாப் பெரும் மானுடரும் அத்தனை கீழ்மைகளும் பாதாளம் விட்டு மண்ணேறிப் புணர்ந்து களியாடி வஞ்சம் கொண்டு பகை தீர்த்து நச்சும் பொய்யும் மலரென அளிக்கப்படுகையில் மானுடம் உருவாக்கிய அறத்தேரில் அமர்ந்து அப்பொன்னொளியால் கண்கூச மண்ணெழுகிறார்கள் பெருவீரர்கள். மானுடரில் மேன்மையென எண்ணும் அனைத்தும் அவரில் திகழ்வதாக என அவரைப் பலகோடி முறை பெயர் சொல்லி அழைத்து மந்திரமென உச்சரித்து தெய்வமெனச் சமைக்கிறார்கள் எளிய குடிகள். தெய்வமென்றாக்கிய பின்னர் குடிகள் மீள மயக்கில் விழுந்து அலைந்து தங்கள் எளிய வாழ்க்கையை அந்த அருமணி ஒளியில் வாழ்ந்து மடிகிறார்கள். வரலாற்றின் பெருந்தேரில் அசையும் அறத்தேவன் எழுகிறான். வானவரே வந்தவன் தாழ் பணிக என ஆணையின் பேரொலியில் இடிகள் கொட்டி மாமுரசுகள் அதிர்வது போன்ற தொண்டையில் குரலெடுத்துப் பாடிச் சென்றான் ஓர் முதுபாணன் அசையும் வட்ட மலரில் நின்று கைகள் வானெழ.

இதோ வருகிறான் எங்கள் காலதேவன். கரிகாலன். ஈசன் மைந்தன். இறையென்றானவன். பணிக அவன் பொற்கழல்கள். உரைக்குக அவன் நாமம் ஓயாது. நோக்குக விழிகள் அவனொளி பெறுங் காலம் வரை. சொல்லுக அவன் பெயர் அண்டங்களில் அதிர்ந்து ஒலிக்க. அறவேந்தன் வருகிறான். அறப்புலியோன் எழுகிறான் எனக் கூவிக் குரலெடுத்து நரம்புகள் கழுத்தில் தெறிக்க நீலனை நோக்கிக் கொண்டே பாணர் கூட்டத்தின் மேல் மயங்கிச் சரிந்தார். முற்றும் சொன்ன பின்னர் மெளனம் என எண்ணினான் கொற்றன். அவர் விழுந்த அடுத்த கணம் முரசுக் கோல் எழ முன்னர் இளம் பாணனொருவன் விரிகுழல் தழதழத்து ஆட வட்ட மலரில் ஏறினான். ஓலைகளைக் காற்றில் எறிந்தான். எழுத்தாணியால் உள்ளங்கை கீறிக் குருதி வடியப் பொற்தேர் வரும் திசையில் எறிந்தான். இதோ என் குருதி. என் குலத்தின் குருதி. என் இளங் குருதி. என் குடிவழியின் குருதி. வழிவழி வருவோர் குருதி. அனைத்தும் உனக்கே ஆகுதி ஆகுக. மண்ணும் விண்ணும் நிகர்த்தாளும் பேரரசே. அறமும் சொல்லும் உள்ள வரை நீ அதன் புதிரென வாழ்வாயாக. அதன் மாயமென மீண்டும் மீண்டும் உன்னைக் கண்டடைவதாக. எளியவர் கொள்ளும் பேரறமே அரசன் என்றமைந்த தமிழ்க்குடி வாழ்க. தமிழ்க்குடி காக்க உருகம் ஏந்திய மாகளன் வாழ்க. மாகளன் தோளிணை நின்ற மாவீரர்கள் வாழ்க. மாவீரர்களைப் பெற்றெடுக்கும் அன்னை வயிறுகள் வாழ்க. செருக்களம் மீதினில் சிந்திய குருதிகள் பூப்போல் எழுந்து வாழ்த்துக. வானில் உறையும் மங்கா விழிகளால் தோழர்கள் வந்து மண்ணிறைக. மடியா மாவீரத்தில் உதித்த மறக்குடி வாழ்க. வாழ்க நீ அம்மான். எந்தை குலப்புலி. என் அன்னைக்கும் முதற் புலி. வாழ்க என் அண்ணலே. வாழ்க என் மூத்தோனே. அறம் உன்னில் வெல்வதாக என்ற உச்சத்தில் குரல் ஏறி வானெழுந்து நின்றவனைச் சுற்றி நின்ற கூட்டம் ஒருகணம் உறைந்து மறுகணம் பெருகி உடைவெள்ளம் பெருகியது போல் பொற்தேரைச் சுற்றி ஓரடுக்கில் நின்ற புலிவீரர் அணை மேல் மோதியார்த்தது. ஆர்த்துக் கூவியது. நுரைக் கைகள் காற்றை அறைந்தன. ஆழதிர்வுகள் ஒருவர் மீது ஒருவர் மேனி உயர்த்தின. பேராழியில் மாமலை அலைகளில் மின்னல்கள் பொழிகையில் ஒற்றைச் சிறுபடகெனப் பொற்தேர் எழுந்து மிதந்தது. இசைக் கைகள் தன்னுள் தான் கண்டெடுத்த ஒலியென்றானவனை திசைகள் விலக ஓதின.

ஓசையிலான் நீலழகனின் விழிகளை மட்டும் உறுத்தான். சுற்றிலும் ஆடும் மாமலை அலைகளில் ஒரு துளிச் சலனமும் நிகழாத இருவிழிகள். விரிநெடு நோக்கு. ஓசையிலானின் அகத்தில் அதிர்வென அவ்விழிகளின் நோக்கின்மைக்குள் நோக்கும் அகம் மெய்ப்புல்கள் எழச் செய்தது. காமம் அவன் உடலில் மதர்த்து உருகியது. தீக்குழம்பென நரம்புகள் கரைந்தன. மாவீரனைக் காமுறாத காதல்களால் மண்ணில் என்ன பயன் என ஓசையிலான் எண்ணமெழ கரங்களை வான் தூக்கிச் சொல்லைக் குழவியெனத் தூக்கிக் காதலனுக்குப் பரிசளிப்பவன் போல் அகம் பரவசத்தில் பொங்க நுரையென எழுந்தான். வட்ட மலரில் நிரையிட்டு நின்ற பாணர் கூட்டத்தின் எதிர்ப்புறம் நின்று நிலக்கிளியெனத் தத்தி ஏறினான். வட்டமலர் ஆடியசைந்து நிலைமீண்டது.

கூட்டத்தைப் பிரித்து வட்ட மலரில் ஏறி நிற்கும் பித்தன் ஏது உரைக்கப் போகிறான் என ஆவலெழுந்த குடித்திரள் மலர்களை அள்ளி அவன் மேல் எறிந்தது. மாலைகளை அவன் சிரசில் வீசியது. அனைத்து மலர்களையும் அள்ளி விசிறிக் குடித்திரளுக்கே திருப்பி எறிந்தான்.
முரசுகள் சீர்தாளத்தில் காலத்தை நகர்த்தின. புரவிகள் சமகாலத்தில் வட்ட மலரை இழுத்தன. பாணர்கள் வசையுடன் ஓசையிலானைத் தூற்றினர். நீலனை நோக்கிக் கரம் கூப்பி நெஞ்சமர்த்து முழந்தாளில் அமர்ந்தான் ஓசையிலான். கொற்றன் அவனது பித்தைக் கண்டு நகைத்துக் கொண்டான். சித்தன் ஒருவன் அழிந்து நீலனின் போர்ப்படைக்கு ஒருவீரன் நிகழ்ந்தான் என எண்ணிக் கொண்டு மேலும் நகைத்தான்.

“புடவியை ஆக்கிய முதற் பெருவிசை ஈசனென்றானவன். என் தாதை” எனச் சொல்லெடுத்தான் ஓசையிலான். ஓசையிலான் வட்ட மலரில் எழுந்ததைக் கண்டு அவன் முகத்தையும் சுருள் குழலையும் நோக்கிய நீலழகன் அவன் யாரென்பதைக் கண்டு கொண்டான். எவரும் அறியாத மெல்லடியொன்றை முன்வைத்து அவன் சொல்லைக் கூர்ந்து நோக்கினான். காற்றில் அலைபட்டு விழும் மலர்களெனச் சொற்கள் நீலனின் மீது பொழிந்தன.

“அழகென்று ஆனது வீரத்தின் நுண்மை. வீரமென்றானது மானுடரில் பெருங்கனவு. அறமென்றானது அனைத்துப் புடவி விசைகளையும் அறுக்கும் கூற்றன் கயிறு. எழுக என் வேந்தே. எங்களை நீ ஆள்க. உன் அழகு எங்களை வெல்க. உன் வீரம் எங்கள் குடிகாக்க. உன் அறம் எங்கள் முலையூற. வருக என் தாதையே. தந்தையே. அன்னைக்கும் அன்னையே. சோதரருக்கு இளவலே. காதலருக்கு இனியனே. பகைவருக்குத் தீங்கே. களிக்குக் காவலே. வாழ்வுக்கு ஒளிக்கதிரே. முக்கண்ணன் முதற் தீயே. உனக்கே சரண் ஐயா.

உன் கனிவிரலில் கசிந்திட்ட இருள் நான். உன் நாணில் பிழைபட்ட அம்பு நான். உன் சொல்லில் குலைந்த பொருள் நான். எந்தனுக்கும் ஈந்தனை பன்றிக்கும் ஈந்தவனே. உனக்கே சரண் ஐயா. உன் பொற்கமலம் பணிகிறேன் தேவா. உன் அறத்தில் சிந்திய விடத்திற்கும் அமுதானாய் அமுதை ஆக்கிய அமுதக் கடலே. உன்னில் அலையென ஆகுக குடி. உன்னில் நுரையென ஓங்குக சொல். உன்னில் விசையென ஆகுக தெய்வங்கள். உன்னில் நீயென ஆகுவதும் நாமே” எனச் சொல்லிக் குரல் வறள விழிநீர் கொட்டிக் கேவுபவன் போல தலையை வட்டமலர்த் தரையில் சாற்றி வணங்கினான் ஓசையிலான். அவனது சொற்களின் பொருளறிந்த கொற்றன் ஓடிச் சென்று அவனை வட்ட மலரிலிருந்து இழுத்தான். பாறை வண்டென மலரில் அமர்ந்தவன் குழல் கலைய எழுந்து கொற்றனின் கரம் பிடித்துத் தரையில் குதித்தான். சொல்லறிந்த முதுபாணர்கள் சொல்லுக்கும் அப்பால் சென்று அவன் எங்கிருந்து அச்சொற்களை எழுப்பினான் எனக் கண்டு திகைத்து நோக்கினர். அந்த இளையோனின் வாழ்வின் நெட்டிருளில் நீண்ட ஒளிக்கயிறோன் வாழ்க என்றன முதுவாய்கள்.

கூட்டத்தில் திசை பிரிந்த பாணர்களும் விறலிகளும் வட்ட மலர் ஏறாமலேயே பாடத் தொடங்கினர். யாழ்களும் குழல்களும் தம்மை மறந்து இசை கொண்டன. குடிகள் புலரியில் எழுந்த பறவைக் குஞ்சுகளென ஒளியை நோக்கி விழிகள் கூசக் கண்களை மூடி ஆடினர். ஆடற் பெருக்கின் அலையில் இழுபட்டுச் செல்லும் பெருமூங்கில் கழியென பவனி நிரையை நினைவாலயப் பாதையை நோக்கி அடித்துச் சென்றது விழவின் காலம்.

பொன்னன் தமிழ்ச்செல்வனின் அருகில் நின்ற சூர்ப்பனகரின் தீயிலைப் புகையில் சிவந்தது போலிருக்கும் விழிகளை நோக்கினான். மெல்லிய நடுக்கு எப்போதுமிருப்பது போல் தோன்றியது. முதுமையினால் என எண்ணிக் கொண்டான். மாதுளன் வெருகெனப் பொன்னனை நெருங்கி வந்தான். “பெய்யினி இன்று தேவியைப் போல நிற்கிறாள் பொன்னா. இக்களி என் கனவுகளை அளிக்கும் என எண்ணுகிறேன்” எனச் சொன்னான். அவனது குரலில் தாகம் மூண்டுவிட்டதைக் கண்ட பொன்னன் மெல்லச் சிரித்து “காதல் கொண்டுவிட்டால் அனைத்தும் நாம் விரும்புவது போலவே நடக்கப் போகிறதென எண்ணமெழுவது இயற்கையே மாதுளா. இன்று இம்மண்ணில் எவர் தான் தேவியோ தேவனோ இல்லை. அனைவரும் தங்களை வெல்லும் விசைகளுக்குத் தங்களை அளிக்கும் கணங்களுக்கு ஆர்த்திருப்பதைக் காண். அனைத்துக்கும் அப்பால் எவரோ இக்களியை நோக்கி நின்று காவலிருப்பதைப் போல் அம்மூச்சு என் கால் நுனியில் உரசித் தொடர்வதைப் போல் உணர்கிறேன். பட்டினம் களியில் மூழ்கும் போது காவலுக்கிருக்கும் வீரரை எண்ணிப் பார். நாங்கள் இங்கு காதலுக்கும் காமத்திற்கும் கனவுக்குமென ஆடல் கொண்டிருக்கிறோம். நானும் உன்னைப் போலவே விழவைக் கொண்டாடும் கணத்திற்கெனக் காத்திருக்கிறேன். நினைவாலயம் சென்று ஆலயம் திரும்பும் வழியில் உன் காதல் கதைகளைக் கேட்கலாம் என நினைக்கிறேன். இப்பொழுது உளம் நடுகற்களில் விழுந்த சருகிலை போல உதிர முடியாமல் காற்றில் விம்முவது போல் ஒட்டிக்கொண்டிருக்கிறது” என்றான் பொன்னன்.

மாதுளன் ஒருகணம் உறைந்து மீண்டான். பிழையிழைத்தவன் போல் கால்களில் நடுக்கம் கொண்டான். உள்ளங்கைகள் அரித்து வியர்த்தன. அவனது மெளனத்தைக் கண்ட பொன்னன் “நினைவாலயம் செல்லும் வரை இங்கிருப்பவர் எவரும் தாம் செல்லப்போவது எங்கென மறந்திருக்கவே விரும்புவார்கள் மாதுளா. அந்த விசையே உன்னையும் இழுத்துச் சென்றிருப்பது. விழவில் நானும் நீயும் உடைந்த சிறு சிம்புகள். அனைவரையும் ஆக்கும் ஒன்றிடம் நம்மைக் கையளித்து நிற்பதே இதில் மூழ்காது நிலைக்க வழி” என்றான். மாதுளன் குடிகளை நோக்கினான். எவரும் எதையும் உணராது அக்கணத்தில் எதுவென அகமெழுகிறதோ அதுவெனத் தோன்றினர். மயக்குத் தீர்ந்த உடலில் காயங்களின் நோவு எழுவது போல் நினைவாலய வன வீதிக்குள் நுழைய நுழையத் தேகங்கள் நொதிக்கத் தொடங்கின. இளையோர்கள் பலரும் நாகதேவி ஆலய வீதியால் பிரிந்து விலகினர். இன்னொரு பெருங் கூட்டமும் செல்வந்தர்களென நின்றிருந்தவர்களும் அம்பலத்தின் திசைக்குச் சென்றனர். பொற்தேர் இரட்டை வால் பிரிவில் அசைந்து நின்றது. நீலழகர் பொற்தேரிலிருந்து மண்ணில் இறங்கிய போது முரசுகள் மும்முறை கொட்டி அனைத்து இசைகளும் ஒற்றைக் காலடி ஒலியில் அணைந்தன. பறவைகளும் குடிகளும் வேழங்களும் புரவிகளும் மெல்லிய குரலில் காற்றில் ஒலித்தனர். தனித்து விழுந்த பெருங்கடல் ஆழத்தில் ஒலியின்மை காதுகளை அடைக்க அகம் கூர்ந்து உயிர் தவிப்பதென நீலழகனின் மேனி விதிர்த்தது. நெற்றியில் சிறு வியர்வைத் துமிகள் அரும்பின. காற்றின்றி அனைத்து மரங்களும் உறைந்து மேனிகள் எரிச்சலுடன் ஒன்றையொன்று விலக்கிக் கொள்வதைப் போல் எண்ணங்களை விலக்கி நடந்தார் நீலழகன். அவரின் பின் அவரின் நிழலில் குடியிருந்த அன்னை நாகம் நிழற்குடையென எழுந்து விரிந்திருக்கிறதென எண்ணினார் சூர்ப்பனகர். புன்னகையை எடுத்து மெல்ல உதடுகளுக்குள் வைத்துக் கொண்டு இன்னதென்று அறியமுடியாத துயரைச் சூடியிருந்தது தமிழ்ச்செல்வனின் முகம். செங்கரன் விழிகளால் தொலைவுகளை அளைந்தபடி நடந்தார். நிலவை ஒவ்வொரு அடிக்கும் பாதாளத்தில் சரிந்து உள்நுழைபவரெனப் பாதம் வழுக்க நடந்தார். அவர்களின் பின்னே அவர்களின் குடிகள் எப்பொழுதையும் போலப் பின்சென்றனர். சூரியன் மெல்ல வனத்தின் மரத்தண்டுகளின் பின் ஒழிந்து கொண்டிருந்தது. நிழல்கள் இருளின் ஓசையின்மையுடன் கள்வர்கள் போலப் பட்டினத்தில் நுழைந்தன.

மானுடர் துயர் கொள்வது எதன் பொருட்டு என அறியாத கொட்டைப் பாக்குக் குருவியொன்று அனைத்துக்கும் மேலாகக் “குக்குக்குக்கூ” எனக் கத்திக் கொண்டு இருளைக் கிழித்துக் கூட்டுக்குப் பறந்தது. நினைவாலயத்தில் நின்றிருந்த ஆடற் சித்தர் குருவியின் பாடலைக் கேட்டு விழிகள் திறந்து இருள் பெருந்திரையெனச் சரிவதை நோக்கினார். நடுகற்களினைச் சுற்றித் தீப்பந்தங்கள் மெளனம் கலைந்து நாவெடுத்தன. குங்கிலியப் புகை காற்றில் பரவி விண்ணிருக்கும் தோழர்கள் இறங்கி வரும் ஏணியென எழுந்தது. விண்மீன்கள் சிமிட்டத் தொடங்கிய போது விண்யாழி மின்னிச் சுடர்ந்த இருவிண்மீன்களை நோக்கி மாட்டின் உடைந்த இருகொம்புகளின் மிச்சத் துண்டு போல் புடைத்திருந்த கொம்புக் கொண்டையை ஒருகணம் தொட்டுப் பார்த்து தூமழையை எண்ணிக் கொண்டாள்.

TAGS
Share This